Sunday, 11 November 2012

படங்கள் - கொழும்பு வெலிக்கடை சிறை -விபரீதம்!







வெலிக்கடை சிறைச்சாலை மோதல்களுக்கு முக்கிய இடமாக குறிக்கப்படும் இலங்கை தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள 1880களில்  அப்போதைய ஆங்கில ஆட்சியாளர்களினால் அமைக்கப்பட்ட சிறைச்சாலையாகும்.

 ஊடகங்களில் பேசப்பட்ட இன்றும் பேசப்படுகின்ற  ஒரு சிறைச்சாலையாக இருப்பதற்கு அதில் இடம்பெறும் கலவரங்கள் எடுத்துக்காட்டாக அமைகின்றன.

1983ம் ஆண்டு ஜுலைக்கலவரத்தின் போது இந்தச் சிறைச்சாலையில் கைதிகளாக இருந்த இருபதுக்கும் அதிகமான தமிழ்க் கைதிகள் சிங்கள கைதிகளினால் கொடுரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் முழு உலகையும் வெலிக்கடை சிறைச்சாலையின் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தது.

நேற்றைய சம்பவம் கூட மற்றுமொரு முறை வெலிக்கடையை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.

 நேற்றைய  மோதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகளுக்கு பொறுப்பான அமைச்சர் சந்திரசிறி கஜதீர பாராளுமன்றத்தில் நேற்று அறிவித்தார்.

குறித்த மோதலில் கொல்லப்பட்ட 16 சடலங்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், 11 சடலங்கள் இன்று மீட்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு வெலிக்கடைச் சிறையில் கைதிகளுக்கும் விசேட அதிரடிப் படையினருக்கும் இடையில் நேற்றுமாலை பயங்கர சண்டை வெடித்தது. இந்தக் கலவரத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

32 பேர் காயமடைந்தனர். இவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் அனில் ஜெயசிங்க தெரிவித்தார்.

சிறைச்சாலை ஆயுதக் களஞ்சியத்தைக் கைதிகள் கைப்பற்றி துப்பாக்கிகளை எடுத்து   விசேட அதிரடிப்படையினருடன் கடும் சண்டையில் ஈடுபட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நவீன ஏ.கே. ரக துப்பாக்கிகளை ஏந்தியபடி கைதிகள் சிறைக்கூரையில் ஏறிநின்றனர்.

இந்த மோதலில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று நள்ளிரவு வரை 13 சடலங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டிருந்தன என்று அனில் தெரிவித்தார். அவர்களில் குறைந்தது 11 பேர் கைதிகள். தப்பிச் செல்ல முற்பட்ட போது சில கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்றார்கள் அதிகாரிகள்.
நேற்று மதியம் ஒரு மணியளவில் வெலிக்கடை சிறைச்சாலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் திடீர் சோதனையில் இறங்கினர். இதன் போது கைதிகளின் பெருந்தொகையான கையடக்கத்தொலைபேசிகளை அவர்கள் மீட்டனர். 

வழக்கமாக இத்தகைய தேடுதலில் சிறைக் காவலர்களே ஈடுபடுவர். கைதிகளின் கைகள் விலங்கிடப்பட்டு சோதனையிடப்பட்டதை கைதிகள் எதிர்த்ததாகவும் அதன் பிறகே இந்த முறுகல் நிலை உருவாகியிருக்கின்றது.

ஆத்திரமடைந்த கைதிகள் முதலில் விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் மீது கற்களை வீசித் தாக்கத் தொடங்கினர். இருதரப்புக்கும் இடையில் சண்டை வெடித்தது.
கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள் வெலிக்கடைச் சிறையிலுள்ள ஆயுதக் களஞ்சியத்தைக் கைப்பற்றி அங்கிருந்த பெருமளவான துப்பாக்கிகளைத் தம்வசப்படுத்தினர் என்று பொலிஸார் கூறினர்.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுத் தாக்குதலை நடத்தினர். எனினும் கட்டு மீறிய சண்டையால் மேலும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.

கைப்பற்றிய ஆயுதங்கள் சகிதம் சிறைச்சாலை கூரைமீது ஏறிநின்றவாறு கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டதுடன் அதிரடிப் படையினரை நோக்கி சரமாரியாகத் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்ததால் வெலிக்கடைப் பகுதி பெரும் சண்டைக்களம் போலாகியது.
கைதிகளில் தொடர் சூட்டை அடுத்து கவச வாகனங்கள் மூலம் அதிரடிப்படையின் சிறையின் சிறையினுள் போனதை சாட்சிகள் கண்டுள்ளனர். ஒரு கட்டத்தில் 4 கைதிகள் கூரையிலிருந்து ஒரே நேரத்தில் சுட்டுள்ளனர். நிலைமை கட்டு மீறியதால் சிறைச்சாலைக்கு எதிரிலும் “பேஸ் லைன்’ பிரதான வீதியில் தெமட்டகொட வரையில் போக்குவரத்து நேற்று நள்ளிரவு வரை தடைப்பட்டிருந்தது.

நிலைமையைக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவதற்காக விசேட அதிரடிப்படையினருக்கு உதவியாக இராணுவத்தினரும் அழைக்கப்பட்டனர். ஆயுதங்களுடன் கூரையில் நின்ற கைதிகளை சுட்டு வீழ்த்துவதற்காக குறிபார்த்து சுடும் படையினரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்தக் கலவர நிலையைப் பயன்படுத்தி பல கைதிகள் சிறைச்சாலை மதிலை உடைத்து தப்பியோடியுள்ளனர் என்றும் அதிகாரிகள் அஞ்சுகின்றனர். ஓட்டோ ஒன்றில் அவ்வாறு தப்ப முயன்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நேற்றிரவு 9.30 மணிவரை சிறைச் சாலையினுள் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருந்தன.


9.40 மணிக்கு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாகப் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். சண்டையில் காயமடைந்தவர்களில் 14 பேர் விசேட அதிரடிப்படையினர் என்று பொலிஸார் கூறுகின்றனர். படுகாயமடைந்த அதிரடிப்படையினர் ஒருவருக்கு அவசரமாக இரு சத்திரசிகிச்சைகள் செய்யப்பட்டன. படையின் பிரதிப் பொறுப்பதிகாரியான ஆர்.எம். ரணவணவும் சுட்டுக்கு இலக்காகி காயமடைந்தார் .

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...