Saturday, 4 October 2025

ரங்க திசாநாயக்கவை கண்டு நடுங்கும் எதிர்க்கட்சிகள்


 🔴"பாண் ஒன்றைத் திருடினாலும், 'மிக்' விமானத்திலிருந்து திருடினாலும் இரண்டும் ஒரே திருட்டுதான்."

இது வெறும் வார்த்தைகளாக எனக்குப் படவில்லை. ஊழலுக்கு எதிரான ஒரு உறுதிமொழியாகவே இந்த வார்த்தைகள் எனக்கு தோன்றியது. இதை மொழிந்தவா் வேறு யாருமல்ல, முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க தான் இவ்வாறு கூறியிருந்தார். இன்று ரங்க திசாநாயக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்.

இரு தசாப்தங்களாக மஜிஸ்ட்ரேட் நீதவானாகவும், மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றிய இவர், 2025 ஜனவரி 8 முதல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளா் நாயகமாக பொறுப்பேற்றுள்ளார்.

இன்று, கோடிக்கணக்கில் ஊழல் செய்து வயிறு வளர்த்த அரசியல்வாதிகளுக்கு, இவரது பெயர் சிம்மசொப்பனம் தான். ஏனெனில், இவர் வந்ததும், கிடப்பில் போடப்பட்டிருந்த ஊழல் ஃபைல்கள் தூசு தட்டி வெளியே எடுக்கப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர்கள், அரசியல்வாதிகள் குடும்பத்துடன் சிறைகளில் நுழைகின்றனர். அதைப் பார்த்து, “வைட் கொலர்” திருடர்களின் வயிற்றில் புளி கரைக்கப்படுகிறது.
இந்த நேரத்தில், “கீரி-பாம்பு கூட்டணி” அதாவது ரணில், ராஜபஷக்களின் அரசியல் தலைமையில் உருவாகியுள்ள புதிய கூட்டு முன்னணி கதிகலங்கிப் போயுள்ளது. அவர்கள் இப்போது ரங்க திசாநாயக்கவுக்கு எதிராகத் தங்கள் கத்திகளை இருட்டில் குந்திக்கொண்டு கூராக்கி வருகின்றனர்.

எனக்கு நீதிபதி ரங்க திசாயநாயக்க மீது மரியாதையும் மதிப்பும் இருக்கிறது.

தீர்ப்பு வழங்குவதில் பாகுபாடு காட்டாமல் நீதி, நோ்மையின் பக்கம் அவா் எப்போதும் நின்றிருக்கிறார். இவர் தீா்ப்பு வழங்கிய வழக்குகளை தேடிப் படிப்பவா்களுக்கு இதன் உண்மைகளை புாிந்து கொள்ள முடியும்.

இலங்கையின் முக்கியமான பல வழக்குகளுக்கு பேசப்படுகின்ற தீர்ப்புகளை வழங்கிய ஒரு நீதியரசராக அவரை நான் அறிந்து வைத்திருந்தேன். ரங்க திசாநாயக்க அவா்கள் தொடர்பாக எனக்கேற்பட்ட ஒரு நீதிமன்ற அனுபவத்தையும் இங்கு எழுதுவது பொருத்தம் என நினைக்கிறேன்.

2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், எங்களோடு இனவாத மோதல் ஒன்றை திட்டமிட்டு ஏற்படுத்திய டேன் பிரியசாத் என்ற இனவாதியுடன் தொடர்புபட்ட வழக்கு அது.

டேன் பிரியசாத் என்ற அந்த இனவாதிக்கு சாதகமாகவும், எங்களுக்கு பாதகமாகவும் வெல்லம்பிட்டிய பொலிஸார் அந்த வழக்கை நன்றாக திட்டமிட்டு வடிவமைத்திருந்தனா்.

நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கெதிராக திட்டமிட்டு இனவாதம் பரப்பப்பட்டுக் கொண்டிருந்த ஒரு கொடுமையான காலம் அது.
பாலில் கருத்தடை மருந்து கலந்து சிங்கள மக்களை மலடாக்குவதற்கு சதியொன்றை திட்டமிட்டு செய்வதாக, பொய்யாக ஜோடிக்கப்பட்ட அந்த வழக்கு நீதிபதி ரங்க திசாநாயக்க அவா்களின் முன் கொழும்பு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

அது ரணில் - மைத்திரியின் நல்லாட்சி(?) காலம். இனவாதிகளுடன் இணைந்து, அரச காவல்துறை வடிவமைத்த அந்த சதி நிறைந்த துரோகத் தனத்தையும், நீதிமன்றில் நின்றுக் கொண்டிருந்த அந்த திக் திக் நிமிடங்களையும் எங்களால் ஒரு போதும் மறக்கவே முடியாது.
நீதிபதி ரங்க திசாநாயக்க ஒரு நொடியில் சதியை உணர்ந்தார். பொலிஸாரிடம் கேள்விகள் மேல் கேள்விகளைத் தொடுத்தார். பொலிஸாரையும், இனவாதி டேன் பிரியசாதையும் கண்டித்தார்.
வழக்கை முதல் தடவையிலேயே தள்ளுபடி செய்தார். அந்தத் தீர்ப்பு, ஒரு இனவாத சதியிலிருந்து எங்களையும், முஸ்லிம் சமூகத்தையும் காப்பாற்றியது.

ராஜபக்ஷக்கள் சட்டத்தின் ஆட்சியை தனது கைகளுக்குள் வைத்துக் கொண்டு சுழற்றிக் கொண்டிருந்த காலத்தில், பிரதம நீதியரசராக இருந்த ஷிராணி பண்டாரநாயக்காவை பலாத்காரமாக பதவி நீக்கம் செய்த போது, நீதிபதிகள் சார்பாக அதற்கு எதிராக குரல்எழுப்பியதன் காரணமாக ராஜபக்ஷா்களின் எதிரியாக கூட அடையாளம் காணப்பட்டவா்தான் இந்த ரங்க திசாநாயக்க.

ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவருக்கு எதிராக ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவருக்கு எதிராக ஒரு தீா்ப்பையும் இவா் வழங்கியுள்ளார்.

கோத்தாபயவின் ஆட்சிக்காலத்தில், கோத்தாபய ராஜபக்ஷவோடு மிக் விமான ஊழலில் சம்பந்தப்பட்டவராக கருதப்படும் ராஜபக்ஷக்களின் நெருங்கிய உறவினரான உதயங்க வீரதுங்கவின் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அப்போதைய ஜனாதிபதியாகிய கோத்தாபயவின் நெருங்கிய உறவினா் என்றும் பார்க்காமல் சிறையில் அடைக்கும் உத்தரவை வழங்கியவா்தான் இந்த ரங்க திசாநாயக்க.

அதே போல, ஹோமாகமை நீதிமன்றில் ஊடகவியலாளா் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்ட வழக்கை விசாரித்தவரும் இந்த ரங்க திசாநாயக்க தான். அந்த வழக்கு விசாரணையின் போது, இனவாத பௌத்த பிக்குகள் ஹோமாகமை நீதிமன்றில் புகுந்து அதனை கலவர பூமியாக மாற்றினார்கள். அப்போது நீதிபதியாக கடமையாற்றியவரும் இந்த ரங்க திசாநாயக்க தான்.
இந்த சம்பவத்திற்காக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
இனி விடயத்திற்கு வருவோம்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தற்போதைய பணிப்பாளர் ரங்க திசாநாயக்க அவர்கள் ஜேவிபி கட்சியில் ஒரு செயற்பாட்டளாராக இருந்ததாகவும், அவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நியமித்திருப்பது சட்டவிரோதமானது என்றும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.

ஜேவிபியின் முன்னாள் அங்கத்தவரும் தற்போது ஐதேக கட்சியின் அங்கத்தவருமான நந்தன குணதிலக்க இத்தகைய கருத்தை வெளியிட்டு ஒரு புரளியை கிளப்பியிருக்கிறார்.

நந்தன குணதிலக்க முன்வைத்த குற்றச்சாட்டு ஆதாரமற்ற ஒன்று என்ற தகவலும் இப்போது வெளியே கசிந்தள்ளது.
நண்பன் முஜீபுா் றஹ்மானும் நந்தன குணதிலக்கவின் இந்தக் கருத்தை காவிக்கொண்டு போய் பாராளுமன்றத்தில் கொட்டியதால், பாராளுமன்ற அமர்வும் அன்று சூடு பிடித்தது. நேற்று முஜீபுா் றஹ்மானோடு இது தொடா்பாக விவாதித்தேன்.
ரங்க திசாநாயக்கவை தாக்குவதற்கு களமிறங்கியிருக்கும் “திருட்டு அரசியல் கும்பலால்” முஜீபுா் றஹ்மான் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறார் என்ற எனது கணிப்பை நேற்று நான் அவரிடமே சொல்லி விட்டேன்.

சஜித்தின் அணியிலுள்ளவர்களுக்கும் ஏனைய எதிா்க்கட்சியினருக்கும் “ஆத்தல்” எடுக்கும் ஒரு நிகழ்வாக இந்த ரங்க திசாநாயக்க விவகாரம் இப்போது மாறியிருக்கிறது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் நகர்வுகளை முடக்குவதன் மூலம் தண்டனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்று தப்புக்கணக்கு போடுபவா்கள் ரங்க திசாநாயக்கவக்கு எதிரான பிரசாரத்தை முடுக்கி விட்டிருக்கிறார்கள் என்பதை அறிவதற்கு ஏழாம் அறிவு ஒன்றும் அவசியமில்லை.
* இந்தப் பதிவு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக எழுதப்பட்ட பதிவல்ல என்பதை தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்.

அஸீஸ் நிஸாருத்தீன்
28.09.2025
7.00pm

No comments:

Post a Comment

ரங்க திசாநாயக்கவை கண்டு நடுங்கும் எதிர்க்கட்சிகள்

  "பாண் ஒன்றைத் திருடினாலும், 'மிக்' விமானத்திலிருந்து திருடினாலும் இரண்டும் ஒரே திருட்டுதான்." இது வெறும் வார்த்தைகளாக எ...