2002 ஆம் ஆண்டில் இஸ்லாமிய இனப் படுகொலையை நடத்தியவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.
இப்போது, அவர், இந்தியா விலேயே நல்லாசி நடத்தி, சாதனை படைப்பதாக பார்ப்பன ஏடுகளும், ‘இந்துத்துவா’ சக்திகளும் புகழ் மாலை சூட்டத் தொடங்கியிருக்கின்றன.
தமிழின உரிமை பேசும் தோழர்களும் கூட இந்த பிரச்சார மாயை உண்மையென நம்பி மோடிகளின் புகழ் பாடத் தொடங்கியிருக்கிறார்கள். மோடி குஜராத்தில் நடத்தும் ஆட்சியின் கதை என்ன? அதையும் பார்ப்போம்.
ஊழல் எதிர்ப்பு இயக்கம் தொடங்கியுள்ள அன்னா அசாரேயிடமிருந்து, பாராட்டு மாலை வந்து விழுந்தது. மோடி - குஜராத் மாநிலத்தை வெகுவேகமாக வளர்ச்சிப் பாதையில் அழைத்துப் போகிறார் என்று.
தமிழ்நாட்டில், குருமூர்த்திகளும் சோ இராமசாமிகளும் தீவிரப் பரப்புரை செய்து வருகிறார்கள். இந்தியாவின் பிரதமர் பதவி வேட்பாளருக்கு மோடியை முன்னிறுத்துவதே, இந்தப் பரப்புரையின் உள்நோக்கம்.
இந்த நாடகங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, மோடியின் உண்மை முகத்தை வெளிப்படுத்தும் மற்றொரு நிகழ்வும் நடந்தது. சஞ்சீவ் ராஜேந்திரபத் என்ற குஜராத்தின் IPS போலீஸ் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் மோடிக்கு எதிராக தாக்கல் செய்துள்ள வழக்கு. குஜராத் கலவரத்தைப் பற்ற வைத்தவரே மோடி தான் என்பது இவரது குற்றச்சாட்டு.
கலவரத்தின்போது உயர்மட்ட காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டிய மோடி, ‘முஸ்லீம்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார் என்பதே வழக்கு. அந்த உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில், இருந்தவர், இந்த அதிகாரி.
கொடூரமான குஜராத் இனப் படுகொலைக் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்து கரை சேர்ந்து விட்டதாக நம்பிக் கொண்டிருந்த மோடிக்கு, இது ஒரு பேரிடி. இந்த அதிகாரி, பிரமாண வாக்குமூலமாக வழக்கை தாக்கல் செய்துள்ளார். வாக்குமூலத்தில் தவறான தகவல் இடம் பெற்றிருந்தால் அது கடுமையான குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சபர்மதியில், கரசேவகர்கள் பயணம் செய்த ரயில் பெட்டி தீ வைக்கப்பட்டதைத் தொடர்ந்து குஜராத் கலவர பூமியானது. அப்படி ஒரு கலவரம் இந்தியாவில் நடந்ததே இல்லை. மூன்றே நாட்களில் குஜராத்தின் 19 மாவட்டங்களில் 3500 முஸ்லீம்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டனர்.
மோடி அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக இருந்தவர் ஹேரன் பாண்டி. இவர் ஆர்.எஸ்.எஸ். பின்னணியிலிருந்து வந்தவர்தான். அவராலேயே இதை சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்தப் படுகொலைகள் பற்றி சிறப்பு புலனாய்வுக்குழு உச்சநீதிமன்ற ஆணையின் கீழ் நியமிக்கப்பட்டு விசாரித்தது.
ஆனால், ஆட்சி நிர்வாகம் மோடியிடம் இருந்ததால் உயர் அதிகாரிகள் உண்மையை வெளிப்படையாகக் கூறத் தயாராக இல்லை. சிறப்புப் புலனாய்வுக் குழுவும் நேர்மையாக செயல்பட வில்லை. பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களை சிறப்பு புலனாய்வுக் குழுவே பதிவு செய்ய மறுத்தது.
இந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் பி.பி.சவந்த் மற்றும் ஹோஸ்பர்ட் சுரேஷ் ஆகியோரைக் கொண்ட ‘குடிமக்கள் பேராயம்’ என்ற சுயேச்சையான விசாரணை மையம் பல உண்மைகளைப் பதிவு செய்து சிறப்பு விசாரணைக் குழுவிடம் அளித்தது.
இந்த நீதிபதிகள் முன் தோன்றி மோடிக்கு எதிராக சாட்சியளித்தவர்களில் ஒருவர் வருவாய்த் துறை அமைச்சர் ஹிரேன் பாண்டியா, பிப். 27 ஆம் தேதி மோடி தனது வீட்டில் நடத்திய கூட்டத்தில் தானும் கலந்து கொண்டதாகவும், அப்போது இந்துக்கள் நடத்தும் தாக்குதல் நடவடிக்கைகளை காவல்துறை தடுக்க வேண்டாம் என்று மோடி உத்தரவிட்ட தாகவும் கூறினார்.
பின்னர் மர்மமான முறையில் அவர் கொலை செய்யப்பட்டார். மோடிக்கு ஆதரவாக உண்மை களை மறைத்த காவல்துறை அதிகாரிகளான பி.சி. பாண்டே, பி.கே. மிஸ்ரா, அசோக் நாராயணன் போன்ற பார்ப்பன அதிகாரிகளுக்கு அவர்கள் பதவி ஓய்வுக்குப் பிறகு, வேறு பதவிகளை பரிசாக வழங்கினார் மோடி.
பாதிக்கப் பட்டவர்களுக்காக நீதிமன்றத்தில் போராடி வரும், மனித உரிமைப் போராளியும், பெண் பத்திரிகை யாளருமான தீஸ்த்தா செட்டால் வத், மோடிக்கு எதிராக நேரடியான குற்றச்சாட்டு, இப்போது தான் முதன்முதலாக வந்துள்ளது. உண்மைகள் வெளியேவரத் தொடங்கியுள்ளன என்று கூறியுள்ளார்.
மோடி நிர்வாகத்தில் பணிபுரிந்த சிறீகுமார், ராகுல் சர்மா போன்ற நேர்மையான அதிகாரிகள், கலவரங்கள் பற்றி சிறப்பு புலனாய்வில் பதிவு செய்த உண்மையான தகவல்களும் நிராகரிக்கப்பட்டு விட்டன. உண்மையைப் பேசியதற்காக, மோடி ஆட்சியில், இந்த அதிகாரிகள் பழிவாங்கப் பட்டனர்.
மோடி - குஜராத் கலவரத்துக்குப் பிறகு இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றுவிட்டார். அவர் நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு சென்று, வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்துவதே அவரது வெற்றிக்கான காரணம் என்ற பிரச்சாரம் பார்ப்பன வட்டாரங்களில் தீவிரமாக முடுக்கி விடப்படுகிறது! பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்கு தாராளமாகக் கதவு திறந்து விட்டுள்ள மோடியை அவர்கள் நடத்தும் ஊடகங்கள் புகழ் பாடுவதில் வியப்பு எதும் இல்லை.
நன்றி: சிந்திக்கவும்
No comments:
Post a Comment