ஆயுத மோதலில் தொடர்புபடாத கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனரா?இலங்கையில் வெலிக்கடை சிறைச்சாலையில் வெள்ளிக்கிழமை நடந்த ஆயுதமோதல்களில் கொல்லப்பட்டதாக அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட கைதிகளில் சிலர், மோதல் முடிந்த பின்னர் சிறைக்கூடத்துக்கு வெளியில் அழைத்துவரப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக அவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர்.
மோதல்களில் சம்மந்தப்படாது சிறைக்கூடங்களுக்குள் ஒதுங்கியிருந்த சில கைதிகள் காலை 4 மணிக்குப் பின்னர் வெளியில் கூட்டிவரப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பிபிசி தமிழோசையிடம் பேசிய தாய் ஒருவர் குற்றஞ்சாட்டுகிறார்.
சிறைச்சாலை கலவரம் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்ட இரவு 11.30 மணிக்குப் பின்னரும் தமது மகன் தம்மோடு தொலைபேசியில் உரையாடியதாகவும், அவர் இருந்த சிறைக்கூடம் பாதுகாப்பாக மூடப்பட்டுள்ளதால் தமக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று அவர் கூறியதாகவும் அந்த தாய் தெரிவித்தார்.
ஆட்டோவில் துப்பாக்கிகளுடன் தப்பிச்செல்ல வந்த கைதிகளை சுட்டுக்கொன்றதாக அரசு கூறுகிறது
தனது மகனுடன் அதே சிறைக்கூடத்தில் இருந்த மற்றக் கைதிகளும் தமது குடும்பங்களுடன் அதிகாலை 4 மணிவரை தொடர்பில் இருந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சிறைக்கூடத்துக்குள் பாதுகாப்பாக இருந்த கைதிகள் அதிகாலை 4 மணியளவில் வாக்குமூலம் அளிப்பதற்காகச் சென்றுள்ளதாகவும் அதன்பின்னர் காலை துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடனேயே அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் பிபிசியிடம் பேசிய அந்த தாய் தெரிவித்தார்.

அரசு மறுக்கிறது


இதேவேளை, மோதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 27 கைதிகளில் சில கைதிகளின் உறவினர்கள் முன்வைக்கின்ற இவ்வாறான குற்றச்சாட்டுக்களை இலங்கை சிறைச்சாலைகள் விவகார அமைச்சு நிராகரித்துள்ளது.
இரவு 12 மணிக்குப் பின்னரும் துப்பாக்கிகளுடன் இருந்த கைதிகளுடன் மோதல்கள் தொடர்ந்ததாகவும் காலை 4 மணிக்குப் பின்னரே நிலைமை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்ததாகவும் சிறைச்சாலைகள் விவகார அமைச்சின் செயலாளர் ஜி.எஸ்.விதானகே பிபிசியிடம் கூறினார்.
துப்பாக்கிகளை ஒப்படைக்க மறுத்து தொடர்ந்தும் மோதலில் ஈடுபட்ட கைதிகளே இராணுவ படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஆயுதமோதலின் போது சிறப்பு அதிரடிப்படை மற்றும் கமாண்டோ அணியினர் தற்பாதுகாப்பு என்பதையும் தாண்டி செயற்பட்டுள்ளதாகவும் அரசு இவ்வாறான அசம்பாவிதங்களின் போது இராணுவ உபாயங்களையே கையாள்வதாகவும் மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோசலிசக் கட்சி உள்ளிட்ட எதிரணிக் கட்சிகள் பலவும் குற்றஞ்சாட்டியுள்ளன.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இந்த சிறை வன்முறை குறித்து நாடாளுமன்ற மட்டத்திலான விசாரணை அவசியம் என்று வலியுறுத்தியிருக்கிறது.
(பிபிஸி)

Comments

Popular posts from this blog

ஆரியவதியும் சவுதியின் ஆணி அறைதலும்!

அதிகரிக்கும் பள்ளிவாசல்களும் அழிக்கப் படும் ஒற்றுமையும்.

மனித நேயம் கொண்ட ஒரு ஜனாதிபதி ஜோசே முஜிகா!