யாழ் குடாநாட்டில் ஐந்து பொதுமக்களுக்கு ஒரு இராணுவத்தினர் இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மறுத்துள்ளார்.
யாழ் குடாநாட்டில் 5 இலட்சம் பொதுமக்கள் உள்ளனர். ஆனால், அங்கு 10 ஆயிரம் இராணுவ வீரர்களே உள்ளனர். இந்த நிலையில், குடாநாட்டிலுள்ள ஐந்து பொதுமக்களுக்கு ஒரு இராணுவத்தினர் வீதம் உள்ளதாக கூறப்படும் தரவு முற்றிலும் தவறானது என்றார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை பாதுகாப்பு செயலமர்வொன்று நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட செயலமர்வைப்போன்று இவ்வருடமும் செயலமர்வொன்று நடத்தப்படவுள்ளது. இது தொடர்பாக விளக்கமளிக்கும் நோக்கில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே இராணுவத் தளபதி இதனைத் தெரிவித்தார்.
யாழ் குடாநாட்டிலுள்ள பொதுமக்கள் என்றுமே இராணுவத்தினரையே நம்பியுள்ளனர். இராணுவத்தினர் அங்கிருந்து முற்றாக வெளியேறுவதை அவர்கள் விரும்பவில்லை. யாழ் மாவட்ட வீதிகளில் இராணுவத்தினரின் பிரசன்னம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இவர்கள் முகாம்களுக்குள்ளேயே முடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நல்லிணக்கத் தேவைகள் உள்ளிட்ட மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றவேண்டுமென்ற பட்சத்திலேயே இராணுவத்தினர் உதவிக்கு வருவார்கள் என்றும் இராணுவத் தளபதி கூறினார்.
யாழ் குடாநாட்டிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றவேண்டும் என ஒருபோதும் அங்குள்ள மக்கள் கூறியதில்லை; கூறப்போவதுமில்லை. அவர்களுக்கு ஏதாவது அவசர தேவைகள் இருந்தால் அவர்கள் உடனடியாக இராணுவத்தினரையே நாடி ஓடி வருகிறார்கள். வேறு எங்கும் செல்வதில்லை யென்றும் இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் தெரிவித்தார்.
நன்றி தினகரன்
No comments:
Post a Comment