காஸா - பிரச்சினையும் பிராந்திய அரசியலும்!
பலஸ்தீன் பிரச்சினை சமகாலத்தின் மாபெரும் தார்மீகப் பிரச்சினை என்றார் நெல்சன் மண்டேலா .
பல தசாப்தங்கள் உலகில் மாற்றமடையாமல் இருக்கும் ஒரே தலைப்பு “ மத்திய கிழக்கின் தற்போதைய நெருக்கடி ” என்றார் நோம் சொம்ஸ்கி.
பலஸ்தீன் மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியை அடையாளப்படுத்த இதனைத் தவிர வேறு ஒரு வார்த்தைகள் அவசியமில்லை.
காஸா மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு ஒரு வருடம் நிறைவாகிறது. சுமார் 15 லட்சம் மக்கள் அடிப்படை வசதிகள் முற்றாக மறுக்கப்பட்டு ஒரு திறந்த வெளி சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
உணவு, மருந்து, தண்ணீர், மின்சாரம், கல்வி போன்ற அடிப்படை தேவைகள் அத்தனையும் மறுக்கப்பட்டு அந்த மக்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
2006ம் ஆண்டு பலஸ்தீன் அதிகார சபைக்கான தேர்தலில் ஹமாஸ் இயக்கம் போட்டியிடடு வெற்றியீட்டியதைத் தொடர்ந்து மேற்குலகம் கடுமையான தடைகளையும் நெருக்குதல்களையும் கொடுத்து ஹமாஸ் அரசை செயலிழக்கச் செய்தது.
ஹமாஸ் பாராளுமன்ற அமைச்சர்கள், அங்கத்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள் இன்றும் சிறையில் வாடுகிறார்கள்.
ஜனநாயத்திற்காக குரல் கொடுப்பவர்கள், மனித உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள் யாரும் இதற்காக ஒரு வார்த்தையும் பேசாமல் மௌனிகளாக இருக்கின்றார்கள்.
அடிப்படை வசதிகளும், அத்தியாவசிய பொருட்களும் முற்றாக நிராகரிக்கப்பட்ட நிலையில் பலஸ்தீன் உலகிலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கிறது. தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஹமாஸ் மீதான மேற்குலகின் இந்த நெருக்குதல்களுக்கு பின்னணியில் மத்திய கிழக்கின் அரசியல் மறைந்திருக்கின்றது. பலஸ்தீனில் இஸ்லாமிய ஆட்சியமைப்பைக் கொண்ட ஜனநாயக ரீதியாக ஏற்படும் பாராளுமன்ற அரசியல் கட்டமைப்பு தமது மன்னராட்சியின் மகுடங்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதை அரபு நாடுகள் நன்கு உணர்ந்தே இருக்கின்றன.
பலஸ்தீனில் உருவாகும் பாராளுமன்ற அரசியலின் கவர்ச்சி தனது நாட்டு மக்களின் சிந்தனையில் மாற்றத்தை உருவாக்கும் என்ற அச்சம் அரபு நாடுகளுக்கு இருக்கவே செய்கின்றது.
பலஸ்தீனில் உருவாகும் இஸ்லாமிய அடிப்படையிலான பாராளுமன்ற கட்டமைப்பு அமெரிக்க இஸ்ரேல் நாடுகளுக்கு எப்படி அச்சுறுத்தலோ அதே போன்று அந்த பிராந்தியத்திலுள்ள அரபு நாடுகளுக்கும் அச்சுறுத்தலாகும்.
இந்த ஜனநாயக அரசியல் கட்டமைப்பை விரும்பாத அரபு நாடுகள் தமது மன்னர் ஆட்சி கட்டமைப்பைக் காத்துக்கொள்வதற்காக வேண்டி, பலஸ்தீன் மீது அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் திணித்த பொருளாதார தடைகளை மௌனமாக இருந்தது அங்கீகரித்து வருகின்றன.
காணொளி
"அரபிகளே! பலஸ்தீனத்தை பாதுகாக்க எழுந்து வாருங்கள்!!" - பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் George Galloway.