முபாரக்கின் மூன்று தசாப்த சர்வாதிகார ஆட்சியை ஆட்டங்காண வைத்து அவரை பதவியிலிருந்து விரண்டோட வைத்த மக்கள் எழுச்சிக்கு பின்னணியிலல் இருந்து செயற்பட்டவர்களில் ஒருவர்தான் அஸ்மா மஹ்ஃபூஸ் என்ற 26 வயதான இளம் யுவதி.கெய்ரோ அமெரிக்க பல்கலைககழகத்தில் வர்த்தக முகாமைத்துவத்தில் பட்டம் பெற்றவர்.
எகிப்தின் இந்த எழுச்சி இப்படித்தான் ஆரம்பமானது.
அஸ்மா மஹ்ஃபூஸ் தஹரீர் சதுக்கத்தில் ஒன்று சேர்ந்து முபாரக்கின் அடக்குமுறைக்கு எதிராக 2011 ஜனவரி 25ம் திகதி அன்று அணி திரளுமாறு எகிப்திய மக்களை உருக்கமாக அழைக்கும் ஒரு வீடியோவை தனது வலைப்பூவில் (புளக்கில்) பதித்தார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு எகிப்தின் அல்மஹல்லா அல் குப்ரா நகரத்தில் இடம்பெற்ற தொழிலாளர் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்து, ஆதரவு தெரிவித்து துவக்கப்பட்ட 'ஏப்ரல் 6 இளைஞர் இயக்கம்' என்ற ஃபேஸ் புக் குழுமத்தின் ஸ்தாபகர்களில் இந்த அஸ்மா மஹ்ஃபூசும் ஒருவர்.
இவர் பதித்த வீடியோ எகிப்தியர்களை எழ வைத்ததது.துனீசியாவில் போஅஸீஸி என்ற இளைஞன் தனக்குத்தானே வைத்துக்கொணட தீ அந்த நாட்டின் எதேச்சதிகார தலைமையை எப்படி அதிர வைத்தது என்பதையும் அந்த தூனிசிய புரட்சி ஏற்படுத்திய உத்வேகத்தில் எகிப்தில் தங்களை தாங்களே தீவைத்துக் கொளுத்திய 4 இளைஞர்களைப் பற்றிய தகவல்களுடன் அந்த வீடியோ இணையத்தில் வேகமாக உலாவியது.
அந்த வீடியோவில் அஸ்மா இப்படி உரையாற்றினார்,
"எகிப்தில் துனீசியாவைப் போல் புரட்சியை ஏற்படுத்த வேண்டுமென்ற ஆர்வத்தில் நான்கு இளைஞர்கள் தங்களை தாங்களே தீவைத்துக் கொளுத்தியுள்ளனர்.
அந்த இளைஞர்கள் சுதந்திரத்தையும், கண்ணியத்தையும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள் அவர்கள். அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். அவர் பாவம் புரிந்துவிட்டதாகவும். வீணாக தனது உயிரை பலிகொடுத்துவிட்டார் என்றும். அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னிப்பானாக! என்றும் சிலர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். இது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு?"
"நாட்டில் ஒரு மாற்றத்தை வேண்டி தனது உயிரை தியாகம் செய்த அந்த இளைஞருக்கு ஆதரவு தேடி நான் தனியாக தஹ்ரீர் சதுக்கத்திற்கு சென்று சுலோகங்களை உயர்த்திப் பிடிக்கப்போகிறேன் என்று ஃபேஸ்புக்கில் ஒரு தகவலை பதிவு செய்தேன். ஒரு சிலராவது எனக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என நினைத்தேதன். ஆனால், மூன்று இளைஞர்கள் மட்டும் எனக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்தனர். எங்களுக்கு பின்னால் போலீஸ் கவச வாகனங்கள் அணிவகுத்து வந்தன."
"ஹுஸ்னி முபாரக்கின் குண்டர் படையினரும், அதிகாரிகளும் எங்களை அச்சுறுத்தினர். பலம் பிரயோகித்து எங்களை அகற்றினர். சுயமாக தங்களை தீவைத்துக் கொளுத்தியவர்கள் மனநோயாளிகள் என அவர்கள் தெரிவித்தனர். மனநோயாளிகளாகயிருந்தால் ஏன் அவர்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்கு சென்று தீவைக்கவில்லை?" அஸ்மா வினா தொடுக்கிறார்.
"ஜனவரி 25-ஆம் தேதி உங்கள் அனைவரையும் தஹ்ரீர் சதுக்கத்திற்கு அழைக்கத்தான் இந்த வீடியோவை பதிவு செய்கிறேன்.உங்களுக்கு தன்னம்பிக்கை இருக்குமானால், இந்த நாட்டில் கண்ணியமாக வாழ விருப்பம் இருக்குமானால் ஜனவரி 25-ஆம் தேதி போராட்டத்தில் நாம் குதிக்கவேண்டும். அரசியல் உரிமைகள் குறித்து ஒன்றும் நான் பேசவில்லை. மனித உரிமைகளாவது எமக்குக் கிடைக்கவேண்டும்.
உங்களில் யார் வந்தாலும், வராவிட்டாலும் நான் தனியாகவே தஹ்ரீர் சதுக்கத்திற்குச் செல்வேன். தீக்குளிப்பதற்காக அல்ல. என்னை பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக் கொன்றாலும் பரவாயில்லை.
நீங்கள் ஆணாக உங்களை கருதினால் என்னுடன் வாருங்கள்.
இந்த செய்தியை நீங்கள் எஸ்.எம்.எஸ், ட்விட்டர் போன்ற இணையதள சமூக வலையமைப்புகள் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு அனுப்புங்கள்." -
புரட்சி ஒன்றுக்கு போடப்பட்ட இந்த விதை எகிப்திய மக்கள் அனைவரினது உள்ளங்களிலும் ஆழமாக வேர் விட்டது. அஸ்மா மஹ்ஃபூஸின் அரசியல் மாற்றத்திற்கான இந்த அழைப்பு எகிப்தின் எட்டுத் திக்கும் வேகமாக பரவியது. இளைஞர்களின் இதயங்களை ஒன்றிணைத்து ஜனவரி 25-ஆம் தேதி தஹ்ரீர் சதுக்கத்தில் ஒன்றுக் கூட்டியது.
வீடியோ காட்சியின் இறுதியில் அவர் உருக்கமாக வேண்டுகிறார்
"அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த சக்திக்கும் அஞ்சாதீர்கள்.
"எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்..." என தனது திருக்குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகிறான்.
ஜனவரி 25-ஆம் தேதி நான் தஹ்ரீர் சதுக்கத்திற்கு செல்வேன். பின்னர் நான் உரக்கக் கூறுவேன் "ஊழல் ஒழியட்டும்! முபாரக் அரசு ஒழியட்டும்! என ந◌ான் கோஷமிடுவேன்"
இது தான் அஸ்மாவின் வேண்டுகொள்.
இந்த இளம் யுவதியின் வேண்டுகொளுக்கு எகிப்திய மக்கள் செவி சாய்த்தார்கள்.
போராடினார்கள்.
அமரிக்கா, இஸ்ரேல், அரபு நாடுகளின் ஆசிர்வாத்தோடு வாழ்ந்த முபாரக்கின் ஆட்சி முற்றுப்பெற்றிருக்கிறது.
ஆனால் அதிகாரத்தை பங்கு போட்டுக்கொள்ள பலர் முண்டியடித்துக் கொண்டு முன் வந்துக்கொண்டிருக்கின்றார்கள்.
எகிப்தின் எதிர்காலம் எப்படி அமையும்..?
பொறுத்திருந்து பார்போம்.
எகிப்தின் எதிர்காலம் எப்படி அமையும்..?
ReplyDeleteபொறுத்திருந்து பார்போம்.
இன்ஷா அல்லாஹ். அல்லாஹு அக்பர்