Saturday 9 April 2011

அரபு மக்கள் எழுச்சியும் அமோக ஆயுத விற்பனையும்!


அரபு நாடுகளில் ஏற்பட்டுவரும் மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து, அந்த நாடுகளுக்கான ஆயுத ஏற்றுமதி பல மடங்கு அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

Commons Committees on Arms Export Controls  அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களில் வட ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதற்காக பிரிததானிய நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் மேற்படி தகவல்கள் தெரிவிக்கின்றன.


சிறிய ரக ஆயுதங்கள், கண்ணீர்ப் புகைக் குண்டுகள், ஸ்னைப்பர் துப்பாக்கிகள், கவச வாகனங்கள் போன்றவற்றை லிபியா, பஹ்ரைன் போன்ற நாடுகளுக்கு அதிகளவில் விநியோகிப்பதற்கும் அனுமதியளிக்கப்பட்டடிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


 அரபு நாடுகளின் மக்கள் எழுச்சியை முடக்குவதற்கு பிரித்தானியா அரசு ஆயதங்களை ஏற்றுமதி செய்து உதவி புரிவதை  Commons Committees on Arms Export Controls    அமைப்பின் தலைவர் ஸர் ஜோன் ஸ்டன்லி வன்மையாக கண்டித்துள்ளார்.


அரபு நாடுகளுக்கான ஆயுத ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் பிரித்தானியா, அதன் ஆயுதத் தொழில்துறையில் 3 லட்சம் பேருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கியுள்ளது.  35 பில்லியன் பவுன்களை வருடமொன்றுக்கு இலாபமாக பெறுகிறது.

Friday 8 April 2011

கர்ளாவியின் வார்த்தையை நன்கு விளங்குவதும் - அவரின் வாந்தியை மென்று விழுங்குவதும்

லிபியத் தலைவர் முஅம்மர் அல் கத்தாபிக்கு மரண தண்டனை வழங்கியதன் மூலம் யூசுப் அல் கர்தாவி அரபு பூமிகளை ஆக்கிரமிக்கும் மேற்குலக சக்திகளின் அடிவருடி என மீண்டும் தன்னை அறிமுகம் செய்துக் கொண்டார்.

கதாபி அந்நாட்டு மக்களை கொன்றதை விட அதிகளவான மக்களை இன்று மேற்குலகின் இராணுவம் கொலை செய்திருக்கிறது. கொலை செய்து வருகிறது. அன்று லிபிய மக்களின் துயரத்திற்காக கண்ணீர் வடித்து கதாபியைச் சுட்டுக் கொள்ளுங்கள் என்று கோஷமிட்ட கர்தாவி இன்று மௌன விரதம் பூண்டிருக்கின்றார்.


இது இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சராக இருந்த ரிசிபி லிவினியை கத்தார் மன்னர் கைக்குலுக்கி வரவேற்கும் காட்சி. கத்தாரை கிலாபத் ஆட்சியாக(?) ஏற்றுக்கொண்டிருக்கும் கர்தாவி, கத்தார் இஸ்ரேல் உறவு விடயத்தில் எந்த பத்வாவையும் வெளியிடவில்லை. இஸ்ரேல் பொருட்களை பகிஷ்கரிக்க பத்வா விடும் இவருக்கு பலஸ்தீன் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் இஸ்ரேலிய அமைச்சரை பகிஷ்கரிக்குமாறு கத்தார் மன்னருக்கு பத்வா வழங்க நெஞ்சில் தீரமில்லை.

Tuesday 5 April 2011

அல்ஹறாம் வல் மஹ்ரம் பில் இஸ்லாம்? கலக்குகிறது கர்ளாவியின் கைகுலுக்கல்!!


உலக முஸ்லிம் அறிஞர்கள் சபையின் தலைவரும், நவீன சிந்தனையாளரும், சமகால இஸ்லாமிய எழுச்சியின் தந்தை என்று அவரது பக்தகோடிகளால் போற்றப்படுகின்ற பிரபல சர்வதேச முப்தி யூசுப் அல் கர்தாவி அவர்கள் கத்தார் நாட்டு மன்னனின் மனைவிக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவிக்கிறார். 

Friday 25 March 2011

இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - பகுதி3



  மலேசிய தமிழ் இலக்கிய விழா கட்டுரை பகுதி 1
மலேசிய தமிழ் இலக்கிய விழா கட்டுரை பகுதி 2


அறிமுகம்


மலேசிய இலக்கிய விழா குறித்த எனது இரண்டாவது கட்டுரைக்குப் பின்னர் ஓரளவு வரவேற்கத்தக்க மாற்றங்கள் இலங்கை சார்பில் நடந்திருப்பதை அறிய வந்தேன். அந்த விபரங்களைப் பதிந்து விடவேண்டும் என்பதும் இன்னும் மீளாய்வுகளும் திருத்தங்களும் தேவை என்பதைத் தெரிவிப்பதுமே நெடுங்கட்டுரையின் மூன்றாவது அங்கத்தின் நோக்கம்.
இதுவரை அச்சில் வெளிவந்து பலர் கவனத்துக்குக் கட்டுரைகள் செல்லாத போதும் அடைய வேண்டிய தளங்களைச் சர்வதேசிய ரீதியில் இணையம் மூலமாகவே எட்டியிருப்பது என்னையே ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. அது தவிர இந்த விழா சம்பந்தப்பட்ட அனைவருமே கட்டுரைகளைப் படிக்கிறார்கள் என்பதும் வரவேற்கத் தகக்து.


இத்தொடரை 5 கட்டுரைகளுடன் நிறைவு செய்யலாம் என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் இன்னும் சற்று நீண்டு ஒரு நூறு அல்லது நூற்றறைம்பது பக்க நூலாகி விடும் போல் தெரிகிறது. கூடியவரை சுருக்கிக் கொள்வது நல்லது என்றே நினைக்கிறேன். இலக்கிய ஆர்வலர்கள் ‘சர்வதேச இஸ்லாமிய இலக்கிய மாநாடு’ என்றோ ‘மலேசிய இஸ்லாமிய இலக்கிய விழா’ என்றோ அல்லது இந்த வார்த்தைகளில் இருக்கும் ஏதாவது ஒரு சொல்லை வைத்து இணையங்களில் சொடுக்கித் தேடினாலும் காலாகாலமாக எல்லாக் கட்டுரைகளையும் படிக்கும் வாய்ப்பு இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா (பகுதி2)



இந்தக் கட்டுரை மலேசிய தமிழ் இலக்கிய விழா (பாகம் 1) இன் தொடர்ச்சியாகும்

மலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா
முஸ்லிம்களைப் பிரிக்கிறதா

இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - அங்கம் 02

அறிமுகம்

அங்கம் - 2 என்று உப தலைப்பிடப்பட்டிருந்த போதும் இந்தக் கட்டுரையில் பேசப்படும் விடயங்களைப் புரிந்து கொள்ள முதலாவது கட்டுரையைப் படித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. முடிந்தவர்கள் அக்கட்டுரையையும் படித்துக் கொண்டால் ஒரு பூரணமானதும் தெளிவானதுமான விளக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். முதலாவது கட்டுரையில் பேசப்பட்ட விடயங்களைச் சார்ந்தே இக்கட்டுரையும் பேசுகிறது. ஆனால் புதிய தகவல்களை இக்கட்டுரை உள்ளடக்கியிருக்கிறது.

முதலாவது கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட எனது கணிப்புக்களிற் சில சரியானவை என்பதற்கான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. மற்றொன்று மீளாய்வுக்குட்படுத்தப்படுகிறது. அவற்றையிட்டுப் பேசுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மலேசிய விழாவா மாநாடா?

மலேசியாவில் நடத்தப்படுவதாக குப்பப் பிச்சை முகம்மது இக்பால் குழுவினரால் “சர்வதேச மாநாடு” என்று முழக்கம் கொட்டப்படுகின்ற நிகழ்வானது ஒரு சர்வதேச மாநாட்டுக்குரிய வலுவான பின்னணிகளைக் கொண்டிருக்கவில்லை என்பதால் அதை மலேசிய இஸ்லாமிய இலக்கிய விழா என்று அழைப்பதே பொருந்தும்.

Monday 21 March 2011

அரபு சுல்தான்களும் அமெரிக்க ஷைத்தான்களும் அடிவருடி மஸ்தான்களும்



அமெரிக்கா மற்றுமொரு படுகொலை ஆக்கிரமிப்பிப்பை ஆரம்பித்திருக்கிறது. சதாமை ஒழித்த அதே பாணியிலான நாடகம் லிபியாவில் அரங்கேறிவிட்டது. அந்த ஆக்கிரமிப்பிற்கான பச்சைக் கொடியை பத்வாவாக அதன் அடிவருடி களினால் வழங்கப்பட்டும் விட்டது.

லிபியாவின் எண்ணெய் வளத்தை சூறையாட எதிரிகள் அணிதிரண்டு விட்டனர். வளங்களை கொள்ளையிடும் ஆதிக்க சக்திகள் உலக ஊடகங்களை திசை திருப்ப உள்நாட்டுப் போர் ஒன்றை உடனே அங்கு உருவாக்கியும் விடுவார்கள்..

அங்கு இனி குண்டு வெடிப்புகளும் தற்கொலைத் தாக்குதல்களும் சகஜமாய் நடக்கும் சம்பவமாய் மாறிப்போகும்.

சொந்த நாட்டுக்குள்ளேயே பிரிவுகளை உருவாக்கி ஒருவரை மற்றவர் குதறித் தின்னும் ஜிஹாதிய வெறியை ஊட்டி இரத்தத்தால் அந்த மண்ணை ஈரமாய் ஆக்கும் பத்வாக்கள் மீண்டும் மீண்டும் காற்றில் பறக்க விட பலர் காத்து நிற்கின்றார்கள்.

இதுதான் அமெரிக்காவின் எதிரிக்கு, எதிரிகள் ஆளும் நாடுகளுக்குக் கிடைக்கும் பரிசு!

ஆப்கானிஸ்தானில், ஈராக்கில், செச்னியாவில், பொஸ்னியாவில் நடந்து முடிந்த நரவேட்டைகளின் அடுத்த நகர்வு லிபியாவை நோக்கியிருக்கிறது. மேற்சொன்ன நாடுகள் அத்தனையும் அமெரிக்காவின் சுரண்டலுக்காகவும் அரசியல் தேவைகளுக்காகவும் துவம்சம் செய்யப்பட்ட தேசங்கள்.

ஆப்கானிஸ்தான் அரசு ரஷ்யாவை சார்ந்திருந்து அதன் இராணுவ உதவியை வேண்டி நின்ற போது, ரஷ்யப்படைகள் ஆப்கானுக்குள் நுழைந்தன. ரஷயப் படைகளுக்கு பாடம் கற்பிக்கவும், ஆப்கானை ஆக்கிரமிக்கவும் அமெரிக்கா வியூகம் வகுத்தது.

ஏகாதிபத்தியத்தின் எடுப்பார் கைப்பிள்ளையான முல்லாக்களை வைத்து அமெரிக்கா மார்க்கத் தீர்ப்புகளை வெளியிட வைத்தது.

யூசுப் அல் கர்தாவி ரஷ்ய படைகளுக்கு எதிராக போராடுமாறு முஸ்லிம்களுக்கு அறைகூவல் விடுத்தார். அந்த நாட்டின் சிறுவர் முதல் பெரியோர் பெண்கள் உட்பட அனைவரும் இராணுவ மயப்படுத்தப்பட்டனர்.  ரஷயா விரட்டியடிக்கப்பட்டதும்.  போராளிகளுக்கிடையில் பிணக்குகளைத் தோற்றுவித்து சீ.ஐ.ஏ ஆப்கானைக் கைப்பற்றிக்கொண்டது.

கர்தாவியின் பத்வாவை நம்பி களத்தில் குதித்த முஜாஹிதீன்களுக்கு, அமெரிக்கா அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தது. வெற்றியின் பின்னர் ஆப்கான் தேசம் அமெரிக்காவிற்கு கைமாறியது. கர்தாவி அமைதியானார்.

அன்று ஆப்கானிலிருந்து ரஷ்யாவை விரட்ட கூக்குரலிட்ட கர்தாவி இன்று அங்கிருந்து அமெரிக்காவை விரட்ட ஜிஹாதை பிரகடனம் செய்யாமல் மௌனம் காக்கிறார்.

இன்று அந்நாட்டு சிவிலியன்கள் நாளுக்கு நாள் கொலை செய்யப்பட்டுக கொண்டிருக்கின்றனர்.

எகிப்தின் போராட்டத்தை ஏற்றுக்கொண்ட கர்தாவி, பஹ்ரைன் போராட்டத்தை எற்றுக்கொள்ள மறுக்கின்றார்.  அதற்கு முக்கிய காரணம் வளைகுடாவில் அமெரிக்காவிற்கு முக்கியமான தளமாக பஹ்ரைன் திகழ்வதாகும்.

அமெரிக்காவின் மிகப்பெரிய படைத்தளம் பஹ்ரைனில் இருக்கிறது. பஹ்ரைனை இழக்க அமெரிக்கா ஒரு போதும் தயாரில்லை. எனவே கர்தாவி அவரது பத்வா பல்டியை மாற்றி அடித்துள்ளார். பஹ்ரைன் போராட்டம் மக்களின் போராட்டம் இல்லையென்று அமெரிக்காவை அவர் ஆறுதல் படுத்தியிருக்கிறார்.

காஸாவுக்குள் புகுந்து 1400 மக்களைக் கொன்ற இஸ்ரேலுக்கு எதிராக எதுவுமே செய்யாத சவுதி அரேபியா, இன்று தனக்கும் அமெரிக்காவுக்கும் சாதகமாக இருக்கும் பஹ்ரைனைப் பாதுகாக்க தனது இராணுவத்தை அங்கு அனுப்பியிருக்கிறது. கத்தார் நாடு இஸ்ரேலோடு கொஞ்சி குலாவுவதை மௌனமாக பார்த்திருக்கும் கர்தாவி, கதாபியைப் பார்த்து கர்ஜிக்கிறார்.

சுருங்கச் சொன்னால் பூகோள அரசியல் ஒன்றிற்காக முஸ்லிம் தேசங்கள் உள்நாட்டு வெளிநாட்டு யுத்தங்களால் சிதைக்கப்படுகின்றன. ஆக்கிரமிக்கப்படுகின்றன.

காட்டிக்கொடுத்து, எதிரிகளுக்கு கூஜா தூக்கும் கோடரிக்காம்புகளாக கர்தாவிகளும், அப்துல்லாஹ்க்களும் அணிவகுத்து நிற்கின்றனர்.

Monday 7 March 2011

“கதாபியை சுட்டுக்கொல்லுங்கள்!” யூசுப் அல் கர்ளாவியின் கன்றாவித்தனமான பத்வா!


கதாபியை சுட்டுக்கொல்லுங்கள்!யூசுப் அல் கர்ளாவியின் கன்றாவித்தனமான பத்வா!


கர்தாவியின் அமெரிக்க, அரபு மன்னர்களுக்குச் சார்பான அடுத்த காய் நகர்த்தல் “பத்வா”வாக வெளிவந்திருக்கிறது.

கதாபியை சுட்டுக்கொல்லுங்கள்!

இது லிபிய மக்களின் போராட்டத்தை ஆதரித்து கத்தாரிலே மௌட்டீக மன்னர் ஆட்சியின் நிழலிலே வாழ்கின்ற கர்ளாவி வெளியிட்ட அனல் பறக்கும் பத்வா.


இந்த பத்வாவின் இரகசியம் என்ன?

இன்று அரபுநாடுகளில் மக்கள் போராட்டம் எழுச்சிபெற்று வருவதால், பக்கத்து நாட்டு மன்னர்கள் குலை நடுங்கிப்போயுள்ளனர்.
தூனிசியாவிலிருந்து எகிப்துக்கு சென்று லிபியாவை அடைந்திருக்கிறது இந்தமக்கள் போராட்டம்.

இஹ்வான்கள் பலரைக் கொன்ற எகிப்தின் முபாரக்கிற்கும், தூனிசியாவின் பின் அலீக்கும் வழங்காதகொலைபத்வாவை கர்ளாவி ஏன் கத்தாபிக்கு மட்டும் வழங்கினார்?

Tuesday 22 February 2011

லிபிய கொலைக்களம் - குண்டு மழை பொழியும் கதாபி!


லிபியாவில் ஆர்ப்பாட்டம் செய்து வரும் பொதுமக்கள் மீது யுத்த விமானங்களைக் கொண்டு மிருகத்தனமான தாக்குதல்களை கதாபி நடாத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன.

திரிப்பொலி நகரம் பிணக்காடாய் மாறி இருப்பதாகவும், 400க்கு மேற்பட்டோர் இதுவரை பலியாகியிருப்பதாகவும், நிராயுதபாணிகளான மக்கள் மீது யுத்த விமானங்களைக் கொண்டு தாக்கும் கதாபியின் மிருகத்தனமான இந்த உத்தரவிற்கு கீழ்படியாத இரண்டு லிபிய விமானிகள் தமது விமானங்களை பக்கத்து நாடான மால்டாவின் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கியிருக்கின்றனர்.

இதேவேளை கதாபியின் ஆதரவாளர்களும், இராணுவ அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் படிப்படியாக மக்களோடு இணைந்து வருவதாக அறியவருகிறது.

கதாபியின் மகன் ஸைபுல் இஸ்லாம், ஆர்ப்பாட்டம் தொடர்ந்து இடம்பெற்றால் லிபியாவில் இரத்த ஆறு ஓடும் என்று அச்சுறுதத்தல் விட்டிருக்கின்றார்.

தனது தந்தையின் அதிகாரத்தைப் பாதுகாப்பதற்காக ஒரு கடைசி ஆண், ஒரு கடைசி பெண், கடைசி தோட்டா இருக்கும் வரை போராடப் போவதாகவும் அறிவித்திருக்கின்றார்.

லிபியாவின் ஒவ்வொரு நகரங்களும் மக்களிடம் வீழ்ச்சியடைந்து வருவதைப் பார்க்கும் போது கதாபி பதுங்குவதற்கு இடம்தேடி ஓட்டமெடுக்கும் நாள் விரைரவில் வரத்தான் போகிறது.


Sunday 20 February 2011

பஹ்ரைன் - வெளிநாட்டு கூலிப்படையின் கொடுமை!


பஹ்ரைன் விபரீதமான அரசியல் உள்ள வித்தியாசமான நாடு.

ஏகாதிபத்தியத்தின் எடுப்பார்க் கைப்பிளள்ளைகளான மன்னர் குடும்பங்கள் 200 ஆண்டுகளாக அந்த நாட்டை ஆண்டு வருகின்றார்கள்.

அந்த நாட்டின் அரச நிர்வாகத்தில் சொந்த நாட்டுப் பிரஜைகளுக்கு இடமில்லை. அமெரிக்காவும் பிரித்தானியாவும் சவுதி அரேபியாவும் தமது அரசியல் தேவைகளுக்காக பயன் படுத்தும் ஒரு தளமாகவே பஹ்ரைன் பாவிக்கப்பட்டு வருகின்றது.

வெளிநாட்டவரின் அங்கீகரிக்கப்பட்ட ஆக்கிரமிப்பின் உதவியில் ஆட்சி செய்யப்பமடும் ஒரு நாடாக பஹ்ரைனை குறிப்பிட்டால் அதில் தவறே இல்லை.

உலகில் எங்குமில்லாதவாறு முற்று முழுதாக இராணுவத்தில் வெளிநாட்டவர்களே வேலைக்கமர்த்தப்படுகின்றனர்.

மனித உரிமைகள் முடக்கப்பட்ட ஒரு நாடாக அது மிளிர்ந்துக் கொண்டிருக்கிறது.

இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால்,

இன்று மனித உரிமைக்காக குரல் கொடுக்கின்ற அமெரிக்காவும், பிரித்தானியாவும் தான் பஹ்ரைன் என்ற ஜனநாயக விரோத நாட்டை பாலூட்டி வளர்த்து வருகின்றன.

வாக்குரிமையைப் பற்றி வாய்க்கிழிய கத்தும் இந்த நாடுகள், 80 வீதமான ஆதிகாரத்தை தன்னகத்தே வைத்துக்கொண்டு 20 வீத அதிகாரத்தை இந்த நாட்டு மக்களுக்கு வழங்கும் கேலிக்குரிய பஹ்ரைன் பாராளுமன்ற முறையை ஆதரித்து வருகின்றன.

அண்டை நாடுகளான பஹ்ரைனுக்கும் சவுதிக்குமுள்ள உறவு மிகவும் இறுக்கமானது. ஈ என்ற அசுத்தத்தை மொய்க்கும் பிராணிக்கும் அசுத்தத்திற்கும் உள்ள உறவு அந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருக்கிறது.

தனது நாட்டில் இறுக்கமான சட்டங்களை வைத்துக்கொண்டுள்ள சவுதி நாடு, அதன் மன்னர் குடும்பங்களுக்கும், மேட்டுக்குடிகளான எண்ணெய் ஷேக்குகளுக்கும் மது, மாது போன்ற ஷைத்தானிய சேட்டைகளுக்கான சிறந்த தளமாக பஹ்ரைனை பாவித்து வருகிறது.

பிரித்தானியா கூலிப்படையான பஹ்ரைனின் இராணுவத்திற்கு பயிற்சி வழங்குகிறது. அமெரிக்கா 4500 படையினரைக் கொண்ட மிகப்பெரிய கடற்படைத் தளத்தை இங்கு வைத்துள்ளது.

பஹ்ரைன் நாட்டு மக்களின் அரசியல் உரிமைகளை நசுக்குவதற்கு ஏதுவாக அமெரிக்காவும், பிரித்தானியாவும் அந்த நாட்டை நவீன ஆயுத வல்லமையுள்ள நாடாக மாற்றியிருக்கிறது.

பஹ்ரைனை நாட்டு மக்களின் ஆதரவு அறவே இன்றி பல நூறு ஆண்டுகள் தொடராக ஆட்சி செய்வதற்கு அடித்தளமாக இந்த சாத்தானிய சக்திகளான அமெரிக்கா, பிரித்தானியா, சவூதி போன்ற கூட்டுக்கம்பனிகள் அந்த நாட்டின் அராஜகங்களை கட்டிக்காத்து வருகின்றன.

இன்று அந்த நாட்டில் எழுந்து வரும் மக்கள் எழுச்சியை முடக்குவதற்கு மேல் குறித்த மூன்று சாத்தானிய சக்திகளும் முயன்று வருகின்றன.

நிராயுதபாணிகளாக ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது கூலிப்படையான இராணுவம் செய்யும் கொலைகளுக்கும் , மனித உரிமை மீறல்களுக்கும் அனுசரணையாளர்கள் யார் என்ற விடயம் உலகிற்கு தெரிய வந்திருக்கிறது.

Saturday 19 February 2011

எழுச்சியில் பஹ்ரைன் - அதிர்ச்சியில் அமெரிக்காவும் அரபுநாடுகளும்


எகிப்தின் எழுச்சியை வரவேற்று அந்த எழுச்சிக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்கா பஹ்ரைன் எழுச்சியைக் கண்டு மிரண்டு போயுள்ளது. பஹ்ரைனின் எல்லை நாடான சவுதி நாட்டின் மன்னன் அப்துல்லாஹ்வின் வயிற்றிலும் இது புளியைக் கரைத்திருக்கிறது.

புரட்சி தனது நாட்டிற்குள்ளும் புகுந்து விடுமோ என்று அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு வால்பிடிக்கும் சவுதி மன்னர் குடும்பங்கள் நடுநடுங்கிப்போயுள்ளன.

Thursday 17 February 2011

பஹ்ரைன் எழுச்சி- நான்கு பேர் மரணம் 60 பேரைக் காணவில்லை!


பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் பேர்ல் சதுக்கத்தில் அரசாங்கத்திற்கெதிராக திரண்டிருந்த மக்கள் மீது பாதுகாப்புப் படை தாக்கியதில் 4 பேர் மரணமாகியுள்ளதாகவும், 60 பேர் காணமாகியுள்ளதாகவும் பிரஸ் ரிவி இணையதளம் தெரிவிக்கிறது.

நகரில் குவிக்கப்பட்டுள்ள இராணுவ கவச வாகனங்கள் மக்கள் பேர்ல் சதுக்கத்தில் ஒன்று கூடுவதை தடுத்து வருகிறது.

கடந்த 40 ஆண்டுகளாக பிரதமராக இருக்கும் அந்நாட்டின் அந்நாட்டு மன்னரின் உறவினரான கலீபா பின் ஸல்மான் அல் கலீபாவை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும், அந்நாட்டில் அரசியல் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும், ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அந்நாட்டுமக்கள் கோரி வருகின்றனர்.

எகிப்தின் முபாரக்கின் இராஜினாமாவைத் தொடர்ந்து, பஹ்ரைன் மக்கள் கடந்த திங்கட் கிழமை தமது போராட்டத்தை ஆரம்பித்தனர்.

கடந்த 200 வருடங்களாக பஹ்ரைனை ஆளும் மன்னர் குடும்பத்திற்கு எதிராக மக்கள் கோஷமிட்டு வருகின்றனர். மன்னர் ஆட்சியை தமது நாட்டிலிருந்து துடைத்தெறிநந்து விட்டு மனித உரிமைகளைப் பாதுகாக்கின்ற அரசு ஒன்று உருவாக வேண்டுமென்று அவர்கள் கோரி வருகின்றனர்.

25 அமைச்சர்களைக் கொண்ட பஹ்ரைன் அரச சபையில் 80 வீதமானவர்கள் அரச குடும்பத்தினால் தெரிவு செய்யப்படுகின்றனர். மிகுதி 20 வீதமானவர்கள் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர்.

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2011 - மலேசியா


இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரான நண்பர் அஷ்ரப் ஷிஹாப்தீன் அவர்களால் எழுதப்பட்ட உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2011 - மலேசியா பற்றியதொரு ஆக்கம் கிடைக்கப்பெற்றது. அதனை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.



உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2011 - மலேசியா

இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும்  - அங்கம் 01

அறிமுகம்
 இவ்வருடம் மலேசியாவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக்கான தகவல்கள் தெரிவிக்கும் இலங்கைக்கான கூட்டம் கடந்த 5.2.2011 அன்று நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. 

 இந்தக் கூட்டத்தின் போது இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் சில கேள்விகளை எழுப்பினார். அதனைத் தொடர்ந்து நானும் எழுத்தாளர் மானா மக்கீனும் சில கருத்துக்களை முன் வைத்தோம். மலேசியக் குழுவைத் தலைமை வகித்துக் கூட்டி வந்த டத்தோ ஹாஜி முகம்மத் இக்பாலும் அவரது சகபாடியான சீனி நைனாரும் எமது சந்தேகங்களுக்குச் சரியானதும் போதுமானதுமான பதில்களைத் தந்திருக்கவில்லை. சீனி நைனார் ஒரு படி மேலே போய் விடயத்தை வேறு பக்கத்துக்குத் திருப்ப முயன்றார். அதனைத் தொடர்ந்து அந்த அரங்கிலிருந்து நாம் வெளிநடப்புச் செய்தோம். 

லிபியா - நாற்பதாண்டு ஆட்சியும் நடுங்கும் கதாபியும்


தூனீசியா, எகிப்து போராட்ட வரிசையில் லிபியாவும் இணைந்து கொள்கிறது.

நாற்பதாண்டுகளாக லிபிபாவை ஆண்டு வரும் அந்நாட்டின் ஜனாதிபதி கதாபிக்கு எதிர்ப்பு தெரிவித்து லிபிய மக்கள் போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள்.

லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காஸியில் மக்கள் அணிதிரண்டு இருக்கின்றார்கள்.

மனித உரிமை சட்டத்தரணி ஒருவரின் கைதையும், கதாபியின் ஊழல், மோசடி மிகுந்த ஜனநாயகமில்லாத ஆட்சியையும் எதிர்த்து மக்கள் கோஷங்களை எழுப்பியவாறு பெங்காஸி நகர வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்த போது பொலிசாருக்கும், பொது மக்களுக்கும் இடையில் சண்டை மூண்டது.

Monday 14 February 2011

காலித் சயீத்! புரட்சிக்காக புதைந்து போன ஒரு விதை!


காலித் சயீத்!

எகிப்தின் கரையோர நகரமான அலக்சாந்திரியாவைச் சேர்ந்த 28 வயது இளைஞன்.

கடந்த வருடம் 2010 ஆகஸ்ட் மாதம் முபாரக்கின் இரும்புக் கரங்களாய் செயற்பட்டு வந்த எகிப்திய காவல் துறை பொலீசார் இவனை ஒரு 'இன்டர் நெட் கபே'  இலிருந்து கைது செய்தனர்.

அவனை கதறக் கதற பலர் முன்னிலையில் பயங்கரமாக தாக்கினர். அவனது தலையை வேகமாக சுவரில் மோத வைத்தனர். அடித்து உதைத்தனர்.

அடித்து துன்புறுத்தப்பட்டு குற்றுயிராய்க் கிடந்தஅவனை பாதையில்நெடுக  இழுத்துச் சென்று,  வாகனத்தில் தூக்கிப் போட்டுக்கொண்டு பறந்து சென்றனர்.

இது எகிப்தில் அன்றாடம் நடக்கும் நிகழ்வாக இருந்ததனால் யாரும் இதனை அலட்டிக் கொள்ள வில்லை. காரணம், கைதும், கொலையும் சாதாரண சம்பவங்களாக எகிப்தின் நிலையை மாற்றி இருந்தது.

காலித் சயீத் என்ற இளைஞன் இப்படி மிருகத்தனமாக, கொடுரமாக தாக்கப்படுவதற்கு கொலை செய்யப்படவதற்கு என்ன குற்றம் இழைத்திருப்பான்?


பொலிசாரின் தாக்குதலுக்குள்ளாகி மரணித்த காலிதின் படம்

இரண்டு பொலிஸ் அதிகாரிகளின் போதை பொருள் பாவனை தொடர்பான ஒரு வீடியோவை அவன் அவனது புளக்கில் பதிவிட்டிருந்தான். அதனை உலகறியச் செய்திருந்தான்.

அவன் செய்த குற்றம் அதுதான்.

இணையத்தின் ஊடாக அநீதிக்கு எதிராக செயற்பட்ட அந்தக் குற்றம் தான் அவனுக்கு சித்திர வதையையும், மரணத்தையும் பரிசாக வழங்கியது.

கடந்த காலங்களில் பொலிசாரின் கெடுபிடிகளில், சித்திர வதைகளில் மரணிக்கும் எகிப்தியர்களின் மரணங்கள் புதைகுழியோடு புதைந்து போகும் ஒரு கதையாகவே இருந்து வந்திருக்கிறது.

எகிப்து, தூனிசியா - எனது ஹைக்கூ கவிதை




எழுந்திடுங்கள்
விழுந்து விடும்
எதேச்சதிகாரம்!

Saturday 12 February 2011

வீடியோ - முபாரக்கின் காவல் படைக்கு நேர்ந்த கதி!

எகிப்திய எழுச்சியின் பின்னணியிலிருந்த இளம் பெண்மணி அஸ்மா மஹ்ஃபூஸ்



முபாரக்கின் மூன்று தசாப்த சர்வாதிகார ஆட்சியை ஆட்டங்காண வைத்து அவரை பதவியிலிருந்து விரண்டோட வைத்த மக்கள் எழுச்சிக்கு பின்னணியிலல் இருந்து செயற்பட்டவர்களில் ஒருவர்தான் அஸ்மா மஹ்ஃபூஸ் என்ற 26 வயதான இளம் யுவதி.கெய்ரோ அமெரிக்க பல்கலைககழகத்தில் வர்த்தக முகாமைத்துவத்தில் பட்டம் பெற்றவர்.

எகிப்தின் இந்த எழுச்சி இப்படித்தான் ஆரம்பமானது.

அஸ்மா மஹ்ஃபூஸ் தஹரீர் சதுக்கத்தில் ஒன்று சேர்ந்து முபாரக்கின் அடக்குமுறைக்கு எதிராக 2011 ஜனவரி 25ம் திகதி அன்று அணி திரளுமாறு எகிப்திய மக்களை உருக்கமாக அழைக்கும் ஒரு வீடியோவை தனது வலைப்பூவில் (புளக்கில்) பதித்தார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு எகிப்தின் அல்மஹல்லா அல் குப்ரா நகரத்தில் இடம்பெற்ற தொழிலாளர் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்து, ஆதரவு தெரிவித்து துவக்கப்பட்ட 'ஏப்ரல் 6 இளைஞர் இயக்கம்' என்ற ஃபேஸ் புக் குழுமத்தின் ஸ்தாபகர்களில் இந்த அஸ்மா மஹ்ஃபூசும் ஒருவர்.



Friday 11 February 2011

தஹ்ரீர் சதுக்கத்தில் கொண்டாட்டம் : Latest Photo Updates

3 தசாப்த சர்வதிகாரத்திற்கு எதிராக நடைபெற்ற 18 நாள் போராட்டத்தின் வெற்றியை எகிப்தியர்கள் தஹ்ரீர் சதுக்கத்தில் கொண்டாடும் புகைப்படங்கள்
 Reuters இடமிருந்து...

3 தசாப்த முபாரக் ஆட்சி முற்றுப் பெற்றது!



ஹுஸ்னி முபாரக் இன் பதவி விலகலை கைரோவில் உள்ள ஜனாதிபதி மாளிகை முன் கொண்டாடும் மக்கள்

எகிப்து ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக் தனது பதவியை இராஜனாமா செய்துள்ளதாக எகிப்திய உப அதிபர் உமர் ஸுலைமான் அரச தொலைக்காட்சியில் எகிப்து மக்களுக்கு அறிவித்தார். மேலும் அதிகாரங்கள் அனைத்தும் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டிருக்கின்றன.

Photos: முபாரக்கின் அரண்மனை ? முப்பது வருஷம் போதுமா? இன்னும் காலம் வேணுமா?

சவூதி அரேபியா - முதலாவது அரசியல் கட்சி ஆரம்பம்!


சவூதியில் முதலாவது உருவாகியிருக்கும் அரசியல் கட்சியின் செயற்பாட்டாளர்கள்

அரபு நாடுகளில் ஏற்பட்டு வரும் மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து, சவூதி மன்னனின் ஷரீஆவிற்கு மாற்றமான, அமெரிக்க, இஸ்ரேலிய நலன்சார்ந்த அரச சிம்மாசனமும் ஆட்டங்கண்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் கட்சிகளுக்கு அனுமதியில்லாத அந்த சவூதி நாட்டில் முதலாவது அரசியல் கட்சியொன்று உருவாகி இருப்பதாக ஏஎப்பி செய்தி நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இஸ்லாமிய உம்மாஹ் கட்சி என்ற பெயரில் உருவாகியிருக்கும் அந்தக் கட்சியின் செயற்பாட்டாளர்கள், சவூதி மன்னன் அப்துல்லாஹ்விற்கு இந்தத் தகவலை அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்திக்கின்றார்கள்.

''ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்குவதற்கு 5000 பவுன்ட்ஸ் வழங்கினார்கள்" - ஒரு கைதியின் வாக்குமூலம்


கடந்த வாரம் எகிப்தின் ஆர்ப்பாட்டக்காரர்களை தஹ்ரீர் சதுக்கத்திற்குள் புகுந்து தாக்கிய முபாரக்கின் ஆதரவாளர்களைப் பற்றி கேள்வியுற்றிருப்பீர்கள்.

அவர்கள் யார்? உண்மையில் முபாரக் போன்ற அடக்கு முறை ஆட்சியாளனுக்கு ஆதரவாக பொதுமக்கள் எழுவார்களா?

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பல குற்றவாளிகளை வெளியே எடுத்து, அவர்களுக்குப் பணத்தை வழங்கி ஆர்பாட்டக்காரர்களை தாக்குவதற்கு முபாரக் அரசும்அதன் அடிவருடிகளாக இருக்கும் எகிப்தின் பாதுகாப்பு அதிகாரிகளும் உத்தரவிட்டிருக்கின்றார்கள்.

தாக்குதலுக்கு வந்த அந்த சிறைக் கைதிகளில்ஒருவரைப் பிடித்துக்கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், அந்தக் கைதியின் வாயிலாகவே உண்மையை உலகறியச் செய்திருக்கின்றார்கள்.

இணைப்பை கிளிக் செய்து அந்த வீடியோவைப் பாருங்கள்.

http://observers.france24.com/content/20110204-i-was-paid-5000-pounds-wreak-havoc-cairo-protests-egypt-mubarak-baltgias

Thursday 10 February 2011

எழுச்சிக்காக இன்னுயிர் நீத்த எகிப்திய கலைஞன்.



அஹ்மத் பாஸியூனி !

எகிப்தின் அடக்குமுறையை எதிர்த்து எழுந்த அந்தப் பேரலயைில் அவனும் ஒரு மௌனப் புயலாய் மறைந்து தான் இருந்தான்.

எகிப்தின் எழுச்சிக்குப் பின்னால் உலக ஊடகங்கள் அடக்கி வாசிக்கும் ஓர்  உண்மை இருக்கிறது. அது அடித்தட்டில் அமுங்கிக் கிடக்கிறது.

அது இந்த எழுச்சிக்குப் பின்னால் இருக்கும் இலத்திரனியல் ஆயுதமேந்திய ஓர் இளைஞர் படை. அதன் பெயர் 'ஏப்ரல் 6 ' போராட்டக்குழு.

மேற்குலகின் கைக்கூலியான அல்பராதியும், மத்திய கிழக்கின் அரபு ராஜாக்களுக்கு கூஜா தூக்கிக் கொண்டிருக்கின்ற எகிப்தின் எதிர்க்கட்சியும் ஆழ்ந்து உறங்கும் போது... ''ஏப்ரல் 6 " என்ற இளைஞர் இயக்கம் தான் மக்களைத் தட்டி எழுப்பி தஹ்ரீர் சதுக்கத்திற்கு அணியணியாய் அழைத்து வந்தது.

தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்டெழுந்த அந்த "ஏப்ரல் 6 " டிஜிட்டல் புரட்சியின் அங்கமாகத்தான் அவனும் அடையாளமானான்.

இலட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில்....

அஹ்மத் பாஸியூனி என்ற

புரட்சிக்குப் பூ தூவிய அவனை மட்டும் எதிரிகளின் துப்பாக்கி எப்படி இனம் கண்டுக்கொண்டது?

அவனது நெற்றியைக் குறி பார்த்து
நேர்த்தியாய் வைக்கப்பட்டிருந்தது அந்தத் துப்பாக்கிச் சூடு.

புகைப்படக் கருவியோடு அமைதியாக நிராயுதபாணியாக நின்றுக்கொண்டிருந்த அவனை அடக்குமுறையின் கொடிய கரங்கள் அடையாளம் கண்டன.

புரட்சிக்காக இன்னுயிர் நீத்த முதலாவது எகிப்தின் கலைஞனாக அவன் புதைக்கப்படுவான் என்று நினைத்திருக்கவே மாட்டான்.

அவன், மக்கள் பலம் எழுந்துக் கொண்டிருந்த தஹ்ரீர் சதுக்கத்தில்
விழுந்துபோன முதலாவது காட்சி ஊடகக் கலைஞன்.

அஹ்மத் பாஸியூனி!

முபாரக்கின் ஆட்சியில் மூன்று தசாப்தங்களாய் முடங்கிப்போயிருந்த மானுடத்தை மீட்டெடுக்க மிருதுவான தனது கலையுணர்வால் அவன் கற்பனைக் கோட்டைகளைக் கட்டியிருக்கிறான்.

காட்சி ஊடக கலைஞனான அஹ்மத் பாஸியூனி கலைவடிவங்களை படித்திருக்கிறான். படைத்திருக்கிறான். படிப்பித்திருக்கிறான்.

கலை வடிவங்களுடே சுதந்திர காற்றை சுவாசிக்க அவனது மாணவர்களுக்கும் கற்றுக்கொடுத்திருக்கின்றான்.

ஓவியன், பாடகன் என்று பல துறைகளில் தடம் பதித்த அஹ்மத் பாஸியூனி எகிப்தின் புகழ்பெற்ற இளம் கலைஞராக திகழ்ந்தவன்.

தனது முதுகலைமானி பட்டப்படிப்பிற்காக மின்னியல் கலை வடிவம் தொடர்பான ஆய்வை தொடந்திருந்த வேளையில் எகிப்து அவனை இழந்திருக்கிறது. எழுச்சி அவனைப் பிரிந்திருக்கிறது.

அடக்குமுறையை வெறுத்து புரட்சியை நேசித்த அஹ்மத் பாஸியூனி என்ற கலைஞன் தன் கனவுகளோடு மறைந்திருக்கிறான்.

அவன் தனது பேஸ் புக்கில் இறுதியாக பதித்த வார்த்தைகள்
"If they want war, we want peace. We are better: I’ll practice restraint till the end."


அல்ஜீரியா: தூனிசிய பாணியில் தீக்குளிப்பு


அல்ஜீரியாவின் வடக்கு நகரமான பாலிதாவில் பொலிசாரின் நடவடிக்கையை எதிர்த்து ஓர் இளைஞர் தன்னைத்தானே தீ மூட்டிக்டகொண்டுள்ளார்.

25 வயதான இந்த இளைஞன் தனது முறைப்பாட்டை  பொலிஸார் ஒழுங்காக விசாரணை நடாத்தாத காரணத்தினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனக்குத் தானே தீமூட்டிக்கொண்டிருப்பதாக பிரஸ் ரிவி இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

தூனிசியாவில் ஓர் இளைஞனின் மரணம் அந்த நாட்டு தலைவனை நாட்டை விட்டே ஓட வைத்தது. எகிப்தில் பொலிசாரின் தாக்குதலுக்கிலக்காகி மரணித்த  ஒரு இளைஞனுக்காக தஹரீர் சதுக்கத்தில் அணி திரண்ட இளைஞர்கள் அந்த நாட்டையே இன்று செயலிழக்கச் செய்திருக்கின்றனர்.

அல்ஜீரியாவின் அடக்குமுறை ஆட்சி தொடரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களினால் அதிர்ந்து போக வாய்ப்புமிருக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகரமான அல்ஜியர்ஸில் உள்ள தொழில் வாய்ப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் முன்னால் தொழிலற்ற நூற்றுக்கணக்கானோர் அணிதிரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு துணைபோன அரபு நாடுகளில் உள்ள அடக்குமுறை ஆட்சியும், ஊழல், பட்டினி,வேலை வாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகள் மக்களை போராட்டத்திற்கு தள்ளியிருக்கிறது.

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...