Thursday 10 February 2011

எழுச்சிக்காக இன்னுயிர் நீத்த எகிப்திய கலைஞன்.



அஹ்மத் பாஸியூனி !

எகிப்தின் அடக்குமுறையை எதிர்த்து எழுந்த அந்தப் பேரலயைில் அவனும் ஒரு மௌனப் புயலாய் மறைந்து தான் இருந்தான்.

எகிப்தின் எழுச்சிக்குப் பின்னால் உலக ஊடகங்கள் அடக்கி வாசிக்கும் ஓர்  உண்மை இருக்கிறது. அது அடித்தட்டில் அமுங்கிக் கிடக்கிறது.

அது இந்த எழுச்சிக்குப் பின்னால் இருக்கும் இலத்திரனியல் ஆயுதமேந்திய ஓர் இளைஞர் படை. அதன் பெயர் 'ஏப்ரல் 6 ' போராட்டக்குழு.

மேற்குலகின் கைக்கூலியான அல்பராதியும், மத்திய கிழக்கின் அரபு ராஜாக்களுக்கு கூஜா தூக்கிக் கொண்டிருக்கின்ற எகிப்தின் எதிர்க்கட்சியும் ஆழ்ந்து உறங்கும் போது... ''ஏப்ரல் 6 " என்ற இளைஞர் இயக்கம் தான் மக்களைத் தட்டி எழுப்பி தஹ்ரீர் சதுக்கத்திற்கு அணியணியாய் அழைத்து வந்தது.

தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்டெழுந்த அந்த "ஏப்ரல் 6 " டிஜிட்டல் புரட்சியின் அங்கமாகத்தான் அவனும் அடையாளமானான்.

இலட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில்....

அஹ்மத் பாஸியூனி என்ற

புரட்சிக்குப் பூ தூவிய அவனை மட்டும் எதிரிகளின் துப்பாக்கி எப்படி இனம் கண்டுக்கொண்டது?

அவனது நெற்றியைக் குறி பார்த்து
நேர்த்தியாய் வைக்கப்பட்டிருந்தது அந்தத் துப்பாக்கிச் சூடு.

புகைப்படக் கருவியோடு அமைதியாக நிராயுதபாணியாக நின்றுக்கொண்டிருந்த அவனை அடக்குமுறையின் கொடிய கரங்கள் அடையாளம் கண்டன.

புரட்சிக்காக இன்னுயிர் நீத்த முதலாவது எகிப்தின் கலைஞனாக அவன் புதைக்கப்படுவான் என்று நினைத்திருக்கவே மாட்டான்.

அவன், மக்கள் பலம் எழுந்துக் கொண்டிருந்த தஹ்ரீர் சதுக்கத்தில்
விழுந்துபோன முதலாவது காட்சி ஊடகக் கலைஞன்.

அஹ்மத் பாஸியூனி!

முபாரக்கின் ஆட்சியில் மூன்று தசாப்தங்களாய் முடங்கிப்போயிருந்த மானுடத்தை மீட்டெடுக்க மிருதுவான தனது கலையுணர்வால் அவன் கற்பனைக் கோட்டைகளைக் கட்டியிருக்கிறான்.

காட்சி ஊடக கலைஞனான அஹ்மத் பாஸியூனி கலைவடிவங்களை படித்திருக்கிறான். படைத்திருக்கிறான். படிப்பித்திருக்கிறான்.

கலை வடிவங்களுடே சுதந்திர காற்றை சுவாசிக்க அவனது மாணவர்களுக்கும் கற்றுக்கொடுத்திருக்கின்றான்.

ஓவியன், பாடகன் என்று பல துறைகளில் தடம் பதித்த அஹ்மத் பாஸியூனி எகிப்தின் புகழ்பெற்ற இளம் கலைஞராக திகழ்ந்தவன்.

தனது முதுகலைமானி பட்டப்படிப்பிற்காக மின்னியல் கலை வடிவம் தொடர்பான ஆய்வை தொடந்திருந்த வேளையில் எகிப்து அவனை இழந்திருக்கிறது. எழுச்சி அவனைப் பிரிந்திருக்கிறது.

அடக்குமுறையை வெறுத்து புரட்சியை நேசித்த அஹ்மத் பாஸியூனி என்ற கலைஞன் தன் கனவுகளோடு மறைந்திருக்கிறான்.

அவன் தனது பேஸ் புக்கில் இறுதியாக பதித்த வார்த்தைகள்
"If they want war, we want peace. We are better: I’ll practice restraint till the end."


No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...