இவ்வருடம் முதல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு இராணுவத்தில் பயிற்சி வழங்க அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது.
பயிற்சியில் கலந்து கொள்ளாதோர் பல்கலைக்கழக அனுமதியைப் பெற மாட்டார்கள் என்று உயர் கல்வி அமைச்சர் எச்சரித்திருப்பதாகவும் செய்தி வெளிவந்திருக்கிறது.
அரசாங்கத்தின் இந்த முடிவை சிங்கள, முஸ்லிம், தமிழ் மாணவ அமைப்புகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இராணுவத் தளங்களுக்கு பெண் பிள்ளைகளை பயிற்சிக்காக அனுப்புவதை, அந்தத் தளங்களில் பிள்ளைகளைத் தங்க வைப்பதை நினைத்து சிங்கள, தமிழ், முஸ்லிம் சகல இன பெற்றோரும் அச்சமுற்று இருக்கின்றனர்.
இந்த இராணுவப் பயிற்சி இஸ்லாமிய சமூகத்திற்கோ பெரும் இடியாக வந்திறங்கியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். முஸ்லிம்களின் கலாசாரம் இதற்குக் காரணமாகும்.
உயர் கல்வியில் கீழ் நிலையில் இருந்த இந்த சமூகம் தவழ்ந்து வந்து உயர் கல்வியை எட்டிப் பிடிக்க முயற்சி செய்யும் இந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம் பெண்களின் கல்விக்கு இடையுறாக தடையாக இந்த இராணுவப் பயிற்சி வந்திருக்கிறது.
முஸ்லிம்கள் மத்தியில் குறிப்பாக பெண்கள் மத்தியில் உயர் கல்வி தொடர்பான ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில் அரசாங்கத்தின் இந்த முயற்சி பெரும் ஏமாற்றத்தையும், பின்னடைவையுமே ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
இதில் முஸ்லிம் மாணவிகளே நேரடியாக பெரும் நெருக்குதலைச் சந்திக்கவிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் குறிப்பாக முஸ்லிம் மாணவிகளின் மத, கலாசார அடையாளங்களைப் பாதுகாத்துக்கொள்வதில் பெரும் தடைகளைச் சந்திக்கப்போகின்றார்கள். அவர்களின் மத உரிமைகள் மறுக்கப்படப் போகின்றன.
ஆனால் இதுவிடயமாக எந்த முஸ்லிம் அரசியல் தலைவர்களோ, ஆன்மீக தலைமைகளோ, உலமா சபையினரோ எவ்வித கருத்தையும் கூறாமல் மௌனம் சாதித்து வருகின்றனர். மரண மௌனத்தில் திளைத்து நிற்கின்றனர்.
சிங்கள, தமிழ் மாணவிகளின் பெற்றோர்களும் கூட இராணுவ தளங்களில் பயிற்சியின் போது தமது பிள்ளைகள் எதிர்நோக்கும் பாதுகாப்பு தொடர்பில் அச்சநிலையில் இருப்பதாக அனைத்திலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கையொன்றின் மூலம் அறிவித்திருக்கிறது.
பல்கலைக்கழகங்களையும், மாணவர்களையும் திட்டமிட்டு இராணுவ ஆக்கிரமிப்பு ஒன்றிற்குள், ஆதிக்கம்ஒன்றிற்குள் தள்ளப்போவதாக பல்கலைக்கழக மாணவர்கள் உணர்கின்றார்கள்.
பல்கலைக்கழகங்களையும், மாணவர்களையும் திட்டமிட்டு இராணுவ ஆக்கிரமிப்பு ஒன்றிற்குள், ஆதிக்கம்ஒன்றிற்குள் தள்ளப்போவதாக பல்கலைக்கழக மாணவர்கள் உணர்கின்றார்கள்.
அண்மைக்காலமாக இலங்கை அரசாங்கத்தின் தேசிய ரீதியிலான அதன் நகர்வு, ஜனநாயகம் மீதான ஓர் அச்ச உணர்வை சகல இன மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தி வருகிறது.
போருக்கு பின்னரான இலங்கை அரசின்செயற்பாடுகள், இராணுவ ரீதியிலான ஆதிக்கம் ஒன்றை சிவில் சமூகத்தின் மீது திணித்து வருவதாக அரசாங்கம் மீது பலத்த குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் சுமத்தி வருகின்றன.
மரக்கறி, மாங்காய், தேங்காய் விற்பனையிலிருந்து, மாநகர, நகர, பிரதேச சபைகளின் சுத்திகரிப்பு பணிவரை எல்லாமே இராணுவத்தினரை வைத்து செய்து வருவது இலங்கை மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்து வருகிறது.
தலைநகர் கொழும்பில் சட்டவிதோதக் கட்டிடங்கள் என்ற போர்வையில் உடைத்து நொறுக்கப்பட்ட மக்களின் வாழ்விடங்கள் இராணுவத்தின் உதவியுடனேயே மேற்கொள்ளப்பட்டன.
இராணுவத்திற்கிருக்கும் அதிகாரம் கரணமாகவும், அச்சம் காரணமாகவும் மக்கள் இன்னல்களைப் பொறுத்துக்கொண்டு மௌனமாக இருக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
பொதுமக்களுக்கான சிவில் நிர்வாகத்திற்கு அரசியல் சட்டப்படி பொறுப்பாக இருக்க வேண்டிய பொலிஸ் திணைக்களம் இராணுவத்திற்கு துணையாக இருக்கின்றார்களே அன்றி முற்று முழுதாக சிவில் சமூகத்தை நிர்வகிக்கின்ற பாதுகாக்கின்ற பொறுப்பை பொலிசார் கைவிட்டிருக்கின்றனர்.
பல சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவமே நேரடியாக செயற்பட்டு வருகிறது. சிவில் நிர்வாக கட்டமைப்பிற்கு பொறுப்பான மையங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.
இந்த பின்னணியில்தான்
பல்கலைக்கழக மாணவர்களுக்கு கட்டாய இராணுவ, தலைமைத்துவ பயிற்சியை வழங்க உயர் கல்வி அமைச்சு தீர்மானித்தது.
பல்கலைக்கழக மாணவர் அமைப்புகளும், புத்தி ஜீவிகளும் பெற்றோரும் அரசாங்கத்தின் இந்த முடிவை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் கல்வி, ஒழுக்கம், பண்பாடு சார்ந்த துறைகளில் மாற்றம் நிகழ வேண்டும். அது அவசரமும் அவசியமும் கூட. அதில் மாற்றுக் கருத்திற்கு இடமேயில்லை.
ஆனால் இராணுவத்தை வைத்து, இராணுவ தளங்களில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவது நியாயமா என்பதுதான் இங்கு எழுந்துள்ள கேள்வியாகும். அரசாங்கம் ஒழுக்கத்தை ஊட்டுவதற்கு சிறந்த நிறுவனமாக இராணுவத்தை தெரிவு செய்திருப்பது பிழையான தெரிவாகும்.
வெறுமனே கட்டளைகளுக்கு கட்டுப்படுகின்ற கடப்பாடு இராணுவ கட்டமைப்பிற்கு உதவுவது போல் சிவில் சமூகத்திற்கு உதவுமா என்பதை உயர் கல்வி அமைச்சு சிந்தித்திருக்க வேண்டும்.
நாட்டில் ஒழுக்க ரீதியிலான தலைமைத்துவம் ஒன்றைக் கட்டியெழுப்ப ஆன்மீகத்தை மையமாக வைத்து உருவாக்கப்படும் பயிற்சிகள் தான் உத்தரவாதமானது என்பதுதான் பலரது கருத்து.
இலங்கையின் அரசியலுக்கு தலைமைத்துவம் வழங்க பௌத்த பிக்குகளே பாராளுமன்றம் சென்றுள்ள ஒரு நாட்டில் பல்ககலைக்கழக மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி வழங்க கல்வி அமைச்சு இராணுவத்திடம் மண்டியிட்டிருக்கிறது.
இது வேடிக்கையாகவே இருக்கிறது. சகலருக்கும் வழிகாட்டுவதாக சொல்லும் ஆன்மிகம் கேள்விக் குறியாகி இருக்கிறது.
பௌத்த மதக் கட்டமைப்புகளோடு கைக்கோர்த்துக்கொண்டிருக்கின்ற அரசாங்கம் இராணுவம்தான் ஒழுக்கம் சார்ந்த பயிற்சிகளை வழங்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது எந்தளவு நியாயம் என்று எனக்குப்படவில்லை.
ஒழுக்கத்தை உயிராக நேசிக்கும் இராணுவத்தினர் இருப்பது போல் அதற்கு நேர் எதிராக செயற்படும் ஒழுக்கமற்ற இராணுவத்தினர் இருக்கத்ததான் செய்கின்றார்கள்.
அதே போல் பல்கலைக்கழகங்களில் ஒழுக்கத்தை உயிராக நேசிக்கும் மாணவர்கள் இருப்பதைப் போல் அதற்கு எதிராக செயற்படும் மாணவர்களும் இருக்கின்றார்கள். இதில் யார் யாருக்கு பயிற்சியளிப்பது?
இராணுவத்தினரின் ஒழுக்கம்தொடர்பாக வரலாற்றில் நிறைய அத்தாட்சிகள் இருக்கின்றன.
மாணவர்களுக்குஒழுக்கத்தைப் போதிக்க தயாராகும் இந்த இராணுவத்திலேயே பயிற்சி பெற்ற எத்தனை இராணுவத்தினர் ஒழுக்கத்தை மீறியதற்காக தண்டனை பெறுகிறார்கள்.
ஒழுக்கப் பயிற்சி பெற்ற எத்தனைப் பேர் இராணுவத்தை விட்டு விட்டு ஓட்டமெடுத்திருக்கின்றனர்? எத்தனைப் பேர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்? ஓடியவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி எத்தனை தடவை அவர்களை மீண்டும் இராணுவத்தில் சேர்த்திருக்கிறது அரசாங்கம்?
ஏன்? இராணுவத்தின் தலைமை பொறுப்பிலிருந்த,தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவே அரசுக்கு துரோகமிழைத்தவர் ஊழல் மிகுந்தவர் என்று குற்றம் சாட்டி சிறையில் அடைத்திருக்கிருறதே!
இன்று பாதாள உலக கோஷ்டிகளோடு சேர்ந்து கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதில் முன்னணியில் இருப்பவர்கள் இராணுவத்தில் பயிற்சி பெற்று அதை விட்டு ஓடியவர்கள்தானே?
இதிலிருந்து என்ன விளங்குகிறது?
அரசாங்கம் நினைப்பது போல் ஒழுக்கத்தின் களங்கரை விளக்காக இராணுவ கட்டமைப்பு இல்லை என்பதே!
இராணுவம் போதிக்கும் ஒழுக்க, தலைமைத்துவப் பயிற்சிகளில் ஓட்டைகள் இருக்கின்றன என்பதே!
எனவே பல்கலைக்கழகங்களில் ஒழுக்கத்தை ஊட்டுவதற்கு இராணுவம் தான் சிறந்த தீர்வு என்று அரசாங்கம் தீர்மானித்திருப்பது கேள்விக்கும் கேளிக்கும் உரியதாகும்.
இலங்கையின் கல்வித்திட்டத்தில், பாடசாலைகளில்,பல்கலைக்கழகங்களில் பற்றி எரியும் பிரச்சினைகள் எவவ்வளவோ இருக்க அவற்றை அணைக்க முயற்சி எடுக்காமல் அவற்றின் மீது பெற்றோல் ஊறற முனைவது கண்டிக்கத்தக்கது.
No comments:
Post a Comment