Monday, 7 March 2011

“கதாபியை சுட்டுக்கொல்லுங்கள்!” யூசுப் அல் கர்ளாவியின் கன்றாவித்தனமான பத்வா!


கதாபியை சுட்டுக்கொல்லுங்கள்!யூசுப் அல் கர்ளாவியின் கன்றாவித்தனமான பத்வா!


கர்தாவியின் அமெரிக்க, அரபு மன்னர்களுக்குச் சார்பான அடுத்த காய் நகர்த்தல் “பத்வா”வாக வெளிவந்திருக்கிறது.

கதாபியை சுட்டுக்கொல்லுங்கள்!

இது லிபிய மக்களின் போராட்டத்தை ஆதரித்து கத்தாரிலே மௌட்டீக மன்னர் ஆட்சியின் நிழலிலே வாழ்கின்ற கர்ளாவி வெளியிட்ட அனல் பறக்கும் பத்வா.


இந்த பத்வாவின் இரகசியம் என்ன?

இன்று அரபுநாடுகளில் மக்கள் போராட்டம் எழுச்சிபெற்று வருவதால், பக்கத்து நாட்டு மன்னர்கள் குலை நடுங்கிப்போயுள்ளனர்.
தூனிசியாவிலிருந்து எகிப்துக்கு சென்று லிபியாவை அடைந்திருக்கிறது இந்தமக்கள் போராட்டம்.

இஹ்வான்கள் பலரைக் கொன்ற எகிப்தின் முபாரக்கிற்கும், தூனிசியாவின் பின் அலீக்கும் வழங்காதகொலைபத்வாவை கர்ளாவி ஏன் கத்தாபிக்கு மட்டும் வழங்கினார்?


இதில் உள்ள அரசியல் பின்னணி என்ன?

சமகாலத்தில் முஸ்லிம் உம்மாவை துவம்சம் செய்துக்கொண்டிருக்கும் சக்திகளுக்கு எதிராக கர்தாவி ஏன் இத்தகைய பத்வாவை இதுவரை வெளியிடவில்லை?


அமெரிக்க, இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு எதிராக வெறுமனே அந்த நாடுகளின் பொருட்களை பகிஷ்கரிக்கும் படி பத்வா வழங்கும் இவர், முழு உலகும் எதிர்த்து நின்ற இஸ்ரேலின் காஸா தாக்குதலுக்காகவும், பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்களை பலியெடுத்த ஈராக்கிய அக்கிரமிப்பிற்காகவும், அந்தந்த நாட்டுத் தலைவர்களுக்கு எதிராக ஏன் இந்த பத்வாவை வெளியிடவில்லை.

மற்றும், ஈராக்கை ஆக்கிரமிப்பதற்காக, தனது சொந்த இனத்தை அழிப்பதற்காக பல ஆயிரம் கி .மீற்றர்களுக்கு அப்பால் இருக்கும் அமெரிக்க இராணுவத்திற்கு சவூதி, கத்தார், குவைத் போன்ற அரபு பூமியை தாரைவார்த்துக் கொடுத்ததலைவர்களுக்கு, அந்த நாட்டின் மன்னர்களுக்கு எதிராக ஏன் இப்படியான ஒரு பத்வாவை இந்தக் கர்தாவி வெளியிடவில்லை.

அதையும்விடுவோம்,

எகிப்திலும் தூனிசியாவிலும் மக்களின் போராட்டங்களுக்கு முகம்கொடுக்க முடியாமல் பின் அலீயும், முபாரக்கும் ஓட்டமெடுத்தபோது அவர்களுக்கு தஞ்சம் கொடுத்த்து யார்? சவூதி அரேபியாதானே? அநீதியை இழைப்பவனும், அவனை பாதுகாப்பவனும் சமம் என்றால் சவூதி மன்னர் அப்துல்லாஹ்விற்கு எதிராகவும் பத்வா வெளியிடப்பட வேண்டுமே?

கர்ளாவி இதனை ஏன் செய்யவில்லை?

அரபு ஆட்சியாளர்கள் அத்தனைப் பேரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே! இதில் ஒருவர் மற்றவரைவிட வித்தியாசமானவர் அல்லர்.

கர்ளாவி, கதாபிக்கு எதிராக வழங்கிய பத்வாவின் பின்னணியிலிருக்கும் அமெரிக்க சார்பு பூகோள அரசியலை (Geopolitic) அலசுவதே இதன் நோக்கமாகும்.

அரபு மக்களின் போராட்டப் பின்னணியைப் கொஞ்சம் பார்த்து விட்டு கர்தாவியின் அமெரிக்க சார்பான பத்வாகாய் நகர்த்தலை ஆராய்ந்து பார்ப்போம்.

பல தசாப்தங்களாக, தொடராக அடக்கு முறை ஆட்சி செய்து, அந்த நாட்டு மக்களின் மனித உரிமைகளை நசுக்கி, மக்களின் சொத்துக்களைச் சூறையாடி ஏகாதிபத்திய சக்திகளுக்கு தனது நாட்டை தாரைவார்த்துக் கொடுத்து உலக ஆசைகளுக்கு விலை போன எதேச்கதிகார சக்திகள்தான் இந்த அரபு மன்னர்கள்.

தூனீசியாவில் அநீதிக்கு எதிராகதன் உயிரையே மாய்த்துக் கொண்ட போஅஸீஸி என்ற இளைஞனின் மரணத்தின் அதிர்வே அரசியல் சுனாமியாகி அண்டை நாடுகளை இன்று ஆட்டங்காண வைத்திருக்கிறது.

எகிப்தில் அஸ்மா மஹ்பூழ் என்ற ஓர் இளம் யுவதிதான் முபாரக்கின் அடக்குமுறை ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வீதிக்கு இறங்கி வரலாறு படைத்தார்.

கர்ளாவி போன்ற அதிஉயர் வாய் வீச்சு மேதைகள் கத்தாரில் அரபு மன்னர்களின் அரவணைப்பில், கத்தாரின் ஜாஹிலிய்ய தகதகப்பில் கண்ணயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த வேளை,

எகிப்தில் என்ன நிகழ்ந்த்து?

“…ஆண்கள் இருந்தால் தஹரீர் சதுக்கத்திற்கு என்னோடு வாருங்கள். முபாரக்கின் அடக்கு முறைக்கும் அநியாயத்திற்கும் எதிராக அணிதிரண்டு குரல் கொடுப்போம்”  என்ற அஸ்மா மஹ்பூழ் என்ற இளம் பெண்ணின் அறைகூவலுக்கு விடைகொடுத்த எகிப்திய மக்கள் வீதிக்கு இறங்கி முபாரக்கை விரட்டி அடித்தனர்.


வேடிக்கை என்னவென்றால்,

தூனிசியாவின் போஅஸீஸியையும், எகிப்தின் அஸ்மா மஹ்பூழையும் ஒளித்து மறைத்து வைத்துவிட்டு, தூசு படிந்த தமது அரசியல் சிந்தனையை தட்டி எடுத்துக்கொண்டு அரங்கிற்கு வந்துள்ளனர். மக்களின் புரட்சிக்கு உரிமை கோர பலர் முண்டியடித்துக் கொண்டு முன் வந்திருக்கின்றனர்.

இஹ்வானுல் முஸ்லிமூன், ஹிஸ்புத் தஹ்ரீர் போன்ற, அரபு மன்னர்களினதும், மேற்குலகின் அனுசரணையில் வாழும் இயக்கங்கள் புரட்சியைப் பிரசவித்தவர்கள் தாங்கள்தாம் என்று பிரசாரம் செய்கின்றன.

யாரோ பெற்ற பிள்ளைக்கு தகப்பன்களாக தமது பெயர்களைச் சூட்டிக் கொள்ளும் அசிங்கமான , அவலமான நிலைக்கு இந்த அமைப்புகள் தள்ளப்பட்டிருக்கினறன.

தூனிசியாவிலும், எகிப்திலும் இந்த அமைப்புகளின் எவ்வித உதவி, ஒத்தாசை, அனுசரணையுமின்றியே போராட்டங்கள் கருக்கட்டின.

பாம்பும் சாகாமல் கம்பும் உடையாமல்காரியத்தை சாதிக்கின்ற அமெரிக்க, அரபு அரசியல் நலன்சார்ந்த இந்த அமைப்புகளின் கொள்கைகளை மக்கள் நிராகரித்து விட்டதையே அரபுலகின் இன்றைய எழுச்சிகள் எடுத்துக்காட்டுகின்றன.

அடக்கு முறையை தாங்கிக் கொள்ள முடியாது, மக்களாகவே வீதிகளுக்கு இறங்கினார்கள். தலைமைத்துவம் ஒன்று இல்லாமலேயே இந்தப்போரட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இஹ்வானுல் முஸ்லிமூன் என்ற அமைப்பு எகிப்தில் ஷெய் க்ஷஹீத் ஹஸனுல் பன்னாஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்களால் உருவாக்கப்பட்ட எகிப்தில் தூய்மையான இஸ்லாமிய தலைமைத்துவம் ஒன்றை உருவாக்கும் நன்நோக்கில் அமைக்கப்பட்ட அமைப்பு என்பதில் இரண்டு கருத்துக்கு இடமேயில்லை

ஒவ்வொரு இஸ்லாமிய இயக்கமும் அதன் தலைவர்களின் மறைவிற்குப் பின்னர் அமெரிக்க, ரஷ்ய இருபெரும்சக்திகளின் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்குள் நசுக்கப்பட்டிருக்கின்றார்கள், என்பது வரலாறு கற்றுத்தந்த பாடமாகும்.

ஹஸனுல் பன்னாஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மறைவிற்குப் பின்னர் அந்த அமைப்பு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றாற்போல் அரபு ஆட்சியாளர்களினால் எப்படி நெறிப்படுத்தப்பட்டது? எப்படி வளர்க்கப்பட்டது? தேவையான போது எப்படி ஊமையாக்கப்பட்டது என்பதை பின்னோக்கிப் பார்ப்பது இத்தருணத்தில் அவசியமாகும்.

அமெரிக்க, ரஷ்ய வல்லரசுகளுக்கிடையிலான ஆதிக்கப் போட்டியின் வெறித்தனத்தைத் தீர்த்துக் கொள்ள முஸ்லிம்களை ஆயுதமாக பாவித்து தமது இலக்கை அடைய இந்த இரண்டு வல்லாதிக்கச் சக்திகளும் முயற்சி செய்திருக்கின்றன.

மத்திய கிழக்கில் எழுச்சி பெற்று வந்த நாஸரின் தேசிய நலன்சார்ந்த அரசு இஸ்ரேலுக்கும் அமெரிக்காவின் எதிர்கால அரசியலுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று அமெரிக்கா சிந்தித்த காலம் அது.

ஏகாதிபத்தியத்திற்கு விரோதமான ரஷ்ய சார்பு நாஸரின் அரசை வீழ்த்துவதற்கு, அவரோடு இணைந்து போராடி ஆட்சி மாற்றத்தைக்கொண்டு வந்த நாஸரின் அரசியல் போக்கோடு முரண்பட்ட இஹ்வான்களை நாஸருக்கு எதிராகப் பயன்படுத்த அமெரிக்க உளவு நிறுவனமான சீ..ஏ திட்டமிட்டது.

சவூதி அரேபியா ஊடாக இஹ்வான்களுக்கு கசல பணபொருள் உதவிகள் வழங்கப்பட்டன.

உலக முஸ்லிம்களை இலகுவில் ஈர்க்க்க் கூடிய ஜிஹாத் என்ற கருத்தாடலை, தூண்டில் இரையாக்கி அமெரிக்காவும் சவூதியும் வீசிய போது, அந்த்த் தூண்டிலுக்கே இஹ்வான்கள் இரையானார்கள்.


ரஷ்ய அரசியல் ஆதரவு பெற்ற நாஸர் மூர்க்கத்தனமாக இஹ்வான்களின் எழுச்சியை அடக்கினார்.

போராட்டத்தின் உள்ளே இருக்கும் அரசியல் காரணங்களை மறைப்பதற்காக எகிப்தின் நடப்பது உண்மையான இஸ்லாமிய போராட்டம் என்பதை நிரூபிப்பதற்காக சவூதி முழுமூச்சாக பிரசாரப்பணிகளை முடுக்கிவிட்டது


இஹ்வான்களின் நூல்களை, கருத்துக்களை எல்லா நாடுகளிலும் விநியோகிக்கும் பொறுப்பை சவூதி அரேபியா மேற்கொண்டது. வாமி (WAMY) என்ற பெயரில் உருவாக்கப்பட்ட நிறுவனத்தின் ஊடாக பல மொழிகளில்  இஹ்வான்களின் இலக்கியங்கள் உலகம் பூராகவும் விநியோகிக்கப்பட்டன.   ஜிஹாதிய உஷ்ணத்தால் உலகம்முழுவதும் இளைஞர்கள் சூடேற்றப்பட்டார்கள்.

நாஸரை வீழ்த்தி விட்டு எகிப்தில் ஏற்படும்மாற்றம் ஏகாதிபத்திஙத்திற்கு சார்பான சவூதி மன்னர் ஆட்சிமுறையை பாதிக்காதவாறு இருக்கவேண்டும் என்பதில் சவூதியும், அமெரிக்காவும் கண்ணும் கருத்துமாகசெயற்பட்டன.

சுருக்கமாக சொல்வதென்றால் சவூதி (Rolemodel) மாதிரியிலான ஒரு அரசை எகிப்தில் உருவாக்கும் திட்டம் ஒன்றுக்குள் இஹ்வான்கள் சிக்கவைக்கப்பட்டார்கள். நாஸர் சார்ந்து நிற்கின்ற இடதுசாரிகள் இறைமறுப்பாளர்கள் என்றும் அமெரிக்க முதலாளித்துவம் ஒன்றே இஸ்லாமிய ஆட்சியோடு சினேகபூர்வமாக செயற்படக்கூடியது என்ற கருத்துக்கள் வேகமாக பரவவிடப்பட்டன.

மத்திய கிழக்கில் இஸ்ரேலை வைத்து தனது அரசியலை நகர்த்தவேண்டும் என்ற நிலையிலிருந்த அமெரிக்கா அதற்கு எதிரான கொள்கையுடைய நாஸரை விரட்டுவதற்கு சவூதியின் உதவியுடன் இஹ்வான்களை ஏவல்நாய்களாக பயன்படுத்தியது.

இஹ்வான்களுக்கெதிராக நாஸரும் ரஷ்யாவின் உதவியைப் பெற்றார். அமெரிக்க, ரஷ்யா போன்ற நாடுகளின் பலத்தை பரீட்சிக்கும் ஆடுகளமாக எகிப்து மாறியது.

பல மோசமான மனித உரிமை மீறல்களையும், கொடுமைகளையும் நிகழ்த்தி தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டார் நாஸர்.

நாஸரின் கொடுமையில் பல இஹ்வான்கள் பலியானார்கள். பலர் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு ஓட்ட்மெடுத்தனர். அப்படி ஓட்டமெடுத்தவர்களை நன்றிக்கடனுக்காக சவூதி, குவைத், கதார் போன்ற அமெரிக்க ஆதரவு நாடுகள் அடைக்கலம் கொடுத்தன

யூசுப் அல்கர்ளாவி கூட எகிப்திலிருந்து அமெரிக்க சார்பான அரபுநாடுகளுக்கு தப்பியோடிய இஹ்வான்களில் ஒருவர்தான்.

இஸ்லாமிய ஆட்சி ஒன்றின் அவசியத்தை நிலைநிறுத்த அல்குர்ஆனின் அறைகூவலை எகிப்தில் முழங்கிய இவர்கள், இன்று எகிப்திற்கு சமனான சிலவேளை அதைவிட மோசமான நிலையில் இருக்கும் அரபுநாடுகளில் வாழ்ந்துக்கொண்டு தனது கிலாபத் குரலை முடக்கிவைத்துக் கொண்டுவாழ்கிறார்கள்.

அரபுகளின் ஜாஹிலிய்யா செயற்பாட்டை அடக்கி வாசித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அல்குர்ஆனின் ஆட்சிதொடர்பான அடிப்படைகள் எகிப்திற்கு மட்டும் தேவையானது என்றநிலையில் போராடிய இவர்கள் அரபுகளின் இஸ்லாத்திற்கு முரணான அட்டகாசத்தை மூடிமறைத்துக் கொண்டுவாழ்கிறார்.

கர்ளாவி வாழ்கின்ற கத்தார்நாடு, அமெரிக்காவின் உல்லாசபுரியாக மாறிவருகின்றது. ரஷ்யாவின் சினேக நாடான எகிப்தை மாற்றபோராடிய இவருக்குகத் தாரைமாற்ற தேவையில்லை. காரணம் அது அமெரிக்காவின் நேசநாடு. சிலவேளை கத்தார் அமெரிக்காவின் எதிரிநாடாக இருந்திருந்தால், கர்ளாவியை அமெரிக்காவும் சவூதியும் கத்தாரின் விடுதலை வீர்ராக இன்று மாற்றியும் இருக்கும்.

பலஸ்தீன் விவகாரத்தில் மட்டும் இஸ்ரேலுக்கு எதிராக பத்வாக்கள் வெளியிட்டு காய்நகர்த்தி வரும் கர்ளாவி, இஸ்ரேலை பண உதவி அளித்து வளர்க்கும் அமெரிக்காவையோ, அமெரிக்காவிற்கு அடிமை ஊழியம் புரியும் அரபு மன்னர்களையோ வெளிப்படையாக ஒரு போதும் கண்டிப்பதில்லை.

ஈராக் முஸ்லிம்களின் கொலைகளுக்கு கொதித்தெழும் கர்ளாவி, அந்தக் கொலைக்களத்திற்கு அமெரிக்கா இராணுவம் செல்லதளம் அமைத்துக் கொடுத்த சவூதியையோ, குவைத்தையோ, கத்தாரையோ கடுமையாக கண்டிப்பதில்லை

அன்று ரஷ்யா சார்புடைய நாஸருக்கு ஜிஹாத் பிரகடனம் செய்த்து போல் இன்று அமெரிக்க, இஸ்ரேல் சார்புடைய அரபு நாட்டுத்தலைவர்களுக்கு எதிராக ஜிஹாத் பிரகடனம் செய்வதில்லை.

அமெரிக்காவையும், சவூதி போன்ற அரபு நாடுகளையும் தவிர்த்து கர்ளாவியின் இஸ்ரேலுக்கு மட்டும் எதிராக விடும் பெயரளவிலான மார்க்கத் தீர்ப்புகள் எவ்வித வலுவுமில்லாமல், வாய்வீச்சாக இருக்கின்றன.

இது இப்படியிருக்க, லிபிய மக்கள் எழுச்சி தொடர்பான கர்ளாவியின் பத்வா மீண்டுமொரு முறை அவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி என்ற விடயத்தை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது.

இவரின் கத்தாபியை தலையில் சுட்டுகொன்றுவிடுங்கள்என்று வீராவேசமான பத்வாவை அமெரிக்க ஊடகங்கள் விறுவிறுப்பாக வெளியிட்டன.

எகிப்து, தூனியா ஜனாதிபதிகள் விடயத்திலும், அவர்களைப் பாதுகாக்க முயற்சி செய்த சவூதி, இஸ்ரேல் விடயத்திலும் உணர்ச்சி வசப்படாத கர்ளாவி, கதாபி விடயத்தில் மட்டும் உணர்ச்சி வசப்பட்டு பத்வா வழங்க்க் காரணம் என்ன என்று புத்தியுள்ள ஒருவரால் புரிந்துக்கொள்ள முடியும்.

எகிப்தும் தூனிசியாவும் அமெரிக்க ஆதரவு நாடுகள். அதன் தலைவர்களான பின்அலீயும், ஹுஸ்னி முபாரக்கும் அமெரிக்க அடிவருடிகள். அவர்கள் முஸ்லிமகளின் எதிரிகளோடு கைக்கோர்த்து காரியமாற்றியவர்கள்.

ஆனால் லிபியாவின் கத்தாபியைப் பொறுத்தவரை அவரின் நிலை வித்தியாசமானது. அவர் அமெரிக்காவின் எதிரியாக இருந்தவர். அமெரிக்காவினால் தண்டிக்கப்பட்டவர்அமெரிக்காவின் கழுகுக் கண்ணில் என்றும் நிலைத்திருப்பவர்.

லிபியா மீதான ஆக்கிரமிப்பு ஒன்றிற்கான தளமாக லிபிய மக்கள் எழுச்சியை உபயோகிக்க மேற்குலகு தயாராகிக்கொண்டிருக்கிறது.

எண்ணெயும், இயற்கை எரிவாயுவும் நிறைந்துள்ள லிபியபூமியை எண்ணி ஆடு நனைவதாக அமெரிக்க ஓநாய் அழும்போது”  கர்ளாவி லிபியா மீதான அமெரிக்க அக்கிரமிப்புக்கான கதையாடலை நியாயப்படுத்தும் உளவியல் பிரசாரத்தை ஆரம்பித்திருக்கிறார்.

கதாபி மீதான அவரின் பத்வா அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு காட்டும் பச்சைக் கொடியாகும்.

எகிப்திலும் தூனிசியாவிலும் இஸ்லாமிய எழுச்சி ஏற்பட்டதாக்க் கொக்கரிக்கும் கர்ளாவி போன்றோர், தூனிசியாலிருந்தும், எகிப்திலிருந்தும் துரத்தப்பட்ட அந்நாட்டுத் ஊழல் மிகுந்த தலைவர்களை சவூதி பாதுகாப்பாகவைத்திருப்பதை ஒருபோதும் கண்டிக்கவில்லை.

அதுமட்டுமல்லாமல், சவூதியும், இஸ்ரேலும் மக்களின் போராட்டத்தை மலுங்கடிக்க முயற்சிகள் மேற்கொண்டன. முபாரக்கை காப்பாற்ற அமெரிக்காவிற்குக் கொடுத்த பலத்த அழுத்த்த்தையும் காளாவி கண்டுகொள்ளாமலேயே இருந்து வந்தார்.

லிபிய போராட்டத்தைப் பொருத்தவரை, கதாபி எதேச்சதிகாரம் கொண்ட அடக்கு முறையாளன் என்பதை இங்கு மறுப்பதிற்கில்லை. ஈராக்கில் சத்தாம் ஹுசைன் என்ற ஒருவரை இராணுவ மயப்படுத்தி தனது அரசியல் தேவைகளை நிறைவு செய்துகொண்ட சவூதியும், அமெரிக்காவும் சதாமை அழிப்பதற்கும் ஓரணி திரண்டன.

ஒரு சதாமை வீழ்த்துவதற்காக நாம் ஒருநாட்டையே பறிகொடுத்தோம். அந்தக் காயம், ரணம் மாறும் முன்பே லிபியா என்ற நாட்டை இழக்க நாம் தயாரில்லை என்ற செய்தியை ஏகாதிபத்திய சக்திகளுக்கும், அதன் எடுபிடிகளாக இயங்கும் போலி இஸ்லாமிய பிரசாரகர்களுக்கும் நாம் எடுத்துச் சொல்லியாக வேண்டும்.

லிபிய மக்களின் போராட்டத்தை அங்கீகரிப்போம். வெளிநாடுகளின் தலையீட்டை முற்றாக நிராகரிப்போம். ஏகாதிபத்திய கைக்கூலிகளின் பத்வாக்களை புறக்கணிப்போம்.

பூகோள அரசியலில் (Geopolitic) சிக்குண்டு இஸ்லாத்தின் போர்வையில் அமெரிக்காவையும், அரபுகளை ஆதரித்து பிழைப்புவாதம் நடாத்தும் பிற்போக்கு சக்திகளிடமிருந்து முழு முஸ்லிம் உம்மாவையும் காப்பாற்ற முன்வருதலே காலத்தின் தேவையாகும்.

13 comments:

 1. i appeciate this post, keep it up.

  ReplyDelete
 2. நல்லதொரு ஆய்வு. இது போன்ற மாற்றுக் கருத்து சமூகத்திற்கு அவசியம்.

  ReplyDelete
 3. கா்லாவி இவ்வளவு கேவலமான நிலைக்கு போய் விட்டாரா? அவரின் துதிபாடும் அஹார் முஹம்மத் நளீமி இந்த அணியில் உள்ளவரா? தேடிப் பார்த்து எழுதுங்கள்.

  ReplyDelete
 4. அஸ்ஸலாமு அலைக்கும்

  ஆய்வு நன்றாக உள்ளது.

  ஆனால் கர்ளாவி அப்படியானதொரு பத்வாவை அதற்கொரு காரணம் சொல்லாமல் வெளியிட்டிருக்க மாட்டார். அந்தக் காரணத்தைக் கண்டுபிடித்து விமர்சிப்பதுதான் நல்ல விமர்சகனுக்கு உரிய பண்பாகும். சகோதரர் நிசார்தீன் எந்த இடத்திலும் அந்தக் காரணத்தை விமர்சிக்காமல் ஊகமாக எழுந்த உணர்வுகளை வெளியிட்டிருப்பது போன்று எனக்குத் தோன்றுகிறது.கர்லாவிக்கு வக்காலத்து வாங்கவில்லை.கர்ளாவி ஆதரவாளர்களின் பாசறையில் நாம் வளரவில்லை என்பதும் நிசார்தீனுக்கு தெரியும். முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் கருத்துக்களை விமர்சிப்பதை விடுத்து உரிய நபரின் தனித்துவத்தை மழுங்கடிக்கும் விதத்தில் எழுதுவது குர் ஆன் சுன்னா ஒளியில் அனுமதிக்கப்படாத வழக்கமாகும்.
  கர்ளாவியை விமர்சிக்கும் இந்தப் போக்கு ஆரம்ப அடிப்படையை கற்றுக் கொண்டிருக்கும் பலருக்கு அவரது எதையுமே வாசிக்கக் கூடாது என்கிற எண்ணம் எழலாம். அது வரவேற்கக் கூடிய முன்மாதிரியாகாது. நிசார்தீன் தான் ஒரு காலத்தில் இயக்கமொன்றில் இலயித்துப் போயிருந்த போது கர்ளாவியின் எழுத்துக்களின் மூலம் கற்ற எந்தவொரு நல்ல விடயமும் இல்லை என்றிருந்தால் பரவாயில்லை எனலாம். அப்படி அல்ல.ஒருவரை விமர்சிக்கும் போது தவறு நேர்ந்துவிட்டால் உரிய நபர் மன்னிக்காதவரை அல்லாஹ் மன்னிப்பதில்லை. கருத்துக்களை விமர்சிக்கும்போது அது போன்ற கருத்துக்கள் ஒருவருக்கு மட்டும் சொந்தமாக இல்லாத காரணத்தினால் அத்தகைய நிலைமை எழுவதில்லை. இறுதியாக ஆக்கம் நல்லதை நாடி எழுதப்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சி அளித்தாலும் தனிநபர் விமர்சனமாகி கர்ளாவியின் சுமைகளையும் நிசார்தீன் சுமக்க வேண்டாமே!

  அஸ்மி ஸாலிஹ்

  ReplyDelete
 5. உலகில் உள்ள மதங்களில் பெண்களுக்கு உயர்ந்த நிலையை வழங்கியிருப்பது இஸ்லாம் மதம். தாயின் பாதத்தின் கீழ் சொர்க்கம் இருக்கிறது என்று முஹம்மது நபியவர்கள் சொன்னார்களாம்.அதனால் இஸ்லாம் மதத்தில் எனக்கு ஆர்வம் இருக்கிறது. ஆனால் உலகம் முழுவதும் நடைபெறும் இஸ்லாமிய பயங்கரவாதத்தைப் பார்க்கும் போது நான் திணறிப்போகிறேன்.
  பத்ர்களம் என்ற இந்த தளத்தை வாசித்தபோது இந்த பயங்கரவாத்ததை மௌல்வி முல்லாக்கள் தான் ஏற்படுத்தியிருப்பதாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. நான் பல முஸ்லிம் மாணவிகளோடு கொழும்பு பல்கலைக்கழகத்தில் கற்ற அனுபவம் இருக்கிறது. நான் கேற்கின்ற கேள்விகளுக்கு ஒழுங்காக பதில் அளிக்காமல் நழுவிப்போகின்ற ஒரு குறையை அவர்களிடம் கண்டேன். எனது அப்பா ஒரு இடதுசாரி அரசியல் பின்புலத்தை கொண்டவர் என்பதால் வாசிப்பும் தேடலும் எனது அறிவை வளர்த்தது. ஏகாதிபத்தியத்தோடு துணைபோகின்ற இஸ்லாத்தை மனஉறுத்தலோடு பார்த்த காலம் ஒன்றும் எனக்கிருந்தது. இந்த தளத்தை பார்த்ததிலிருந்து அது படிப்படியாக குறைந்து வருகிறது.
  நன்றி!

  ReplyDelete
 6. Assalamu alaikum!

  this analysis is somewhat correct.

  But what about hizb ut tahrir.

  You have mentioned that it is supporting america and other colonialists. But it is false. HT is, from its beginning, works for the reestablishment of the khilafah and strongly opposes the arab kings and their leader, america.

  If you want to tell anything about a group, then you should have strong and definite proof. You cannot comment on any group by your speculation.

  wassalam,

  mohammed,
  abc59efg@yahoo.co.in

  ReplyDelete
 7. கடாபி அந்நாட்டு மக்களால் சுட்டு கொல்லப்படவேண்டும் என்று கூறியதற்கு இன்றாவது அர்த்தம் புரிந்தால் சரி. எழுதுவதற்கு முன்னால் கொஞ்சம் தூர நோக்கு சிந்தனையும் அவசியம். அவற்றை வளர்த்துக்கொண்டு பயணம் தொடர வாழ்த்துகள்..

  ReplyDelete
 8. ஷாகிர், அந்த அர்த்தம் என்ன?

  அமெரிக்காவிற்கு வக்காலத்து வாங்கும் கன்றாவி கர்தாவியின் பத்வாவில் நீங்கள் கண்ட நியாயம் என்ன? அறியத்தாரங்கள்.

  ReplyDelete
 9. எகிப்தும் டியூனிஸியாவும் மக்கள் போராட்டாத்தால் வெற்றிகொள்ளப்பட்டது. இறுதிவரை அது ஆயதம் ஏந்தப்படாத மக்கள் போராட்டமாகவே இருந்தது. அது அவ்வாறுதான் இருக்கவேண்டும் என்று கர்ளாவி கூடி வழியுறுத்தினார். இந்த இரண்டு நாடுகளுமே அமெரிக்காவின் அடிவறுடிகள் என்பதை நான் உங்களுக்கு சொல்ல தேவையில்லை. தவறுதலாகவேனும் இந்த மக்கள் போராட்டத்தில் ஆயுதம் கலக்கப்பட்டிருந்தால் நிச்சயம் வெளிநாட்டு படைகள் மக்களுக்கு எதிராக படையெடுத்திறுக்கும். ஏனெனில் எகிப்தில் இப்புரட்சிகளை ஏற்பாடு செய்ததாக கருதப்படும் சகோதரத்துவ அமைப்பு தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பு. எனவே ஆயதம் வெளிப்பட்டிருந்தால் நிச்சயம் அங்கு பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு மக்களுக்கு எதிராக வெளிநாட்டு இராணுவம் களமிறங்கியிருக்கும். எனவே அமெரிக்காவின் அற்புதக் கண்டுபிடிப்பான ஜனநாயகத்தாலே அவர்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது.


  லிபியாவை எடுத்துகொண்டால் அங்குள்ள நிலை முற்றுமுழுதாக மாறுபட்டது. லிபியாவினை கைப்பற்றுவது அல்லது அதனை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பது மேற்கு சக்திகளின் நீண்ட நாள் கனவு (அத உங்களுக்கு சொல்லவா வேணும்) இந்த புரட்சியும் ஜனநாயக ரீதியில் தான் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் லிபிய வரலாற்றில் ஜனநாயகத்திற்கு இடமில்லை என்பதை யாவரும் அறிவர். எனவே கரையோர பிரதேசமான பென்காஸியில் இருந்து ஆயுத போராட்டம் ஆரம்பமானது. ஆனால் கடாபியோ, ஸைபுல் இஸ்லாமோ அதற்கு அஞ்சுவதாக இல்லை. இறுதி மனிதன் உயிருடன் இருக்கும் வரை போராடுவோம் என்றுதான் அவர்களுடைய வாதம் காணப்பட்டது. இந்நிலையில் பல ஐரோப்பிய நாடுகள் பென்காஸியில் இருக்கும் அரசியல் தலைமைகளுடன் தொடர்புகொண்டு கடல் வழியாக தமது இராணுவத்தை அனுப்புவதற்கு கலந்தாலோசித்தது. ஈராக்கிலும் ஆப்கானிலும் நமது சமூகம் பெற்ற அனுபவம் போதாதா. அதற்கு பென்காஸி இடம் கொடுக்கவில்லை.


  ஆனால் இப்போராட்டத்தில் கடாபி வெற்றி பெற வேண்டும் என்பதும் பென்காஸிக்கு பாரிய இழப்புகள் ஏற்படவேண்டும் என்பதான் மேற்குலகின் கனவு. முக்கியமாக இதில் அமெரிக்க அதிக அக்கறையாக இருந்தது. காரணம் கடாபி வெற்றி பெற்றதும் ஒரு கொடுங்கோல் ஆட்சியை கவிழ்க்கும் திட்டத்தில் லிபியாவில் தரையிறங்கலாம் என்ற எண்ணம் தான். எனவே NO FLY ZONE பேச்சுவார்த்தை வரும் போதெல்லாம் அதனை நகர்த்திக்கொண்டே இருந்தது. ஏன் இறுதிவரை உத்தியோகபூர்வமாக NO FLY ZONE அறிவிக்கப்படவில்லை. பிரான்ஸ் தனது படையை முதல் முதலாக அனுப்பி அஸ்ஸாவியாவினை வெற்றிகொண்டு பென்காஸியை நோக்கி புறப்பட்டுக்கொண்டிருக்கும் கடாபியின் படைகளை தாக்கியது. பின்னர் தனது கௌரவத்தை பாதுகாத்துக்கொள்ள அமெரிக்காவும் தனது படைகளை அனுப்பியது. இதுதான் கத..


  இப்ப விஷயத்துக்கு வாறன். இந்த போராட்டத்தில் கடாபி சுட்டுக்கொள்ளப்படவேண்டும் என்பத விட முக்கியமாக விஷயம் என்னன்டா லிபிய மக்களால் சுட்டுக்கொள்ளப்படவேண்டும் என்பதுதான் பொயின்ட். இந்த போராட்டத்தில் ஏனைய நாடுகளின் தலையீடுகள் இருக்கப்படாது என்பது கர்ளாவியின் கருத்து. அதனால்தான் வெளிநாட்டு விமானப்படைகளால் கடாபியின் ஆயுதங்கள் தாக்கப்படுகின்ற போதிலும் பென்காஸியில் இருக்கும் போராளிகள் அவசராமாக தமது படையை ட்ரிபொலி நோக்கி நகர்த்தியுள்ளது. இந்த புரட்சி லிபிய மக்களால் மாத்திரமே வெற்றி கொள்ளப்படனும் என்பதுதான் அவா.. எனவே கர்ளாவியின் கருத்து மிக முக்கியமானதாகவே கருதப்படுகின்றது. (வெளிநாட்டு படைகளின் பிரவேசம் வரமுன்னரே கடாபி கொல்லப்பட்டிருந்தால் மக்கள் புரட்சி வெற்றிபெற்று லிபிய மக்கள் ஆட்சிபீடமேறியிருக்கும். நீங்க எழுதின கட்டுரைய போராளிகள் வாசிச்சிட்டாங்க போல.. கொல்லாம விட்டுடானுங்க.)

  ReplyDelete
 10. ஷாகிர், நான் முன்வைத்த கருத்து கடாபி க்கு கொலை பத்வா கொடுத்த கர்தாவி ஏன் முபாரக்கிற்கு கொடுக்கவில்லை என்பதே! அதற்குரிய காரணம் முபாரக்கும்> பின் அலீயும் அமெரிக்க ஆதரவாளர்கள் . கர்லாவியும் மேற்குலகின் ஆதரவாளர் என்பதே. அதற்கான கடந்த கால அரசியல் நிகழ்வுகளைத்தான் நான் முன்வைத்தேன் . ஆப்கான் தொடங்கி இராக் வரை நடந்த நிகழ்வுகளில் பின்னணியில் செயட்பட்டவர்களின் நயவஞ்சகத்தனத்தை எடுத்துக் காட்டவே நான் முயற்சி செய்தேன்.

  ReplyDelete
 11. என்ன சார் நீங்க. ஏன் அவ்வாறான ஒரு பத்வாவ ஏன் கொடுக்கல என்பததானே நானும் சொல்லியிருக்கன்…

  ReplyDelete
 12. சகோதரர் நிஸார்தீன் அவர்களின் எழுத்துகள் ஆழ்ந்த ஆய்வுக்கும் அவதானிப்புக்கும் பின்னரான கூற்றுகள். லிபியாவின் சமகால நிகழ்வு குறித்த இத்தகைய உண்மயான சிறந்ததொரு விமர்சனத்தை வேறெங்கும் நான் காணவில்லை.

  உண்மையில், லிபியா மீது மேற்குலகம் தாக்குதல்களையும் தடைகளையும் மேற்கொண்டு வரும் இச்சூழல், முஸ்லிம் உலகின் வரலாற்றில் எழுதப்படுகின்ற மற்றொரு துயரம் மிகுந்த துர்ச்செயலாகும். ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் முஸ்லிம்களைக் கொல்பவர்கள், முஸ்லிம்களை அழித்து வரும் இஸ்ரேலுக்குப் பாதுகாப்பு வழங்கி அதற்குப் பக்க துணையாக இருப்பவர்கள் - இத்தகையோரே இன்று லிபியாவிலும் தாக்குதல் நடத்துகின்றனர். தாக்கப்படுவது ஒரு சர்வாதிகாரியாக இருந்தாலும் தண்டிப்பவர்கள் நீங்களாக இருக்கக் கூடாது என்பதுதான் முஸ்லிம் உலகின் சீற்றமாகும். மேற்கு தனது தேசத்தினதும் பிராந்தியத்தினதும் நலனைப் பேணுவதற்காக எடுத்து வரும் பல அவதாரங்களுள் இதுவும் ஒன்றாகும்.

  ReplyDelete
 13. why you would like to critisis great islamic leaders like this.do you know about yusuf al qardavi well.i think you you know well about him and his service to islam.why you call qardavi and ikhwan al muslimoon as american agent without any proof and blind speculation.

  ReplyDelete

ஞானசார தேரர் சிறைச்சாலையில் 'ஜம்பர்' அணிவது பிரச்சினையா?

ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தை வைத்து சிங்கள இனவாதிகள் தமது வழமையான இனவாத பிரசாரத்தை முடுக்கி விட்டுபோராட்டங்களை ஆரம்பித்...