ஜுன்த் அன்ஸாருல்லாஹ் - ஹமாஸ் மோதல்
மத்திய கிழக்கில் மற்றுமொரு பொறி!
பலஸ்தீனின் ரபாஹ் நகரத்தில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் போது காஸா பிராந்தியத்தை “ காஸா அமீரகமாக” (Gaza Emirate) பிரகடனப்படத்திய ஜுன்து அன்ஸாருல்லாஹ அமைப்பிற்கும், ஹமாஸின் பொலிஸ் காவல் துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில், ஜுன்த் அன்ஸாருல்லாஹ் அமைப்பின் தலைவராக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட லத்திப் மூஸாவும் மேலும் 23 பேரும் கொல்லப்பட்டனர். இதில் 6 பேர் ஹமாஸ் பொலிஸ் பிரிவைச் சார்ந்தவர்கள்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் போன்று பலஸ்தீனில் திடீரென்று தோன்றிய இந்த ஜுன்த் அன்ஸாருல்லாஹ் அமைப்பு எப்போது? எப்படி வந்தது? இதன் பின்னணி என்ன?
சர்வதேச ஊடகங்களில் இந்த செய்தி வந்த போது எல்லோருக்கும் ஏறபட்ட சந்தேகம் இது.
2006ம் ஆண்டு பலஸ்தீனில் நடைபெற்ற அதன் அதிகார சபைக்கான தேர்தலில் மஹ்மூத் அப்பாஸின் பத்தாஹ் இயக்கம் படுதோல்வியைச் சந்தித்தது. ஹமாஸ் இயக்கம் அமோக வெற்றியைப் பெற்றது.
பாராளுமன்றத்தின் அதிக ஆசனங்கள் ஹமாஸின் கைக்குள் வந்தது. ஆயுதப் போராட்டத்தில் தன்னை வளர்த்துக்கொண்டு தேர்தலுக்கு முகம் கொடுத்தது ஹமாஸ் இயக்கம்.
ஹமாஸ் மக்கள் ஆதரவு இல்லாத இயக்கம் என்ற நிலைப்பாட்டிலிருந்த அமெரிக்காவும், சஊதியும், ஏனைய மேற்குலக நாடுகளும் தமது நிலைப்பாட்டை பலஸ்தீன் மக்கள் தலைகீழாக மாற்றிவிட்டதைக் கண்டு மிரண்டு போயினர்.
பலஸ்தீன் பாராளுமன்றத்தைக் கைப்பற்றிய ஹமாஸுக்கு இஸ்ரேலும், மேற்குலமும் பல நெருக்குதல்களை கொடுத்தன. பொருளாதார தடைகளை திணித்தன. ஹமாஸ் அரசாங்கம் செயலாற்ற முடியாதவாறு முடக்கப்பட்டது.