Monday 30 July 2012

மன்னார் நீதிமன்றத்தாக்குதல் சம்பவம்-கைது செய்யப்பட்ட 13 பேரை விடுதலை செய்யுமாறு நீதி அமைச்சரிடம் கோரிக்கை!



மன்னார் நீதிமன்றத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மன்னாரைச் சேர்ந்த 13 பேரையும் விடுதலை செய்யுமாறு கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர். மன்னாரில் கோந்தைப்பிட்டி மீன்பிடி இறங்குதுறை தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையினைத் தொடர்ந்து மன்னார் உப்புக்குளம் மக்களால் கடந்த 18 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது மன்னார் நீதிமன்றத்தின் மீது கற்களால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் போது நீதிமன்றக் கட்டிடத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 13 பேர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் பலரை பொலிஸாரும் புலனாய்வுத்துறையினரும் தேடி வருவதோடு மேலும் 35 பேரை நாளை திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை மன்னார் உப்புக்குளம் மற்றும் மூர்வீதி ஆகிய கிராமங்களுக்குச் சென்ற அமைச்சர் றவூப் ஹக்கீமிடம் கைது செய்யப்பட்டு தற்சமயம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 13 பேரையும் விடுதலை செய்ய ஆவன செய்யுமாறு அவர்களுடைய உறவினர்கள் அமைச்சரிடம் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
இதேசமயம் மன்னார் நீதிமன்றத் தாக்குதல் தொடர்பில் பொலிஸாரும்,குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரும் வீடியோ மற்றும் புகைப்பட சாட்சியங்களை ஆதாரமாக வைத்துப் பலரைக் கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் மன்னார் உப்புக்குளம் மற்றும் மூர்வீதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 35 பேரை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த 35 பேரில் அதிகமானவர்கள் அமைச்சர் றிஸாட் பதீயுதீனின் ஆதரவாளர்கள் மற்றும் அவருடைய அரசியல் செயற்பாட்டாளர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
தற்போது அமைச்சர் ரிஸாட் பதீயுதீன் அவர்களுக்கு எதிராக வழக்கு இடம் பெற்று வருகின்ற நிலையில் குறித்த 35 பேரும் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் முகமாக அமைச்சர் ஹக்கீமுக்கு தமது ஆதரவுகளைத் தெரிவித்துள்ளதோடு தமது கைது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதே வேளை அண்மையில் மன்னார் ஆயர் அவர்களுக்கு ஆதரவாக இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு மன்னார் ஆயர் அவர்களுக்காக கதைத்த மன்னார் மாவட்டத்தின் மூத்த முஸ்ஸிம் ஊடகவியலாளர் ஒருவரை அமைச்சர் றிஸாட்டின் சகோதரர் எனத் தன்னை அடையாளப்படுத்திய ஒருவர் தாக்கியிருந்தார்.
குறித்த தாக்குதலை நடத்தியவர் கைது செய்யவுள்ள 35 பேரில் முதலாவது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் நீதிமன்றத்திற்கும் ,நீதிபதிக்;கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் அமைச்சர் றிஸாட் பதியுதீனுக்கு எதிராக மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் நீதி அமைச்சர் றவூப் ஹக்கீம் மன்னாருக்கு வருகை தந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...