Saturday 23 February 2013

பொதுபல சேனாவின் ஹலாலும் முஸ்லிம் அரசியலின் ஹராமும்


ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

                                                                                    ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


இந்நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகம் இன்று பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. இலங்கையின் முதலாவது சிறுபான்மையின தமிழ்ச் சமூகம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்த, முகங்கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையிலேயே இரண்டாவது  சிறுபான்மையின முஸ்லிம் சமூகமும் இன்று பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அடுத்த இனரீதியான அடக்குமுறை முஸ்லிம்களுக்கே என்பது பலராலும் அன்று எதிர்வு கூறப்பட்டிருந்த நிலையில் அது இன்று நிறைவேறத் தொடங்கி விட்டது.

 விடுதலைப் புலிகள் தோற்கடிக்கபட்ட பின்னர் இலங்கையில் இனி இனவாதம், மதவாதம் ஒன்றுமே இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  அடிக்கடி கூறிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே இன்று முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் தெற்கிலிருந்து தோற்றம் பெற்றுள்ளது.

தென்னிலங்கை சிங்கள பௌத்த கடுங்கோட்பாட்டுக் கொள்கையைக் கொண்ட சகல தரப்பினரினதும் மொத்த இனவாத தீ நாக்கானது முதலில் தம்புள்ளை வரை மட்டுமே நோக்கி நீண்டிருந்தது. இன்று அது நாடளாவிய ரீதியில் வளைந்து சென்று கொண்டிருக்கிறது. பள்ளிவாசல்கள், ஹலால் உணவுகள், முஸ்லிம் பெண்களின் பர்தாக்கள் என அனைத்தினையும் வெறுப்புடன் பகிரங்கமாகப் பயமின்றி விமர்சித்து அவற்றுக்கு எதிராகச் செயற்படும் நிலை உருவாகியுள்ளது. இதன் இறுதி உச்சத்தின் ஒரு கட்டமாக முஸ்லிம் வர்த்தக நிலையங்களில் பொருட்களைக் கொள்வனவு செய்யக் கூடாது என்ற பகிரங்க அறிவித்தலும் இந்த பௌத்த சிங்கள கடுங்கோட்பாளர்களால் விடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, முஸ்லிம் பெயர் கொண்ட வீதிப் பெயர் பலகைகளும் நிறம் பூசி அழிக்கப்பட்டு அவை சிங்கள பெயர்களப் பெயர்களாக மாற்றப்படும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. சித்திலெப்பை வீதி இன்று சித்தார்த்த வீதியாகிப் போயுள்ளது.

இன்னுமொன்றைக் கூறப் போனால், எண்பது சத வீத சிங்கள பௌத்தர்களைக் கொண்ட இந்த நாட்டில் எட்டு வீதமான முஸ்லிம்களின் ஹலால் உணவு எதற்கு? அதனை சிங்களவர்கள் பயன்படுத்த வேண்டிய தேவையில்லை என்ற அளவுக்கு இனவாதம் இன்று சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு அவர்களது உணர்வுகளும் உசிப்பி விடப்பட்டுள்ளன. இதனை முஸ்லிம்களுக்கு எதிரான நாடளாவிய ரீதியிலான கலவரம் ஒன்றின் கட்டியம் என்று கூறினாலும் மிகையாகாது.
 கிராமம் கிராமாகச் சென்று முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. பெரும்பான்மைக்குள் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் இன்று அச்ச உணர்வுடனேயே ஒவ்வொரு நாளையும் எதிர்நோக்கின்றனர்.

 இந்த நாட்டின் சிங்கள அமைச்சர்களில் ஒருவரான பாட்டாலி சம்பிக்க ரணவக்க அண்மையில் தெரிவித்திருந்த கருத்துகள் கூட அவரது மட்டகரமான சிந்தனையை வெளிப்படுத்தியிருந்தன. ‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அன்று ஆயுதங்களின் மூலம் செய்ய நினைத்தவற்றை இன்று அகில இலங்கை ஜமயத்துல் உலமா சபை ஹலால் மூலம் செய்ய முயற்சிக்கின்றது. முழுநாட்டையும் உற்பத்திகளையும் இஸ்லாமிய மயப்படுத்த முயற்சிக்கின்றனர்.” என்றெல்லாம் நரம்பில்லாத நாக்கினால் வரம்பின்றி அபாண்டங்களை கட்டவிழ்த்து விட்டிருந்தார்.
 ஆனால், இவையெல்லாம் ஒரு புறமிருக்க, இந்த வியடம் தொடர்பில் பெரும்பாலான முஸ்லிம் அரசியல் தலைமைகளின் நிலைப்பாட்டை நோக்கும் போது வெட்கித் தலைகுனிந்து வேதனைப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 1. மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி ஆக்கினால் முஸ்லிம் பள்ளிவாசல்களில் பாங்கு சொல்ல அனுமதிக்கமாட்டார் என்று புத்தளத்தில் ஒலித்த குரல்…..

2. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடாக எமது கட்சி இந்தத் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் நான் வெட்கித் தலைகுனிய வேண்டியிருந்திருக்கும். இன்று எத்தனையோ பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டு விட்டன என்று கிழக்கில் ஒலித்த குரல்…

3. மஹிந்தவை ஜனாதிபதி ஆக்கினால் முஸ்லிம்களின் நிலை மோசமாகி விடும் என கண்டியில் ஆரூடம் தெரிவித்த அரசியல் குரல்கள்.. என அடுக்கிக் கொண்டே போகலாம்.

குறித்த முஸ்லிம் அரசியல்வாதிகளால் இப்படியெல்லாம் அன்று கூறியவைகள் என்னவோ இன்று நடந்தேறி வருகின்றனதான். ஆனால், இவற்றுக்கெல்லாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காரணம்  அல்ல என்று கூறினாலும் ஜனாதிபதி மஹிந்த மீதே இவை அனைத்துக்குமான குற்றத்தை அந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் அன்று சுமத்தியதன் காரணமாக முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீதே அதிருப்தி கொள்ளும் நிலையும் உருவாகியுள்ளது.

 இவ்வாறெல்லாம் கூறி அன்று ஜனாதிபதிக்கும் அவரது அரசுக்கும் எதிராகப் குரல் கொடுத்து இந்த நாட்டு முஸ்லிம்களின் உணர்வுகளை உசுப்பி விட்டு அவர்களைப் பகடைக்காய்களாக மாற்றிய அதே நபர்கள், அதே முஸ்லிம் அரசியல் பிரமுகர்களே இன்று முஸ்லிம்களுக்கு ஒன்றுமில்லை. அவர்கள் இந்த நாட்டில் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்கிறார்கள். ஜனாதிபதி கடவுள் போன்றவர். அவர் முஸ்லிம்களைப் பாதுகாப்பார் என்று கூறுமளவுக்கு வெட்கம் கெட்டுப் போய் உள்ளனர். தங்களது அரசியல் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சமூகத்தை ஏலத்தில் விட்டு இன்று அரசுடன் இணைந்து, ஆதரவு வழங்கி அரசுக்கு சந்தனம் பூசி, சாமரம் வீசும் அளவுக்கு படியிறங்கிப் போன முஸ்லிம் அரசியல்வாதிகளால் முஸ்லிம் சமூகம் நாதியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

 1 பொது பல சேனா போன்ற இயக்கங்கள் இனவாதத்தையும் மத வாதத்தையும் ஊக்குவித்து நாட்டை மற்றுமொரு அழிவை நோக்கி வழிநடத்துவதாக தென் மாகாண சபை அரச தரப்பு உறுப்பினர் பதேகம சமித்த தேரர் ஒரு  புறத்தில் எச்சரிக்கிறார்…

 2. மறுபுறத்தில்… முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கிறார் சுமந்திரன் எம்.பி.

 இவ்வாறு கூட்டணியின் பத்தேக சமித்த தேரரும் கூட்மைப்பின் சுமந்திரன் எம்.பியும் முஸ்லிம்களுக்காகப் பரிந்து பேச, அதனைக் கூட ஜீரணிக்க முடியாத சில முஸ்லிம் அரசியல்வாதிகள் எதிர் அறிக்கை விடும் அளவுக்கு நிர்வாண அரசியல் நடத்துவது வெட்கக் கேடானது. முஜிபுரும் முஸ்ஸமிலும் முஸ்லிம்களுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தாலும் அதற்கும் பதில் அறிக்கை தயாரிப்பதும் அதே முஸ்லிம் அரசியல்வாதிகளே. இவ்வாறெல்லாம் இவர்கள் செயற்படுவது யாரைத் திருப்திபடுத்திக் கொள்ளவோ, எதனைப் பெற்றுக் கொள்ளவோ?

இன்னுமொரு விடயத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும் கடந்த செவ்வாய்க்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அந்தக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள்,முக்கிய பிரமுகர்கள், மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலைச் சேர்ந்த பிரமுகர்கள் போன்றோர் பொது பலசேன அமைப்பின் தலைமைகளை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் சந்தித்த போது, முஸ்லிம்கள் தரப்பில் சில கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்தன. முஸ்லிம் சமூகம் சனத்தொகையைப் பெருக்கி வருகிறது என்ற குற்றச்சாட்டுக்கும் அங்கு பதிலளிக்கப்பட்டிருந்தது.

 ஆனால், முஸ்லிம் சனத் தொகை அதிகரிப்பு தொடர்பான பொது பல சேனாவின் இதே குற்றச்சாட்டுக்கு  முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் முன்னர் இவ்வாறானதொரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.

 அதாவது, முஸ்லிம் பெண்களின் திருமண வயது எல்லையை மாற்றுவது தொடர்பில் ஆலோசிக்கப்படவுள்ளதாக அவர் கூறியிருந்தார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதன் மூலம் பொது பல சேனாவின் குற்றச்சாட்டை அவர் ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப சட்டத் திருத்தம் செய்யவும் அவர் விரும்புகிறார் என்பதே இதன் மூலம் புலப்படுகிறது. தன் வீட்டுக்கு வெளிச்சம் வரவேண்டும் என்பதற்காக பக்கத்தான் வீட்டுக் கூரையைக் கூட எரிக்கத் தயங்காத இவ்வாறான அரசியல்வாதிகள் தொடர்பில் இந்நாட்டு முஸ்லிம்கள் பொதுபல சேன தொடர்பில் காட்டும் கவனத்தை விட அதிக அவதானம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

 முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் அண்மையில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் எழுந்திருந்தன. ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முஸ்லிம்கள் தொடர்பில் ஆதரவாகப் பேசியிருந்தார். அப்போது அவரது உரைக்கு எதிர்ப்புகள் எந்தத் தரப்பிலிருந்து அதிகளவில் வந்தன என்பது அனைவரும் அறிந்த விடயமே. அதே போன்று அரச தரப்பு அமைச்சர் ஒருவர் ரணிலின் கூற்றை மறுத்துப் பேசிய போது கைதட்டி ஆரவாரம் செய்து பக்கப்பாட்டு பாடியவர்கள் எந்தத் தரப்பினர் என்பதும் அப்பட்டமாகத் தெரிந்த விடயமே. அரசு தரப்பு அறிக்கையானது, தனது கருத்துக் கேட்டே தயாரிக்கப்பட்டதாகக் கூறிய அமைச்சர் ரவூப் ஹக்கீம், பின்னர் தான் அப்படிக் கூறவில்லை என்றும் ஊடகங்கள் தனது உரையைத் தவறாகப் புரிந்து கொண்டன என்றும் வழமையான அறிக்கையை விட்டதனையும் யாரும் அறியாமல் இல்லை.

முஸ்லிம் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டதாகத் தேர்தல் கால பிரசாரம் செய்தோர் தேர்தலின் பின்னர் அரசுடன் ஒட்டிக் கொண்டு, இன்று அப்படி ஒன்றுமே நடக்கவில்லை என்ற அரச தரப்பாரின் கூற்றுக் கூற்றுக்கு நற்சான்றிதழ் வழங்கும் சூடு சொரணையற்ற நிலையிலேயே இன்று முஸ்லிம் அரசியலில் கோலோச்சுகிறது.

பொதுபல சேனா என்பது பௌத்த, சிங்கள கடுங்கோட்பாடு கொண்டதொரு அமைப்பு. அந்த அமைப்பைச் சேர்ந்தோர் நிச்சயமாக இனவாதிகளாகவே இருப்பர். இதில் பெரிதாக ஆச்சரியப்படத் தேவையில்லை. ஆனால், இந்த விடயத்தில்  இன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகளில் பலரின் நடவடினக்கைள் அதனை விட மிக மோசமாக, ஹராமாக அமைந்துள்ளன என்பதனை நாட்டின் ஒவ்வாரு முஸ்லிம்மும் உணர வேண்டியதும் இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.

இதேவேளை, தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக எழுந்துள்ள நிலைமைகள் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌஸி, ரவூப் ஹக்கீம், ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், றிஷாத் பதியுதீன் ஆகியோர் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்து கருத்துத் தெரிவித்தாகச் செய்திகள் வெளிவந்தன. அங்கு  ஒரு சிங்கள அமைச்சரால் முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துகள் முன்வைக்கப்பட்ட போது அதற்கெதிராக இந்த நான்கு முஸ்லிம்களும் கிளர்ந்தெழுந்தனர் என்றும் கூறப்படுகிறது. வரவேற்கப்பட வேண்டும். இதன் பிரதிபலிப்புகள் எவ்வாறு அமையப் போகின்றன என்பதனையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஏனெனில் முஸ்லிம் மக்கள் இன்று முஸ்லிம் அரசியலில் நம்பிக்கையற்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதே இதற்கான காணரமாகும். எதனையும் அவர்கள் ஸ்திரமாக நம்ப மறுக்கும் ஒரு நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர் என்பதும் உண்மையே.

நன்றி - http://www.thinakkathir.com

Friday 15 February 2013

விஸ்வரூபம்’ - காயத்தை ரத்தத்தால் கழுவும் கதை | நன்றி: கீற்று.காம்


கருத்துச் சுதந்திரம் பாகம் 1
'விஸ்வரூபம்’ என்ற, திரைக்கு வந்து சில நாட்களே ஆன 'திரைக் காவியத்தைக்' காண நேர்ந்தது. சர்ச்சையே அப்படத்திற்கு விளம்பரத்தைத் தேடித் தந்தது. முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரித்தவுடன், நான் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று கமல் அறிவித்தார். பிறகு அவர்களிடம் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு வெளியேறும் முடிவை தள்ளிப் போட்டிருக்கிறார். தேசப்பற்று காரணமாக இருக்கலாம்.
விஸ்வரூபம் திரைப்படம், முஸ்லீமாக இருக்கும் கதாநாயகன், விஷ்ணுவின் ரூபம் எடுக்கிற படம். அதாவது நல்லது செய்யும் எந்த முஸ்லீமுக்கும் ஓர் இந்து சாயல் இருக்க வேண்டும்.
அவரது ‘விஸ்வரூபம்’ திரைப்படம் புரியவில்லை என்று பலர் கூறுகின்றனர். அதெல்லாம் பொறாமை காரணமாக சொல்கிறார்கள். அது மிக எளிதாக புரியும் படம். ஏதாவது ஒரு ‘கான்’ வில்லனாக வரும் சில அமெரிக்க ஜேம்ஸ்பாண்ட் படங்களின் காட்சிகளையும், பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடித்த சில இந்தி சினிமாக்களின் காட்சிகளையும், இந்திய ‘தேசபக்தி’ பொங்கும் சில தமிழ் சினிமாக்களின் காட்சிகளையும் வெட்டி ஒட்டிவிட்டு, 11வது அவதாரத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் சேர்த்துவிட்டால் அதுதான் இந்த விஸ்வரூபம். ஆனால் கமல்சார் இதற்காக ஏன் சொத்தை அடகுவைத்தார் என்று புரியவில்லை.
இப்படத்தில் கமலின் பெயர் விஸ்வநாதன். புத்திசாலியான அதிகாரியாக ஒருவர் நடித்தால் நாயகன் ஒன்று ‘ராகவனாக’ இருப்பார் அல்லது இந்த படத்தின் பாத்திரம் போல ‘விஸ்வநாதனாக’ இருப்பார். ஏதாவது ஒரு அம்பிமார். கமல் இந்தப் படத்திலும் ஒரு பார்ப்பனர். இதனால் அவர் சாதிப்பற்று கொண்டவர் என்று நீங்கள் தவறாக புரிந்துகொள்ளக் கூடாது அல்லவா! அதனால், அவாள் பாசையில் அச்சுப்பிசகாமல் பேசும் அவரது மனைவி, கோழிக்கறி விரும்பிச் சாப்பிடுவார். இப்படி ஆராய்ச்சி செய்வது சரியா என்று யாராவது என்னைக் கேட்டால் நடிகர் ரஜினிகாந்த், கமலைப் போல அடிக்கடி பார்ப்பன வேடத்தைப் பூணுவதில்லையே, ஏன் என்ற கேள்விக்கு பதில சொல்வீர்களாக.
கமல் சாரின் பார்ப்பன மனைவி ‘அடக் கடவுளே’ என்று சொல்லும்போது கமல் ‘எந்தக் கடவுளே’ என்று கேள்வி கேட்டு, தான் நாத்திகன் என்று சொல்லிக் கொள்கிறார். ஆனால் முஸ்லீம்கள் இப்படத்தின் நோக்கத்தைக் கேள்வி கேட்பார்களே என்பதற்காக கமல் உண்மையிலேயே தொழுகை நடத்தக் கூடிய முஸ்லீமாம். மச்சம் மட்டும் வச்சு மாறுவேடம் போடும் நாயகன் மாதிரி, இதுல முஸ்லீம் பாத்திரம் மச்சம் வச்சவரு மாதிரி இருக்கும். விஸ்வநாதன் என்ற தொழிலுக்காக வேடம் போடும் பாத்திரத்துக்கு பார்ப்பன‌ குடும்பமே இருக்கு.. ஒரு பாட்டு இருக்கு.. கமல் பரத நாட்டியம் ஆடுகிறார் மாமிகள் புடை சூழ. ஆனால் படத்தில் நிஜமாக வரும முஸ்லீம் பாத்திரம் அம்புட்டு அநாதை. படத்துல வரும் கமல்பாய் பேரு 'தௌபீக்’கா அல்லது நாசரா என்று என்னால் இதுவரை கண்டே பிடிக்க முடியவில்லை. கவுண்டமணி சொல்ற மாதிரி நல்ல டகால்ட்டி. 
கருத்துச் சுதந்திரம் பாகம் 2 
முல்லா ஒமர் மதுரையிலும், கோவையிலும் தங்கியிருந்ததாக சொல்லியிருக்கிறார். இன்னும் ஏதாவது ஒரு முஸ்லீமின் ரேஷன் கார்டையும் சேர்த்து காண்பித்திருக்கலாம். நோக்கம் இனிதே நிறைவேறியிருக்கும். அகில உலகமெங்கும் உளவுத்துறை வலைப்பின்னலை வைத்திருக்கும் அமெரிக்க சி.ஐ.ஏ அதிகாரிகளை விஞ்சிய அகில உலகநாயகனாக நீங்கள் ரெண்டு சண்டை போடுவதற்கும், நாலு பாட்டும் பாடுவதற்கும் முஸ்லீம்கள் பலிகடாக்களா? தசாவதாரத்தில் அதிபர் 'புஷ்' வேடமே போட்டாச்சு அப்பறம் ஏன் கமல் சார் தேவையில்லாம இப்படியொரு ஜீனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.
நீங்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவேன் என்று சொன்னதை விட நேராக அமெரிக்கா போகிறேன் என்று சொல்லியிருக்கலாம். கமலஹாசனில் ‘ஹாசன்’ என்ற வார்த்தைக்காக தங்களை ஜட்டியைக் கழற்றி சோதனை போட்ட நல்ல நாடான அமெரிக்காவிற்கு தாங்கள் போய் வாருங்கள்; நாங்கள் வழியனுப்பி வைக்கிறோம். ஜார்ஜ் பெர்னாண்டஸை.. ஷாரூக்கானை.. அப்துல் கலாமை அதேபோல் சோதனை நடத்திய அமெரிக்கா, தங்களுக்குப் பிடித்த நாடு. இப்படி எந்த அரபுநாடும் நம்நாட்டின் பிரபலங்களை இழிவுபடுத்தியதாகத் தெரியவில்லை. ஆனால், அரபுநாடுகளின் மீது உங்களுக்கு என்ன கோபமோ?
கருத்துச் சுதந்திரம் பாகம் - 3
ஓர் இந்திய உளவு அதிகாரி நம்ம கமல். உளவுப்பணிக்காக தனது துணைவியாரையே தாரை வார்த்து அவர் உளவு பார்க்கிறார். அந்த நாயகி ஆன்ட்ரியாவை அபூர்வ சகோதரன் படத்தில் வரும் ஏட்டு போல ‘தெய்வமே நீங்க எங்கயோ போயிட்டீங்க’ என்று கமல் சொல்லாத குறையாக, கூடவே சொட்டர போட்டுக்கிட்டு அலையவிடுகிறார். அரவாணியாக இருக்கும் நாயகன் கமலை மணந்தவள் மற்றொருவரை விரும்புவதை வில்லத்தனமாகக் காட்டுகிறார். ‘அமெரிக்காவில் மழை பெய்யாதா போயிட்டுப் போது’ என்று நாயகி கலக வசனம் பேசினாலும் மொத்தத்தில் அவளை வில்லியாக்கி விடுகிறார். நல்ல பெண்ணுரிமைவாதி நீங்கள்.
ஆண் அடையாளத்தைத் துறந்து, தாம்பத்தியத்தைத் துறந்து, அமெரிக்காவுக்கு வேலை செய்யும் தியாகி நம்ம கமல். அமெரிக்காவைக் காப்பாற்ற இந்திய அரசு வெட்டியாக சம்பளம் கொடுக்கிறது. முல்லா ஒமர் 'தமிழ் பேசும் ஜிகாதி வான்டட்' என்று கேட்டதால் கமல் சென்று இறங்கிவிட்டார். உயிரையே பணயம் வைத்து முல்லா ஒமரை நெருங்கிவிட்டார்.
அமெரிக்க ராணுவம் தமது வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள் என்ற ஒரு நியாயமான காரணம் இருப்பதாலேயே ஆப்கனில் ஒரு கிராமத்தைத் தாக்குகிறது. காரணமில்லாமல் தாக்க மாட்டார்களாம்! ஹெலிகாப்டரில் இருந்து சுடும் அமெரிக்க வீரர் ஒரு பெண்ணைத் தவறுதலாக சுட்டுவிட்டதற்காக தன்னைத் தானே சபித்துக் கொள்கிறார். ஏனென்றால் அமெரிக்க வீரர் சாதாரண ஆப்கானிய மனிதனை சுட்டுவிட்டால் தன்னைச் சுட்டுவிட்டதாக எண்ணுவாராம்! கடைசி ஆபரேசனில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அனைவரும் நிற்கும்போது முஸ்லீம் அதிகாரியாகிய கமல் தொழுவதை வாஞ்சையுடன் ஒரு அமெரிக்க அதிகாரி சக அதிகாரிக்கு விளக்குகிறார்! ஏனென்றால் நேர்மையான முஸ்லீம் அதிகாரிகளை அவர்கள் மதிப்பார்களாம்!
ஆமாம் கமல், இந்த குவான்டனாமோ சிறைச்சாலை தெரியுமா? அதில் முஸ்லீம் சிறைவாசிகளை கழுத்தறுத்து வீடியோவில் காட்டுவது; ஒருவரின் உடல் முழுவதும் மலத்தைப் பூசி அவரது முகத்தில் ராணுவ அதிகாரி ஒருவர் தனது ஜட்டியால் மூடுவது; நிர்வாணமாக நிற்கும் ஒருவரின் மீது நாய்களை விட்டுக் குதறவிடுவது ஆகிய காட்சிகள் அனைத்தும் வெளியானதைத் தாங்கள் அறிவீர்கள் தானே.. இன்னும் வர்ணிக்க முடியாத கொடூரங்களை நிகழ்த்தியதன் காரணமாக அமெரிக்க மக்களின் எதிர்ப்பினால் அந்த சிறை மூடப்பட்டதையும் அறிவீர்களா? 
கருத்துச் சுதந்திரம் பாகம் - 4
சி.என்.என், ஐ.பி.என்., பி.பி.சி உட்பட சர்வதேச ஊடகங்களும் இந்தியாவிலுள்ள நூற்றுக்கணக்கான ஊடகங்களும் செப் - 11, 2011க்குப் பிறகு அடித்துத் துவைத்த ஒரு கருத்தைத்தான் இப்போது கமல் விஸ்வரூபம் எடுக்க வைத்திருக்கிறார். அதுதான் இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது. ஆனால் அமெரிக்க பயங்கரவாதத்தைப் பற்றி சொல்லத்தான் ஒரு ஊடகத்தைக் கூட காணோம்! அல்ஜசீரா தொலைக்காட்சி அந்த வேலையைச் செய்தது. அதன் அலுவலகத்தை அமெரிக்கா குண்டுவீசி அழித்தது. கருத்துச் சுதந்திரத்தை இப்படி குண்டு போட்டு அழிக்கலாமா என்று அமெரிக்காவுக்கு பாடம் சொல்லி கமல் ஒரு படம் எடுப்பாரா?
அமெரிக்காவுக்கு கைவந்த கலை, திரைப்படங்களில் அரசியல் செய்வது. ஜப்பானைக் அணுகுண்டு போட்டு அழித்துவிட்டு ‘பியர்ல் ஹார்பா’ என்று ஜப்பானையே வில்லனாக்கி ஒரு படம் எடுத்தார்கள். வெளியிட்ட திரையரங்கில் எல்லாம் நம்ம தமிழன் அதை வெற்றிப்படம் ஆக்கினான்.
இப்போது இரட்டைக் கோபுரத் தாக்குதலை வைத்து ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அது இந்தியாவில் சக்கைப் போடு போடுவதற்குள், பேசாம நான் இந்தியாவை விட்டு வெளியேறிவிடலாம் என்று இருக்கிறேன்.
நம்ம கமல் அமெரிக்க லட்சியப் படங்களை தமிழ் மண்ணில் எடுக்க ஆரம்பித்துவிட்டார். இனி அமெரிக்க தூதரகத்தைத் தாக்க வந்த தமிழ்த் தீவிரவாதிகளைப் பற்றி நிறைய படம் வந்தாலும் வரும்.
கருத்துச் சுதந்திரம் பாகம் - 5
'உன்னைப் போல் ஒருவன்’ல் பயங்கரவாதத்தில் ஈடுபடும் முஸ்லீம்களை பயங்கரவாதத்தால் தான் அழிக்க வேண்டும் என்று சொன்னார். கேள்வி வருமே என்பதற்காக காவி அணியாமல் ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பஸ்தரின் வேடம் பூண்டார். அடுத்து விஸ்வரூபத்தில் அவர் ஒரு நல்ல நேர்மையான முஸ்லீமுக்கு இலக்கணம் சொல்லி இருக்கிறார். 'நீ குரானைத் தொழு. ஜிகாதிகளைக் காட்டிக் கொடு. அமெரிக்காவின் அடியாளாக இரு. அணு ஆயுதங்களை அப்பாவி அமெரிக்காவின் மீது பிரயோகம் செய்ய முனையாதே. மனிதாபிமானமில்லாமல் இருக்காதே. சிறுவர்களை குண்டு கொடுத்து அனுப்பாதே. ஈவிரக்கமில்லாமல் கொலை செய்யாதே..' என்று ஒரு முஸ்லீமாக வந்து சொல்கிறார்.
ஆனால் பயங்கரவாதத்தில் ஈடுபடும் முல்லா ஒமர் மற்றும் அவரது குழுவை பயங்கரவாதத் தன்மையில் அழிக்கச் சொல்கிறார். 'ஒரே நேரத்தில் எத்தனை பேரை வேண்டுமானாலும் துவம்சம் செய். அனைவரையும் மரண அடி கொடு.. வெட்டிவீசு கண்களைப் பிடுங்கு.. கையை வெட்டு வாளால் சொருகு.. துப்பாக்கியால் கண்ணில் படுபவனை எல்லாம் போட்டுத் தள்ளு. இத்தனையும் ஒரே சண்டைக்காட்சி நேரத்தில் முடித்து விடு..' என்று ஆணித்தரமாக புரிய வைப்பதற்காக ஒரு சண்டைக்காட்சி வைத்திருக்கிறார். நியாயத்திற்காக கொடூர வன்முறையில் இறங்கு; நியாயத்தின் பேரால் பயங்கரவாதத் தாக்குதல் நடத்து என்கிறார். கமல்  ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்திலும், இந்தப்படத்திலும் ஒரு புனிதப்போர் நடத்தச் சொல்கிறார். அதாவது இவர் ஒரு புதியவகை ஜிகாதி. 
கருத்துச் சுதந்திரம் பாகம் - 6
கமலின் நியாயத் தீர்ப்பை அப்படியே எடுத்துக் கொள்வோம். அவர் சொல்கிறபடி பயங்கரவாதத்தில் ஈடுபடுவோரை பயங்கரவாதத்தால் அழிக்க வேண்டும்.
ஓசாமா இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தவர் 2000 அமெரிக்கர்களைக் கொன்றார். அது கண்டிக்கத்தக்கது; ஏற்க முடியாதது. சரிதான். இதை வைத்தே அமெரிக்காவில் பல படங்கள் வந்துவிட்டன.
இப்ப கமலுக்கு ஒரு ஸ்கிரிப்ட் சொல்லுவோம். இந்த கதையை படமாக்க கமல் விரும்பினால் கதை இலவசம்.
இரட்டைக் கோபுரத் தாக்குதலிலிருந்து படத்தின் கதை விரிகிறது. பிளாஷ்பேக்கில் கேமரா ஆப்கானைக் காட்டுகிறது. இப்போது கதை.
ஆப்கனின் தலைநகரமான காபூலுக்கு உலகின் விதவைகளின் தலைநகரம் எனறு பெயர். கடந்த 30 ஆண்டுகாலப் போரில் 15 லட்சம் விதவைகள் அந்நாட்டில் உள்ளனர். அமெரிக்கப் படையும் அதன் கூட்டுப்படைகளும் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஆப்கானியர்களில் 37 சதவீதம் பேர் ஆண்கள். அவர்கள் அனைவரையும் விதிவிலக்கில்லாமல் தாலிபான்கள் என்றே வைத்துக் கொள்வோம். மீதி 63 சதவீதம் பேர் குழந்தைகளும் பெண்களும். இதயபலவீனம் உள்ளவர்களுக்காக இதை நாம் காட்சிப்படுத்தாமல் விடுவோம்.
15 லட்சம் விதவைகளின் கதைகள் எப்படியிருக்கும்? தகப்பன் இல்லாத 15 லட்சம் குடும்பங்களின் பிள்ளைகள் ஓயாத போரில் உணவுக்காக என்ன செய்யும்? படிப்புக்காக என்ன செய்வார்கள்? தன் தகப்பனைக் கொன்றவர்கள் மீது என்ன உணர்வைக் கொண்டிருப்பார்கள்?
அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையால் மட்டும் ஈராக்கில் 5 லட்சம் குழந்தைகள் மாண்டனர். ஈராக்கை ஆக்கிரமித்து அதன் அதிபரை ஒரு போலி நீதிமன்றத்தால் கொன்றொழிக்கும் அமெரிக்காவின் நோக்கம் நிறைவேற கொல்லப்பட்ட மக்கள் பல லட்சம் பேர். பாலஸ்தீனம், லெபனான் என பட்டியல் நீளும் இந்த நாடுகளுக்குச் சென்றால் விதவிதமான கதைகள் கிடைக்கும்.
ஆப்கனில் ஒரு திருமணத்தில் குண்டு போட்டு 80 பேரையும், மற்றொரு விழாவில் குண்டு போட்டு 200 பேரையும் கொன்றது அமெரிக்கப் படை. அதை ஒரு சிறுவன் வர்ணிக்கிறான். “ நான் குண்டு சத்தம் கேட்டேன். விழித்துப் பார்த்தால் மருத்துவமனையில் கிடக்கிறேன். என் இரண்டு கால்களும் இல்லை. என் கால்களைப் பறித்தவர்களைப் பலி எடுப்பேன்”. கமல் இந்தக் காட்சியிலிருந்து கூட தங்களது படத்தைத் தொடங்கலாம். கதை இலவசம். 
கருத்துச் சுதந்திரம் பாகம் - 7
ஒரு பெரும் பணக்கார பின்னணி கொண்ட இளைஞன் ஒசாமாவை ரஷ்யாவுக்கு எதிராக முஜாகிதீன் படைகளுக்குத் தலைமை தாங்கப் பணித்தது அமெரிக்கா. அப்போது விடுதலை வீரனாக சித்தரிக்கப்ப‌ட்ட ஒசாமா, அமெரிக்காவின் அடியாளாக அரபுநாடுகளுக்கு எதிராக செயல்பட வேண்டுமென்ற அமெரிக்க நிர்பந்தத்தை உயிருக்கஞ்சாமல் எதிர்த்தான். அதற்கு தன் குடும்பத்தோடு தன் உயிரையும் விலையாகக் கொடுத்திருக்கிறான்.
ஓசாமாவின் லட்சியம் என்ன? அரபுலகம் அந்நிய ஆக்கிரமிப்பிற்கு ஆளாகக் கூடாது. அரபுலக மக்களின் எண்ணெய் ஆதாரம் அந்நியர்களால் களவாடப்படக் கூடாது என்பது தானே. அமெரிக்காவின் லட்சியம் என்ன? அரபுலகை அடிமைப்படுத்த வேண்டும்; உலகின் எண்ணை ஊற்றான அரபுலகை தனது பிடிக்குள் கொண்டுவர வேண்டும் என்பது தானே.
ஒசாமா 'எண்ணைய் வளங்கள் எமக்கே சொந்தம். நீ என்ன எண்ணை வயலுக்கு வந்தாயா? கிணறு தோண்டினாயா?' என்று கேள்வி கேட்கிறார். தமது சொந்தச் சகோதரிகள் கண்முன்னால் தெருக்களில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதற்கும், தம் சின்னஞ்சிறு குழந்தைகள் கொத்துக்குண்டுகளால் குதறி எறியப்பட்ட கோரத்தைப் பார்க்க சகியாமலும், மண்ணும் மக்களும் அடிமைப்பட்டப் புழுவாய் நெளியும் காட்சியைக் கண்டு குமுறி எழுந்தும் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகளின் பொருளாதார - அரசியல் பயங்கரவாதத்திற்கு எதிராகக் களம் இறங்குங்களடா என் தம்பிகளே, செத்தால் பாடை பத்துமுறை வராது.. என்று பயிற்றுவிக்கிறார். இரட்டைக் கோபுரத்தைத் தாக்கி அழிக்கிறார்.
ஒசாமாவின் போராட்ட வழிமுறைகள் பயங்கரவாதத் தன்மை கொண்டதுதான். கொடிய துன்பங்களை விளைவிப்பவர்களுக்கு கொடிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்ற கமலின் தர்க்கம் தான் ஒசாமாவின் தர்க்கமும். கமலின் வரையைறையைத்தான் ஆப்கான் தேசத்துத் தாலிபான்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால், தாலிபான்களை மட்டும் விமர்சிக்கும் கமல், நவீன வல்லரசுகளின் கொடூரமான பயங்கரவாதப் போரைப் பற்றி மௌனம் சாதிக்கிறார்.
ஒரு ஆய்வாளர் சொன்னது போல ‘தற்கொலை கார்குண்டு’ என்பது ‘ஏழைகளின் விமானப்படை’. ஆயுதம் தாங்கிய ரோபோக்களை ரத்தமும் சதையும் கொண்ட மனிதர்களைக் கொன்றொழிக்க அனுப்பும் வல்லரசுகளின் வக்கிரப்போர்களை எதிர்க்க கமலின் நியாயத்தைப் பொருத்துவோம்.. 63 சதவீதம் பெண்களையும் குழந்தைகளையும் கொன்ற செயல் பயங்கரவாதம் இல்லையா? பொதுமக்களைக் கொல்வது பயங்கரவாதம் எனும் போது, தம் நாட்டின் பொது மக்களைக் கொல்லும் வல்லரசுக்கு அந்த வலி எப்படியிருக்கும் என்று புரிய வைக்க ஒரு போராளிக் கூட்டம் எண்ணினால் அது கமலின் தர்க்கப்படி முழு நியாயம் தானே.
இஸ்லாமியப் போராளிகளின் பயங்கரவாதம் கூடாது என்று சொல்பவர், முதலில் அதனைத் தூண்டக் காரணமாக இருக்கும் அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகளின் பயங்கரவாதத்தைத் தடை செய்தபிறகு பேசலாம். அல்லது இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்பின் நியாயத்தை ஏற்றுக்கொண்டு, பயங்கரவாதமும் ஜனநாயக விரோத ஆட்சி முறையும் இஸ்லாமியப் போராளிகளின் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்திவிடும் என்ற அக்கறையிலிருந்து சொல்லலாம். அப்போது ஏற்கலாம். ஆனால் அமெரிக்காவின் எடுபிடியாக நின்று கொண்டு பேசுபவர்களுக்கு எந்த தார்மீக உரிமையுமில்லை.
“யோக்கியர்களே கல்லெறியுங்கள்”
இஸ்லாமிய பயங்கரவாதம் என்று பொதுமைப்படுத்தும் வார்த்தையே கண்டிக்கத்தக்கது. அது குரான் படிப்பவர்களை எல்லாம் பயங்கரவாதி என்று அறிவிப்பு செய்கிறது. உலகிலேயே அதிகமாக முஸ்லீம்கள் இருக்கும் நாடான இந்தோனேசியாவில் பயங்கரவாதம் இல்லையே ஏன்? அங்கும் குரான் இருக்கிறது; இஸ்லாம் இருக்கிறது. ஆனால் எண்ணை இல்லை. அதனால் அங்கே அமெரிக்கா தாக்குதல் நடத்தவில்லை. அந்நாட்டை ஆக்கிரமிக்கவில்லை. எனவே முஸ்லீம்கள் ஜிகாத் நடத்தவில்லை. உலகிலேயே இரண்டாவதாக அதிக முஸ்லீம்கள் வசிக்கும் இந்தியாவில், முஸ்லீம்க‌ள் பயங்கரவாதத்தை கையிலெடுக்கவில்லை. நடக்கும் ஓரிரு சம்பவங்களும் இங்குள்ள பி.ஜே.பி.யும், ஆர்.எஸ்.எஸ்.சும் அவர்களை அழிக்க முயல்வதன் விளைவாக நடக்கின்றன. பாபர் மசூதிக்குப் பிந்தைய இந்தியாவையும் முந்தைய இந்தியாவையும் ஒப்பிட்டால் தெரியும். 
கருத்துச் சுதந்திரம் - 8
மற்றொரு விஸ்வரூபமாக, கருத்துச் சுதந்திரம் பற்றி வடஇந்திய ஊடகங்களும் தமிழ் ஊடகங்களும் கொதித்தெழுந்து விட்டன. நடிகர்கள், எழுத்தாளர்கள், பெண்ணியவாதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரும் கமலுக்குக் கருத்துச் சுதந்திரம் இல்லையா என்கின்றனர்.
அதிலும் தூய கருத்துச் சுதந்திரவாதிகளாக சிலர் கலைஞனுக்கு கருத்து வேலி கூடாது என்கின்றனர். சென்சார் போர்டே கூடாது என்கின்றனர். சமத்துவமற்ற சமுதாயத்தில் எது ஒன்றையும் வரம்பின்றி அனுமதிக்க முடியாது. ஒரு சமுதாயத்தின் உயர்ந்த அரசியல் விழுமியங்களால் அது கண்காணிக்கப்பட வேண்டும்.
இந்தியா மதச்சார்பற்ற நாடு என்றால் மதச்சார்பின்மை என்ற நுண்ணோக்கி கொண்டு அனைத்துக் கருத்துக்களும் கண்காணிக்கப்பட வேண்டும். இந்தியா சோசலிச சனநாயகக் குடியரசு என்று பிரகடனம் செய்யப்பட்டால் அதனடிப்படையில் அனைத்துக் கருத்துக்களும் கண்காணிக்கப்பட வேண்டும். மேலும் வரம்பற்ற கருத்துச் சுதந்திரம் என்பது பணபலமும், அதிகார பலமும் கொண்ட கும்பல்களுக்கு சேவை செய்யும் கருத்தாகும். மக்களிடம் ஊதுகுழல் கூட இல்லாத நிலையில் உலகின் அனைத்து ஊடகங்களையும் வைத்துள்ளவர்கள் யார்? வரம்பற்ற கருத்துச் சுதந்திரம், உண்மையில் குரலற்ற மக்களின் குரல்வளையை நெறிக்கும் தூக்குக் கயிறாகவே மாறும்.
முஸ்லீம் அமைப்புகளின் எதிர்ப்பைப் பொருத்தவரை அவர்களின் எதிர்ப்பும் கருத்துச் சுதந்திரத்தின் அங்கமாகவே பார்க்கப்பட வேண்டும். எந்தத் தரப்பானாலும் இவ்விதமான தவறான சித்திரிப்புகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் உரிமையுள்ளது. டேம்’99 என்ற படத்தின் தவறான சித்திரிப்புக்கு எதிராக தமிழகம் கிளர்ந்ததைப் போல், பாதிக்கப்படும் தரப்பு தமக்கெதிரான அவதூறுகளுக்காக தடை கோர உரிமையுள்ளது.
ஆனால் குரானையோ அல்லது முஸ்லீம் தலைவர்களையோ அல்லது அதன் மரபுகளையோ, பழக்க வழக்கங்களையோ எவ்விதத்திலும் விமர்சிக்கவே கூடாது என்பது கருத்துரிமைக்கெதிரானது; ஜனநாயக விரோதமானது. உலகில் நிலவும் அனைத்தின் மீதும் கருத்து சொல்லவும் விமர்சிக்கவும் அனைவருக்கும் உரிமை உள்ளது.
ஆனால் சொந்த ஆதாயத்துக்காக யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கவும், மதவாதப் பற்களை மறைத்துக்கொண்டு பொதுவாக விமர்சிப்பதாக நாடகமாடும் ஆசாமிகளுக்கும் மத அடிப்படைவாதிகளுக்கும் மற்ற மதங்களை விமர்சிக்க எவ்வித தார்மீக உரிமையுமில்லை. 
கருத்துச் சுதந்திரம் பாகம் - 9
பொய்யின் துணையுடன் பயங்கரவாத தர்க்கம் பேசும் கமல் சாரே!
இதோ உண்மை பேசுபவரின் 'பயங்கரவாத' தர்க்கத்தின் சுருக்கம்.
2004ல் அல்ஜசீரா தொலைக்காட்சியில் ஒசாமா பின்லேடன் அமெரிக்க மக்களுக்கு ஆற்றிய உரையின் சுருக்கம்.                           
“அல்லா போற்றி!
அமெரிக்க மக்களே!
நான் பேசத் தொடங்குமுன் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். பாதுகாப்பு என்பது மனித வாழ்வின் அசைக்க முடியாத தூண். 'நாங்கள் சுதந்திரத்தை வெறுக்கிறோம்' என்று புஷ் சொல்வது மோசடி. சுதந்திர மனிதன் தனது பாதுகாப்பைப் கெடுத்துக் கொள்ளமாட்டான்.
மற்றவர்களின் பாதுகாப்போடு விளையாடும் ஒரு செவிட்டுக் கொள்ளையனைத் தவிர வேறு யாரும் விளையாடவோ, தாம் பாதுகாப்பாக இருப்போம் என்று நம்பவோ மாட்டார்கள். அதே நேரத்தில் சிந்திக்கும் திறனுடையோர் பேரழிவு தாக்கும் போது அது மீண்டும் நடைபெறாமல் தடுக்க அதன் விளைவுகளை பரிசீலிப்பதற்கு கவனம் கொடுப்பார்கள்.
ஆனால் உங்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். செப் - 11ன் சம்பவங்களுக்கப் பிந்தைய நான்காம் ஆண்டில் நாம் இருக்கும் போதும் புஷ் இன்னமும் பேரழிப்பை நடத்திக் கொண்டிகருக்கிறார். உங்களை ஏய்த்து, உங்களிடமிருந்து உண்மையான விளைவுகளை மறைத்து வருகிறார். இவ்வாறு ஏற்கனவே நடந்ததே திரும்பவும் நடப்பதற்கு காரணங்களை உருவாக்குகிறார்.
ஆகவே அந்த முடிவை எடுத்தற்கான தருணங்களைப் பற்றிய உண்மையைச் சொல்கிறேன். அந்நிகழ்வுகளுக்குப் பின்னுள்ள கதையைச் சொல்கிறேன். தங்களின் பரிசீலனைக்காக...
அல்லா அறிவார். நாங்கள் அந்த கோபுரங்களைத் தாக்கும் நிலை ஒருபோதும் நேர்ந்திருக்கக் கூடாது என்பதை அல்லா அறிவார். அமெரிக்க - இஸ்ரேலிய கூட்டுப் படைகள் பாலஸ்தீனிலும் லெபனானிலும் உள்ள எமது மக்கள் மீது நடத்திய ஒடுக்குமுறையும் கொடுங்கோன்மையும் தாங்க முடியாததாக இருந்தது. அது என் மனதைப் பிசைந்தது.
1982ல் இஸ்ரேலியர் லெபனானை ஆக்கிரமிக்க அனுமதித்ததும் 6வது போர்க்கப்பலை அனுப்பியதும் தான் என் ஆன்மாவை நேரடியாக பாதிக்கத் தொடங்கியது. குண்டுவீச்சு தொடங்கியது. பலர் கொல்லப்பட்டனர்; பலர் படுகாயமுற்றனர். மீதி இருந்தவர்கள் அச்சுறுத்தப்பட்டு இடம்பெயர்க்கப்பட்டனர்.
கண் முன் ஓடும் அக்காட்சிகளை என்னால் மறக்க முடியாது. இரத்தமும் சிதறிய உறுப்புகளுமாய் பெண்களும் குழந்தைகளும் எங்கெங்கும் சிதறிக் கிடந்தனர். குடியிருந்தவர்களோடு சேர்த்து வீடுகள் அழிக்கப்பட்டன. எமது வீடுகளின் மேல் ராக்கெட் மழை பொழிந்து தகர்த்தது.
அந்தச் சூழ்நிலையைப் பார்க்கையில் ஆதரவற்ற நிலையில் கதற மட்டுமே திராணி கொண்ட ஒரு குழந்தையை ஒரு முதலை சந்திப்பது போல் இருந்தது. முதலை ஆயுதங்கலக்காத உரையாடலைப் புரிந்து கொள்ளுமா? உலகமே பார்த்தது. கேட்டது. ஆனால் ஏதும் செய்யவில்லை.
அந்தக் கடினமான தருணத்தில் என் மனதில் குமிழ்விட்ட எண்ணங்களை விளக்குவது கடினம். இறுதியில் அது கொடுங்கோன்மையை மறுதலிக்கும் தீவிர உணர்வை உண்டு பண்ணியது. ஒடுக்குமுறையாளர்களை தண்டிக்க வேண்டும் என்ற தீவிர வைராக்கியத்தைப் பிறப்பித்தது.
லெபனானின் இடிந்த கோபுரங்களை நான் பார்த்தபோது ஒடுக்குமுறையாளர்களை அவர்களது வழிமுறையிலேயே தண்டிக்க வேண்டுமென்றும் நமது குழந்தைகளையும் பெண்களையும் காக்கவும், நாம் ருசித்ததை அவர்களையும் ருசிக்க வைக்கவும் அமெரிக்காவின் கோபுரங்களை அழிக்க வேண்டும் என்று என் மனதிற்குப் பட்டது.
அந்த நாளில் தான், பெண்களையும் குழந்தைகளையும் திட்டமிட்டே கொல்வதும் ஒடுக்குமுறை செய்வதும் அமெரிக்காவின் உள்நோக்கமுடைய கொள்கை என்பது உறுதியானது. அழிவே சுதந்திரம் ஜனநாயகம் என்று போற்றப்ப‌ட்டு, எதிர்ப்பு என்பது பயங்கரவாதமாகவும் சகிப்பின்மையாகவும் சித்தரிக்கப்பட்டது.
இது, சீனியர் புஷ் மனிதகுலம் இதுவரைக் கண்டிராத அளவில் இராக்கில் குழந்தைகளை மொத்தப் படுகொலை செய்ததைப் போலவும், ஜீனியர் புஷ், ஒரு ஏஜென்டின் ஆட்சியை அகற்றுவதற்காகவும் இராக்கிலிருந்து எண்ணெயைச் சுரண்டவும் தனது கைப்பாவையை ஆட்சியலமர்த்துவதற்காகவும் இராக்கிலும் மற்ற பகுதிகளிலும் பல மில்லியன் பவுண்டு கணக்கான குண்டுகளை பல மில்லியன் குழந்தைகள் மீது வீசியதையும் பொருள்படுத்துகிறது.
எனவே அவர்களின் மாபாதகத் தவறுகளுக்கான பதில், பெரிய ஒளிவட்டத்தையும் இப்படிப்பட்ட பிம்பங்களையும் கொண்டவர்கள் மீது செப்- 11 ஆக வந்தது. தனது சரணாலயத்தை ஒருவன் காக்க முற்பட்டதற்காக இதில் குற்றம் சொல்லலாமா?
தனது ஆக்கிரமிப்பாளனை தக்க வழிமுறைகளில் தண்டித்து தன்னைத் தற்காத்துக் கொள்வது ஆட்சேபிக்கத்தக்க பயங்கரவாதமா? அப்படித்தான் என்றால் எமக்கு வேறு வழியில்லை.
முடிவாக ஒன்றைச் சொல்கிறேன். உங்களின் பாதுகாப்பு புஷ்ஷின் கையிலோ ஜான் கெர்ரியின் கையிலோ அல்கொய்தாவின் கையிலோ இல்லை. அது உங்கள் கையில் தான் இருக்கிறது. எமது பாதுகாப்போடு விளையாடாத எந்த அரசும் தானாகவே அதன் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்திக் கொள்கிறது.
அல்லாவே பாதுகாவலன்.. உதவியாளன்.. உங்களுக்குப் பாதுகாவலனோ உதவியாளனோ இல்லை. இந்த வழிகாட்டலை பின்பற்றுவோருக்கே பாதுகாப்பு.”
-              ஓசாமா, Aljazeera.net (online publication), Doha, Qatar, October 30, 2004 
இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல், நாயகன் விஸ்வநாதன் (எ) கமலைவிட, ஒசாமா பாத்திரத்துக்கும் ஒமர் பாத்திரத்துக்கும் தான் மிகப் பொருத்தம்.
“யாரென்று தெரிகின்றதா
இவன் யாரென்று தெரிகின்றதா
இவன் யாருக்கும் அடிமையில்லை
யாருக்கும் அரசனில்லை’
ஊரைக்காக்கும் போருக்கு ஒத்திகை செய்கின்றோம்
சாவே எங்கள் வாழ்வென்று சத்தியம் செய்கின்றோம்
பூமியைத் தாங்க வரம் கேட்கின்றோம்
புயலை சுவாசிக்க வரம் கேட்கின்றோம்
போர்களை நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை
போர்தான் எங்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டது
நீதி காணாமல் போர்கள் ஓயாது..”
கருத்துச் சுதந்திரம் பாகம் - கடைசி.
கமலின் விஸ்வரூபம் உலக அர்த்தத்தில் அமெரிக்க பயங்கரவாதத்திற்கு அடியாள் வேலை செய்கிறது. இந்திய அர்த்ததில் வளர்ந்துவரும் இந்துத்துவ பயங்கரவாதத்திற்கு கொம்பு சீவுகிறது. தமிழ்நாட்டு அர்த்தத்தில் மதுரையையும் கோவையையும் குறிவைக்கச் சொல்கிறது.
கமல் தனது திரைப்படம் வெற்றியடைவதை ஒரு வியாபாரியின் துல்லியத்துடன் திட்டமிடுகிறார். இந்தியளவில் முஸ்லீம் வெறுப்புக்கும் அமெரிக்க மோகத்திற்கும் ஒரு சந்தை வாய்ப்பு இருப்பதை உள்ளுணர்வாக அறிந்து வைத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து திரைப்படமாக்கி வருகிறார். அதற்காக எந்த நியாயத்தையும் குழிதோண்டிப் புதைக்கவும் தயாராக இருக்கிறார். ஒரு வகை பயங்கரவாதத்தை ஆதரிக்கிறார்.
ஆஸ்கர் விருது வாங்குவது அவருக்கு வாழ்வின் லட்சியமாக இருக்கிறது. சென்ற முறை “ஹர்ட் லாக்கர்” என்ற திரைப்படம் ஆஸ்கர் விருது வாங்கியது. ஈராக் போரை நியாயப்படுத்தி எடுக்கப்பட்ட படம் அது. கமல் சார் அந்தப் போட்டியில் இறங்கிவிட்டார். கொஞ்சம் மாற்றி அமெரிக்காவின் ஆப்கன் போரை நியாயப்படுத்தி எடுத்தாலாவது கொடுக்க மாட்டார்களா என்ற ஆசைதான். ஆசை வெட்கம் மட்டுமல்ல, உண்மையும் அறியாது போலும். மனிதப் பிணங்களின் மீது டாலர்கள் புரள்வதைப் பார்த்து அதன் விளம்பர வியாபாரத்தில் இறங்கிவிட்டார். அது அவருக்கு சாகச வெற்றியாகத் தெரிகிறது. நமக்கு அது சவப்பெட்டி வியாபாராமாகத் தெரிகிறது. 
“தீயை, பெருந்தீ கொண்டு அணைக்காதே
 காயத்தை ரத்தத்தால் கழுவாதே” – ஜலாலுதீன் ரூபி.
               
“யாரென்று தெரிகின்றதா          
இவர் யாரென்று தெரிகின்றதா
எந்த ரூபம் எடுப்பான்
எவருக்குத் தெரியும்
சொந்த ரூபம் மாற்றி மாற்றி
எடுப்பான் விஸ்வரூபம்.”              நன்றி – வைரமுத்துவுக்கு           
http://www.badrkalam.blogspot.com/2013/01/blog-post.html

Thursday 14 February 2013

சீறிப்பாயும் அஸாத் சாலி ! நேர்காணல் (ஓடியோ)

பலியாடுகளையே ஜ. உலமா அனுப்பியது : பொதுபல சேனா!


நேற்றைய தினம் டி.என்.எல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கலந்துரையாடலை அடுத்து ஜம் இயத்துல் உலமா ஏன் இந்நிகழ்ச்சியில் பங்கு கொள்ளவில்லை எனும் கேள்வி ஒவ்வொரு இலங்கை முஸ்லிமின் மனதிலும் எழுந்துள்ளது. இன்றைய நிலையில் வெறும் பொதுபல சேனா எனும் அமைப்பின் ஹலால் எதிர்ப்பு எனும் நிலை மாறி பல சிங்கள பெளத்தவாத இயக்கங்களின் முஸ்லிம் எதிர்ப்பாக விஸ்வரூபம் எடுத்து வரும் சமூகப் பிரச்சினைகளைக் கையாள்வதும் உண்மைகளை வெளிக்கொண்டுவருவதும் கூட ஊடகங்களின் கடமையாகும். அந்த வகையில் இது தொடர்பாக நாம் பொதுபல சேனாவை இன்று (13-12-2013 , இலங்கை நேரம் 17.30 ) தொடர்பு கொண்டு  நேர்காணல் ஒன்றை நேரடியாக அதன் முகவரியாக விளங்கும் அத்தேஞான சேர தேரரிடமே மேற்கொண்டிருந்தோம். அதன் போது நாம் கேட்ட கேள்விகளும் அவர் தந்த பதில்களையும் இங்கே பிரசுரிக்கிறோம்.
இது தொடர்பாக நாம் ஜம் இயத்துல் உலமாவிற்கும் அறிவித்திருப்பதோடு அவர்கள் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டிற்கான விளக்கத்தையும் தரும்படி தொடர்பு கொண்டிருக்கிறோம். எனினும், இப்பதிவு மேற்கொள்ளப்படும் வரை எமக்கு எந்தப் பதிலும் கிடைக்காத நிலையில் இதனைப் பிரசுரிக்கிறோம்.  ஜம் இயத்துல் உலமாவின் பதில் கிடைக்குமிடத்து அதனை வாசகர்களுக்காக இணைத்துக்கொள்வோம்.
நேர்காணல் :
“முதலில் எமக்காக நேரம் ஒதுக்கி இணைந்து கொண்டமைக்கு நன்றி உங்களுக்கு, இன்றைய நிலையில் நம் நாட்டில் நிலவும் இனங்களுக்கிடையிலான பதட்ட சூழ்நிலை மற்றும் நேற்றைய தினம் டி.என்.எல் தொலைக்காட்சியில் உங்கள் கலந்துரையாடல் சம்பந்தமாகவும் நேரடியாக சில விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறோம்”.
கேள்வி: பொது பல சேனா முஸ்லிம்களையும் ஹலாலையும் எதிர்க்கிறது என்பது இன்று வெளிப்படையாக எங்களுக்கு இருக்கும் கவலை, இதை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள் என்பது தொடர்பாக பல விளக்கங்கள் தருகிறீர்கள், எனினும் அது குழப்பகரமாகவே இருக்கிறது. நீங்கள் உண்மையில் முஸ்லிம்கள் ஹலால் உணவை உண்பதை எதிர்க்கிறீர்களா அல்லது ஜம் இயத்துல் உலமா இதில் ஈடுபட்டதனால் அதனை எதிர்க்கிறீர்களா?
தேரர்: முதலில் எம்மோடு தொடர்பு கொண்டு இதைப்பற்றிப் பேசவும்  உரையாடவும் வந்தமைக்கு உங்கள் ஊடகத்திற்கு நன்றி. நான் நேரடியாகவே சொல்வதானால் ஜம் இயத்துல் உலமா எனும் அமைப்பு கிட்டத்தட்ட “பிரபாகரனின்” எல்.டி.டி.ஈ போன்றது. அதன் கொள்கைகளும் செயற்பாடுகளும் இந்த நாட்டினைப் பிளவு படுத்தும் வகையிலும், இனங்களுக்கிடையிலான ஒற்றுமையைக் குழப்பும் வகையிலும் இருக்கிறது என்பதே எமது ஆதங்கம். மற்றும் படி முஸ்லிம்கள் ஹலால் உணவை உண்பது அவர்களது உரிமை அதை நாங்கள் நிராகரிக்கவில்லை.
கேள்வி: ஹலால் உணவை உண்பது முஸ்லிம்களின் உரிமையென்றால் அதனை நெறிப்படுத்த ஒரு அமைப்பு இருப்பது அவசியம் தானே? அதைத்தானே ஜம் இயத்துல் உலமா செய்கிறது? அப்படியானால் நீங்கள் அவர்களை எதிர்ப்பதாக முஸ்லிம்களின் உரிமையை மீறுவது போன்றல்லவா இது இருக்கிறது?
தேரர்: இல்லை, நீங்கள் தவறான தகவலை வெளியிடக்கூடாது. ஜம் இயத்துல் உலமா சபை 3000 பேரை வேலைக்கமர்த்தி ஹலால் எனும் ஒரு விடயத்தைப் புகுத்தி நாட்டில் இருக்கும் சமூகங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்துகிறது. இந்த நாட்டின் சட்டங்கள் அனைவருக்கும் பொதுவானது, அப்படியிருக்க ஜம் இயத்துல் உலமா எப்படி ஹலால் உணவுகள் தான் சுத்தமானது என்று அறிவித்து அதனை சிங்கள மக்கள் மத்தியில் பலவந்தமாகப் புகுத்த முடியும்? ஒரு பேச்சுக்காகக் கேட்கிறேன், நீங்கள் பன்றி இறைச்சி உண்பதில்லை, ஆனால் அதை உண்ண விருப்பம் உள்ளவர்கள் இருப்பார்கள், அதே போன்று மாட்டிறைச்சி உண்ணும் முஸ்லிம் அல்லாதவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் சேர்ந்து எங்களுக்கு ஹலால் இல்லை எனும் சான்றிதழ் வேண்டும் என ஒரு அமைப்பை ஆரம்பித்தால் என்ன நடக்கும்? இந்துக்கள் எல்லோரும் சேர்ந்து மாட்டிறைச்சியை இந்த நாட்டில் தடை செய்ய வேண்டும் என்று கேட்டால் என்ன நடக்கும்? நாட்டிற்குள் இப்படி ஒவ்வொருவரும் தத்தமது சமய முறைகளுக்கேற்ப சட்டங்களைக் கொண்டுவர விட முடியுமா? சொல்லுங்கள் பார்க்கலாம்.
கேள்வி: நாட்டின் சட்டதிட்டங்களைப் பாதுகாக்க அரசு இருக்கிறது, இப்போது நீங்கள் நம்பும் இந்த விவகாரம் தொடர்பாக அரசிடம் முறையிட்டீர்களா? அதற்கு அவர்கள் என்ன பதில் தந்தார்கள்?
தேரர்: ஆம், நான் நேரடியாகவே இந்த விடயத்தினை ஜனாதிபதியிடம் தெரிவித்தேன், அதற்கு அவர் இதை ஜம் இயத்துல் உலமாவிடமும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறினார். நாங்களும் இதைப்பற்றி அவர்களிடம் எத்தனையோ தடவை பேச முனைந்து விட்டோம் ஆனால் அவர்கள் ஓடி ஒளிக்கிறார்கள் .அதற்கான காரணம் எமக்கும் தெரியவில்லை.
கேள்வி: அப்படியானால் இது அரசு சம்பந்தப்பட்ட விடயம் தானே? அரசு ஏன் இந்த விடயத்தைக் கையாளக்கூடாது? அதை ஏன் நீங்கள் கையிலெடுத்திருக்கிறீர்கள்?
தேரர்: நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம், அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறுகிறது, இது குறித்து மேலதிக தகவல்களையும் ஆதாரங்களையும் நாங்கள் சேர்த்துக் கொடுக்கிறோம்.
கேள்வி: ஹலால் சான்றிதழை யாருக்கும் பலவந்தமாக ஜம் இயத்துல் கொடுக்கவில்லை, மாறாக நாடிவருவோருக்குத்தான் அது வழங்கப்படுவதாக ஜம் இயத்துல் உலமா தெளிவாகக் கூறுகிறதே?
தேரர்: இது சுத்தமான பொய்! நான் ஏற்கனவே கூறியது போன்று 3000 பேர் கொண்ட குழுவொன்று இதில் இயங்குகிறது, அவர்கள் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் சென்று ஹலாலின் மகத்துவம் என்று மார்க்கெட்டிங் (சந்தைப்படுத்தல்) செய்கிறார்கள், அவ்வாறுதான் எல்லா நிறுவனங்களும் இதில் மாட்டிக்கொள்கின்றன. சிங்கள மக்களை இப்படி மாட்டிக்கொள்ள இனியும் அனுமதிக்க முடியாது.
கேள்வி: முஸ்லிம்கள் ஹலால் பொருட்களை விரும்பி வாங்குவார்கள், மத்திய கிழக்கு போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் ஹலால் சான்றிதழ் தேவைப்படுகிறது. எனவே, நாடி வருவோருக்கு மாத்திரம் தான் ஹலால் சான்றிதழ் வழங்கப்படுகிறது என்று ஜம் இயத்துல் உலமா கூறுகிறதே?
தேரர்: இதுவெல்லாம் நம்பத்தகுந்த கதையல்ல, இந்த நாட்டில் இருக்கும் உணவுப் பண்டங்களுக்கு ஹலால் சான்றிதழ் கொடுக்க ஜம் இயத்துல் உலமா யார்? அவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?
கேள்வி: அதாவது உங்கள் கருத்துப்படி ஜம் இயத்துல் உலமா எந்தவித அரச அனுமதியுமில்லாமல் இதைச் செய்கிறதா?
தேரர்: அதைத்தானே நாங்கள் சொல்கிறோம், ஜம் இயத்துல் உலமா தன்னிச்சையாக இதைச் செய்கிறது, அதன் மூலம் சமூகங்களுக்குள் பிளவும் நாட்டில் ஒரு குறிப்பிட்ட மதத்தவருக்காக புதிய சட்டமுமாக இருப்பதை எவ்வாறு அனுமதிக்க முடியும்? முஸ்லிம்கள் எம்மோடு எப்போதும் சகோதரத்துவத்துடன் தான் வாழ்கிறார்கள் ஆனால் இந்த ஜம் இயத்துல் உலமா தான் அதைப் பிரிக்கிறது. எமக்கு முஸ்லிம்களது சமய வழிமுறைகளில் எந்தக் குரோதமும் இல்லை. அப்படித்தானே இவ்வளவு காலம் வாழ்ந்திருக்கிறோம். இப்போது திடீர் என முளைத்த ஜம் இயத்துல் உலமா எவ்வாறு இந்த நாட்டை ஒரு சமயத்துக்கு ஆதரவான சட்டங்களுக்கு அடிபணிய வைக்க முடியும்? அண்மைக்காலங்களில் ஜம் இயத்துல் உலமா பொருளாதார ரீதியாக வேகமாக முன்னேறியிருக்கிறது, அதற்கான பணம் எங்கிருந்து வந்தது? இது ஒரு சிங்கள பெளத்த நாடு, இந்த நாட்டில் சகல இனங்களும் வாழ்வதற்கு சமமான சட்டதிட்டங்கள் இருக்கிறதே தவிர ஒரு இனத்தின் தேவைக்காக நாட்டின் வளங்களை சுரண்ட அனுமதிக்க முடியாது.
கேள்வி: சரி, நேற்றைய பகிரங்க விவாதம் குறித்து நீங்கள் ஜம் இயத்துல் உலமாவுக்கு அறிவித்தீர்களா? அல்லது அவர்களை அழைத்திருந்தீர்களா?
தேரர்: ஜம் இயத்துல் உலமா சபை ஒளித்துப் பிடித்து விளையாடியதே தவிர ஒழுங்கான பதில் தரவில்லை. நேற்றைய தினம் நிகழ்ச்சி நடைபெற இருக்கும் வரை நாங்கள் முயன்றோம். நிகழ்ச்சியை நடத்திய சுகத் முடியாமல் போன கட்டத்தில் தான் வேறு மூவரை அணுகினார். அந்த மூவரையும் பலியாடுகளாகத்தான் அனுப்பியது ஜம் இயத்துல் உலமா.
கேள்வி: அவர்கள் மூவரையும் அனுப்பியது யார்? ஜம் இயத்துல் உலமாவா?
தேரர்: இல்லை, ஆனால் இப்போது பதில் சொல்கிறோம், அப்போது பதில் சொல்கிறோம் என்று காலத்தை இழுத்தடித்து விட்டு இறுதி வரை ஜம் இயத்துல் உலமா பதில் சொல்லாததால் சுகத் மூலம் தான் இவர்கள் அழைக்கப்பட்டார்கள். என்னைப் பொறுத்தவரை அவர்கள் வெறும் பலியாடுகள்.அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. நாம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லும் திறனோ தகவலோ அவர்களிடம் இருக்கவில்லை. ஜம் இயத்துல் உலமா திரை மறைவில் இருந்து வேடிக்கை பார்க்கிறது, ஆனால் அவர்களால் இந்த நாட்டில் சமூகங்களுக்கிடையில் பிளவு ஏற்படுகிறது, அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
கேள்வி: நல்லது, உங்கள் பேட்டிகள் மற்றும் அறிக்கைகளில் கூட நீங்கள் அடிக்கடி “சம்பிரதாய முஸ்லிம்கள்” என்று ஒரு பிரிவினர் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள் அவர்கள் யார்?
தேரர்: நாங்கள் சம்பிரதாய முஸ்லிம்கள் என்று குறிப்பிடுவது இந்த நாட்டில் சமத்துவத்துடன் காலகாலமாக வாழும் முஸ்லிம்களை ஆனால் ஜம் இயத்துல் உலமா இறக்குமதி செய்யும் வஹாபிஸமும், ஸலபிசமும் தான் அவர்களையும் எம்மிடமிருந்து பிரிக்கிறது.
கேள்வி: நல்லது, உங்களிடம் இறுதியாக ஒரு கேள்வி, இப்போது நாங்கள் விபரம் அறியும் நோக்கிலேயே உங்களைத் தொடர்பு கொண்டோம். எனினும், முஸ்லிம் மக்களுக்கு உங்களிடம் கேட்பதற்கு ஏராளமான கேள்விகள் இருக்கிறது. அவற்றை எமது வாசகர்களிடமிருந்து பெற்றுத்தந்தால் அவற்றுக்கு நீங்கள் பதிலளிப்பீர்களா?
தேரர்: நிச்சயமாக பதிலளிப்பேன், நீங்கள் கேள்விகளைக் கொண்டு வாருங்கள், அதற்கான பதில்களை எனது குரலிலேயே ஒலிபரப்புங்கள் அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. முஸ்லிம் மக்கள் எம் சகோதரர்களே அவர்களை நாங்கள் பிழையாக நினைக்கவில்லை அவர்களுக்கு எங்களிடம் கேள்வியிருந்தால் அதற்கான பதிலை எந்நேரத்திலும் தரத் தயாராக இருக்கிறோம்.
நேர்காணலின் போது தேரர் நிதானமாகக் காணப்பட்டாலும் ஒரு சில இடங்களில் உணர்ச்சிவசப்பட்டதுடன் ஜம் இயத்துல் உலமா சார்ந்த  இடங்களில் ஜம் இயத்துல் உலமாவை சாடும் போது “சங்கடத்துக்கரிய” வார்த்தைகளையும் பிரயோகித்ததனால் அதன் ஒலி வடிவம் இங்கு தவிர்க்கப்படுகிறது. எனினும், எமது கேள்விகளுக்கு பதில் தர அவர் இணங்கியிருப்பதனால் வாசகர்கள் உங்கள் கேள்விகளை ஆங்கிலத்திலோ, தமிழிலோ, சிங்களத்திலோ இங்கே பின்னூட்டம் மூலம் அல்லது எமது பிரதான மின்னஞ்சலுக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம்.
பொதுபல சேன அமைப்பினுள் மும்மொழிகளிலும் தேர்ச்சிபெற்றவர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் ஞாயிறன்று தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இது குறித்த கலந்துரையாடல் ஒன்றிலும் அவர்கள் பங்கெடுக்கவிருப்பதாகவும் அறிய முடிகிறது.
எவ்வாறாயினும், பொதுபல சேனாவின் கையில் நாட்டின் சட்டத்தைக் கையளிக்க சமாதானத்தை விரும்பும் எந்த இலங்கையரும் விரும்பப் போவதில்லை. பொதுபல சேனா ஒரு அமைப்புத்தானே ஒழிய அது நாட்டின் காவலர்களில்லையே என்று நாம் சுட்டிக்காட்டிய போது நாம் பெளத்த மதத்தின் காவலர்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள், அதே நேரம் அவர்களின் முழு நேர வேலையே ஜம் இயத்துல் உலமாவை எதிர்ப்பதாகவும் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இது இலங்கையின் முஸ்லிம் சமூகத்தைப் பெருமளவு பாதிக்கிறது ! முஸ்லிம்களின் மனது புண்பட்டிருக்கிறது ! அதைப் பார்த்து அரசும் மெளனமாக இருக்கிறது எனும் உண்மையையும் மறுக்க முடியாது.
நன்றி - சோனகர் டொட் கொம்    http://www.sonakar.com/2013/02/

Monday 11 February 2013

அப்சல் குரு அநீதியின் அடையாளம்?



எனக்கு எனது குடும்பம் உயிருடன் வேண்டுமானால், நான் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டாக வேண்டும்'' - அப்சல் குரு

அமெரிக்காவின் ‘ரேடியோ பசிபிகா நெட்வொர்க்' செய்தியாளர் வினோத் கே. ஜோஸ், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகமது அப்சல் குருவை, உயர் பாதுகாப்பு நிறைந்த தில்லி திகார் சிறையில் சந்தித்து எடுத்த சிறப்பு நேர்காணலை ‘தெகல்கா' ஆங்கில வார ஏடு வெளியிட்டுள்ளது. அதிலிருந்து...

சிறிய சிறிய அறைகளாகத் தடுக்கப்பட்ட ஓர் அறைக்குள் நான் நுழைகிறேன். சிறைவாசிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே ஒரு தடிமனான கண்ணாடிச் சுவரும், இரும்பு சன்னலும் இருக்கிறது. இருபுறமும் சுவரில் ஒலிவாங்கியும் ஒலி பெருக்கியும் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதன் மூலமாகவே உரையாடல் நடக்கிறது. அப்சல் எனக்காக காத்திருந்தார். அவர், நினைத்துப் பார்க்க இயலாத அளவிற்கு கம்பீரமாகவும் அமைதியாகவும் இருந்தார். ஏறத்தாழ ஒரு மணி நேரம் பேசினோம். பதினைந்து நாட்களுக்குப் பிறகு இரண்டாவது சந்திப்பு நடைபெற்றது. பேட்டியை நிறைவு செய்ய வேண்டுமென்பதில் இருவருமே அவசரம் காட்டினோம். என்னுடைய சிறிய குறிப்பேட்டில் நான் குறிப்பெடுத்தேன். அப்சலுக்கு சொல்வதற்கு நிறைய செய்திகள் இருந்தன. தனிமைச் சிறையில் இருந்ததால், உலகத்தோடு தொடர்பு கொள்ள இயலாத நிலையை குறித்தே அவர் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டார்.



அப்சல் குறித்து பல்வேறு மாறுபட்ட பிம்பங்கள் உள்ளனவே. நான் எந்த அப்சலை இப்போது சந்தித்திருக்கிறேன்?
அப்படியா? என்னைப் பொறுத்தவரை ஒரே ஒரு அப்சல்தான். அது நான்தான்.
அப்படியெனில் அந்த அப்சல் யார்?


அப்சல் இளமையான, துடிப்புமிக்க, அறிவாளியான, குறிக்கோளுடைய இளைஞன். 1990களின் முன்பகுதிகளில் மாறிய அரசியல் சூழல்களால் பாதிக்கப்பட்ட பலரைப் போல நானும் பாதிக்கப்பட்ட ஒரு காஷ்மீரி. ‘ஜம்மு காஷ்மீர் விடுதலஇயக்க'த்தில் உறுப்பினராக இருந்தேன். அந்த அடிப்படையில் எல்லை தாண்டியவர்களில் நானும் ஒருவன். ஆனால், ஒரு சில வாரங்களுக்குள்ளாகவே அந்த மாயையிலிருந்து விடுபட்டு இங்கு திரும்பி வந்து, ஒரு சராசரியான வாழ்க்கையை வாழ முயன்றேன். ஆனால், நான் ஒருபோதும் அப்படி ஒரு வாழ்க்கையை வாழ அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்புப் படையினர் என்னை கூட்டிச் சென்று, உச்சகட்ட சித்திர வதைகளை செய்தனர். உடம்பில் மின்சாரம் பாய்ச்சுவது, குளிர்ந்த நீரில் உறைய வைப்பது, பெட்ரோலில் முக்கி எடுப்பது, மிளகாய் புகையில் நிற்க வைப்பது என... வதைகளில் எத்தனை வகை உண்டோ, அத்தனையையும் நான் அனுபவித்திருக்கிறேன். பிறகு, ஒரு வழக்கில் பொய்யாக நான் இணைக்கப்பட்டேன். வழக்கறிஞர் இன்றி, நேர்மையான விசாரணையின்றி, இறுதியாக எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. காவல் துறையினர் கூறிய பொய்கள், ஊடகங்களில் பரப்பப்பட்டன.


அதுதான் ஒருவேளை உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது போல, "தேசத்தின் ஒட்டுமொத்த மனசாட்சியாக உருவெடுத்தது. அந்த ‘கூட்டு மனசாட்சி'யை திருப்திப்படுத்த, எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த முகமது அப்சலைத் தான் நீங்கள் சந்திக்கிறீர்கள்.


வெளி உலகத்திற்கு இந்த அப்சலைப் பற்றி ஏதேனும் தெரியுமா என நான் வியக்கிறேன். நீங்களே சொல்லுங்கள்... எனது கதையை சொல்லும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டதா? எனக்கு நியாயம் வழங்கப்பட்டதாக நீங்கள் கருதுகிறீர்களா? ஒருவருக்கு வாதாட வழக்கறிஞரே வழங்கப்படாமல், நேர்மையான விசாரணையின்றி, அவன் தன் வாழ்க்கையில் சந்தித்தவற்றை கேட்காமல், அவனைத் தூக்கிலிடுவது சரியென கருதுகிறீர்களா? ஜனநாயகம் என்பது இதுவல்ல - இல்லையா?


உங்கள் வாழ்க்கையிலிருந்து தொடங்கலாமா? வழக்கிற்கு முந்தைய உங்கள் வாழ்க்கையிலிருந்து...


நான் வளரும் காலத்தில், காஷ்மீரில் ஓர் உணர்வெழுச்சிக்கான அரசியல் சூழல் நிலவியது. மக்பூர் பட் தூக்கிலிடப்பட்டார். அமைதியான வழியில் காஷ்மீர் சிக்கலுக்கு தீர்வு காண மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதென காஷ்மீர் மக்கள் முடிவெடுத்தனர். காஷ்மீர் சிக்கலின் இறுதித் தீர்வில் காஷ்மீர் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் ‘முஸ்லிம் அய்க்கிய முன்னணி' உருவாக்கப்பட்டது. முன்னணிக்கு கிடைத்த ஆதரவு, தில்லி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை மணி அடிப்பதாக இருந்தது. இதன் விளைவாக, தேர்தலில் மிகப் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்தன. தேர்தலில் பங்கெடுத்த மற்றும் பெரும் வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்ற தலைவர்கள் கைது செய்யப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் பிறகே, அதே தலைவர்கள் ஆயுதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆயுதக் கிளர்ச்சியில் இறங்கினர். நான் அப்போது சிறீநகரில் ஜீலம் பள்ளத்தாக்கு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்துக் கொண்டிருந்தேன். எனது படிப்பைப் பாதியிலேயே கைவிட்டு, ‘ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்க'த்தில் இணைந்தேன். அதன் உறுப்பினராக, காஷ்மீரின் அந்தப் பக்கத்திற்குச் சென்ற பலரில் நானும் ஒருவன். ஆனால், காஷ்மீர் சிக்கலில் பாகிஸ்தான் அரசியல்வாதிகளின் செயல்பாடு, எந்த வகையிலும் இந்திய அரசியல்வாதிகளின் செயல்பாட்டிலிருந்து மாறுபடாமல் இருப்பது கண்ட பிறகு, மாயை தெளிந்த மனதோடு சில வாரங்களிலேயே நான் இங்கு திரும்பிவிட்டேன். பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தேன். உங்களுக்குத் தெரியுமா? எல்லை பாதுகாப்புப் படையினர் எனக்கு ‘சரணடைந்த போராளி' என்று சான்றிதழ்கூட அளித்தனர். நான் புத்தம் புதிய வாழ்க்கையைத் தொடங்கினேன். என்னால் ஒரு மருத்துவராக முடியவில்லை என்ற போதும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் விற்பனையாளராக ஆகிவிட்டேன்.


எனக்கு கிடைத்த சொற்ப வருமானத்தில் ஒரு ஸ்கூட்டர்கூட வாங்கி விட்டேன். திருமணம் செய்து கொண்டேன். ஆனால், ராஷ்டிரிய ரைபிள் படையினர் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரின் துன்புறுத்தல் இல்லாமல் ஒரு நாள்கூட செல்லவில்லை. காஷ்மீரில் எங்கேயாவது போராளிகளின் தாக்குதல் நடந்தால், பொது மக்களை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துவிடுவார்கள். 


என்னைப் போன்ற சரணடைந்த போராளிகளின் நிலை இன்னமும் மோசம். எங்களைப் பல நாட்கள் பாதுகாப்பில் வைத்திருந்து, பொய் வழக்கில் இணைத்துவிடுவதாக மிரட்டினர். 22 ராஷ்டிரிய ரைபிள் படையணியைச் சார்ந்த மேஜர் ராம் மோகன் ராய், என்னுடைய பிறப்பு உறுப்பில் மின்சாரத்தைப் பாய்ச்சினார். பலமுறை அவர்களின் கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைக்கப்பட்டேன். அவர்களின் முகாம்களை பெருக்க வைத்தனர். ஒரு முறை ஹம்ஹமா அதிரடிப்படை வதை முகாமிலிருந்து தப்பிக்க, பாதுகாப்புப் படையினருக்கு என்னிடம் இருந்த அனைத்தையும் லஞ்சமாக கொடுக்க வேண்டியிருந்தது. துணை கண்காணிப்பாளர் வினய் குப்தாவும், துணை கண்காணிப்பாளர் தவீந்தர் சிங்கும் சித்திரவதைகளை மேற்பார்வையிட்டனர். வதை செய்வதில் தேர்ந்தவர்களில் ஒருவரான ஆய்வாளர் ஷண்டி சிங், நான் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க ஒப்புக் கொள்ளும் வரையில், மூன்று மணி நேரம் என் மீது மின்சாரத்தைப் பாய்ச்சினார். எனது மனைவி தன் நகைகளை விற்றார். மீதி பணத்திற்கு அவர்கள் எனது ஸ்கூட்டரை விற்று விட்டனர்.


நான் பொருளாதார ரீதியாகவும், மனதளவிலும் உடைந்து போனவனாக முகாமிலிருந்து திரும்பினேன். 6 மாதங்களுக்கு என்னால் எனது வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. எனது உடல் நிலை அத்தனை மோசமாக இருந்தது. எனது பிறப்பு உறுப்பில் மின்சாரம் பாய்ச்சப்பட்டதால், என்னால் எனது மனைவியுடன் இல்லற வாழ்வில் ஈடுபட முடியவில்லை. அதற்காக நான் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள நேர்ந்தது.
வழக்கிற்கு வருவோம்... நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தங்களை சிக்க வைத்த நிகழ்வுகள் எவை?


சிறப்பு அதிரடிப்படை முகாம்களில் நான் கற்றுக் கொண்ட பாடங்களின் விளைவாக, துணை கண்காணிப்பாளர் தவீந்தர் சிங், அவருக்காக ஒரு சின்ன வேலை செய்யச் சொன்னபோது, அதை மறுக்க எனக்கு எந்த வாய்ப்பும் இல்லை. அவர் அப்படித்தான் கூறினார்: ‘ஒரு சின்ன வேலை.' நான் ஒருவரை தில்லிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றார். அந்த மனிதருக்காக நான் தில்லியில் ஒரு வாடகை வீட்டை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். நான் அந்த மனிதரை முதல் முறையாகப் பார்க்கிறேன். அவர் காஷ்மீரி மொழி பேசவில்லை என்பதால், அவர் வெளியாள் என சந்தேகித்தேன். அவர் தனது பெயர் முகமது என்று கூறினார் (நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய ஆயுதமேந்திய அய்வர் குழுவிற்கு முகமதுதான் தலைவர் என காவல் துறை குற்றம் சாட்டியது. அவர்கள் அனைவருமே பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்).


நாங்கள் தில்லியில் இருந்தபோது, எனக்கும் முகமதுவிற்கும் தவீந்தர் சிங்கிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வரும். அதோடு முகமது தில்லியில் நிறைய பேரை சந்தித்ததையும் நான் கவனித்தேன். அவர் ஒரு கார் வாங்கிய பிறகு என்னை திரும்பிச் செல்லுமாறு கூறினார். பரிசாக அளிப்பதாகக் கூறி அவர் எனக்கு 35,000 ரூபாய் அளித்தார். நான் ஈத்தை முன்னிட்டு காஷ்மீர் திரும்பினேன். சிறீநகர் பேருந்து நிலையத்திலிருந்து சோபூர் செல்ல முற்படும்போது, நான் கைது செய்யப்பட்டு, பரிம்போரா காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டேன். அவர்கள் என்னை சித்ரவதை செய்து, பின்னர் சிறப்பு அதிரடிப்படை தலைமையகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து தில்லிக்கு கொண்டு வந்தனர். தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவின் வதை முகாமில் முகமதை பற்றி எனக்குத் தெரிந்த அனைத்தையும் கூறினேன்.


ஆனால், அவர்கள், நானும் எனது உறவினர் ஷவுகத், அவரது மனைவி நவ்ஜோத், சர் கிலானி ஆகியோர்தான் நடாளுமன்றத் தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் என்றுதான் நான் சொல்ல வேண்டும் என வற்புறுத்தினர். ஊடகங்களுக்கு முன் இதை நான் நம்பத்தகுந்த வகையில் சொல்ல வேண்டும் என கூறினர். நான் மறுத்தேன். ஆனால், என் குடும்பம் அவர்கள் கைப்பிடியில் இருப்பதாகவும், நான் ஒப்புக் கொள்ளாவிட்டால், அவர்களை கொன்று விடுவதாகவும் மிரட்டினர். பல வெற்றுத் தாள்களில் கையெழுத்திட வைக்கப்பட்டேன். காவல் துறையினர் சொன்னதை ஊடகங்களிடம் சொல்லி, தாக்குதலுக்கும் பொறுப்பேற்குமாறு வற்புறுத்தப்பட்டேன். சர் கிலானி அவர்களின் பங்கு குறித்து ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது, கிலானி குற்றமற்றவர் என்று நான் கூறினேன். சொல்லிக் கொடுத்ததை தாண்டி நான் பேசியதற்காக, உதவி கமிஷனர் ராஜ்பீர் சிங், ஒட்டுமொத்த பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே என்னிடம் கத்தினார்.
மறுநாள் ராஜ்பீர் சிங், எனது மனைவியிடம் நான் பேச அனுமதித்தார். அதன் பிறகு, அவர்களை நான் உயிருடன் பார்க்க வேண்டுமெனில், நான் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார். எனது குடும்பத்தை நான் உயிருடன் பார்க்க வேண்டுமானால், குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்வதுதான் எனக்கு ஒரே வழியாக இருந்தது. சிறிது காலத்திற்குப் பிறகு நான் விடுதலையாகிவிடும் வகையில் எனது வழக்கை பலவீனமாக அமைப்பதாக சிறப்புப் பிரிவு அதிகாரிகள் உறுதி அளித்தனர். என்னை அவர்கள் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, முகமது பலவிதப் பொருட்களை வாங்கிய கடைகளை காட்டினர். இதன் மூலம் வழக்கிற்கு என்னை சாட்சியாக மாற்றினர். நாடாளுமன்றத் தாக்குதலின் பின்னிருந்த மூளையை கண்டுபிடிக்க இயலாத தங்கள் தோல்வியை மறைக்க, காவல் துறையினர் என்னை பலிகடா ஆக்கிவிட்டனர். மக்களை அவர்கள் முட்டாள்களாக்கிவிட்டனர். நாடாளுமன்றத் தாக்குதல் யாருடைய திட்டம் என்பது, இன்னமும் மக்களுக்குத் தெரியாது. காவல் துறை அதிகாரிகள் பதக்கங்கள் பெற்றனர். எனக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது.


உங்களுக்கு ஏன் சட்டப்பூர்வமான உதவிகள் கிடைக்கவில்லை?


எனக்காக முறையிட யாருமே இல்லை. நீதிமன்ற விசாரணை தொடங்கி ஆறு மாதங்கள் வரையில் எனது குடும்பத்தைக்கூட நான் சந்திக்கவில்லை. பாட்டியாலா இல்ல நீதிமன்றத்தில் அவர்களை சந்தித்தபோது, அது மிகக் குறைவான நேரமே நீடித்தது. எனக்காக வழக்கறிஞரை ஏற்பாடு செய்ய யாரும் இருக்கவில்லை. சட்ட உதவி இந்நாட்டில் அடிப்படை உரிமையாக இருந்த காரணத்தினால், எனக்காக வாதாட நான்கு வழக்கறிஞர்களை நான் பரிந்துரை செய்தேன். ஆனால், அவர்கள் நால்வருமே என் வழக்கை எடுத்துக் கொள்ள மறுத்து விட்டதாக நீதிபதி எஸ். என். திங்கரா கூறினார். நீதிமன்றம் எனக்காக தேர்ந்தெடுத்த வழக்கறிஞர், மிக முக்கிய ஆவணங்களை எல்லாம் ஒப்புக் கொள்ளத் தொடங்கினார். உண்மை என்னவென்று அவர் என்னிடம் கேட்கவே இல்லை. பின்னர் நீதிமன்றம் ஒரு நடுநிலையாளரை நியமித்தது. எனக்காக வாதாட அல்ல; நீதிமன்றத்திற்கு உதவி செய்ய. அவர் என்னை சந்திக்கவே இல்லை. மேலும், அவர் எனக்கு மிகவும் எதிரானவராகவும், மதவாதியாகவும் இருந்தார். அதுதான் எனது வழக்கு. மிக முக்கிய விசாரணைக் காலத்தில் எந்த விதத்திலும் எடுத்துரைக்கப்படாதது. என்னைக் கொல்வதுதான் உங்கள் நோக்கம் என்றால், எதற்காக இத்தனை நீளமான சட்ட வழிமுறைகள்? எனக்கு அவை அனைத்துமே மிகவும் அர்த்தமற்றவையாக இருக்கின்றன. நான் சொல்வதெல்லாம் இதுதான்: கண்மூடித்தனமான தேசிய உணர்வும், தவறான புரிதல்களும், சக குடிமக்களின் அடிப்படை உரிமைகளைக்கூட மறுக்குமாறு செய்ய விட்டுவிடாதீர்கள்.

சிறையில் என்ன நிலையில் வைக்கப்பட்டுள்ளீர்கள்?

உயர் பாதுகாப்பு தொகுதியில் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளேன். பகலில் மிகக் குறைவான நேரம் மட்டுமே நான் எனது அறையிலிருந்து வெளியே கொண்டு செல்லப்படுகிறேன். வானொலியோ, தொலைக்காட்சியோ கிடையாது. நான் சந்தா கட்டியுள்ள நாளேடுகள்கூட பல பகுதிகள் கிழிக்கப்பட்டே என்னை வந்தடைகின்றன. என்னைப் பற்றி ஏதேனும் செய்தி வந்திருந்தால், அதைக் கிழித்துவிட்டு எஞ்சிய பகுதிகளை மட்டுமே எனக்கு அளிக்கின்றனர்.


தங்கள் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையைத் தவிர, தாங்கள் மிக அதிகமாக அக்கறை கொள்ளும் விஷயங்கள் என்ன?


பல விஷயங்கள் மீது எனக்கு அக்கறை உள்ளது. நூற்றுக்கணக்கான காஷ்மீரிகள் பல சிறைகளில், வழக்கறிஞர்கள் இன்றி, விசாரணையின்றி, எந்தவித உரிமையும் இன்றி வாடுகின்றனர். காஷ்மீரின் தெருக்களில் நடமாடும் பொது மக்களின் நிலை இதிலிருந்து எந்த விதத்திலும் மாறுபட்டதல்ல. காஷ்மீர் பள்ளத்தாக்கே ஒரு திறந்த வெளி சிறைதான். அண்மைக் காலங்களில் பொய்யான மோதல் சாவுகள் குறித்த செய்திகள் வெளிவருகின்றன. ஆனால், இது பனிப்பாறையின் சிறுமுனை மட்டுமே. ஒரு நாகரீக நாட்டில் நீங்கள் பார்க்க விரும்பாத அத்தனையும் காஷ்மீரில் இருக்கின்றன. உங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் நடக்கிறது...
எனக்கு அநீதி இழைக்கப்பட்டதென சொல்ல முன் வந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். வழக்கறிஞர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள் மற்றும் அவர்கள் அனைவரும், அநீதிக்கு எதிராக வெளிப்படையாகப் பேசுவதன் மூலம் ஒரு மகத்தான செயலை செய்கிறார்கள். தொடக்கக் காலங்களில், 2001இல் வழக்கு விசாரணையின் தொடக்க நாட்களில், நீதியை நியாயத்தை விரும்புபவர்கள் வெளிப்படையாகப் பேசுவது என்பது இயலாத ஒன்றாக இருந்தது. உயர் நீதிமன்றம் சர் கிலானியை குற்றமற்றவர் என விடுவித்தபோது, காவல் துறையின் முடிவை மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கினர். மேலும் அதிகமாக மக்கள் வழக்கின் விவரங்களையும், உண்மைகளையும் அறிந்து, பொய்களைத் தாண்டியும் பார்க்கத் தொடங்கிய பிறகு, பேசவும் தொடங்கினர். நீதியை நியாயத்தை விரும்புபவர்கள், அப்சலுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என சொல்ல முன்வருவது இயற்கையானது, ஏனெனில், அதுதான் உண்மை.

தங்கள் மனைவி தபஸ்சும், மகன் காலிப் இவர்களைப் பற்றி நினைக்கும்போது தங்கள் மனதில் என்ன தோன்றுகிறது?

எங்களுக்கு திருமணமான பத்தாவது ஆண்டு இது. அதில் பாதியை நான் சிறையில் கழித்திருக்கிறேன். அதற்கு முன்னால், காஷ்மீரில் உள்ள இந்திய பாதுகாப்புப் படையினரால் நான் பலமுறை கைது செய்யப்பட்டு வதை செய்யப்பட்டுள்ளேன். தபசும் எனது உடல் மற்றும் மனப்புண்களுக்கு சாட்சியாக இருந்துள்ளார். பலமுறை நிற்கக்கூட இயலாதவனாக நான் வதை முகாமிலிருந்து திரும்பியுள்ளேன். எனது பிறப்பு உறுப்பில் மின்சாரம் பாய்ச்சப்பட்டது உட்பட, பல வகையான கொடுமைகளை அனுபவித்துள்ளேன். அவர்தான் எனக்கு வாழ்வதற்கான நம்பிக்கையை அளித்தார். ஒரு நாள்கூட நாங்கள் நிம்மதியான வாழ்க்கை வாழவில்லை. இதுதான் பல காஷ்மீரி இணையர்களின் கதையாக இருக்கிறது. காஷ்மீர் இல்லங்கள் அனைத்திலும் அச்சமே முக்கிய உணர்வாக உள்ளது.


தங்கள் மகன் என்னவாக வளர வேண்டும் என விரும்புகிறீர்கள்?


தொழில் ரீதியாக என்றால், மருத்துவராக வேண்டும். அது என்னுடைய நிறைவேறாத கனவு. ஆனால், அதைவிட முக்கியமாக, அவன் அச்சமின்றி வளர வேண்டும் என நான் விரும்புகிறேன். அவன் அநீதிக்கு எதிராகப் பேச வேண்டும் என விரும்புகிறேன். அநீதியின் கதையை என் மனைவியையும் மகனையும் விட, வேறு யார் அதிகமாக அறிவார்கள்?


நாடாளுமன்றத் தாக்குதலில் 13 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் குடும்பங்கள் உள்ளன...
உண்மையில், தாக்குதலில் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் வேதனையை நானும் பகிர்ந்து கொள்கிறேன். ஆனால், என்னைப் போன்ற ஓர் அப்பாவியை தூக்கிலிடுவது, அவர்களை திருப்திப் படுத்தும் என அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். தேசியவாதத்தின் மிக சிதைக்கப்பட்ட நோக்கத்திற்காக அவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். அவர்களை செய்திகளின் ஊடாகப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


உங்கள் வாழ்க்கையின் சாதனையாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?


ஒரு வேளை எனது மிகப் பெரிய சாதனை என்பது, எனது வழக்கின் ஊடாகவும், எனக்கு நடந்த அநீதிக்கு எதிரான பிரச்சாரத்தின் காரணமாகவும், சிறப்பு அதிரடிப்படையினரின் கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. பாதுகாப்புப் படையினர் மக்களுக்கு எதிராக நடத்திய அட்டூழியங்கள், மோதல் கொலைகள், காணாமல் போனவர்கள், வதை முகாம்கள் போன்றவற்றைப் பற்றி மக்கள் இன்று விவாதிப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இவைதான் ஒரு காஷ்மீரி நேரடியாக கண்டு வளரும் சூழல். இந்திய பாதுகாப்புப் படையினர் காஷ்மீரில் என்ன செய்கின்றனர் என்பது குறித்து காஷ்மீருக்கு வெளியிலிருக்கும் மக்களுக்கு எதுவும் தெரியாது.


காதை கிழிக்கும் மின்சார மணி அடிக்கிறது. இதுதான் நான் அப்சலிடம் கேட்ட இறுதிக் கேள்வி)
நீங்கள் என்னவாக அறியப்பட வேண்டும் என விரும்புகிறீர்கள்?


அப்சலாக... முகமது அப்சலாக... நான் காஷ்மீரிகளுக்கு அப்சல்... இந்தியர்களுக்கும் நான் அப்சல்தான். ஆனால், இந்த இரு பிரிவினருக்கும் என்னைப் பற்றி முற்றிலும் முரண்பாடான புரிதல்கள் உள்ளன. நான் இயல்பாக காஷ்மீரி மக்களின் முடிவையே நம்புவேன். நான் அவர்களில் ஒருவன் என்பதால் மட்டுமல்ல; நான் சந்தித்த எதார்த்தங்களை அவர்கள் நன்கு அறிவர் என்பதாலும்! எந்தவித சிதைக்கப்பட்ட வடிவமும் அவர்களை தவறாக வழிநடத்த முடியாது. அது வரலாறாக இருந்தாலும் ஒரு நிகழ்வாக இருந்தாலும்.

பூங்குழலி - தலித் முரசு மார்ச் 2007 இதழில் வெளிவந்த தமிழாக்கம

Sunday 3 February 2013

பௌத்த கடும்போக்காளர்களின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் : முஸ்லிம் கவுன்சில்

ஜெனீவாவில் அடுத்தமாதம் இலங்கை தொடர்பான பிரேரணை கொண்டுவரப்படவுள்ள நிலையில் நாட்டில் பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் கலவரத்தை தோற்றுவித்து அதன்மூலம் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தியை ஏற்படுத்த சில வெளிநாட்டு சக்திகள் முயற்சி செய்வதாக சிறீலங்கா முஸ்லிம் கவுன்சில் குற்றம்சாட்டியுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலமாக பௌத்த தீவிரப் போக்குடைய அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் பிரசாரங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று காலை கொழும்பு ரண்டமுத்து ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே சிறீ லங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன் இவ்வாறு தெரிவித்தார்.


தொடர்ந்தும் அவர் இங்கு கருத்து வெளியிடுகையில்இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் அவப் பெயரை ஏற்படுத்தி அதன் மூலம் இலாபம் தேட முனையும் தீய சக்திகள் இன்று பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் மோதலை ஏற்படுத்தி வேடிக்கை பார்க்க முயற்சிக்கின்றன. இதற்கு நாம்ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னரும் சுதந்திரம் கிடைத்த பின்னரும் முஸ்லிம்கள் மிகவும் விசுவாசமாகவே வாழ்ந்து வந்துள்ளார்கள். பிரிவினையை ஏற்படுத்தவோ முரண்பாடுகளைத் தோற்றுவிக்கவோ முஸ்லிம்கள் ஒருபோதும் முயற்சி செய்ததில்லை.


இவ்வாறான நிலையில் இன்று முஸ்லிம்கள் இந்த நாட்டைச் சூறையாட வந்தவர்கள் போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்த ஒரு குழுவினர் முயற்சி செய்து வருகின்றனர். இது தொடர்பில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.முஸ்லிம்கள் இந்த நாட்டில் ஜிஹாத் போராட்டத்தை நடத்த முனைவதாக பொய்யான ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். நாம் ஜிஹாத் செய்ய வேண்டிய எந்தத் தேவையும் இந்த நாட்டில் கிடையாது. இந்த நாட்டு முஸ்லிம்கள் தமக்குக் கிடைக்க வேண்டிய சகல உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பெற்றிருக்கையில் ஏன் ஜிஹாத் செய்ய வேண்டும்? என்றும் அவர் இதன்போது கேள்வியெழுப்பினார்.


இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கருத்து வெளியிடுகையில்முஸ்லிம்களாகிய நாம் இலங்கையர்களாக இருப்பதையிட்டு பெருமைப்படுகிறோம். இந்த நாட்டில் வாழும் சகல இன மக்களோடும் ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் வாழ்ந்து வருகிறோம். அவ்வாறே தொடர்ந்தும் வாழ விரும்புகிறோம்.ஆனால் இன்று சில வெளிநாட்டு சக்திகள் ஒரு சிறு குழுவினருக்கு நிதியுதவியளித்து அவர்கள் மூலமாக பிரச்சினைகளை தோற்றுவிக்க முனைகின்றனர். போர் முடிவுக்கு வந்த பின் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல அரசாங்கம் முயன்று கொண்டிருக்கையில் மீண்டும் நாட்டை படுகுழியில் தள்ள வேண்டும் என சிலர் விரும்புகின்றனர். இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்றார்.


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் இங்கு கருத்து வெ ளியிடுகையில் இந்த நாட்டில் மீண்டும் ஒரு ஜூலைக் கலவரம் ஏற்பட நாம் இடமளிக்கக் கூடாது. ஜூலைக் கலவரத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நாம் நன்கு அறிந்திருக்கிறோம். மீண்டும் அவ்வாறானதொரு நிலைமையைத் தோற்றுவிக்கவே இவ்வாறான சக்திகள் முனைகின்றன. இதற்கு சமூகத் தலைமைகளும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இடமளிக்கக் கூடாது என்றார்.




நன்றி- நல்ல நண்பன்@att.net

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...