அதிகரிக்கும் பள்ளிவாசல்களும்
அழிந்து போகும் ஒற்றுமையும்!
அரபு பணம் இலங்கையில் வந்து குவிந்துக் கொண்டிருக்கிறது. பாதை நெடுகிலும் பள்ளிவாசல்கள் நாளுக்கு நாள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. விரல் ஆட்ட ஒரு பள்ளிவாசல், விரல் நீட்ட ஒரு பள்ளிவாசல், அது அவர்களின் பள்ளிவாசல், இது இவர்களின் பள்ளிவாசல் முஸ்லிம் சமூகம் முரண்பட்டு , பிரச்சினைப் பட்டு, பிரிந்து கிடக்கிறது.
பாவம் பாமர மக்கள் ! இந்த றியால், தீனார் தஃவா காரர்களின் பின்னணி புரியாமல் நடு வீதியில் தட்டுத் தடுமாறி திணறி நின்றுக்கொண்டிருக்கின்றார்கள்.
ஒற்றுமையை உரத்துப் பேசி பேசி ஒருவரின் உதிரத்தை மற்றவர் உறிஞ்சி உறிஞ்சி குடித்துக் கொண்டிருக்கிறார்கள். வஹாபிஸம் என்ற சஊதி, குவைத் மன்னராட்சியை மறைமுகமாய் பாதுகாக்கின்ற சித்தாந்தம் பொது ம்ககளை மட்டுமல்ல அவர்களிடம் பணம் வாங்கும் கூலிப்பட்டாளத்தைக் கூட குறி வைத்து பிரித்துத் தான் வைத்திருக்கிறது.
இலங்கையைப் பொறுத்தவரை தஃவா களத்தில் இருக்கும் தப்லீக் இயக்கத்தை தவிர ஏனைய அத்தனை இயக்கங்களும் இந்த வஹ்ஹாபி பணத்தில் வாழ்ந்துக் கொண்டிருப்பவையே.
தப்லீக் இயக்கம் தனது தஃவா இயக்க செயற்பாட்டில் பாரிய மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்து பொதுவாக நிலவி வருகிறது. ஆனால் தனது சொந்த பணத்தில் தஃவா செய்கின்ற புனிதத் தன்மையை அது என்றும் பேணிப் பாதுகாத்து வ்ந்திருக்கிறது. அது காசு வழங்குபவனுக்கு கைக்கூலியாய் வேலைசெய்ய வேண்டும் என்ற கட்டாயத்திற்கு உட்படாத ஒரு அமைப்பு.