Wednesday, 28 May 2014

யார் இந்த நஜ்மா ஹெப்துல்லாஹ்..?


மோடியின் அசை்சரவையில் ஒரு சிறுபான்மை நலத்துறை அமைச்சரா?

ஆச்சரியமாக இருக்கிறதா? மோடியின் ஆட்சியில் சிறுபான்மை சமூகத்தின் உரிமைகள் கேள்விக்குறியாக மாறும் என்று அச்சத்தில் இருக்கும் போது சிறுபான்மை நலத்துறைக்கு அமைச்சரொருவரை மோடி அரசு நியமித்திருக்கிறது.

அந்த அமைச்சர்தான் நஜ்மா ஹெப்துல்லாஹ்!

மோடி அமைச்சரவையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் நஜ்மா ஹெப்துல்லா இந்தியாவின் புகழ்பெற்ற ஒரு முஸ்லிம் அரசியல்வாதியின் பேரப்பிள்ளையாகும்.

இவர் சுதந்திர இந்தியாவின் முதலாவது கல்வி அமைச்சராக இருந்த மௌலானா அபுல் கலாம் ஆஸாத்தின் பேத்தியாகும்.

தனது பாட்டன் வழி காங்கிரஸில் 2004 ம் ஆண்டு வரை பல முக்கிய பதவிகளை வகித்த நஜ்மா கட்சியின் தலைமைப்பீடத்தோடு ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் கட்சியிலிருந்து வெளியேறி பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார்.

காங்கிரஸ் கட்சியில் 1986ம் ஆண்டு பொதுச் செயலாளராக கடமையாற்றியுள்ளார். ராஜ்ய சபை அங்கத்தவராக 1980, 1986, 1992, 1998 நான்கு முறை தெரிவாகியுள்ளார்.

தற்போது பாரதீய ஜனதா கட்சியின் உப தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார்.  தேர்தல் காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை பா.ஜ.க வினர் கூறி வந்தனர்.  மோடிக்கு வாக்களிக்காதவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்று கூட பா.ஜ.க வின் ஒரு மாநிலத் தலைவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் நஜ்மாவின் கருத்துக்கள் கூட முஸ்லிம்களுக்கு சாதகமாக அமையப்போவதில்லை என்பதை உணரக் கூடியதாக இருக்கிறது.

நஜ்மா இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு சேவை எதையும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. தீங்கு செய்யாமல் இருந்தாலே போதும்.

Sunday, 18 May 2014

இராணுவ பங்கருக்குள் இசைப்பிரியா! புகைப்படம் ?

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் போராளி இசைப்பிரியா , இராணுவ பங்கருக்குள் உயிருடன் இருக்கும் புகைப்பட ஆதாரம் வெளியாகியுள்ளதாக  தமிழ்வின் மற்றும் கொழும்பு டெலிகிராப் இணையதளங்கள் செய்தியொன்றை வெளியிட்டுள்ளன.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மிக முக்கியமான ஊடகப் போராளியாக இருந்தவர் இசைப்பிரியா. இவர் தொலைக்காட்சி, சினிமா மற்றும கலைத்துறை பங்களிப்புகள் நிறைய செய்தவர்.
இந்நிலையில் இறுதிக்கட்ட போரின்போது இவர் மிகவும் கோரமான முறையில் உயிரிழந்திருந்தார். இராணுவத்தினருடனான மோதல் ஒன்றின் போதே அவர் கொல்லப்பட்டதாக இராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக அல்ஜசீரா ஊடகத்தின் பெண் ஊடகவியலாளர் ஒருவரும் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருந்த அவரது கணவரும் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தனர். மேலும் அதற்கான ஆதாரங்களை சேனல் 4 தொலைக்காட்சியும் வெளியிட்டிருந்ததாகவும் தமிழ்வின்  செய்தி வெளியிட்டிருக்கிறது.

எனினும் ஏற்கனவே வெளிவந்த படங்களை இலங்கை இராணுவம்  மறுத்திருந்தது. போலியான ஆவணங்களைக் கொண்டு இராணுவத்தரப்பை அபகீர்த்திக்குள்ளாக்கும் நடவடிக்கை என்று அதனை வன்மையாகக் கண்டிருத்திருந்தது.
இந்நிலையில் மேற்குறித்த இரண்டு ஊடகவியலாளர்களின் பங்களிப்புடன் இசைப்பிரியா இராணுவ முகாமுக்குள் உயிருடன் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்கம் யுத்தவெற்றியின் ஐந்தாம் ஆண்டை விமர்சையாக கொண்டாடும் நாளில் இப்புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள் தேடு பொறியில் இந்தப்படத்தை தேடிப்பார்த்தேன். எனது கைக்கு அது கிட்டவில்லை.  மாறாக எனக்கு கிடைத்தது இருவரும் இறந்து கிடக்கும் இந்தப்படம்தான்.

அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Friday, 16 May 2014

(ஷர்மிளா!....) இந்திய மனசாட்சிக்கு ஒரு கேள்வி


ஒரு குரலை இந்தியாவின் ஜனநாயகம் தவிர்க்கவே முடியாது. அந்தக் குரலின்றி இந்தியாவின் வண்ணங்கள் தொடரும் முழுமை பெறாது... ஐரோம் ஷர்மிளா. நாம் வாழும் காலத்தின் உலகின் தன்னிகரற்ற போராளி அவர்; நாம் வாழும் காலத்தின் உலகின் தன்னிகரற்ற போராட்டம் அவருடையது.

மணிப்பூர் சிக்கல்கள்
ஒரு மாநிலம் எவ்வளவு அழகாக இருக்க முடியும்; எவ்வளவு போதாமைகளோடு இருக்க முடியும்; எவ்வளவு சிக்கல்களோடு இருக்க முடியும்… அவ்வளவுக்கும் உதாரணமாக இந்தியாவில் இரு மாநிலங்களைக் குறிப்பிடலாம். ஒன்று காஷ்மீர். இன்னொன்று மணிப்பூர். மணிப்பூரிகளில் மூன்றில் ஒருவர் ஏதேனும் ஒரு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். மீத்தேய் என்று ஓரினம். அதில் மட்டும் ஐந்து பிரிவுகள். மீத்தேய் சனமாஹி, மீத்தேய் இந்துக்கள், மீத்தேய் பிராமணர்கள், மீத்தேய் கிறிஸ்தவர்கள், மீத்தேய் முஸ்லிம்கள். இப்படி ஒவ்வொரு இனத்திலும் பல்வேறு பிரிவுகள், குழுக்கள். அவர்களுக்குள் எண்ணற்ற பிணக்குகள், சிக்கல்கள்.

இந்திய ஒன்றியத்துடன் 1949-ல் மணிப்பூர் இணைக்கப்பட்ட போது அது பெரும்பான்மை மணிப்பூரிகளின் சம்மதத்துடன் நடக்கவில்லை. அப்போது தொடங்கிய சுதந்திர மணிப்பூர் கோஷங்கள் பத்தாண்டுகளில் கலகங்களாக உருமாறின. 1958-ல் இங்கு ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை இந்திய அரசு அமலாக்கியது. ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி, மணிப்பூர் மக்கள் விடுதலைப் படை என்று வரிசையாகத் தொடங்கப்பட்ட ஆயுதக் குழுக்கள் வன்செயல்களில் இறங்கியபோது, இங்கு குவிக்கப்படும் ஆயுதப் படைகளின் எண்ணிக்கையை அரசு அதிகரித்தது.

இரு தரப்பிலும் மாறி மாறி நடத்தப்பட்ட வன்முறைகளின் விளைவு இன்று மணிப்பூரில் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் தொடங்கி மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் வரை ஆயுதப் படையினர் நிற்கிறார்கள். குண்டுவெடிப்புகள், துப்பாக்கிச்சூடுகள், மர்மச் சாவுகள், போராட்டங்கள், ஊரடங்கு உத்தரவுகள், ரோந்துகள், பரிசோதனைகள் இவை எல்லாம் மணிப்பூர் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கங்கள் என்கிறார்கள் மணிப்பூரிகள்.

மலோம் படுகொலை
ராணுவத்தினர் மீதான ஒரு வெடிகுண்டுத் தாக்குதலுக்குப் பழி தீர்க்கும் வகையில், தலைநகர் இம்பால் அருகேயுள்ள மலோமில் 2000 நவ. 1 அன்று இந்திய ராணுவத்தின் அசாம் துப்பாக்கிப் படைப் பிரிவினரால் நடத்தப்பட்ட படுகொலையே ஷர்மிளாவின் போராட்டத்துக்கு அடிகோலியது. பொதுமக்கள் மீதான அந்தத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்; 34 பேர் படுகாயமுற்றனர். இறந்தவர்களில் இருவருடைய மரணம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஒருவர் லிஷன்பம் கிபிடோபி - 62 வயது மூதாட்டி; மற்றொருவர் சினம் சந்திரமணி - 1988-ல் சிறார்களுக்கான இந்திய அரசின் வீரதீரச் செயல்களுக்கான விருதை வென்றவர். நினைத்தால் யாரை வேண்டுமானாலும் கொல்லலாம் என்பது எவ்வளவு பெரிய அநீதி? இந்த அநீதியை எப்படி ஓர் அரசு சட்டத்தின் பெயரால் நீதியாக்க முடியும்? மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி போராட்டங்கள் தொடங்கின. ராணுவமோ ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களின் போராட்டங்களை ஒடுக்கியதோடு, மக்களின் கோரிக்கையையும் நிராகரித்தது.

இந்தச் சம்பவம்தான் கனவுகள் நிரம்பிய 28 வயது இளம் கவிஞரான ஷர்மிளாவை மக்களை ஒடுக்கும் அடக்குமுறைக்கு எதிரான எல்லையற்ற போராட்டத்தை முன்னெடுக்கும் போராளியாக உருமாற்றியது. மலோம் படுகொலை நடந்த மறுநாள் தன்னுடைய உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் ஷர்மிளா. இந்த 14 ஆண்டு போராட்டக் காலத்தில் ஒரு துளி தண்ணீரைக்கூட அவர் அருந்தவில்லை. அரசின் அத்தனை சதிகளையும் மீறி தன்னுடைய சத்யாகிரகப் போராட்டத்தை அவர் தொடர்கிறார். உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்ட சூழலிலும், அரசாலோ ராணுவத்தாலோ அவரைப் பணியவைக்க முடியவில்லை. அவர் மீது தற்கொலை குற்றச்சாட்டைச் சுமத்தி அவரைக் கைதுசெய்தது காவல் துறை.

அவர் இறந்தால் மணிப்பூர் கொந்தளித்துப்போகும் என்று பயந்து மூக்கு வழியே வலுக்கட்டாயமாக திரவ உணவைச் செலுத்தியது. இந்த 14 ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் அவர் மீது தற்கொலை வழக்கு மீண்டும் மீண்டும் பதிவுசெய்யப்படுகிறது. திரவ உணவு வலுக்கட்டாயமாக மூக்கின் வழியே செலுத்தப்படுகிறது. இந்திய மக்களுக்கு எதிரான - ராணுவத்துக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு எதிரான தன் போராட்டத்தை உறுதியாகத் தொடர்கிறார் ஷர்மிளா.

மருத்துவச் சிறைச்சாலை
இம்பாலின் கிழக்குப் பகுதியில், அவர் வீட்டுக்குக் கொஞ்சம் தூரத்திலேயே இருக்கும் ஜவாஹர்லால் நேரு மருத்துவ அறிவியல் மைய மருத்துவமனையில் அவர் சிறைவைக்கப்பட்டிருக்கிறார். நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துவரப்படும்போதுதான் அவரைப் பார்க்க முடிகிறது. போராட்டத்தைப் பலவீனப்படுத்தக்கூடும் என்று தனது தாயைக்கூட அவர் பெரும்பாலும் சந்திப்பதில்லை. அவருடைய தாய் ஷாகி சொல்கிறார்: “ஷர்மிளாவைக் கடுமையான வலியும் மன வேதனையும் சூழ்ந்திருக்கின்றன. அவள் என்னைச் சந்தித்தால் அழக்கூடும். அது அவளைப் பலவீனப்படுத்தக்கூடும். வேண்டாம். வன்முறைக்கு எதிரான அவளுடைய இந்தப் போராட்டம் மிக முக்கியமானது. அதுவெற்றி அடைய வேண்டும்.”

ஐரோம் பிரிவினைவாதத்தை நியாயப்படுத்துபவரல்லர். “நாம் போராடும் இந்த எல்லைகள் எல்லாம் செயற்கையானவை. மாறக் கூடியவை; நீடிக்க முடியாதவை. பூமி மட்டுமே நீடிக்கக் கூடியது. பிரிவினைவாதிகள் மக்களைச் சலிப்படையவைத்துவிடுகிறார்கள்” என்பவர் அவர். அவர் வன்முறையை ஆதரிப்பவரும் அல்லர். “நம்மால் எதையும் உருவாக்க முடியாதபோது, நாம் எதையும் அழிக்கக் கூடாது” என்பவர் அவர். ஆனால், பிரிவினைவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராகப் பேசும் இந்திய அரசோ அவரை முடக்கி வன்முறையைப் பிரயோகிக்கிறது. ஏன்?
ஏனென்றால், வன்முறையற்ற உலகுக்கும் உண்மையான ஜனநாயகத்துக்குமான முகம் அவர். 

ஒடுக்கப்பட்ட இந்தியர்களின் குரல் அவர். இந்தியர்களுக்குத் தெரியாத இன்னொரு இந்தியாவை இந்தியர்களுக்கும் இந்திய அரசின் குரூரமான இன்னொரு முகத்தை உலகுக்கும் அவருடைய போராட்டம் அம்பலப்படுத்துகிறது. காந்தி தன் உடலையே ஆயுதமாக்கினார்; தன் வாழ்க்கை ஒரு முடிவில்லாத பரிசோதனை என்றார். ஐரோம் ஷர்மிளாவுக்கும் இது பொருந்தும்.
தன்னுடைய 14 ஆண்டுகள் போராட்டம்பற்றி ஐரோம் ஷர்மிளா என்ன நினைக்கிறார்? “நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் கழித்தார். அதில் பாதியைத்தான் நான் கடந்திருக்கிறேன்.”
இந்த 14 ஆண்டுகளில் அவர் எதைச் சாதித்திருக்கிறார்? “எங்கள் போராட்டம் குறைந்தது இந்த நாட்டு மக்களுக்குத் தெரியவாவது ஆரம்பித்திருக்கிறது. ராணுவத்தினர் மனம் கொஞ்சமேனும் இளக ஆரம்பித்திருக்கிறது.”

இந்தியாவின் ஜனநாயகம் எப்படி இருக்கிறது? “இந்நாட்டின் ஜனநாயகத்தின் மீது எனக்கு இருந்த அவ நம்பிக்கையால் இதுவரை வாக்களிக்க விரும்பியது இல்லை. ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடுகள் உருவாக்கிய நம்பிக்கை இந்த முறை என்னை வாக்களிக்கத் தூண்டியது. ஆனால், சிறை விதிகளைக் காரணம் காட்டி என்னை வாக்களிக்க அனுமதிக்கவில்லை.”

ஷர்மிளாவின் கைகளில் கத்தை கத்தையாகக் கடிதங்கள் இருக்கின்றன. குடியரசுத் தலைவர், பிரதமரில் தொடங்கி எல்லாத் தலைவர்களுக்கும் அனுப்பிய கடிதங்கள். “காங்கிரஸிலிருந்து ஷர்மிளாவுக்கு அழைப்பு வந்தது. முதல்வர் இபோபியே நாடாளுமன்ற உறுப்பினர் வாய்ப்பை தெரிவித்தார். ஆனால், ஷர்மிளா புறக்கணித்துவிட்டார். ஆம் ஆத்மி கட்சியிடமிருந்தும் அழைப்பு வந்தது. அவர்கள் மீது நல்லெண்ணம் இருந்தாலும் அவருக்கு அரசியலில் நாட்டம் இல்லை. தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த ராகுல் காந்தி மணிப்பூர் பிரச்சினைபற்றிப் பேசும்போது, ‘காந்திய வழியையே நான் நம்புகிறேன். அன்பு, சமாதானம், உரையாடல்களின் வழியே எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியும் என்று நான் நம்புகிறேன்' என்று பேசினார். ஷர்மிளாவின் சாத்வீக உரையாடலைவிடவும் நீண்ட உரையாடல் எதுவாக இருக்க முடியும்?” என்கிறார்கள் மணிப்பூரிகள்.

ஜனநாயகத்தின் கரும்புள்ளி
ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் என்பது ஒருபுறம் உலகப் போராலும் மறுபுறம் சுதந்திரப் போராட்டத்தாலும் நிலைகுலைந்த ஆங்கிலேய அரசு, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களை எதிர்கொள்ள 1942-ல் கொண்டுவந்த கருப்புச் சட்டத்தின் நீட்சி. தேசத்தின் எந்தவொரு பகுதியில் இந்தச் சட்டம் அமலாக்கப்படுகிறதோ, அந்தப் பகுதி கலவரப் பகுதியாகக் கருதப்பட்டு, அந்தப் பகுதியின் எந்தவோர் இடத்திலும் அனுமதியின்றி நுழையவும் சோதனையிடவும் எங்கு வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தவும் எவரை வேண்டுமானாலும் பிடியாணையின்றிக் கைதுசெய்யவும் தேவைப்பட்டால் சுட்டுக் கொல்லவும் ஆயுதப் படைகளுக்கு இந்தச் சட்டம் அனுமதி அளிக்கிறது.

இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் இப்படி ஒரு கருப்புச் சட்டம் இருப்பது நம்முடைய அரசுக்கும் மக்களுக்கும் மிகப் பெரிய இழுக்கு. சம காலத்தில் ஜனநாயகத்தைப் பேணும் எந்தவொரு நாட்டிலும் இப்படியொரு சட்டம் இல்லை. இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் இன்றைக்கு ராணுவத்தால் கொல்லப்பட்ட ஆயிரக் கணக்கானோரின் பட்டியலோடு இச்சட்டத்தை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறார்கள் மக்கள்.

மணிப்பூரில் 2004-ல் தங்கஜம் மனோரமா என்ற இளம்பெண் ராணுவத்தினரால் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்டபோது வெடித்த போராட்டங்களைத் தொடர்ந்து, இந்திய அரசு இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவதுகுறித்து பரிசீலிக்க அமைத்த நீதிபதி ஜீவன் ரெட்டி தலைமையிலான ஆணைய அறிக்கையும் பின்னாளில் வர்மா ஆணையம் அளித்த பரிந்துரையும் இந்தச் சட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரச் சொல்கின்றன. அரசோ ராணுவத்தின் நிர்ப்பந்தத்துக்கு அஞ்சி இன்னமும் இந்தக் கருப்புச் சட்டம் அப்படியே தொடர அனுமதித்துவருகிறது.

ஆனால், ஷர்மிளா அசரக் கூடியவர் இல்லை. ஏனெனில், அவருடைய முன்னோடியான காந்தியை வழிநடத்திய அதே ஆன்மபலம்தான் ஷர்மிளாவையும் வழிநடத்துகிறது. ஷர்மிளாவின் பார்வையில், “ஒரு பெரிய போராட்டத்துக்கான தேவை தீவிரம், உறுதி, சுயநலமற்ற நீடிப்புத்தன்மை, நேர்மையான தொலைநோக்கு. இவை இருந்தால் நிச்சயம் அந்தப் போராட்டம் தன் இலக்கை அடையும்.” இவை எல்லாமும் அவரிடம் நிறையவே இருக்கின்றன. அவர் போராட்டத்தைத் தொடர்கிறார்.

இன்றைக்கு காஷ்மீரில் தொடங்கி இந்தியாவின் எந்தவொரு பகுதியில் நடக்கும் மக்கள் போராட்டத்தையும் அடக்குமுறையால் எதிர்கொள்ளும் அரசு, போராட்டத்தை வன்முறை என்றும் போராடுபவர்களை வன்முறையாளர்கள் என்றும் சொல்ல நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது. நாமும் அப்படியே சொல்லப் பழகியிருக்கிறோம். சரி, ஷர்மிளாவையும் அவரைப் போன்றவர்களையும் அவர்களுடைய போராட்டங்களையும் நாம் என்ன பெயரிட்டு அழைக்கப்போகிறோம்?
-சமஸ், 
நன்றி - தி இந்து

ஞானசார தேரர் சிறைச்சாலையில் 'ஜம்பர்' அணிவது பிரச்சினையா?

ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தை வைத்து சிங்கள இனவாதிகள் தமது வழமையான இனவாத பிரசாரத்தை முடுக்கி விட்டுபோராட்டங்களை ஆரம்பித்...