– யமுனா ராஜேந்திரன்-
இவர்களுக்கிடையில் என்னதான் ஒற்றுமை என யோசித்து யோசித்துப் பார்க்கிறேன். முதல் பார்வைக்கு ஒன்றும் பிடிபடுவதாக இல்லை. தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்கப் பிரதிநிதி ரோபர்ட் பிளேக். இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டியூ குணசேகரா. இலங்கை ஆளுனர் அளவி மௌலானா. ஓருவர் ஏகாதிபத்தியவாதி, பிறிதொருவர் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர். இன்னொருவர் ஏகாதிபத்திய எதிர்ப்பு-இஸ்லாமிய ஆதரவு இலங்கை தேசபக்தர்.
விநோதமாக இவர்களுக்கிடையில் ஒரு ஒற்றுமை இருக்கிறது. ஓசாமா பின்லேடனும், பிரபாகரனும் ஒன்றுதான் என்கிறார் ரோபர்ட் பிளாக். உலகின் மிகப் பயங்கரமான பயங்கரவாதிகள் பின்லாடனும் பிரபாகனும் என இலங்கை மண்ணில் வைத்து அதிகாரபூர்வமாகப் பேசியிருக்கிறார் ரோபர்ட் பிளேக். ஆமாம், ஆமாம் ஒன்றுதான் என்று சந்தோஷப்பட்டிருக்கிறார் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் டியூ குணசேகரா.
அப்படியெல்லாம் சொல்லக் கூடாது எனும் அளவி மௌலானா பின் லேடனின் யுத்தம் புனித யுத்தம் என்கிறார். பிரபாகரன் வெறும் பயங்கரவாதி என்கிறார்.
இவர்களது ஒப்பீடுகளின் பின்னுள்ள அபத்தம் நமக்குப் புரிகிற அதே பொழுதில், இவர்களது ஒப்பீடுகளின் பின்னுள்ள அரசியல் ஒரு ஒற்றுமையைக் கொண்டுதான் இருக்கிறது. அரசியல் மாறுபாடுகள், கருத்தியல், இலக்குகள் என்பதனைத் தாண்டிய வகையில் நிச்சயமாகவே சே குவேரா-பின் லாடன்- பிரபாகரன் போன்றோரின் ‘படுகொலைகள் நிகழ்ந்த விதம்’ ஒப்பீட்டுக்கு உகந்ததும் ஒற்றுமை கொண்டதும்தான் என்பதை நாம் திட்டவட்டமாக நிறுவ முடியும்.









