காலித் சயீத்! புரட்சிக்காக புதைந்து போன ஒரு விதை!


காலித் சயீத்!

எகிப்தின் கரையோர நகரமான அலக்சாந்திரியாவைச் சேர்ந்த 28 வயது இளைஞன்.

கடந்த வருடம் 2010 ஆகஸ்ட் மாதம் முபாரக்கின் இரும்புக் கரங்களாய் செயற்பட்டு வந்த எகிப்திய காவல் துறை பொலீசார் இவனை ஒரு 'இன்டர் நெட் கபே'  இலிருந்து கைது செய்தனர்.

அவனை கதறக் கதற பலர் முன்னிலையில் பயங்கரமாக தாக்கினர். அவனது தலையை வேகமாக சுவரில் மோத வைத்தனர். அடித்து உதைத்தனர்.

அடித்து துன்புறுத்தப்பட்டு குற்றுயிராய்க் கிடந்தஅவனை பாதையில்நெடுக  இழுத்துச் சென்று,  வாகனத்தில் தூக்கிப் போட்டுக்கொண்டு பறந்து சென்றனர்.

இது எகிப்தில் அன்றாடம் நடக்கும் நிகழ்வாக இருந்ததனால் யாரும் இதனை அலட்டிக் கொள்ள வில்லை. காரணம், கைதும், கொலையும் சாதாரண சம்பவங்களாக எகிப்தின் நிலையை மாற்றி இருந்தது.

காலித் சயீத் என்ற இளைஞன் இப்படி மிருகத்தனமாக, கொடுரமாக தாக்கப்படுவதற்கு கொலை செய்யப்படவதற்கு என்ன குற்றம் இழைத்திருப்பான்?


பொலிசாரின் தாக்குதலுக்குள்ளாகி மரணித்த காலிதின் படம்

இரண்டு பொலிஸ் அதிகாரிகளின் போதை பொருள் பாவனை தொடர்பான ஒரு வீடியோவை அவன் அவனது புளக்கில் பதிவிட்டிருந்தான். அதனை உலகறியச் செய்திருந்தான்.

அவன் செய்த குற்றம் அதுதான்.

இணையத்தின் ஊடாக அநீதிக்கு எதிராக செயற்பட்ட அந்தக் குற்றம் தான் அவனுக்கு சித்திர வதையையும், மரணத்தையும் பரிசாக வழங்கியது.

கடந்த காலங்களில் பொலிசாரின் கெடுபிடிகளில், சித்திர வதைகளில் மரணிக்கும் எகிப்தியர்களின் மரணங்கள் புதைகுழியோடு புதைந்து போகும் ஒரு கதையாகவே இருந்து வந்திருக்கிறது.


அதை எதிர்த்து அங்கே யாரும் கதைக்கவே முடியாது. அப்படிக் கதைப்பவர்கள் அடுத்த புதைகுழிகளை தாமாகவே தோண்டிக் கொள்பவராக கருதப்பட்டார்கள்.

முபாரக் ஆட்சியில் எகிப்தியர்களின் நிலை இப்படித்தான் இருந்தது.

ஆனால் காலித் சயீதின் மரணத்தை எகிப்தின் எதேச்சதிகாரத்தை ஒழிக்கும் ஒரு மரணமாக, குறியீடாக மாற்றிய பெருமையை ஏப்ரல் 6 இளைஞர் இயக்கம் தான் பெறுகிறது.

அரசின் அநீதிக்கு எதிராக இணையத்தின் சமூக வலைப்பின்னல்களை பயன்படுத்தி வந்த இந்த இளம் அணியினர். காலித் சயீதின் மரணத்திற்குக் குரல் கொடுக்க பேஸ்புக் குழுமத்தில் அழைப்பு விடுத்தனர்.

இந்த பேஸ் புக் குழுமம் காலித் சயீதை எகிப்தின் பேராட்டத்தின் குறியீடாக மாற்றியது.

காலிதின் மரணத்தை தற்கொலை என்று கூறி பொலிஸ் அறிக்கை விட்டு தப்பித்துக் கொள்ளப் பார்த்தது.

காலித் மர்ஜுவானா என்ற போதைப்பொருளை அதிகமாக விழுங்கியதால் மரணம் சம்பவித்ததாக ஊடகங்களுச் சொன்னது.

காலித் இராணுவத்தில் இருந்து தப்பி ஓடியவர் என்றும் பல குற்றச் செயல்களுக்காக தேடப்படுபவர் என்று பல பொய்களைக் கூறியகாவல்துறை கொலைக்கான விசாரணையைத் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தது.

இணையத்தின் ஊடாக சகல குற்றச்சாட்டுகளுக்கும் பதில் கொடுத்து காலிதை நிரபராதி என்று நிரூபித்த ஏபரல் 6 இயக்கம் நீதி வேண்டி போராட்டத்தை மக்கள் மயப்படுத்தியது.

இறுதியில் கொலைக்கு சம்பந்தப்பட்ட பொலிசார் இருவரை கைது செய்து விசாரணையைத் தொடங்கியது எகிப்திய அரசு. காலித் பயங்கர காயங்களுக்குள்ளானதால் மரணம் சம்பவித்ததாக மருத்துவ அறிக்கையும் வெளிவந்தது.

வாரந்தோறும் ஒவ்வொரு நகரங்களிலும் காலிதின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான போராட்டங்களை இந்த அமைப்பு ஏற்பாடு செய்து வந்தது.  அந்தப் போராட்டங்களில் கலந்து கொள்பவர்கள் வீடு தேடி வரும் பொலிசாரினால் அச்சுறுத்தப்பட்டார்கள்.

எகிப்தின் எதேச்சதிகாரத்தின் எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சாத ஏப்ரல்6 இளம் குழுவினர். ஒரு மாற்று சக்தியாக எகிப்தில் எழுந்து வந்தனர்.  இதை உணர்ந்த அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் இவர்களை அமெரிக்காவுக்கு அழைத்து இவர்களை வாழ்த்தி வழியனுப்பியும் உள்ளதாக தகவல்கள் வந்திருக்கின்றன.


ஏப்ரல் 6 இளம் குழுவினருக்கு விரிக்கும் ஏகாதிபத்திய வலை?

எகிப்தில் வருகின்ற மாற்றம் தனது கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.

நவீன சிந்தனையாளர்கள் என்று நாமம் பெற்றவர்களே, அமெரிக்க நவ காலனித்து சிந்தனையில் சிக்கி திக்கு முக்காடிக் கொண்டிருக்கின்ற நிலையில் மாற்றம் ஒன்றுக்குப் போராடும் இந்த இளம் போராளிகளும் அமெரிக்காவின் வலையில் சிக்காமல் இருக்க வேண்டும்.

இதே துரோகத்தை அமெரிக்கா இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்கும் செய்தது.

எகிப்தின் வரலாற்றை நாங்கள் கொஞ்சம் பின் நோக்கிப்பார்த்தால்

ரஷ்யாவின் ஆதரவாளராக இருந்த எகிப்தின் ஜனாதிபதிஅப்துல் நாஸரை விரட்டுவதற்கு அரபு நாடுகள் ஊடாக அமெரிக்கா இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு உதவி செய்து அந்த அமைப்பை மலுங்கடிக்கச் செய்தது.

இந்த அமைப்பு கொண்டிருக்கும் உலகளாவிய மாற்று அரசியல் சிந்தனையை எகிப்தின் எல்லைக்குள்ளேயே கட்டுப்படுத்தி வைப்பதற்கு அமெரிக்காவும், அரபு நாடுகளும் கடும் முயற்சி மேற்கொண்டன.

நாஸரின் பிடியிலிருந்து நாட்டை மீட்டு பக்கத்திலிருக்கின்ற பெயரளவிலான அரபு ராஜ்யங்களில் ஒன்றாக எகிப்தை மாற்றும் அமெரிக்க நலன் சார்ந்த அரசியல் கருத்தியலுக்கு இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பை சுருக்கிய பெருமை அமெரிக்காவையே சாரும்.

நாஸரின் வீழ்ச்சிக்குப் பிறகு அமெரிக்காவின் பக்கம் சாய்ந்த அன்வர் சாதாத் அமெரிக்க நலன்சார்ந்த அரசியலை எகிப்தில் அறிமுகப்படுத்தினார்.  இஸ்ரேலோடு ஒப்பந்தங்கள் செய்தார். ஆனால் சவூதி போன்ற அரபு நாடுகள் நாஸரோடு போராடும் போது செய்த உதவியை இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு செய்யவில்லை. மாறாக அதன் தலைவர்களை தனது நாட்டில் தஞ்சமடைய வைத்து இன்று வரை அவர்களை தட்டிக் காத்து வருகிறது.

அரபு நாடுகளின் இஸ்லாத்திற்கு முரணான அரசியலை விமர்சிக்காமல் அந்த நாடுகளில் தஞ்சம் புகுந்து புகழோடு வாழ்ந்துக் கொண்டிருக்கும் யூசுப் கர்ழாவி போன்ற இன்றைய அதன் தலைவர்கள் இதற்கு சிறந்த சான்றாகத் திகழ்கின்றார்கள்.

எகிப்தை பொருத்தமட்டில் உயிரையும், உதிரத்தையும் சிந்தி யாரோ விதைத்த புரட்சியியை இன்று யாரோ அறுவடை செய்ய முன்வந்திருக்கின்றார்கள். அமெரிக்க, அரபு ஏஜன்ட்கள் முண்டியடித்துக் கொண்டு முகங்களைக் காட்டுகிறார்கள்.

எகிப்தின் எழுச்சி காலித் சயீதின் மரணத்தோடு போராட்டத்திற்குக் குதித்த ஏப்ரல் 6 இயக்கத்தின் அழைப்பின் பேரில் உருவான உன்னத போராட்டமாகும்.

காலித் சயீத்,  நல்லதோர் எகிப்து உருவாக வேண்டும் என்ற கனவில் கல்லறையில் துயில் கொள்கின்றான்.

போராட்டம் என்று கூறிக்கொண்டு, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வேறு நாடுகளுக்கு ஓட்டமெடுக்காமல்,

வாழ்வதற்காக கொள்கையை வயிற்றுப் பிழைப்பாக மாற்றிக் கொள்ளாமல் மறைந்த நீ உண்மையில் மகத்தானவன்!

காலித் சயீத் !.

உனக்காக பிரார்த்திக்கின்றேன்.

Comments

  1. நல்லதொரு தகவல். காலித;தின் கனவு நனவாகட்டும்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆரியவதியும் சவுதியின் ஆணி அறைதலும்!

அதிகரிக்கும் பள்ளிவாசல்களும் அழிக்கப் படும் ஒற்றுமையும்.

சாதனை படைத்த நிலக்கரி கொள்ளை !