Powered by IP2Location.com

Sunday, 10 January 2010

காஸா - பிரச்சினையும் பிராந்திய அரசியலும்!



காஸா - பிரச்சினையும் பிராந்திய அரசியலும்!

பலஸ்தீன் பிரச்சினை சமகாலத்தின் மாபெரும் தார்மீகப் பிரச்சினை என்றார் நெல்சன் மண்டேலா .

பல தசாப்தங்கள் உலகில் மாற்றமடையாமல் இருக்கும் ஒரே தலைப்பு “ மத்திய கிழக்கின் தற்போதைய நெருக்கடி ” என்றார் நோம் சொம்ஸ்கி.

பலஸ்தீன் மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியை அடையாளப்படுத்த இதனைத் தவிர வேறு ஒரு வார்த்தைகள் அவசியமில்லை.

காஸா மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு ஒரு வருடம் நிறைவாகிறது. சுமார் 15 லட்சம் மக்கள் அடிப்படை வசதிகள் முற்றாக மறுக்கப்பட்டு ஒரு திறந்த வெளி சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

உணவு, மருந்து, தண்ணீர், மின்சாரம், கல்வி போன்ற அடிப்படை தேவைகள் அத்தனையும் மறுக்கப்பட்டு அந்த மக்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

2006ம் ஆண்டு பலஸ்தீன் அதிகார சபைக்கான தேர்தலில் ஹமாஸ் இயக்கம் போட்டியிடடு வெற்றியீட்டியதைத் தொடர்ந்து மேற்குலகம் கடுமையான தடைகளையும் நெருக்குதல்களையும் கொடுத்து ஹமாஸ் அரசை செயலிழக்கச் செய்தது.

ஹமாஸ் பாராளுமன்ற அமைச்சர்கள், அங்கத்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள் இன்றும் சிறையில் வாடுகிறார்கள்.

ஜனநாயத்திற்காக குரல் கொடுப்பவர்கள், மனித உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள் யாரும் இதற்காக ஒரு வார்த்தையும் பேசாமல் மௌனிகளாக இருக்கின்றார்கள்.

அடிப்படை வசதிகளும், அத்தியாவசிய பொருட்களும் முற்றாக நிராகரிக்கப்பட்ட நிலையில் பலஸ்தீன் உலகிலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கிறது. தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஹமாஸ் மீதான மேற்குலகின் இந்த நெருக்குதல்களுக்கு பின்னணியில் மத்திய கிழக்கின் அரசியல் மறைந்திருக்கின்றது. பலஸ்தீனில் இஸ்லாமிய ஆட்சியமைப்பைக் கொண்ட ஜனநாயக ரீதியாக ஏற்படும் பாராளுமன்ற அரசியல் கட்டமைப்பு தமது மன்னராட்சியின் மகுடங்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதை அரபு நாடுகள் நன்கு உணர்ந்தே இருக்கின்றன.

பலஸ்தீனில் உருவாகும் பாராளுமன்ற அரசியலின் கவர்ச்சி தனது நாட்டு மக்களின் சிந்தனையில் மாற்றத்தை உருவாக்கும் என்ற அச்சம் அரபு நாடுகளுக்கு இருக்கவே செய்கின்றது.

பலஸ்தீனில் உருவாகும் இஸ்லாமிய அடிப்படையிலான பாராளுமன்ற கட்டமைப்பு அமெரிக்க இஸ்ரேல் நாடுகளுக்கு எப்படி அச்சுறுத்தலோ அதே போன்று அந்த பிராந்தியத்திலுள்ள அரபு நாடுகளுக்கும் அச்சுறுத்தலாகும்.

இந்த ஜனநாயக அரசியல் கட்டமைப்பை விரும்பாத அரபு நாடுகள் தமது மன்னர் ஆட்சி கட்டமைப்பைக் காத்துக்கொள்வதற்காக வேண்டி, பலஸ்தீன் மீது அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் திணித்த பொருளாதார தடைகளை மௌனமாக இருந்தது அங்கீகரித்து வருகின்றன.

காணொளி
"அரபிகளே! பலஸ்தீனத்தை பாதுகாக்க எழுந்து வாருங்கள்!!" - பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் George Galloway.



உலக சனத்தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் நூற்று ஐம்பது கோடியாகும். யூதர்களின் சனத்தொகை வெறுமனே ஒன்றரைக் கோடிதான். உலகமுஸ்லிம் சனத்தொகையோடு ஒப்பிடும் போது யூதர்களின் சனத்தொகை நூற்றுக்கு ஒரு வீதமே இந்த ஒரு வீத சமூகம் முழு முஸ்லிம் உம்மத்தையும் ஆட்டிப்படைக்கின்ற அவலமான நிலைக்கு உலக அரசியல் ஆதிக்கம் மாற்றியிருக்கிறது .

பலஸ்தீன் மீது திணிக்கப்பட்டுள்ள தடைகள் அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். தட்டிக்கேட்க தலைமைத்துவம் ஒன்று இல்லாமல் அந்த மக்கள் இன்றுஅனாதைகளாக்கப் பட்டிருக்கின்றார்கள்.


ஏகாதிபத்திய காலனித்துவ சக்திகளின் இந்த கொடுரமான அடக்குமுறையை ஊடகங்கள் இன்று வரை மூடி மறைத்தும் வருகின்றன.

ஸியோனிஸ வாதிகளால் நசுக்கப்பட்டிருக்கும் அந்த தேசத்தின் குரலை செவியேற்காத செவிடர்களாய் அரபு நாடுகள் உட்பட முழு முஸ்லிம் உம்ம்த்தும் மாறியிருக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருக்கிறது.



2005ல் இஸ்ரேலும் பலஸ்தீனும் செய்து கொண்ட ஒப்பந்தம் ஒன்றின் படி தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதும், எல்லைகள் திறக்கப்பட்டு காஸா, மேற்குக் கரைக்கு இடையில் போக்குவரத்திற்காக பாதைகளை திறந்து பாதகாப்பை உத்தரவாதப்படுத்துவதும் முக்கியமாக கொள்ளப்பட்டிருந்தது.

2006ல் ஹமாஸ் ஆட்சியைக் கைப்பற்றியதும், அல் பத்தாஹ் தோல்வியடைந்ததும் அரபு நாடுகளுக்கும், அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் பேரதிர்ச்சியைக் கொடுத்தது. உடனடியாக இஸ்ரேல் ஒப்பந்தத்தை இரத்துச் செய்தது. தேர்தலுக்கு முன்னேயே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு ஹமாஸ் தனது அமைதி வழியை உலகிற்கு ஒப்புவித்திருந்தது.

காஸா மீது இஸ்ரேல் விதித்திருக்கும் தடையால் பதினைந்து இலட்சம் பலஸ்தீனர்கள் அல்லல் பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். காஸா எகிப்திற்கான பாதை இஸ்ரேல், அமெரிக்கா அழுத்தத்தின் காரணமாக மூடப்பட்டடிருக்கிறது.

சுரங்கப் பாதைகள் ஊடாக எகிப்திற்குள் நுழையும் பலஸ்தீனர்கள் இந்தப் பொருளாதார தடைக்கு வேறு விதமாக முகம் கொடுத்து வருவதை உணர்ந்த இஸ்ரேல் அமெரிக்காவின் ஆலோசனையின் பேரில் காஸா எகிப்து எல்லையில் இரும்புச் சுவர் (Steel Wall) ஒன்றை அமைக்கும் பணியில் இறங்கியிருக்கிறது.

இந்த அட்டுழிய செயற்பாட்டிற்கு இஸ்ரேலும் எகிப்தும் கைகோர்த்துக் கொண்டு களமிறங்கியிருக்கிறது.

காஸாவின் வான்வழி மற்றும் கடல் வழி போக்குவரத்துகள் மற்றாக இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மனித உரிமைகளை மீறும் எதிரிகளின் இந்த முற்றுகை உலக வரலாற்றில் இடம்பெற்ற இடம் பெற்றுக் கொண்டிருக்கும் மோசமான நிகழ்வுகளில் முன்னணியில் நிற்கிறது.

இந்த அடக்கு முறைக்குள் அவதியுறும் சகோதர சமூகத்தையும், முஸலிம்களின் முதல் கிப்லாவையும் மீட்டு எடுக்க முடியாதளவு அரபுலகின் பிராந்திய அரசியலால் இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் பின்னடைந்து வருகிறது.

அரபு நாடுகளோடு சிறந்த நண்பனாக ஒட்டி உறவாடும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு இராணுவ நிதி உதவிகளை அளித்து வருகிறது. அமெரிக்காவின் அதிகபட்ச நிதியுதவியை பெறும் நாடுகளில் இஸரேல் முதலிடம் வகிக்கின்றது.

காஸாவிலும் மேற்குக் கரையிலும் யூதக் குடியிருப்புகளை அமைப்பதற்கு அமெரிக்க நிதியே பயன்படுகிறது. இது விடயத்தில் எவ்வித எதிர்ப்பையும் காட்டாத அரபு நாடுகள் போலியாக பலஸ்தீன் விடுதலை தொடர்பாக மறு பக்கம் பேசிக்கொண்டும் இருக்கின்றன.

அல்லது தனது பணத்தினால் போஷிக்கப்படும் பிற நாடுகளில் இயங்கும் தமது இயக்கங்களை வைத்து பேச வைக்கின்றன. அரபுலகத்திற்கு உண்மையான ஒரு தேவையிருந்தால் காஸாவிற்கு எதிரான இந்த அடக்கு முறையை இலகுவாக தீர்க்கலாம் .

இஸ்ரேலின் நண்பனாகவும் பாதுகாவலனாகவும் அமெரிக்கா இருக்கிறது. அமெரிக்காவின் நண்பர்களாக அரபு நாடுகள் இருக்கின்றன.

இந்த நட்பை பிரயோகித்து இந்த அடக்கு முறைக்கு ஒரு முடிவைக் கொண்டு வரலாம். அரபுலகம் அதற்கு முன் வராததன் காரணம் என்ன? என்று சிந்திப்பது எமது கடமையாகின்றது.

பலஸ்தீன் விடயத்தில் உருப்படியாக எதுவும் செய்யாத இந்த அரபு நாடுகள்
இலங்கையிலும், பிற நாடுகளில் தமது “ ஏஜன்ட் ” களான இயக்கங்களை வைத்து இஸ்ரேலுக்கு எதிராக பெயரளவில் குரல் கொடுக்க துாண்டியும் வருகின்றன.

முஸ்லிம் சமூகத்தில் தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவே ஊடகங்கள் மூலம் பெயரளவிலான பலஸ்தீன் மீதான அனுதாபத்தை இந்த இயக்கங்கள் பதித்து வருகின்றன.

தமது அரபு எஜமானர்களுக்கும் எதிரிகளுக்கும் உள்ள நட்பை மூடி மறைக்கும் ஓர் அரசியலாகவே இந்த பலஸ்தீன் அனுதாப பிரசாரம் இந்த இயக்கங்களால் ஊடகங்களில் முடுக்கிவிடப்பட்டுக்கொண்டிருக்கிறது.

அண்மையில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் இத்தகைய அரபு பணத்தில் செயற்படும் இயக்கமொன்றின் பிரதிதிதி ஒருவர் பலஸ்தீன் மக்களின் பரிதாபத்தை சொல்லி அழுது வடித்துக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சி முடிய அவரோடு தொடர்பு கொண்டு அவரோடு கதைத்தேன்.

நான் அவரிடம் “ இந்த பலஸ்தீன் பிரச்சினையை இலகுவாக தீர்க்க ஒரு வழி இருக்கிறது. இஸ்ரேலின் அக்கிரமத்தை வானொலியில் சொல்ல உங்களுக்கு பணம் தரும் அரபு நாடுகள் அமெரிக்காவோடு மிகவும் நட்பாக இருக்கின்றன. அமெரிக்கா இஸ்ரேலோடு நட்பாக இருக்கிறது. ஆக, இஸ்ரேல், அமெரிக்கா, அரபு நாடுகள் என்ற மூன்று தரப்பும் நட்பு என்ற வகையில் ஓரணியில் நிற்கின்றன. இந்த நட்பை பயன்படுத்தி பலஸ்தீன் பிரச்சினையை இலகுவாக தீர்க்க முடியுமே?” என்று நான் கேட்டேன்.

அதற்கு அவர் திக்கித் திக்கி “ஆம் அதுவும் சரிதான் ” என்று எனக்கு பதில் தந்தார்.

பிரச்சினையின் உண்மையான பக்கத்தைக் புரிந்து கொள்ளாமல் ஏகாதிபத்தியத்திற்கு துணைபோகும் மத்திய கிழக்கின் அரசியலை இஸ்லாம் என்ற போர்வையில் பற்றிக்கொண்டிருக்கும் இந்த இயக்கங்கள், வேறு ஒரு சக்தியின் நிகழ்ச்சி நிரலுக்கும், பணத்திற்கும் தொழிற் படும் பாமரத்தனத்தையே இது படம் பிடித்துக்காட்டுகிறது.

இவர்களால் எந்த இலக்கையும், வெற்றியையும் அடைய முடியாமல் போனதற்கு அடிப்படைக் காரணம் இதுவாகத்தான் இருக்கிறது.

இன்று, அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டு காஸா மக்கள் சிறைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

பட்டினியால் வாடும் ஒரு பலஸ்தீன் சகோதரனுக்கு பலாத்காரமாக உள்நுழைந்து ஒரு பாண் துண்டை கொடுப்பதற்கு தைரிமில்லாத கோழைகளாக நாங்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றோம்.

2009 ஜனவரியில் முடிவடையவிருந்த மஹ்மூத் அப்பாஸின் ஜனாதிபதி பதவியை நீடித்து வைக்கும் மறைமுக செயற்பாடாகவும் , ஹமாஸின் அரவணைப்பிலிருந்து பலஸ்தீனை பிரித்தெடுக்கும் சூழ்ச்சியின் ஒரு வடிவமாகவே காஸா ஆக்கிரமிப்பு போர் 2008 டிஸம்பர் 27ம் திகதி தொடுக்கப்பட்டது.

பலஸ்தீன் மக்களை யூதர்கள் கொத்து கொத்தாய் கொன்று குவிப்பது எப்படி அநியாயமோ அதே போல் அந்த கொலைகளைப் பார்த்து அரபு நாடுகள் அமைதியாய் இருப்பது அதைவிட அநியாயமாகும்.

இன்று இராணுவ ரீதியாக இஸ்ரேலை வெல்வதை விட முஸ்லிம் உம்மத்திற்கெதிராக எதிரிகளால் வடிவமைக்கப்பட்டிருக்கும் சதியின் இரகசியத்தை அறிந்து கொள்வது காலத்தின் தேவையாகும்.

சுமார் 1500 பேரை பலியெடுத்த அந்த ஆக்கிரமிப்பின் காயங்களிலிருந்து இன்றும் இரத்தம் கசிந்துக்கொண்டிருக்கிறது.

கண்ணீர் வடிந்துக் கொண்டிருக்கிறது.



Tuesday, 3 November 2009

ஹராத்தை ஹலாலாக்கும்.......ஜாஹிலிய்யத்திற்கு கை கொடுக்கிறது ஜம்இய்யதுல் உலமா!





அமெரிக்கா ஏகாதிபத்தியம் எங்களை ஆக்கிரமிக்கிறது…
ஜாஹிலிய்யத்திற்கு கை கொடுக்கிறது ஜம்இய்யதுல் உலமா!

ஜம்இய்யதுல் உலமா என்ற இலங்கையின் மார்க்க வல்லுனர்களிள் சபை தொடர்பாக பல சர்ச்சைகள் சமூகத்தில் எழுந்து வருகின்றன. அண்மைக்காலமாக அது வழங்கி வரும் மார்க்கத் தீர்ப்பு ஹராத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக ஹராத்தை இலகுவாக்கக் கூடிய, ஹராத்தை நெருங்கக் கூடிய ஒரு சூழ்நிலையை தோற்றுவித்திருக்கிறது.

இது வழங்கும் ஹலால் பத்வா ஹராம் பற்றிய அச்சத்தை சமூகத்தில் குறைத்து வருகிறது.

Tuesday, 15 September 2009

எழுந்துக் கொண்டிருக்கும் பள்ளிவாசல்களும் விழுந்துக்கொண்டிருக்கும் பள்ளிக்கூடங்களும்




பள்ளிவாசல்கள் பளிங்குக் கற்களால் மிளிர்ந்துக்கொண்டிருக்கின்றன. பலமாடிக்கட்டிடங்களாய் விண்ணை எட்ட வளர்ந்துக்கொண்டிருக்கின்றன. பள்ளிவாசல்களின் வளர்ச்சி முஸ்லிம்கள் மனதில் ஆனந்தத்தை அள்ளி விதைத்துக் கொண்டிருக்கின்றது.தனவந்தர்கள் பள்ளிவாசல்கள் கட்ட வாரி வாரி வழங்குகிறார்கள்.

பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு வெளிநாட்டு பணம் கூட கோடிக்கணக்கில் வந்து குவிந்துக்கொண்டிருக்கிறது. தெருவிற்கு இரண்டு பள்ளிவாசல்கள் அல்லது மூன்று பள்ளிவாசல்கள் என்றும் முளைத்துக்கொண்டிருக்கின்றன். இது நகரத்தின் நிலை. கிராமமப் புறங்களிலும் தொழுகைக்கு ஆள் இல்லாவிட்டாலும் பள்ளிவாசல்கள் மட்டும் பெரிதாக கட்டப்படுகின்றன. காலாலகாலமாய் ஒரு பள்ளிவாசலின் கட்டுக்கோப்பில் வாழ்ந்தவர்க்ள் பல பள்ளிவாசல்களாய் பிரிந்தும் நிற்கிறார்கள். கொள்கை ரீதியலான் பிரிவினை கொடிகட்டிப் பறந்துக்கொண்டிருக்கிறது.

பள்ளிவாசல்கள் இப்படி எழுந்து வரும்போது முஸ்லிம் பாடசாலைகள் பின்தங்கியே நிற்கின்றன. கல்வி தொடர்பான முஸ்லிம்களின் வரலாறு கசப்பானதாகவே இருந்து வருகிறது. காலா காலமாய் முஸ்லிம்கள் கல்வியில் மிகவும் பின் தங்கியவர்களாகவே இருக்கின்றார்கள்.

Tuesday, 1 September 2009

ஸக்காத்தின் வீழ்ச்சியும் உழ்ஹிய்யாவின் எழுச்சியும்


ஸக்காத்தின் வீழ்ச்சியும்
உழ்ஹிய்யாவின் எழுச்சியும்

ஸக்காத் ஏழை வரி இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்று.

ஸக்காத் இஸ்லாம் முன்வைக்கும் ஒரு மகத்தான பொருளாதார திட்டமும் கூட. அல்குர்அன் தொழுகையைப் பற்றி பேசும் அனேக இடங்களில் ஸக்காத் பற்றியும் பேசுகிறது.

ஸக்காத் எற்றத்தாழ்வற்ற ஒரு சமுதாயத்திற்கு அத்திவாரமாகின்றது. குர்ஆனிய சமூகமொன்றில் ஸக்காத் பொருளாதார பலத்திற்கு துணையாக நிற்கிறது.

இன்றைய தஃவா (?) தளத்தில் ஒரு பேசு பொருளாக மட்டும் மாற்றப்பட்டிருக்கும் ஸக்காத்தின் நிலையைப் பற்றி நாங்கள் பேசியே ஆக வேண்டும். ஸக்காத்தின் உயிரோட்டத்தைச் சிதைத்து, சில்லரை காசுகளில் சங்கமமாகும் ஒரு சடங்காக அது இடம்பெற்று வருகிறது. வெறுமனே உச்சரிக்கப்படுகின்ற ஒரு சொல்லாக மட்டுமே அது உலா வந்துக் கொண்டிருக்கிறது.

ஸக்காத்தின் இந்த பின்னடைவான நிலைக்கு அமெரிக்க பூகோள ஏகாதிபத்திய அரசியலே காரணமாகியிருக்கிறது, அந்த அரசியல் தாக்கத்தை செலுத்தியிருக்கிறது.

அந்த அமெரிக்க அரசியல் சஊதி ஆன்மீகம் ஊடாக எங்கள் உள்ளங்களுக்குள் இறங்கிக்கொண்டிருக்கிறது. சஊதி சார்பு இஸ்லாமிய இயக்கங்கள் இந்த வேலையை கச்சிதமாக நிறைவேற்றியும் வருகின்றன. கருத்தாடலோடு மட்டும் ஸக்காத்தை கட்டுப்படுத்தி வைக்கும் அமெரிக்க சஊதி திட்டத்திற்கு இந்த இயக்கங்கள் உறுதுணையாய் நின்று உதவியும் புரிகின்றன.

ஸக்காத்தை கட்டுப்படுத்துவதால் அமெரிக்காவுக்கு என்ன லாபம்? அமெரிக்காவுக்கும் ஸக்காத்திற்கும் என்ன தொடர்பு? என்று கூட நீங்கள் கேட்கலாம்.

ஸக்காத் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வை சரிசெய்கின்ற சரியான மருந்து என்பதை நாங்கள் மறந்து போயிருக்கிறோம். ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஸக்காத்தின் வளர்ச்சி வட்டியில் இயங்கும் தனது வல்லாதிக்கத்தை அழிக்க வல்லது என்பதை அறிந்து செயற்படகிறது.

வட்டியையும், வறுமையையும் ஒழிக்கும் திட்டத்தை ஸக்காத் தனக்குள் புதைத்து வைத்துள்ள பொருளாதார மந்திரமாகும்.

உலகிலேயே இரண்டு பொருளாதாரங்கள் இருக்கின்றன.

ஒன்று வட்டியை அடிப்படையாக வைத்து இயங்குகின்ற முதலாளித்துவ பொருளாதாரம்.

மற்றையது வட்டியில்லாத மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய பொருளாதாரம்.

வட்டியின் பொருளாதாரத்திற்கு அடையாளமே அமெரிக்கா தான்!
வட்டிக்கு கடன்கொடுப்பதும், ஆயுதம் விற்பதும் தான் அமெரிக்காவின் அடிப்படை ஆதாய மார்க்கங்கள்.

அமெரிக்காவின் வட்டி பொருளாதாரத்திற்கு எதிரான கொள்கை உலகில் இஸ்லாம் ஒன்று மட்டுமே! அமெரிக்க பொருளாதாரம் உலகை ஆக்கிரமிக்க வேண்டுமானால், வட்டியை எதிர்க்கின்ற இஸ்லாமிய பொருளாதாரம் உலகில் நின்றும் மறைந்து விட வேண்டும்.

இஸ்லாத்திற்கு எதிரான அமெரிக்க போக்கிற்கு மறைமுக காரணி இதுவும்தான்.

யுத்தம் செய்து மனிதர்களை அழிக்கலாம். ஆனால் ஒரு கொள்கையை யுத்தத்தால் அழிக்க முடியாது. கூட்டாளி ஆகி அந்தக் கொள்கையை கலங்கப்படுத்த முடியும். இன்று சஊதியை கூட்டாளியாக்கி அந்த வேலையை அமெரிக்கா செம்மையாக செய்து வருகிறது.

இஸ்லாம் வட்டியை சாடுகிறது. வட்டியை எதிர்க்கிறது! வட்டியை உலகிலிருந்து ஒழிக்க அறைகூவல் விடுகிறது.

வட்டிக்கு எதிரான இஸ்லாத்தின் இந்த அறைகூவல்,

அமெரிக்க பொருளாதாரத்திற்கு எதிரான அறைகூவல் என்பதையும் அதன் பொருளாதாரத்திற்கு விழுகின்ற அடி என்பதையும் அமெரிக்கா நன்கு உணர்ந்தே வைத்திருக்கிறது.

இஸ்லாம் வட்டிக்கு எதிரான அறைகூவலை ஸக்காத் என்ற புனித கடமையை மையப்படுத்தியே மும்மொழிகிறது.

அமெரிக்கா தனது வட்டிக்கு எதிரான சவாலாக ஸக்காத்தை கணிக்கிறது. அந்த வகையில் ஸக்காத்தை ஊமையாக்கும் செயற்றிட்டத்தை சுஊதியையும் முஸ்லிம்களை வைத்தே அது செயற்படுத்தியும் வருகிறது.

அமெரிக்கா தனது நேச நாடுகளான சஊதி, குவைத், கதார் போன்ற நாடுகளை பயன்படுத்தி எப்படி இதை நிறைவேற்றுகிறது என்பதை இனி பார்ப்போம்.

சின்ன சின்ன முரண்பாடுகளையெல்லாம் இயக்கங்காக மாற்றி பணம் கொடுத்து வளர்க்கும் அரபு நாடுகள் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஸக்காத்தைப் பற்றி மூச்சு விடாமல் இருப்பதின் இரகசியம் என்ன?

ஸக்காத்தை உயிர்ப்பிக்க இதுவரை அவர்கள் என்ன செய்திருக்கின்றார்கள்? எல்லோரும் ஸக்காத்தை வாய்ப்பேச்சோடு மட்டுப்படுத்தியிருப்பதைதானே பார்க்கிறோம்?

சுன்னத்தான விடயங்களுக்காக தனித்தனி பள்ளிவாசல் கட்டி பிரிந்துபோக கற்றுக்கொடுப்பவர்கள் பர்ளான ஸக்காத் விடயத்தில் மௌனமாக இருப்பதன் காரணம் என்ன?

ஹஜ் காலத்தில் சுன்னத்தான உழ்ஹிய்யா கடமைக்கு கோடிக்கணக்கான பணத்தை இலங்கையில் கொட்டுபவர்கள் பர்ளான ஸக்காத் பணத்தை மடடும் ஏன் கோடிக்கணக்கில் கொட்ட மறுக்கின்றார்கள்?

அதன் அந்தரங்கம் என்ன?

வட்டிக்காக வாழும் அமெரிக்க ஏகாதிபத்தியமும், வட்டியை நிராகரிக்கும் இஸ்லாமும் இணைபிரியா நண்பர்களாய் வாழவே முடியாதல்லவா?

அதாவது வட்டியும் ஸக்காத்தும் ஒன்றுக்கொன்று முரணானவை ஒன்று அல்லாஹ்வால் வெறுக்கப்பட்டது. மற்றையது அல்லாஹ்வால் நேசிக்ப்பட்டது.

இன்று அல்லாஹ்வால் வெறுக்கப்பட்டதும், அல்லாஹ்வால் நேசிக்கப்பட்டதும் இணைபிரியா நண்பர்களாக இருக்கும் துர்பாக்கியத்தை இவ்வுலகில் நாம் கண்டுவருகிறொம்.

அதாவது இரண்டு துருவங்களான அமெரிக்காவும் சஊதியும் ஒன்றோடொன்று உறவாடி மகிழ்கின்றன. ஒன்றுக்கொன்று உறுதுணையாய் இருக்கின்றன.

இன்று இஸ்லாமும் வட்டியும் (சஊதியும், அமெரிக்காவும்) வாஞ்சையோடு வாழும் நிலையை நாங்கள் காண்கின்றோம்.

இப்போது விடயத்திற்கு வருவோம்

ஷிர்க், பித்அத் எதிர்ப்பு இயக்கங்களுக்கு கோடிக்கணக்கான பணத்தை இந்த அரபு நாடுகள் அள்ளி வழங்கி வருவதை நீங்கள் அறிவீர்கள்.

சுன்னத்துகளை ஹயாத்தாக்குங்கள், பித்அத்களை ஒழித்துக்கட்டுங்கள் என்ற போர்வையில் பள்ளிவாசல்களைக் கட்டிக்கொடுப்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
சுருக்கமாக சொன்னால் பித்அத்தை எதிர்க்க இயக்கம் இருக்கிறது. ஸக்காத்தை வளர்க்க இயக்கம் இல்லை.

ஸக்காத்தை பெயரளவில் பேசும் இயக்கத்திடம் வேலைத்திட்டம் இல்லை. இந்த இயக்கங்களிடம் எந்த ஏழையும் பிரயோசனம் பட்டதும் இல்லை. ஒரு கூட்ட்ம் ஸக்காத்தை மறைத்து வாழ்கிறது . மறு கூட்டம் ஸக்காத்தை பெற்று அது வாழ்கிறது. இதற்கு சிற்ந்த உதாரணமாக இலங்கையிலுள்ள ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தை குறிப்பிட முடியும். ஸக்காத்தை கூட்டாக கொடுங்கள் கூட்டாக கொடுங்கள் என்று அரை நுாற்றாண்டுகளுக்கு மேலாக அலறிவந்த இந்த இயக்கம் கூட ஸக்காத் விதியானோர் உதவிக்கு விண்ணப்பித்தபோது கூட ஸக்காத்தை கொடுக்க மறுத்து வருகிறது. இதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது.

இந்த சதியை இரண்டு விதமாக பார்க்கலாம்

ஒன்று ஸக்காத்தை வேறு பிரச்சினைகளை (ஷிர்க், பித்அத்) மண்டையில் போட்டு மறைத்து விடுவது

அடுத்தது காலா காலமாக ஸக்காத் பற்றியும், கூட்டு ஸக்காத் பற்றியும் பேசியவர்களை செயற்படாமல் வைப்பது. சேர்த்த பணத்தையும் ஏழைகளுக்கு கொடுக்க மறுப்பது.

அல்லாஹ்வின் கடமையை இருட்டடிப்பு செய்யும் இந்த அமைப்புகள் சஊதி, ஸீ.ஐ.ஏ சதி வலையில் தாம் சிக்குண்டு இருப்பதை புரியாமல் இருக்கின்றன.
புரியாமல் இருப்பதாய் நடிக்கின்றன.

பாருங்கள்! இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஸக்காத்தை ஒழுங்கான முறையில் நிறைவேற்றுவதற்கு, உயிராக்குவதற்கு, செயற்படுத்துவதற்கு எந்த அமைப்பும் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டதே! அப்படி இருந்திருந்தால ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஸக்காத்தைப் பற்றி பேசி வந்த இயக்கங்கள் எந்த இலக்கையும் அடையாமல் இளிச்ச வாயர்களாய் இருந்திருக்க முடியாதல்லவா? உண்மையை இனி நாங்கள் ஏற்கத்தானே வேண்டும்?

ஸக்காத்தை உயிராக்கும் அமைப்புகளை உருவாக்குவதற்கு அரபு பணமும், அமெரிக்காவும் தயராக இல்லை. பெயரளவில் அரபு நாட்டிலிருந்து வரும் சொற்ப ஸக்காத் பணத்தை பெயரளவில் இந்த இயக்கங்கள் பகிர்வதாக பத்திரிகையில் செய்திகளும் வருகின்றன. பிச்சைக் காசாக வரும் அந்த சொச்சப்பணத்தால் சமூகத்தின் பாரிய குறைகளை நிவர்த்திக்க முடியுமா?

இலங்கைச் சமூகத்தில ஸக்காத்தின் தேவை அதிகம் இருக்கிறது. அரபுகள் இன்று கோடிக்கணக்கான பணத்தை ஹஜ் கால உழ்ஹிய்யா என்ற போர்வையில் இலங்கைக்கு அள்ளி இரைத்து வருகின்றனர். வருடமொன்றுக்கு இலங்கைக்கு வரும் பணம் சுமார் பத்து கோடிகள் என்று மதிப்பிடப்படுகின்றது. (இதன் உண்மையான மதிப்பீட்டை எந்த இயக்கமும் வெளியே அறிவிக்காதததால் மதிப்பிடுவதில் சிரமம் இருந்தாலும் ஊர்வாரியான ஒவ்வொரு சஊதி நிதியில் வாழும் இயக்கங்களும் செலவிடும் மாடுகளின் தொகையை வைத்து இப்படி கணிப்பிட முடியும்)

வறுமையில் பொருளாதார கஷ்டங்களுக்குள் வாடும் முஸ்லிம்கள் அதிகம் பேர் வாழும் இலங்கை நாட்டில், பிள்ளைகள் கற்பதற்கு ஒழுங்கான பாடசாலைகள் இல்லாத இந்த சமூகத்தில், ரமழான் நோன்பை நோற்று விட்டு பெருநாள் கொண்டாடுவதற்காக வட்டிக்கடையில் தனது சிறிய தங்க ஆபரணத்தை வைத்து பணம் பெற காத்திருக்கின்ற முஸ்லிம்கள் வாழும் இந்த சமூகத்திற்கு உழ்ஹிய்யா எதைத்தான் சாதிக்கப்போகின்றது.

ஸக்காத்தை முற்றாக மறந்து, மறைத்து வாழும் இந்த சஊதி இயக்கங்கள், இன்று போட்டி போட்டுக் கொண்டு தமது எஜமானர்களின் ஆணைப்படி உழ்ஹிய்யா பணியில் மும்முரமாக ஈடுபாடு காட்டுகின்றன. சில இயக்கங்கள் தமது பெயர் பொறிக்கப்பட்ட பைகளில் இறைச்சியை போட்டு பெயர் பொறிக்கப்பட்ட T Shirt களோடு ஊரை வலம் வருவதை பெருமையாக கருதுகின்றன.

பர்ளான ஸக்காத் கடமையை புறந்தள்ளி விட்டு இந்த இயக்கங்கள் உழ்ஹிய்யாவை பெருமையாக பெரும் பணியாக கருதி பங்கிட்டு திரிவதன் பின்னணி என்ன? ஸக்காத்தை மறைத்து மாற்றீடாக உழ்ஹிய்யாவை முன்வைக்கும் சதியின் வெளிப்பாடே இந்த நாடகம்.

அதுவும் பத்துக்கோடிக்கு மேல் இலங்கை வரும் பணம் பட்டினில் சாவும் எத்தியோப்பியா சோமாலியாவிற்கு செல்லாமல் இலங்கைக்கு வருவதன் இரகசியம் என்ன?


உழ்ஹிய்யா என்ற சுன்னத்தான அமலை குறையாக பார்ப்பதாக யாரும் இங்கு கணிக்கக் கூடாது. மாடுகளை அறுக்க கோடியாய் கொட்டும் அரபிகள் ஏன் தமது ஸக்காத் பணத்தை இலங்கைக்கு வழங்குகிறார்கள் இல்லை. பட்டினிச் சாவை எதிர்கொள்ளும் எத்தியோப்பியா, சோமாலியா போன்ற இதர நாடுகளுக்கு இந்த உழ்ஹிய்யா இறைச்சியை அனுப்பி விட்டு, ஸக்காத்தை இலங்கை மக்களுக்கு வழங்கினால் அந்தப்பணத்தினால் ஏழைகள் பிரயோசனம் படலாமே!

சரி, சொந்த நாட்டில் கிடைக்கும் ஸக்காத் பணத்தைக் கூட ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்காத சில இயக்கங்கள் உழ்ஹிய்யாவை மட்டும் தடபுடலாக செய்து வருவதைப்பார்த்து சந்தேகம்தான் வருகிறது.

அண்மைக்காலமாக இலங்கையில் ஸக்காத்தை மறைத்து விட்டு எழுச்சி பெற்றுவரும் உழ்ஹிய்யாவில் மறைந்திருக்கும் ஓர் அரசியலை விளக்கவே நான் மேலே சில தகவல்களை தந்தேன்.

இலங்கை ஒரு பௌத்த நாடு அணை்மைக்காலமாக முஸ்லிம்கள் மத ரீதியிலான சில பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தும் வருகின்றார்கள். மாடு அறுப்பது தொடர்பாக பிரச்சினைகள் நாளுக்கு நாள் கூர்மையடைந்து வருகின்றன. ஹஜ்பெருநாளைத் தொடர்ந்து வருகின்ற உழ்ஹிய்யா தினம் பௌத்தர்களின் பௌர்ணமி தினத்தோடு மிக நெருங்கியே நிகழ்கிறது. இந்த நெருப்பு ஒருநாள் பற்றத்தான் போகிறது.

இலங்கை முஸ்லிம்கள் தனது சொந்த செலவில் செய்யும் உழ்ஹிய்யா கடமை ஆராவாரம் இல்லாமல் அடக்கமாகவே கடந்த காலங்களில் இடம் பெற்றும் வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. ஏனைய மதத்தவர் அறியாதவாறு அடக்கமாக அவை நிறைவேற்றப்ப்பட்டன.

ஆனால் உழ்ஹிய்யாவிற்காக வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான பணமும், நாடு பூராக மாடு தேடி ஓடுகின்ற இந்த இயக்கங்களின் வேகமும் பௌத்த முஸ்லிம் உறவுகளில் ஒரு அதிர்வை ஏற்படுத்தி வருவதை சிங்கள ஊடகங்கள் சொல்லும் தகவல்களில்
புரியக் கூடியதாய் இருக்கிறது. சில வேளை பௌத்த முஸ்லிம் மோதல் ஒன்றுக்கான சர்வதேசத்தின் சதியாகக கூட இந்த சஊதி உழ்ஹிய்யாவை சொல்லி வைக்கலாம். பௌர்ணமிக்கும் ஹஜ்ஜுப் பெருநாளுக்கும் உள்ள நெருக்கத்தைப்போல், இனமுறுகலும் நெருங்கி வருதாக எனக்குப் படுகிறது.

உழ்ஹிய்யா இறைச்சியை விட இலங்கைக்குத் தேவை அரபுகளின் சதகாவும், ஸக்காத்தும் தான். கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாய்களை மாட்டை அறுத்தே முடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தோடு உழ்ஹிய்யா பணம் வருகிறது.

பசித்த சோமாலியனுக்கு துப்பாக்கிகளையும், வீடு, வர்த்தகம்,பாடசாலை இல்லாதவனுக்கு, கடனில் வாழ்பவனுக்கு இறைச்சியையும் கொடுக்கும் இந்த சர்வதேச சதியை முடிவுக்கு கொண்டு வர முஸ்லிம்தான் முன்வர வேண்டும்.

ஸக்காத்தை உயிராக்குவதற்கு தடையாய் நிற்கும் அத்தனை சதி முயற்சிகளையும் தகர்த்து எறிவது முஸ்லிம்கள் மீதுள்ள கட்டாயக் கடமையாகும்.

இந்த பதிவு தொடர்பாக உங்கள் கருத்தை (ஆங்கிலம் அல்லது தமிழில்) ஓரிரு வரிகளாவது பதியுங்கள்!

நன்றி!

Sunday, 16 August 2009

ஜுன்துல்லாஹ் ஹமாஸ் மோதல் மத்திய கிழக்கில் மற்றுமொரு பொறி!


ஜுன்த் அன்ஸாருல்லாஹ் - ஹமாஸ் மோதல்
மத்திய கிழக்கில் மற்றுமொரு பொறி!

பலஸ்தீனின் ரபாஹ் நகரத்தில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் போது காஸா பிராந்தியத்தை “ காஸா அமீரகமாக” (Gaza Emirate) பிரகடனப்படத்திய ஜுன்து அன்ஸாருல்லாஹ அமைப்பிற்கும், ஹமாஸின் பொலிஸ் காவல் துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில், ஜுன்த் அன்ஸாருல்லாஹ் அமைப்பின் தலைவராக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட லத்திப் மூஸாவும் மேலும் 23 பேரும் கொல்லப்பட்டனர். இதில் 6 பேர் ஹமாஸ் பொலிஸ் பிரிவைச் சார்ந்தவர்கள்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் போன்று பலஸ்தீனில் திடீரென்று தோன்றிய இந்த ஜுன்த் அன்ஸாருல்லாஹ் அமைப்பு எப்போது? எப்படி வந்தது? இதன் பின்னணி என்ன?

சர்வதேச ஊடகங்களில் இந்த செய்தி வந்த போது எல்லோருக்கும் ஏறபட்ட சந்தேகம் இது.

2006ம் ஆண்டு பலஸ்தீனில் நடைபெற்ற அதன் அதிகார சபைக்கான தேர்தலில் மஹ்மூத் அப்பாஸின் பத்தாஹ் இயக்கம் படுதோல்வியைச் சந்தித்தது. ஹமாஸ் இயக்கம் அமோக வெற்றியைப் பெற்றது.

பாராளுமன்றத்தின் அதிக ஆசனங்கள் ஹமாஸின் கைக்குள் வந்தது. ஆயுதப் போராட்டத்தில் தன்னை வளர்த்துக்கொண்டு தேர்தலுக்கு முகம் கொடுத்தது ஹமாஸ் இயக்கம்.

ஹமாஸ் மக்கள் ஆதரவு இல்லாத இயக்கம் என்ற நிலைப்பாட்டிலிருந்த அமெரிக்காவும், சஊதியும், ஏனைய மேற்குலக நாடுகளும் தமது நிலைப்பாட்டை பலஸ்தீன் மக்கள் தலைகீழாக மாற்றிவிட்டதைக் கண்டு மிரண்டு போயினர்.

பலஸ்தீன் பாராளுமன்றத்தைக் கைப்பற்றிய ஹமாஸுக்கு இஸ்ரேலும், மேற்குலமும் பல நெருக்குதல்களை கொடுத்தன. பொருளாதார தடைகளை திணித்தன. ஹமாஸ் அரசாங்கம் செயலாற்ற முடியாதவாறு முடக்கப்பட்டது.

ஹமாஸின் பலம் வாய்ந்த பிரதேசமாக கருதப்படும் காஸாவை விட்டு விட்டு மேற்குக் கரை தோல்வியடைந்த பத்தாஹ் அமைப்பிற்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது. மேற்குக் கரையை பிரிக்கும் போராட்டத்திற்கு இஸ்ரேல் பகிரங்கமாகவே பத்ததாஹ் அமைப்பிற்கு உதவி ஒத்தாசைகளை வழங்கியது.

மேற்குலக நாடுகளும், இஸ்ரேலும், சஊதி அரேபியாவும் பத்தாஹ் அமைப்பிற்கு தமது ஆதரைவை வெளிப்படையாகவே தெரிவித்தன.

நெருக்குதல்களுடன் காஸாவில் தனது நிர்வாக கட்டமைப்பை கொண்டு சென்ற ஹமாஸுக்கு யுத்தம் ஒன்றின் மூலம் பாடம் புகட்ட இஸ்ரேல் முயன்றது. ஆயிரக்கணக்கான உயிர்களையும், உடைமைகளையும் அழித்த காஸா யுத்தம் பலஸ்தீன் வரலாற்றில் மிகக்கொடுமையான யுத்ததமாக வர்ணிக்கப்பட்டது.

இஸ்ரேல் செய்த இந்த அநியாய படுகொலைகளை மேற்குலகோடு அமெரிக்காவும் அதன் நேசர்களான சஊதி மற்றும் ஏனைய அரபு நாடுகளும் பார்த்து அங்கீகாரம் வழங்கின.

பொருளாதார தடைகள், அரசியல், பொருளாதார ரீதியிலான நெருக்குதல்கள், எதிர்க்கருத்துள்ள அரசியல்வாதிகளின் இடையூறுகள் அத்தனைக்கும் முகம் கொடுத்த ஹமாஸ் இயக்கம் அரசியல் ரீதியாக எழுச்சி பெற ஆரம்பித்தது.

இத்தருணத்தில்தான் ஜுன்த் அன்ஸாருல்லாஹ என்ற சஊதி, ஸீ.ஐ.ஏ. இணைந்து உருவாக்கிய இந்த புதிய படை கடந்த ஜுன் மாதம் தன் கைவரிசையைக் முதன்முதல் பலஸ்தீனில் காட்ட ஆரம்பிக்கின்றது.

சஊதி சலபி சிந்தனையின் உருவாக்கமாய் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்ட இந்த ஜுன்த் அன்ஸாருல்லாஹ் அமைப்பு, இஸ்லாத்தின் எதிரிகளின் மறைமுக நிதியுதவியோடு இயங்கும் “தௌஹீத்” அமைப்புகளோடு நெருங்கிய தொடர்பையும் வைத்திருந்தது.

இத்தகைய அமைப்புகள் முஸ்லிம் சமூகத்திற்குள்ளேயே உட்கருத்து மோதல்களையும், பிரிவினைகளையும் தோற்றுவிக்கவல்வன. ஒரு நாட்டின் பணத்தைப்பெற்று பல பெயர்களில் பல நாடுகளில் இத்தகைய இயக்கங்கள் இயங்கி வருகின்றன. (அண்மையில் பேருவளையில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு இத்தகைய இயக்கமொன்றின் தூண்டுதலே காரணமாகின)

ஒரே நாட்டின் பணத்தைப் பெற்று பல குழுக்களாக பிரிந்து செயலாற்றும் இவர்கள் அவர்களுக்குள்ளேயே முரண்பாடுகளை வளர்த்துக்கொள்கின்றனர். இன்று சர்வதேச அரசியல் முதல் சாதாரண நிகழ்வுகள் வரை அனைத்திலும் ஆதிக்கஞ் செலுத்தக் கூடியதாக இந்த அமைப்புகள் செயற்பட்டுவருகின்றன.

பணத்தை வீசி முஸ்லிம்களை மூளைச் சலவை செய்யும் இந்த சலபி அமைப்புக்களில் அநேகம் பேர் சிக்கியும் வருகின்றனர்.

இஸ்லாமிய அரசியல் சிந்தனைகளை சீர்குலைப்பது, அநீதிக்கு எதிரான போராட்டங்களை பயங்கரவாதமாய் சித்தரிப்பது, அரச பயங்கரவாதத்தால் போராட்டங்களை நசுக்குவது போன்ற நிகழ்ச்சி நிரல்களை மேற்படி அமைப்புகள் செயற்படுத்தி வருகின்றன.

பலஸ்தீன் தொடர்பான பிரச்சினை கூர்மையடைந்து வரும் இக்கால கட்டத்தில் ஹமாஸ் இயக்கம் அரசியல் சார்ந்த நகர்வாய் தனது செயற்றிட்டங்களை மாற்றி வரும் வேளையில், மத்திய கிழக்கின் தலைவிதி மாற்றம் ஒன்றிற்கான தடயமாக பலஸ்தீன் பிரச்சினை உருவாகி வருவதை விரும்பாத சஊதியும், ஸீ.ஐ.ஏ யும் சேர்ந்து ஜுன்த் அன்ஸாருல்லாஹ்வை உருவாக்கியிருக்கின்றனர்.

விடுதலைக்கான போராட்டத்தை வேறுபக்கம் திசை திருப்பிய சதிகார சக்திகள் தனக்கு கீழ்ப்படிவுள்ள பத்தாஹ் அமைப்பிற்கு மேற்குக் கரையை கொடுத்து விட்டு, காஸாவை கூறு போட வகுத்த வியூகமே இந்த ஜுன்த் அன்ஸாருல்லாஹ் படையாகும். காஸாவில் உருவான இந்தப் பிரச்சினைக்குப் பின்னால் இஸ்ரேலுக்கு ஒரு சன்மானத்தை இந்த ஸலபி இயக்கம் வழங்கியுள்ளது.

சலபி, அல்கைதா சிந்தனைப்போக்கில் உருவான ஜுன்த் அன்ஸாருல்லாஹ் ரபாவில் இப்னு தைமிய்யா (சஊதி ஆதரவு) பள்ளிவாசலை மையமாக வைத்து செயற்பட்டிருக்கிறது. மன்னர்கள் ஆளும் குட்டி குட்டி நாடுகளான அபூதாபி, பஹ்ரைன், துபாய், கதார் போன்ற ஒர்அமீரகமாக காஸாவை பிரகடனப்படுத்தியதிலிருந்து அதன் இலக்கு தெளிவாக தெரிகிறது.

இந்தப் பிரகடனத்தின் மூலம் உயிரோட்டமாக இருக்கும் ஹமாஸின் போராட்டத்தை மலுங்கடிக்கச் செய்யவே இத்தகைய காரியத்தை இந்த அன்ஸாருல்லாஹ செய்திருக்கிறது. காஸாவை பிளவு படுத்துவதன் மூலம் இஸ்ரேலுக்கு நன்மையை ஏற்படுத்த இத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

சஊதியை பின்புலமாக கொண்டு இயங்கும் அத்தனை இயக்கங்களும் பலஸ்தீன் போராட்டத்தை கவனத்திற் கொள்ளாமல் இருப்பவையே.

திடீரென சஊதி பின்புல சக்தியொன்று பலஸ்தீன் போராட்டத்தில் குதித்து பங்கு கேட்டிருப்பதன் மர்மம் என்ன என்பதை ஹமாஸ் இயக்கம் நன்கு உணர்ந்து செயற்பட்டிருக்கிறது.

இஸ்லாமிய அரசு, இஸ்லாமிய கிலாபத் அமெரிக்காவிற்கு எவ்வளவு கசப்பானதோ அதேயளவு சஊதிக்கும் கசப்பானது. அதே போல மத்திய கிழக்கில் தேர்தல் ஜனநாயம் என்ற வாசகங்கள் எல்லாம் சஊதி, அமெரிக்கா இரண்டு நாடுகளுக்கும் அலர்ஜியானது.

ஹமாஸை ஒழிப்பதன் மூலம் அல்லது ஹமாஸுக்கு போட்டிக் குழுவொன்றை இஸ்லாமிய சாயம் பூசி ஏற்படுத்துவதன் மூலம் இந்த மத்திய கிழக்கின் ஜனநாயகம், தேர்தல் என்று வித்திடப்பட்டிருக்கும் ஆட்சி முறையை அடியோடு அழித்து விட சஊதியும் சந்தர்ப்பம் பார்த்து இருக்கிறது.

இலங்கை, இந்தியா, சோமாலியா, ஈராக், பாகிஸ்தான் மற்றும் பலஸ்தீன் வரை பிரித்தாளும் இந்த இயக்கங்களின் செயற்பாடுகள் நீண்டு வருவதை இன்று காணக் கூடியதாக இருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் உஸாமாவின் தலைமையில் சஊதி, அமெரிக்காவின் தேவைக்காக உருவாக்கிய ஜிஹாத் முஸ்லிம் உம்மத்திற்கே பெரிய அழிவுகளையும், அவப்பெயரையும் தேடிக்கொடுத்தது.

பிறகு அல்கைதாவை உருவாக்கியவர்களே அது பயங்கரவாதம் என நாமம் சூட்டி ஆப்கானிஸ்தானை அழித்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆப்கானிஸ்தானில் ஜிஹாதாக அமெரிக்கா முதலீடு செய்ததற்காக இலாபத்தை ஈராக்கைக் கைப்பற்றி அடைந்துக்கொண்டது.

தாலிபான்களை உருவாக்கிய இரகசியத்தை அண்மையில் அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹிலாரி கிளின்டன் பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டுள்ளார். அமெரிக்க வளர்த்த தாலிபான்களோடு இன்று அமெரிக்காவே போராடிக்கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா வகுத்த திட்டம், நீண்ட கால அளவில் முஸ்லிம் நாடுகளைக் கைப்பற்ற அமெரிக்கா வகுத்த அரசியல் வியூகம் என்பதை நாம் இப்போது தெளிவாக விளங்கி வருகிறோம்.

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கை என்ற போர்வையில் ஆப்கானிஸ்தானுக்குள்ளும் பிறகு ஈராக் நாட்டிற்குள்ளும் அத்துமீறி பிரவேசித்த அமெரிக்கா தனது நிகழ்ச்சி நிரலை நேர்த்தியாக அரங்கேற்றியது.

இன்னும் அதன் ஆக்கிரமிப்புப் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது. இத்தகைய உலக ஏகாதிபத்திய அரசை நோக்கிய அமெரிக்காவின் பயணத்திற்கு சஊதி அரேபியா ஆதரவை தொடர்ந்து வழங்கி வருவது மட்டுமல்லாமல், அவ்வப்போது காட்டிக் கொடுக்கும் கைங்கரியத்தையும் அது செய்து வருகிறது.

அமெரிக்கா இஸ்லாமிய உலகிற்கு செய்யும் சதியைப்போலவே சஊதியும் சதி செய்கிறது.

கோடிக்கணக்கான பணத்தை அதன் ஏஜன்டுகளாள தஃவா(?) இயக்கங்களுக்கு கொட்டுவதன் மூலம் அரசியல் சார்ந்த முஸ்லிம் உம்ம்த்தின் சிந்தனையை அது வேறு பக்கம் திசை திருப்பி வருகிறது.

இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற அடைமொழிக்குள் அல்கைதாவை தள்ளிவிட்டு வேடிக்கைப்பார்க்கும் இந்த இரண்டு நாடுகளும் தமக்கு தேவையான போது ஜிஹாத் பத்வா வழங்குவதும், தமக்கு தேவையில்லாத போது ஜிஹாதுக்கு எதிராக பத்வா வழங்குவதும் நடைமுறையாகி மாறியள்ளது.

சஊதி ஸலபி சிந்தனையில் வாழும் இயக்கங்கள் அனைத்தும் ஜிஹாத் தொடர்பான கருத்தியலில் அமெரிக்காவின் நிலைப்பாட்டையே சார்ந்திருக்கின்றன.

பலஸ்தீன் போராட்டம் உலகமே ஏற்றுக்கொண்ட ஒரு போராட்டம். அந்த போராட்டத்தைக் கூட கொச்சைப்படுத்த சஊதி முயன்று வருவதை ஜுன்த் அன்ஸாருல்லாஹவின் வருகை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.

காஸாவில் ஹமாஸ் பலவீனப்படுவதன் வெற்றி இஸ்ரேலுக்குக் கிடைக்கிறது. இஸ்ரேல் மத்திய கிழக்கில் ஆதிக்கம் செய்வத்ன் வெற்றி அமெரிக்காவிற்கு கிடைக்கிறது. அமெரிக்கா மத்திய கிழக்கை ஆக்கிரமிப்பதன் வெற்றி சஊதிக்கு கிடைக்கிறது. சஊதி மன்னராட்சியின் பாதுகாப்பிற்கு கிடைக்கிறது.

சஊதியை பாதுகாக்கும் ஸலபிகள், மறைமுகமாக அமெரிக்காவையும், இஸ்ரேலையும் பாதுகாக்கின்றார்கள்.
என்பது மட்டும் உண்மையிலும் உண்மை!

Wednesday, 12 August 2009

இலங்கையை மற்றுமொரு இரத்த ஆற்றில் குளிப்பாட்டவா இந்த சதி!



இலங்கையை மற்றுமொரு இரத்த ஆற்றில் குளிப்பாட்டவா இந்த சதி!

முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் ஒரு நாடு இலங்கை. சிங்கள பௌத்தர்களை பெரும்பான்மையாகக் கொண்ட இந்நாட்டில் ஹிந்துக்களும், கிறிஸ்த்தவர்களும் கூட சிறுபான்மையினரே.

அண்மையில் பேருவளை பள்ளிவாசல் எரிப்பும் அத்தோடு இடம்பெற்ற படுகொலை தொடர்பான துக்ககரமான செய்தியும் எல்லோரும் அறிந்ததே!

இந்த துக்ககரமான, இலங்கை முஸ்லிம்களை தலைகுனிய வைக்கும் நிகழ்வின் பின்னணியில் பெரியதொரு சதி இருப்பதை எம்மால் புரிந்துகொள்ளக் கூடியதாய் இருக்கிறது.

இந்த நிகழ்வு இடம்பெற முன் கொழும்பிலும் இலங்கையின் ஏனைய பிரதேசங்களிலும் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி இலங்கையில் மதங்களுக்கிடையிலான ஒரு மோதலை உருவாக்கவே ஒட்டப்பட்டது.

நல்லவேளை, பேருவளை சம்பவத்தோடு இரண்டு உயிர்களைப் பலியெடுத்து தமிழ்நாடு தௌஹீத் பிரசாரம் நின்றுபோனது.

என்றுமில்லாதவாறு இனவாதம் அதிகரித்து வரும் காலகட்டத்தில் சிங்களத்திலும், தமிழிலும் ஒட்டப்பட்டிருந்த இந்த சுவரொட்டி ஏனைய மதத்தினருக்கு ஒரு சவாலாக இஸ்லாத்தை முன்வைப்பது போன்றதொரு தொனியை உருவாக்கியிருந்தது.

இதுதான் அந்த சுவரொட்டி

“ இலங்கையில் முதல் தடவையாக பகிரங்க பிரசார மேடை!

அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை!

கீழே தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் இலங்கை என்று பெயரிடப்பட்டிருந்தது.

முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் விடுக்கும் செய்தி!! என்ற வாசகங்களோடு கொழும்பிலும் ஏனைய புற நகர் பகுதிகளிலும் மிகவும் திட்டமிட்டு இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.

சுவரொட்டியில் இந்த தஃவா மேடை(?) இடம்பெறும் நாளோ இடமோ குறிபிடப்பட்டிருக்கவில்லை. அதைத்தொடர்ந்து அடுத்த நாள் வெளிவந்த சிவப்பு நிறத்திலான சுவரொட்டியில் நாளும், இடமும் குறிக்கப்பட்டிருந்தது.

இலங்கை தஃவா(?) வரலாற்றில் முதல் தடவையாக இத்தகைய தஃவா மேடை அமைவதாகவும் இந்த சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பாதுகாக்கும் சஊதி பணத்தில் உயிர் காக்கும் இந்த தஃவாக் இயக்கங்களின் நாய்ச் சண்டையால் நாடே நாறிக்கொண்டிருக்கும் போது...

முஸ்லிம்களுக்குள்ளேயே பிரிவுகளை உருவாக்கி பிரிந்து சிதறிப்போயிருக்கும் போது அவசரமாக சிங்கள மக்களை மையப்படுத்தி ஏன் இந்த தஃவா (?) தேவைப்பட்டது? அதுவும் இநத தஃவாவை முன்னெடுப்பவர்கள் தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத்தினர்.

தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத்திற்கு சிங்கள மக்களுக்கு இஸ்லாத்தைப் போதிக்க ஏன் அவசியம் வந்தது?

தமிழ் நாட்டிலுள்ள எல்லா ஹிந்துக்களுக்கும் இஸ்லாத்தைச் சொல்லி விட்டு அவர்கள் இலங்கைக்கு வந்து விட்டார்களா?

இந்த சுவரொட்டி கூறும் செய்தி என்ன? செய்யப்போகும் தஃவாவின் பின்னணி என்ன?

இலங்கைப் போன்றதொரு பல்லின சமூகங்கள் , பல மதங்கள் உள்ள நாட்டில் இந்த அணுகுமுறை என்ன விபரீதத்தைத் தரப்போகிறது?

சஊதி வஹ்ஹாபிகள் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக கொலைக்களம் ஒன்றை வடிவமைத்து வருகிறார்கள் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

சிங்கள மக்களை சீறியெழ வைத்து, சீண்டிப்பார்த்து இலங்கையை இன்னுமொரு ரணகளத்திற்கு அழைத்துச் செல்லும் இது ஒரு சர்வதேச சதியைத் தவிர வேறில்லை.

ஸீ.ஐ.ஏ யின் நிகழ்ச்சி நிரலை சஊதி ஊடாக அரங்கேற்ற ஆயத்தங்கள் நடைபெறுகிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகும்.

தன்க்கு இஸ்லாம் புரியாமல் அதன் அடிப்படை தெரியாமல் நாளுக்கு ஒரு முடிவை மாற்றி நேற்று சொன்னதை இன்று வாபஸ் வாங்குதும், இன்று சொல்வதை நாளை வாபஸ் வாங்குவதுமாக புத்தி பேதலித்து திரிகின்ற பைத்தியங்களால் முஸ்லிம் சமூகமே திக்குத்தெரியாமல் தட்டுத்தடுமாறி நிற்கும் போது...

மாற்று மதத்தவருக்கு என்ன மந்திர சக்தியாலா நேர்வழியைப் பெற்றுக் கொடுக்கப்பார்க்கின்றனர்?

இஸ்லாத்தின் கொள்கை தொடர்பாக முஸ்லிம்களுக்கள்ளேயே நூற்றுக் கணக்கான பிளவுகளையும், பிரிவுகளையும் வைத்துக்கொண்டு அந்நிய மதத்தினருக்கு இப்படி ஒரு அழைப்பு தேவைதானா?

தௌஹீது பேசித்திரிபவர்களே பல பிரிவுகளாய் பிரிந்து வாய்ச்சணடையிலும், நாய்ச்சண்டையிலும் சிக்கி சமூகம் நாறிக்கொண்டிருக்கும் போது அந்நிய மதத்தினருக்கு இஸ்லாத்தை எத்திவைக்க யாருக்கு அருகதை இருக்கிறது.

ஊருக்கு ஒரு விஹாரை என்று ஒற்றுமையாய் இருக்கும் அவர்களுக்கு, வீதிக்கு பல பள்ளிகளைக் கட்டிக்கொண்டு அடி தடி சச்சரவுகளில் சன்மார்க்கம் பேசுபவனால் சரியான வழிகாட்டல் யாருக்குக் கிடைக்கும்?

சிங்கள மக்களுக்கு இஸ்லாத்தைச் சொல்ல
அரபுப் பணத்திற்கு என்ன அருகதை இருக்கிறது?

பணிப்பெண்ணாய் சஊதி சென்று கண்ணீரோடும், காயத்தோடும் நாடு திரும்பி நிர்க்கதியான சிங்களவர் எத்தனைப் பேர்?


இலங்கையில் வாழும் பெரும்பான்மை சிங்கள சமூகம் அரபு நாடுகளோடு தொடர்புள்ள சமூகம். அவர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக சென்று வருகிறார்கள். பல பெண்கள் சஊதி போன்ற நாடுகளில் தொழில் செய்யப் போய் அரபிகளால் கற்பழிக்கப்பட்டு, சித்திரவதைசெய்யப்பட்டு, ஒழுங்காக ஊதியம் வழங்கப்படாமல், முடமாக்கப்பட்டு தாய் நாடு திரும்புகிறார்கள்.

சிலர் படுகொலைசெய்யப்பட்டு சவப்பெட்டிகளில் சீல் வைத்து அடைக்கப்பட்டு சடலமாக வருகிறார்கள்.

மனித நேயமில்லாத சஊதியின் போலி இஸ்லாத்தை மாற்று மதத்தவர் மாத்திரமல்ல. ஈமான் உள்ள எவனாவது ஏற்பானா?

மனிதநேயம் இல்லாதவர்கள் வாழும் நாடு , இந்த வஹ்ஹாபி மன்னர்கள் ஆளும் நாடு என்பதை சிங்கள மக்களில் அனேகம் பேர் உணர்ந்திருக்கின்றார்கள்.

அநீதி அக்கிரமம் இழைக்கப்பட்ட வீட்டுப்பணிப்பெண்களுக்கு ஆதரவாக மனிதநேயமற்ற இந்த சஊதி மன்னராட்சி எந்த நடவடிக்கையும் இதுவரை எடுத்ததில்லை. தனது நாட்டுக்கு வரும் மனித ஜீவன்களை மிருகத்தை விட கொடுமையான முறையில் நடாத்தும் இவர்கள் இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இஸ்லாமிய பிரசாரம் புரிய பணம் வழங்குகிறார்கள். பள்ளிவாசல் கட்டிக்கொடுக்கின்றார்கள்.

தன்னிடமில்லாத இஸ்லாத்தை இவர்கள் ஏன் ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். சஊதியில் இஸ்லாத்தை வளர்க்க இவர்களால் ஏன் முடியாது?
அதை விடுங்கள்! தனது ஆப்த நண்பனான அமெரிக்காவிற்கு இந்த ஏகத்துவ அழைப்பை விடுக்காமல் சஊதி ஏன் மௌனமாய் இருக்கிறது?

அதில் தான் இரகசியம் இருக்கிறது.

மூன்று தசாப்தங்களாக இரண்டு இனங்களுக்கிடையில் யுத்தம் வெடித்து பலத்த உயிர் உடைமை இழப்பிற்கு பிறகு நாடு நிம்மதியடைந்திருக்கிறது.

முஸ்லிம்களோடு ஒரு முறுகல் நிலையை தோற்றுவிப்பதன் மூலம் மற்றுமொரு ஆயுத விற்பனைக்கான சந்தையை இலங்கையில் உருவாக்க சஊதி வழிசெய்கிறது. அமெரிக்காவிற்கு ஆயுத சந்தையை தயார் படுத்திக் கொடுப்பதில் கடந்த காலங்களில் சஊதிக்கு நிறைய பங்கு இருந்திருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் அது ஆரம்பித்த ஜிஹாத் இதற்கு சிறந்த சான்று! கல்வியறிவில்லாத ஆபகான் மக்களுக்கு ஆயுதங்களை வழங்கி இந்த நாட்டை ரணகளமாக்கிய பெருமை சஊதிக்கும், சீ.ஐ.ஏ இற்கும், பாகிஸ்தானுக்கும், உரித்தானது.

அன்று சஊதி பணத்தில் இயங்கும் இஸ்லாமிய (தஃவா?) இயக்கங்கள் வாஷிங்டன் வழங்கிய ஜிஹாத் பத்வாவை வரிந்து கட்டிக்கொண்டு பிரசாரம் செய்தன.

சமகால முஸ்லிம் உலகின் மீதான அமெரிக்க, மேற்கத்தைய நெருக்குதல்களுக்கு ஆப்கான் ஜிஹாத் களம் அடிப்படையாக மாறியது.

இஸ்லாத்திற்கும் ஆயுதத்திற்கும் இரத்தத்திற்கும் ஒரு தொடர்பை அமெரிக்க சஊதி கூட்டு அரசியல் ஏற்படுத்தி வருகிறது.

பலிகடாவான முஸ்லிம் உம்மத் பரிதவித்து நிற்கிறது.

இலங்கை.. இஸ்லாம்..இரத்தம்
சர்வதேச அரங்கில் நாளைய செய்தி இதுவாக முன், எழுவீர்!
எதிரியின் ந்ண்பன் எதிரியே ஆவான்!

Sunday, 9 August 2009

அதிகரிக்கும் பள்ளிவாசல்களும் அழிக்கப் படும் ஒற்றுமையும்.







அதிகரிக்கும் பள்ளிவாசல்களும்
அழிந்து போகும் ஒற்றுமையும்!

அரபு பணம் இலங்கையில் வந்து குவிந்துக் கொண்டிருக்கிறது. பாதை நெடுகிலும் பள்ளிவாசல்கள் நாளுக்கு நாள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. விரல் ஆட்ட ஒரு பள்ளிவாசல், விரல் நீட்ட ஒரு பள்ளிவாசல், அது அவர்களின் பள்ளிவாசல், இது இவர்களின் பள்ளிவாசல் முஸ்லிம் சமூகம் முரண்பட்டு , பிரச்சினைப் பட்டு, பிரிந்து கிடக்கிறது.

பாவம் பாமர மக்கள் ! இந்த றியால், தீனார் தஃவா காரர்களின் பின்னணி புரியாமல் நடு வீதியில் தட்டுத் தடுமாறி திணறி நின்றுக்கொண்டிருக்கின்றார்கள்.

ஒற்றுமையை உரத்துப் பேசி பேசி ஒருவரின் உதிரத்தை மற்றவர் உறிஞ்சி உறிஞ்சி குடித்துக் கொண்டிருக்கிறார்கள். வஹாபிஸம் என்ற சஊதி, குவைத் மன்னராட்சியை மறைமுகமாய் பாதுகாக்கின்ற சித்தாந்தம் பொது ம்ககளை மட்டுமல்ல அவர்களிடம் பணம் வாங்கும் கூலிப்பட்டாளத்தைக் கூட குறி வைத்து பிரித்துத் தான் வைத்திருக்கிறது.

இலங்கையைப் பொறுத்தவரை தஃவா களத்தில் இருக்கும் தப்லீக் இயக்கத்தை தவிர ஏனைய அத்தனை இயக்கங்களும் இந்த வஹ்ஹாபி பணத்தில் வாழ்ந்துக் கொண்டிருப்பவையே.

தப்லீக் இயக்கம் தனது தஃவா இயக்க செயற்பாட்டில் பாரிய மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்து பொதுவாக நிலவி வருகிறது. ஆனால் தனது சொந்த பணத்தில் தஃவா செய்கின்ற புனிதத் தன்மையை அது என்றும் பேணிப் பாதுகாத்து வ்ந்திருக்கிறது. அது காசு வழங்குபவனுக்கு கைக்கூலியாய் வேலைசெய்ய வேண்டும் என்ற கட்டாயத்திற்கு உட்படாத ஒரு அமைப்பு.

வஹ்ஹாபி பணத்தில் போஷிக்கப்படும் அத்தனை இயக்கங்களும் நாளுக்கு நாள் முரண்பாட்டை தமக்கிடையே வளர்த்து முரண்பட்டு பிரிந்து செல்வதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

வஹ்ஹாபிப் பணம் வருவதால் இங்கு இஸ்லாம் வளர வில்லை.
வன்முறை வளர்ந்திருக்கிறது. ஒற்றுமை குறைந்திருக்கிறது.

இவையெல்லாம் உருவானது தனக்கென தனித்தனி பள்ளிவாசல் உருவாவதன் பின்னால் தான் என்ற உண்மையை நாம் பலாத்கதரமாகவே மறந்தும் இரு்க்கிறோம். தனித்தனி பள்ளிவாசலின் உருவாக்கம் ஒற்றுமையை தவிடுபொடியாக்கி இருக்கிறது.

ஒற்றுமையை சீர்குலைக்கும் தனித் தனி பள்ளிவாசல் கலாசாரத்தை இஸ்லாம் அங்கீகரிக்கின்றதா?

குறைஷிக் காபிர்களால் றசூலுல்லாஹ்விற்கு கஃபாவில் வணங்க தடை வந்த போது மக்காவில் வாழத் தடை வந்த போது நபி (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள்?

தனது கொள்கையை மாற்றிக்கொண்டு, கஃபாவை அபூஜஹ்லுக்கும், அபூலஹபுக்கும் கொடுத்துவிட்டு மதீனாவில் கஃபாவைப்போல் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டிக்கொண்டு மறைந்து வாழ்ந்திருக்கலாமே? அப்படி வாழ்ந்திருந்தால் மக்கா வெற்றி என்று ஒன்று வரலாற்றுக்கு வந்திருக்குமா?

றஸுலுல்லாஹ்வின் தஃவா இஸ்லாத்தின் கொடியின் கீழ், ஒரே தலைமைத்துவத்தின் அனைவரையும் ஒன்று திரட்டுவதாகவே இருந்தது. அனைத்து கோத்திரங்களையும், குழுக்களைகயும் , கொள்கைகளையும் ஓரணியில் திரட்டி பிரிவினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

பிரிவினையையும் பிரச்சினைகளையும் இல்லாதொழிக்கும் மத்திய நிலையங்களாக மஸஜித்கள் செயலாற்றின.

இன்று நிலைமை தலைகீழாக மாறியிருக்கிது. பிரிவினைக்காகவே பள்ளிவாசல்கள் உருவாகின்றன. உருவாக்கப்படுகின்றன.

“அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாக பற்றிப்பிடியுங்கள். பிரிந்து விடாதீர்கள்” என்று அல்குர்ஆன் அறைகூவல் விடுகிகிறது. அல்லாஹ்வின் இல்லங்களாலேயே நாங்கள் பிளவு பட்டு நிற்கின்றோம். ஒற்றுமையாய் வாழுங்கள் என்ற அல்லாஹ்வின் அறைகூவலையே நாம் அலட்சியப்படுத்தியிருக்கிறோம்.

பிரிவினைக்காகவே உருவாகின்ற இந்த பள்ளிவாசல்களின் பின்னணி என்னவாக இருக்கும் என இதுவரை யாரும் சிந்திக்காமலேயே இருந்து வருகிறோம்.

தஃவா என்ற போர்வையில் நற்செயல்கள் என்ற போலி முலாம் பூசி வந்து சேர்கின்ற இந்த அரபு பணத்தின் பின்னணி என்ன? என்பதை யாரும் சிந்திக்காமல் விட்டதன் விளைவை இலங்கை முஸ்லிம் சமூகம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

தனத நாட்டில் இஸ்லாத்தைப் பாதுகாக்க முடியாத அரபிகள்,
தனது நாட்டில் மனித நேயத்தைப் பாதுகாக்காத அரபிகள்
எப்படி மற்றைய நாடுகளில் இஸ்லாத்தைப் பாதுகாக்க முடியும்?

இந்த அரபு நாடுகளில் மஸ்ஜித்கள் ஏராளம் இருக்கின்றன. ஆனால் அவர்களிடம் இஸ்லாம் இருக்கின்றதா? அந்த நாட்டுக்கு பயணம் செய்யும் மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இஸ்லாத்தின் மீது ஆர்வம் வரும் அளவிற்கு அவர்களின் வாழ்க்கை இருக்கிறதா? இல்லவே இல்லை.

இஸ்லாத்தின் தாயக பூமியை, அரபு பூமியை, மனித நேயத்தாலும், நீதியாலும், நேர்மையாலும் நிரப்பி அல்லாஹ்வின் தீனை பாதுகாக்க முடியாத இவர்களின் பணத்தால் இலங்கையில் இஸ்லாத்தை வளர்க்க முயல்வது மடமையிலும் மடமையன்றோ.

முஸ்லிம்களையே முட்டி மோத வைப்பதால் இஸ்லாம் எப்படி வளரும்? மாற்று மதத்தவருக்கு இஸ்லாத்தின் மீது அச்சம் அல்லவா ஏற்படும்?ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை உருவாக்கி அமெரிக்காவும் சஊதியும் அதைத்தானே சாதித்தன?

அரபுகள் மடையர்களாக இருக்கலாம், அரபுகளிடமிருந்து பணம் பெறுகின்ற
இஸ்லாமிய இயக்க யாசகர்களும் மடையர்களாக மட்டுமல்ல இஸ்லாத்தின் அடிப்படைக்கே மாறு செய்பவர்களாகவே இருக்கின்றார்கள்.

காரணம், இந்த இயக்கங்கள் அரபு அமெரிக்க செயற்திட்டத்தை தஃவாவின் போர்வையில் மனமுரண்டாக நிறைவேற்றியும் வருகின்றார்கள்.

மற்றும்-
அரபுகள் இஸ்லாத்தின் மீது பற்று வைத்துள்ளதாய் தோற்றப்பாட்டை உருவாக்கும்,

பள்ளிவாசல்கள் கட்டுதல்,
உழ்ஹய்யா கொடுத்தல்,
கிணறு வெட்டுதல்

போன்ற குறுகிய வேலைத்திட்டத்தை தஃவா என்ற அடைமொழிக்குள் சிக்கவைத்து பிரசாரம் செய்யும் அரபுகளின் இந்த செயற்பாட்டுக்கு பின்னணியில் ஓர் அரசியல் மறைந்து இருக்கிறது.

அது அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலுக்குள் சிறைபட்டு நிற்கும் சஊதி மன்னராட்சியை பாதுகாக்கும் மகத்தான பணியை செய்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவிற்கு இஸ்லாத்தை உலகிலிருந்து ஒழிக்க வேண்டுமாக இருந்தால் அரபுகளின் மன்னராட்சியை அது பாதுகாத்தே ஆக வேண்டும்.

அரபுகளின் மன்னராட்சி உலகில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால், இஸ்லாத்தின் ஏக போக உரிமை அரபுகளிடம் இருக்கவேண்டும். அப்போது தான் இஸ்லாம் என்ற போர்வையில் தனக்கு தேவையானவற்றை கூட்டியு்ம், தனக்குதேவையில்லாதவற்றை குறைத்தும், மறைத்தும் கூற முடியும்.

அரபுகளின் நிதி பலத்தில் இஸ்லாமிய தஃவாவை சிறைப்பிடித்து வைப்பதன் மூலம்...

0 அமெரிக்காவினதும், சஊதியினதும் நன்மைக்காக
உலகளாவிய ரீதியில் எழும் இஸ்லாமிய அரசியல் எழுச்சியை அடக்கமுடியும்.

0 முஸ்லிம்களின் சிந்தனையை அடிப்படை பிரச்சினைகளிலிருந்து வேறு பக்கம் திசை திருப்பி சில்லரை பிரச்சினைகளில் சிக்க வைக்கமுடியும்.

0 அரபுகளின் அரசியலுக்கேற்ப இஸ்லாத்தை கூட்டியும், குறைத்தும் வடிவமைக்க முடியும்.


இன்று, மத்திய கிழக்கில் தனது ஆதிபத்தியத்தை உறுதிப்படுத்தி, அரபு மண்ணின் எண்ணெய் வளங்களை சூறையாடிக்கொண்டிருக்கும், முஸ்லிம் நாடுகளுக்குள் அத்துமீறி புகுந்து அநியாயம் புரிந்துக்கொண்டிருக்கும் ஏகாதிபத்திய வாதிகளின் அட்டகாங்களை தஃவாவின் போர்வையில் மூடி மறைப்பதற்கு இந்த அரபு பணத்தைப் பெறும் இஸ்லாமிய இயக்கங்கள் நன்றாகவே பயன்படுத்தப் படுகின்றன.

அரபுகளை திருப்தி படுத்தும் இவர்களது தஃவா, பணத்தை மையப்படுத்தி சுழன்று, வியாபார மயப்படுத்தப்பட்ட ஜாஹிலிய்ய சிந்தனையை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. உயிரோட்டமான இஸ்லாத்தின் கட்டளைகளை பணத்திற்கு தாரை வார்த்து அநியாயங்களையும், அக்கிரமங்களையும் அடக்கி வாசிக்கும் அளவிற்கு காசின் கைதிகளாக இவர்கள் மாற்றப்பட்டிருக்கின்றார்கள்.

கடைசியாக உங்கள் சிந்தனைக்காக சில வார்த்தைகளை தர முடியும்
ஈராக்கில் புகுந்து பத்து லட்சம் முஸ்லிம்களை கொல்வதற்கு தனது நாட்டில் அமெரிக்கா கொலைகாரர்களுக்கு தளம் அமைத்துக்கொடுத்து, அமெரிக்கா யுத்த விமானங்களுக்கு இலவசமாக எண்ணெய் வழங்கிய சஊதி அரேபியா

ஆப்கானிஸ்தானை அழிக்க அமெரிக்காவுக்கு துணைபோன சஊதி அரேபியா

பலஸ்தீன் முஸ்லிம்களைக் கொன்று குவி்த்து, முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸை கபளீகரம் செய்த இஸ்ரேலின் தந்தையான, நண்பனான அமெரிக்காவை மிக மிக நேசிக்கும் சஊதி அரேபியா

இஸ்லாத்தை மறந்து புனித மண்ணில் ஆடம்பர மௌட்டீக மன்னர் ஆட்சி நடாத்தும் சஊதி அரேபியா

இஸ்லாத்தை வளர்க்க உதவி புரியுமா? அதன் பணத்தால் இஸ்லாம் வளருமா? அப்படி வளரும் இஸ்லாத்தை அதன் நேச நாடுகளான அமெரிக்காவும், இஸ்ரேலும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா? அங்கீகரிக்குமா?
ஆயிரம் கேள்விகளை இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம்...

ஏகத்துவ பிரசாரம் என்ற போர்வையில் எமக்கு சஊதி ஏற்றுமதி செய்திருப்பது முரண்பாடுகளை, மோதல்களை, சண்டைகளை, சச்சரவுகளை....

தமக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கு தனது எதிரியின் சதியை சரியாக புரிந்துக்கொள்ள அவகாசம் கிடைப்பதில்லை.
அதுதான் சஊதிக்கும் அமெரிக்காவிற்கும் தேவை!

இதனால் ஏற்படும்

இழப்பு...
இஸ்லாத்திற்கும்
முஸ்லிம் உம்மத்திற்கும்,

இலாபம்..
அரபு மன்னர்களுக்கும்
அவர்களின் யெஹுதி நஸாரா தோழர்களுக்கும்..