Saturday, 28 July 2012

கொழும்பில் பள்ளிவாசல், குடியிருப்புகளை அப்புறப்படுத்துவது பாரிய பிரச்சினை : ஹக்கீம்


கொழும்பு 7 எம்.எச்.எம். அஷ்ரப் மாவத்தையில் அமைந்துள்ள பள்ளிவாசலையும், அதன் அருகில் உள்ள சில குடியிருப்புகளையும் வேறு இடத்துக்கு அப்புறப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுமானால் அது பாரிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் என நீதி அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பிட்ட ஜும்மா பள்ளிவாசலும், அதன் அருகில் அமைந்துள்ள வீடுகளும் நீண்டகாலமாக அங்கு இருந்து வருவதாக தெரிவித்த அமைச்சர் ஹக்கீம், கொழும்பு கொம்பனித்தெரு போன்ற இடங்களிலிருந்து மக்கள் குடியிருப்புகளை அகற்றி அங்கு வாழ்ந்த மக்களை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவாக பாரிய பிரச்சினைகள் தலை தூக்கியதாகவும் கூறினார். இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் விலாடிமிர் பீ. மிக்ஹெலோ அமைச்சர் ஹக்கீமை அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடிய போதே, அமைச்சர் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.

பிரஸ்தாப பள்ளிவாசலுக்கும் அதன் அருகிலுள்ள குடியிருப்புக்கும் பக்கத்தில் உள்ள காணியில் ரஷ்யாவின் நான்கு மாடிகளைக் கொண்ட புதிய தூதரகக் கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் நவீன வசதிகள் அனைத்தையும் உடையதாக அமையவிருப்பதாகவும் தூதுவர் கூறினார். இருபது குடும்பங்கள் வரை வசிக்கும் அங்குள்ள வீடுகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளவை என்றும் அவற்றின் எல்லை வேலிகள் உத்தேச ரஷ்ய தூதரக கட்டிடத்திற்கு மிகவும் நெருக்கமாகவுள்ளதால் பாதுகாப்பு பிரச்சினைகளும் ஏனைய அசௌகரியங்களும் ஏற்படும் என்றும் தூதுவர் தெரிவித்தார்.

பள்ளிவாசலை வேறு இடத்தில் அமைப்பதற்கும், தமது வசிப்பிடங்களை இழப்போருக்கு வேறிடத்தில் அவற்றை நிர்மாணித்துக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தூதுவர் கூறியபோது, விசனம் தெரிவித்த அமைச்சர் ஹக்கீம் கொம்பனித்தெரு போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய முயற்சி பாரிய பிரச்சினைகளை தோற்றுவித்தாக தூதுவரிடம் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பு செயலாளர் திரு. கோதபாய ராஜபக்ஷவுடன் தாம் இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தூதுவர் கூறினார்.

எவ்வாறாயினும், அந்தப் பள்ளி வாசலின் நிர்வாகிகளுடனும், அங்கு வாழும் மக்களுடனும் கலந்துரையாடாமல் எந்த விதமான முடிவுக்கும் வரக்கூடாது என்றும் அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஜனநாயகம், மனித உரிமைகள் என்பன பற்றி தமது நாடு அதிக கரிசனையுடன் செயல்பட்டு வருவதாகக் கூறிய தூதுவர் சிறுபான்மை மக்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் தமது நாடு அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் சொன்னார்.

ரஷ்யாவில் இருபது மில்லியன்களுக்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்ந்து வருவதாகவும், சோவியத் ரஷ்யாவில் இருந்து பிரிந்துசென்று தனித்தனியாகவுள்ள நாடுகள் சிலவற்றில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும், அதிக எண்ணிக்கையிலும் காணப்படுகின்றனர் என்றும் தூதுவர் கூறினார். சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தம் பற்றியும் அவர் கவலை தெரிவித்தார்.
_

No comments:

Post a Comment

ஞானசார தேரர் சிறைச்சாலையில் 'ஜம்பர்' அணிவது பிரச்சினையா?

ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தை வைத்து சிங்கள இனவாதிகள் தமது வழமையான இனவாத பிரசாரத்தை முடுக்கி விட்டுபோராட்டங்களை ஆரம்பித்...