– யமுனா ராஜேந்திரன்-
இவர்களுக்கிடையில் என்னதான் ஒற்றுமை என யோசித்து யோசித்துப் பார்க்கிறேன். முதல் பார்வைக்கு ஒன்றும் பிடிபடுவதாக இல்லை. தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்கப் பிரதிநிதி ரோபர்ட் பிளேக். இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டியூ குணசேகரா. இலங்கை ஆளுனர் அளவி மௌலானா. ஓருவர் ஏகாதிபத்தியவாதி, பிறிதொருவர் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர். இன்னொருவர் ஏகாதிபத்திய எதிர்ப்பு-இஸ்லாமிய ஆதரவு இலங்கை தேசபக்தர்.
விநோதமாக இவர்களுக்கிடையில் ஒரு ஒற்றுமை இருக்கிறது. ஓசாமா பின்லேடனும், பிரபாகரனும் ஒன்றுதான் என்கிறார் ரோபர்ட் பிளாக். உலகின் மிகப் பயங்கரமான பயங்கரவாதிகள் பின்லாடனும் பிரபாகனும் என இலங்கை மண்ணில் வைத்து அதிகாரபூர்வமாகப் பேசியிருக்கிறார் ரோபர்ட் பிளேக். ஆமாம், ஆமாம் ஒன்றுதான் என்று சந்தோஷப்பட்டிருக்கிறார் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் டியூ குணசேகரா.
அப்படியெல்லாம் சொல்லக் கூடாது எனும் அளவி மௌலானா பின் லேடனின் யுத்தம் புனித யுத்தம் என்கிறார். பிரபாகரன் வெறும் பயங்கரவாதி என்கிறார்.
இவர்களது ஒப்பீடுகளின் பின்னுள்ள அபத்தம் நமக்குப் புரிகிற அதே பொழுதில், இவர்களது ஒப்பீடுகளின் பின்னுள்ள அரசியல் ஒரு ஒற்றுமையைக் கொண்டுதான் இருக்கிறது. அரசியல் மாறுபாடுகள், கருத்தியல், இலக்குகள் என்பதனைத் தாண்டிய வகையில் நிச்சயமாகவே சே குவேரா-பின் லாடன்- பிரபாகரன் போன்றோரின் ‘படுகொலைகள் நிகழ்ந்த விதம்’ ஒப்பீட்டுக்கு உகந்ததும் ஒற்றுமை கொண்டதும்தான் என்பதை நாம் திட்டவட்டமாக நிறுவ முடியும்.
சே குவேரா நெஞ்சிலும் இடுப்புக்குக் கீழும் என வெறிகொண்ட வகையில் சுடப்பட்ட பின்புதான் மரணமுற்றார். பிரபாகரனின் மரணபிம்பம் நெற்றி சிதறிய நிலையில்தான் காட்சிப்படுத்தப்பட்டது. பின்லாடன் நெற்றியிலும் மார்பிலும் சுடப்பட்டுத்தான் இறந்தார். சே குவேராவின் உடல், ரொட்டி சுடும் கனப்பு அடுப்பில் வைக்கப்பட்டு பாதி கருகிய நிலையில், இனம் தெரியாத இடத்தில் புதைக்கப்பட்டு, முப்பது ஆண்டுகளின் பின்புதான் அவரது எலும்புகள் – வெட்டப்பட்ட மணிக்கட்டு அடையாளத்துடன் – கண்டுபிடிக்கப்பட்டது. பின்லாடனின் உடல் கொல்லப்பட்ட இருபத்தி நாலு மணிநேரத்தில் இஸ்லாமியச் சடங்குகளின் பின்பு, அரபு மொழி ஓதுதலுடன், நீர்;ச்சமாதியில் புதைக்கப்பட்டது. பிரபாகரனின் உடல் எரியூட்டப்பட்டு நந்திக்கடலில் வீசப்பட்டதாக அறிவித்தது இலங்கை அரசு. இந்த மூன்று உடல்களையும் உறவினர்கள் காணாது, கள்ளமனதுடன் அழித்தன அமெரிக்க-இலங்கை அரசுகள்.
இவர்களது உடல், காணாது புதைக்கப்படவும், எரி சாம்பலாகக் கடலில் வீசப்படவும், அடையாளமற்ற இடத்தில் நீர்ச்சமாதி அடையச் செய்யவும் என்ன காரணம்? இவர்களது புதைக்கபட்ட இடம் புனித இடமாக ஆவதும், அவர்களைப் பின்தொடர்ந்தவர்களுக்கு ஆதர்ஷமாக என்றென்றும் இவர்கள் இருந்து கொண்டிருப்பதும் இவர்களது எதிரிகளுக்குச் சம்மதமில்லை. அவர்களது நினைவுகளை வேரும் வேரடி மண்ணும் இல்லாது ஒழிப்பதுதான் இவர்களது திட்டமாகவும் முடிவாகவும் இருக்கிறது.
சே குவேரா-பிரபாகரன்-பின் லாடன் என இவர்கள் மூவரும் அமெரிக்காவைப் பொறுத்து ஒரே சொல்லால் விளிக்கத்தக்கவர்கள் தான். அச்சொல் : பயங்கரவாதிகள். அமெரி;க்க தேசபக்த நலன்களுக்கு இவர்கள் பயங்கரவாதிகள்தான். சே உலகப் புரட்சிகளை உருவாக்க ஆசியாவுக்கும் ஆப்ரிக்காவுக்கும் சென்றவன். இலத்தீனமெரிக்காவில் புரட்சிகர எரிமலைகளைத் தூண்டியவன். சோவியத் எதிர்ப்பில் அமெரிக்காவினால் ஊட்டி வளர்க்கப்பட்ட பின்லாடன் பின்னாளில், மத்தியக் கிழக்கு அமெரிக்க ஆதரவு அரசுகளுக்கும், அமெரிக்க நலன்களுக்கும் சிம்மசொப்பனமாக ஆகினார். அதனது அறுதி விளைவு அமெரி;க்கப் பொருளாதார மேலாதிக்கத்தின் சின்னமான இரட்டைக் கட்டிடம் தரைமட்டமாகியது.
முள்ளிவாய்க்கால் மரணங்களையும் பிரபாகரன் படுகொலையையும் அமெரிக்கா பயங்கரவாத ஒழிப்பு எனும் பெயரில் பார்த்துக் கொண்டுதான் இருந்தது. இவர்கள் மூவருமே தந்திரோபாய ரீதியில் அமெரிக்க நலன்களுக்கு எதிரானவர்கள்தான். சே கருத்தியல் ரீதியில் திட்டவட்டமான அமெரிக்க எதிர்ப்பைக் கொண்டிருந்தார். பின் லாடன் இஸ்லாமிய நாடுகளின் சர்வாதிகாரிகளை ஆதரித்த அமெரிக்காவை தற்காலிக எதிரியாக வரித்துக் கொண்டார். பிரபாகரன் அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு வரலாற்று யுத்தத்தில் எதிரியாக ஆக்கப்பட்டார். இந்த வகையில், அமெரி;க்க தேசிய நலன்கள் எனும் அடிப்படையில், பின் லாடன்-பிரபாகரன் குறித்த ஒப்பீட்டை நாம் புரிந்து கொள்ள முடியும்.
இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச்செயலாளர் டியூ குணசேகரா ஏன் பின்லேடனை-பிரபாகரனை ஒப்பிடுகிறார்?
அல்-கைதா அமைப்பின் தலைவர் ஒஸாமா பின்லேடனின் மரணத்தின் பின்னர் அமெரிக்கர்கள் கொண்டாடும் மகிழ்ச்சிக்கும், நந்திக்கடலில் புலிகளின் அழிவுக்குப் பின்னர் இலங்கையில் நடத்தப்பட்ட மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களுக்கும் இடையில் எந்த வித்தியாசத்தையும் காணமுடியவில்லை
தமது சிங்கள இனவாதத்தை மூடிக்கட்ட, இடதுசாரிப் படுதாவாக அவர் பாவிப்பதுதான் பயங்கரவாதம் எனும் சொல். பின் லாடன் ஒரு வெளிப்படையான ஸ்தூலமான மக்கள் இயக்கத்தைக் கட்டவில்லை என்பதும், பின்லாடனிடம் ஒரு அறிவிக்கப்பட்ட அரசியல் இலக்கு இல்லை என்பதும், பிரபாகரன் போல் பல பத்தாண்டுகள் ஒரு குறிப்பிட் பிரதேசத்தில் இடைக்கால அரசை அமைத்து அதற்கெனச் சட்டவரைவினையும் பின்லாடன் உருவாக்கவில்லை என்கிற கொஞ்ச நஞ்சமான அறிவும் கூட குணசேகராவிடம் இல்லை. விடுதலைப் புலிகள் அமைப்பின் தோற்றம் அதனது அரசியல் இலக்கு போன்றன வெளிப்படையானது, திட்டவட்டமானது. பயங்கரவாதம் எனும் பெயரால் சிங்களப் பெரும்பான்மையின் இனவாதத்தை மறைப்பதற்கான ஒரு தந்திரோபாயம்தான் குணசேகராவின் வாதம். கொழும்புக் கொண்டாட்டங்களை இலங்கையின் ராணுவம்தான் பின்நின்று நிகழ்த்தியது. குறைந்தபட்சம் அமெரிக்க ஏகாதிபத்திற்கு எதிரான மத்தியக் கிழக்கு மக்களின் எதிர்ப்பு உளவியலின் சின்னமாக – அரபுப் புரட்சிக்கு முன்வரை – பின்லாடன் இருந்தார் என்கிற குறைந்தபட்ச சர்வதேச அரசியல் நிஜம் கூட குணசேகராவுக்குப் புரியவில்லை.
பிரபாகரன் செய்தது பயங்கரவாதம். பின் லாடன் செய்தது பயங்கரவாதம். தமது சொந்த மக்களை விமானம் மூலம் குண்டுவீசிக் கொல்கிற மகிந்தவும், கடாபியும் செய்வது தேசபக்த,ஏகாதிபத்திய எதிர்ப்பு யுத்தம்! இலங்கையைப் பொறுத்து குவேரா(இயக்கம்), மார்க்சீயம் போன்றவற்றுக்கு எந்தவிதமான புரட்சிகரப் பாத்திரமும் இல்லை. குணசேகரா முதல், ரோகண விஜேவீரா ஈராக, வாசுதேவ நாணயக்கார வரை புரட்சிகர மரபையே இனவாத மரபாக ஆக்கிவிட்டிருக்கிறார்கள் இவர்கள்.
அடிப்படைவாத இஸ்லாமியரான அளவி மௌலானாவின் கூற்று தமிழக பின்நவீனத்துவத்தை அடியொற்றி கட்ட உடைப்பதற்குத் தகுந்த சொற்களஞ்சியம் :
1967 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் திகதி சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் பிறந்த சிவில் இன்ஜினியரும் பொருளியல் பட்டதாரியுமான ஒசாமா பின்லேடன் ஏகாதிபத்திய நாடுகளினால் இஸ்லாத்திற்கு முரணாக மேற்கொண்ட அக்கிரமங்களை பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் 1979 ஆம் ஆண்டு அல் கைதா இயக்கத்தை ஆரம்பித்தார். இவர் இஸ்லாமிய மார்க்க பற்றுமிக்கவர். இவரது தீவிரவாத செயல்கள் யாவும் இஸ்லாத்திற்கு முரணானவர்களுக்கு எதிராகவே இருந்தது.
இவரது இவ் இயக்கம் இல்லாது இருந்தால் இன்று முஸ்லிம் நாடுகளை ஏகாதிபத்திய நாடுகள் அடக்கி ஒடுக்கியிருக்கும். ஒசாமா பின்லேடன் பயங்கரவாதியா? இஸ்லாமிய கொள்கை தீவிரவாதியா? என்பதை ஏகாதிபத்திய நாடுகள் தீர்மானிக்க முடியாது. அதை தீர்மானிக்கும் சக்தி படைத்தவன் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது. இன்று இஸ்லாமிய நாடுகள் ஏகாதிபத்திய நாடுகளினால் அடக்கி ஒடுக்கப்பட்டிருக்கின்ற இவ் வேளையில் அதைப்பற்றி குரல் கொடுப்பார் எவருமில்லை. ஆனால் ஒசாமா பின்லேடன் இஸ்லாத்திற்காக இஸ்லாமிய கொள்கைகளை பேணுவதற்காக தனது சொத்துக்களை சுதந்திரத்தை கூட இழந்து போராடியவர். இவர் இஸ்லாமிய கொள்கைகளுக்காக போராடாமல் தன்பாட்டில் வாழ்ந்திருந்தால் இன்று உலகில் மாபெரும் செல்வந்தராக விளங்கியிருப்பார்.
அமெரிக்காவினதும் ஐக்கிய நாடுகள் சபையின் ஏகாதிபத்தியம் எவ்வாறானது எனில் பிரபாகரனை கொலை செய்தது மனித உரிமை மீறலாகவும் பாகிஸ்தானில் ஒசாமாவை கொலை செய்தது தீவிரவாத ஒழிப்பாகவும் காட்டப்படுகின்றது. இதன் விளக்கம்தான் என்ன? ஐ.நா. சபையின் செயலாளர் பான் கீ மூன் பிரபாகரனுக்கு ஒரு நியாயமும் ஒசாமாவுக்கு வேறு நியாயமும் காட்டுவது ஏன்? ஒசாமா இஸ்லாம் எங்கே பாதிக்கப்படுகின்றதோ அங்கே அதற்கெதிரான போராட்டங்களை மேற்கொண்டார். இவரது படுகொலை தீவிரவாதத்துக்கு எதிரான ஏகாதிபத்திய நாடுகளின் போராட்டமா? அல்லது இஸ்லாத்திற்கு எதிரான ஏகாதிபத்தியத்தின் போராட்டமா? என்பது சிந்தனைக்குரியது.
இந்த ஏகாதிபத்திய நாடுகளின் சூழ்ச்சியினால் இன்று உலக முஸ்லிம் நாடுகள் யாவும் பிரச்சினைக்குட்பட்டு இருக்கின்ற இவ்வேளையில் முஸ்லிம்களாகிய நாம் சிந்தனையுடன் செயல்பட வேண்டுமென உலக வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்.
அளவி மௌலானவின் பகுப்பாய்வின் அபத்தம் செவ்வியல் அரசியல் இஸ்லாமின் காலாவதியாகிப் போன பார்வை. எந்த மத்தியக் கிழக்கு நாடுகளில் அமெரி;க்க ஏகாதிபத்தியத்தை விரட்ட செப்டம்பல் தாக்குதலின் வழி பின்லாடன் முனைந்தாரோ அதே மத்தியக் கிழக்கு நாடுகளின் மீதான நேரடியிலான ஏகாதிபத்தியப் படையெடுப்பைத்தான் அவரது தூரதரிசனமற்ற செயல்பாடுகள் கொண்டு வந்தது. ஈராக் யுத்தமும் ஆப்கான் யுத்தமும் பின் லாடனின் செப்டம்பர் தாக்குதலின் விளைவுகள்தான். ஈராக்கிலும் ஆப்கானிலும் கொல்லப்பட்ட இலட்சோப இலட்சம் உயிர்களுக்கான சாபக்காரணி பின்டலாடனும்தான்.
பின் லாடன் தமது அபிலாஷைகளைப் பிரதிபலிக்கவில்லை என்பதனையும், அவரது வழிமுறையைத் தாங்கள் நிராகரிக்கிறோம் என்பதற்குமான சாட்சியமும்தான் 2010-2011 மத்தியக் கிழக்கு மக்களது வெகுமக்கள் ஜனநாயக எழுச்சி சொல்லும் செய்தி. பின்லாடனது படுகொலைக்கு எதிராக எந்தவிதமான மக்கள் எழுச்சியும் அரபு நாடுகளில் உருவாகவில்லை என்பதனையும் அளவி மௌலானா உணர வேண்டும். அளவி மௌலானா ஆதரிக்கும் பின்லாடனது தலிபானியம் மனிதவிரோத அடிப்படைவாதம். இந்த அடிப்படைவாதத்தினை ஆதரித்துக் கொண்டு, ஏகாதிபத்திய எதிர்ப்பின் பெயரில், சிங்கள இனவாதிகளுக்கு முண்டு கொடுக்கும் வேலையைத்தான் அளவி மௌலானா செய்திருக்கிறார்.
அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பின் பெயரில், இலங்கை தேசபக்தராகி பிரபாகரனை பயங்கரவாதி என முத்திரை குத்தும் அளவி மௌலானா அறுதியில் உயர்த்திப் பிடிப்பது தலிபானிய அடிப்படைவாதம்தான். ஓரு புறம் பௌத்த அடிப்படைவாதம், மறுபுறம் இஸ்லாமிய அடிப்படைவாதம் இரண்டும் ஏகாதிபத்திய எதிர்ப்பின் பெயரில் இலங்கை தேசபக்தியில் ஒன்றிணைகிறது.
ரோபர்ட் பிளேக் – டியூ குணசேகரா – அளவி மௌலானா – மகிந்த சகோதரர்கள் என அனைவரும் பிரபாகரனைப் பொறுத்து மட்டும் ஒரே அலைவரிசையில் ஒன்றிணைகிறார்கள். அதே வேளை தத்தமது ஏகாதிபத்திய – பேரினவாத – அடிப்படைவாத நோக்கங்களையும் அவர்கள் எய்த முடிகிறது. என்ன அற்புதமானதொரு பின்நவீன கதம்ப நிலைமையில் நாம் வாழ்கிறோம் என்று பாருங்கள்….
நன்றி- பின் லாடன் – பிரபாகரன் : ஒப்பீடுகளின் பின்னுள்ள அரசியல்
குளோபல் தமிழ் செய்தி – யமுனா ராஜேந்திரன்
No comments:
Post a Comment