எகிப்தின் எழுச்சியை வரவேற்று அந்த எழுச்சிக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்கா பஹ்ரைன் எழுச்சியைக் கண்டு மிரண்டு போயுள்ளது. பஹ்ரைனின் எல்லை நாடான சவுதி நாட்டின் மன்னன் அப்துல்லாஹ்வின் வயிற்றிலும் இது புளியைக் கரைத்திருக்கிறது.
புரட்சி தனது நாட்டிற்குள்ளும் புகுந்து விடுமோ என்று அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு வால்பிடிக்கும் சவுதி மன்னர் குடும்பங்கள் நடுநடுங்கிப்போயுள்ளன.
எகிப்தின் இராணுவம் போராட்டம் நடாத்திய மக்கள் மீது தாக்குதல் தொடுத்த போது கண்டித்த அமெரிக்கா, பஹ்ரைன் விடயத்தில் மௌனமாக இருக்கிறது. பஹ்ரைன் இராணுவம் கடுமையான முறையில் எழுச்சியை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
உலகிலேயே தனது சொந்த நாட்டு பிரஜைகளைக் கொண்டிராத இராணுவம் பஹ்ரைனில் தான் இருக்கிறது. இங்குள்ள இராணுவம் முற்று முழுதாக வெளிநாட்டு பிரஜைகளை உள்ளடக்கிய இராணுவமாகும்.
பாகிஸ்தான், இந்தியா, எகிப்து போன்ற நாட்டவர்தான் இந்நாட்டின் இராணுவத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர். எனவே பஹ்ரைன் நாட்டு இராணுவம் தேசிய இராணுவம் என்ற அந்தஸ்து இல்லாமல் மன்னர் குடும்பத்தின் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு கூலிப்படையாகவே செயற்பட்டு வருகிறது.
இது தனது நாட்டு மக்கள் மீது இந்நாட்டு மன்னர் குடும்பங்களுக்கிருக்கின்ற நம்பிக்கையின்மையை எடுத்துக்காட்டுகின்றது.
இந்தக் கூலிப்படை மிக மோசமான முறையில் அடக்குமுறையைப் பிரயோகித்து மக்களின் போராட்டத்தை நசுக்க முயற்சித்து வருகிறது.
தொடராக 200 வருடங்கள்பஹ்ரைனை ஆண்டு வரும் கலீபா குடும்பம், அந்நாட்டு பிரஜைகளை அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்தி வருவதுடன், அந்த நாட்டை சவுதியினதும், அமெரிக்காவினதும் சொர்க்க புரியாக மாற்றியுமுள்ளது.நிராயுதபாணியாக போராட்டம் நடாத்தும் மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடாத்தும் பஹ்ரைன் படையினரின் செயலை அந்நாட்டின் எதிர்க்கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.
இதே வேளை அந்நாட்டின் தொழிலாளர் அமைப்புகள் வேலை நிறுத்தம் ஒன்றிற்கான அழைப்பொன்றையும் விடுத்திருக்கின்றன.
வெள்ளிக்கிழமையன்று, இராணுவ துப்பாக்கிப் பிரயோகத்தால் கொல்லப்பட்ட போராட்டக்காரர்களின் ஜனாஸா ஊர்வலத்தின் மீது இராணுவம் தாக்குதல் நடாத்தியதைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவின் ஐந்தாவது பெரிய கடற்படைத்தளம் பஹ்ரைனில் தான் இருக்கிறது. எனவே பஹ்ரைனில் உள்ள மன்னராட்சியைப் பாதுகாப்பதன் மூலம் தனது படைத்தளத்தையும் அது பாதுகாத்துக்கொள்கிறது.
அதே போல சுற்றுலாத்துறையின் முக்கிய நாடாக இந்நாடு திகழ்கிறது.
சவுதி நாட்டின் சட்டங்கள் தடுத்திருக்கும் அத்தனை தீய செயல்களையும் பஹ்ரைனில் எவ்வித பிரச்சினையமின்றி செய்யக் கூடிய சூழ்நிலை இருப்பதால் சவுதி நாட்டினர் விரும்பி பயணிக்கும் ஒரு நாடாக பஹ்ரைன் திகழ்கிறது.
No comments:
Post a Comment