Saturday, 24 December 2011

அகன்ற இஸ்ரேலுக்கு அனுசரணை வழங்கும் அல்லாஹ்வின் நேசர்கள்.

இந்தத் தலைப்பு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? இல்லாவிட்டால் ஆத்திரமாக இருக்கிறதா?

இஸ்ரேல் அதன் கொள்கையிலுள்ள 'அகன்ற இஸ்ரேல்' என்று சொல்லக் கூடிய,  மக்கா மதீனா புனித ஸ்தலங்களை உள்ளடக்கிய ஓர் அகன்ற இஸ்ரேல் இராஜ்யத்தை மத்திய கிழக்கில் உருவாக்கும் கருத்திட்டத்தை மையமாக வைத்து செயலாற்றி வருகின்றது.


இஸ்ரேலின் விரோதிகளான முஸ்லிம்கள் இதற்கு ஆதரவு அளிப்பதா?
அது நடக்கவே நடக்காது! என்று நீங்கள் என்னோடு சண்டைக்கு வரலாம்.

ஆனால் எங்களையறியாமல் அது நடக்கின்றது. எங்களையறியாமல் நாம் சிலரால் அந்த இலக்கை நோக்கி வழி நடாத்தப்படுகின்றோம்.
அது எப்படி என்பதை சுட்டிக்காட்டுவதே இந்தப் பதிவின் நோக்கம் .

அரசியல்,கட்சி,  இயக்கம், ஜமாத்து, பிளவுகள் , பிரிவுகள் என்ற முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்காமல் அதிலிருந்து வெளியே வந்து சுதந்திரமாக சிந்தித்தால் இந்த உண்மையை உங்களால் உணர முடியும்.

ஆப்கானிஸ்தான், ஈராக்... லிபியா அடுத்த படியாக...சிரியா .. ஈரான்..!

அரபுலகின் பூரண ஆதரவோடு , இஸ்லாம் விரோத மேற்குலக அணியான நேட்டோவின் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் லிபியாவின் தலையெழுத்தும் மாற்றப்பட்டு விட்டது.

லிபியாவில் அமெரிக்கப் பிரஜையான, சீஐஏயின் வாரிசான மஹ்மூத் ஜிப்ரீல் லிபியாவின் காப்பாளராக நியமிக்கப்பட்டும் இருக்கின்றார். அமெரிக்காவால் நியமிக்கப்பட்ட ஜிப்ரீல் இனி இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இனி  ஒருபோதும் இருக்கமாட்டார்.

இனி, இஸ்ரேலின் வாக்களிக்கப்பட்ட 'அகன்ற இஸ்ரேல்' என்ற வாதத்திற்கும், அமெரிக்காவின் எண்ணெய் கொள்ளையிடலுக்கும் அடுத்த தடையாக இருப்பவை சிரியாவும் ஈரானும்தான். இந்த இரண்டு தடைகளையும் தகர்க்க வேண்டிய தேவை அமெரிக்காவிற்கு இருக்கிறது.

நேட்டோவின் அடுத்த இலக்கு சிரியாவையும் ஈரானையும் நோக்கி திரும்பும் என்பதில் சந்தேகமேயில்லை.

இப்போது அந்தக் களத்தையும், தளத்தையும் அமைக்கின்ற பணியில் "இஸ்ரேலிய, அமெரிக்க, அரபு முக்கூட்டு லொபி" (Lobby) கச்சிதமாக இயங்க ஆரம்பித்திருக்கின்றது. ஆப்கானிஸ்தான் யுத்தத்தின் போது இந்த முக்கூட்டு லொபி ஜிஹாதை ஜனரஞ்சகப் படுத்தி கம்யூனிஸம் தொடர்பான மிக மோசமான கருத்தாடலை மக்கள் மயப்படுத்தியது.

ஓர் இணைபிரியாத இயங்கு நிலையைக் கொண்ட அமெரிக்க முதலாளியத்திற்கும், அரபு வஹாபிஸத்திற்கும் உள்ள உறவு,  இந்த இரு சக்திகளுக்கும் ஊடகங்களில் உள்ள ஆதிக்கம் இக்கருத்தை உலக ரீதியில் மக்கள் மயப்படுத்துவதில் வெற்றியளித்து வருகிறது.

ஜிஹாத் என்ற சொல்லாடலை வெள்ளை மாளிகையின் வெறுப்பிற்கு ஆளானோர் மீது தொடுக்கப்படுகின்ற தூய போராட்டமாக அரபு வஹாபிஸம் அர்த்தப்படுத்தி காட்டி வருகிறது. தேவையான போது மாற்றமான கருத்து பெறும் இந்த ஜிஹாத் சொல்லாடல், அமெரிக்காவிற்கு எதிராக இருந்த லிபியாவிற்கு ஒரு விதமாகவும், அமெரிக்காவிற்கு ஆதரவாக இருக்கும் பஹ்ரைனுக்கு இன்னொரு விதமாகவும் அர்த்தப்படுவதை அவதானிக்க முடியும்.

இன்று நேரடியாக அமெரிக்காவையும், மறைமுகமாக இஸ்ரேலையும் ஆதரிக்கின்ற மத்திய கிழக்கின் வஹாபிய அரபு ராஜாக்களின் அரசியல் தலைமைத்துவங்கள்,  அடுத்த கட்டமாக சிரியா, ஈரான் இரண்டு நாடுகளுக்கும் எதிராக தனது பிரசார வியூகத்தை இப்போதே ஆரம்பித்திருக்கின்றன.

உலகம் பூராவும் இயங்குகின்ற, அரபுகளின் பெற்றோல் டொலர்களால் உயிர்வாழும், பிற்போக்குவாதிகளால் போஷிக்கப்படுகின்ற இயக்கங்களான தனது "ஏஜன்ட்"களை வைத்து இந்த அரபு அரசியல் தளம் சிரியாவிற்கும், ஈரானுக்கும் எதிராக பிரசார நடவடிக்கைகளை இயங்கு நிலையில் வைத்திருக்கிறது.  இது இந்த தீய சக்திகளின் பிரசார யுத்த நடவடிக்கையாகும்.

இராணுவ நடவடிக்கையாக லிபியாவில் கதாபிக்கு எதிராக போர்தொடுத்த அல்காயிதா உறுப்பினர்களையும், ஏனைய பிறநாட்டு ஜிஹாதிய கூலிப்படைகளையும், அமெரிக்க சீ.ஐ.ஏ உளவு நிறுவனம் சிரியாவிற்குள் நகர்த்தி வருவதாக அமெரிக்க எப்.பி.ஐ. உளவு பிரிவில் துருக்கிய மொழி பெயர்ப்பாளராககடமையாற்றிய சீபல் எட்மன்ட்  Russia Today (RT) தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் கூறியிருக்கின்றார்.

துருக்கி சிரிய எல்லையில் நேட்டோ படையின் முக்கிய புள்ளிகளால் இவர்களுக்கு ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் அறிய வருகிறது.

தற்போதைய லிபியாவின்,  திரிப்போலியின் இராணுவ கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் இருக்கும் அல்காயிதாவின் லிபியத் தலைவரான இருந்த ஹாகிம் பில் ஹஜ் தற்போது சிரியாவிற்குள் புகுந்திருப்பதாகவும் ஏனைய அரபு நாடுகளிலிருந்து போராட்டக்காரர்களை சிரியாவிற்கு கொண்டு வரும் வேலையை ஹாகிம் பில் ஹஜ்ஜோடு இணைந்து சீஐஏ திட்டமிட்டு செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுவரும் நேட்டோவின் தலைமையிலான இந்த அகன்ற இஸ்ரேலுக்குக்கான அமெரிக்க அக்கிரமிப்பிற்கு அரபு லீக் என்ற பொம்மைக் கூட்டம் அனுசரணை வழங்கியும் வருகிறது.

கடந்த திங்கட் கிழமை டமஸ்கஸ்ஸில் சிரியா விவகாரம் தொடர்பாக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

அமெரிக்க அனுசரணையில் அரபு லீக் தயாரித்துள்ள இந்நத ஒப்பந்தத்தில் சிரியாவிற்குள் சென்று அரபு லீக் உறுப்பினர்கள் சிரிய நிலைமைகளை அவதானிக்க முடியும் என்று விதிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் இடம்பெறுவதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களை அவதானிக்கும் பொறுப்பை பெற்றுக் கொள்வதில் அரபு லீக் காட்டும் ஆர்வத்தின் பின்னணியில் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலே இருக்கிறது.

கடந்த கால வரலாற்றை கொஞ்சம் மீட்டிப்பாருங்கள்.
அமெரிக்க,  இஸ்ரேலிய படைகளால் பலஸ்தீனிலும், ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் மெய் சிலிர்க்கின்ற மனித உரிமை மீறல்கள் நிகழும் போது எவ்வித கரிசனையும் காட்டாத இந்த அமெரிக்க பொம்மைகளான அரபு லீக், சிரிய விவகாரத்தில் மாத்திரம் "சீரியஸாக" சிந்திப்பது சீஐஏயின் வழிகாட்டலில்தான் என்பது தெளிவாக தெரிகின்றது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அரசியல் நலன் காக்கின்ற உளவாளிகளுக்கு இலகுவாக சிரியாவிற்குள் நுழைகின்ற அனுமதி கிடைத்திருக்கின்றது.

உண்மையை திரிபுபடுத்தும் மேற்குலகின் ஊடகங்களுக்கும் இந்த ஒப்பந்தம் ஒரு வரப்பிரசாதமாகும்.  இஸ்ரேல், பிரித்தானியா மற்றும் அமெரிக்க ஆதரவு ஊடகங்களும் அரபு எண்ணெய் 'ஷெய்க்கு'களின் ஊதுகுழலான அல் ஜஸீராவும் சிரியாவின் மீது நேட்டோ தாக்குதல் ஒன்றிற்கான நியாயத்தை ஏற்படுத்தும் பக்கச்சார்பான செய்திகளை திட்டமிட்டு பரப்பி, உளவியல் ரீதியிலான ஒரு யுத்தத்தை நடாத்தி வருகின்றன.

இஸ்ரேலுக்கு மிகவும் விசுவாசமான, கத்தார் மன்னரின் ஆஸ்த்தான முப்தியான கர்ளாவியும் சிரியாவின் மீது நேட்டோவின் காருண்ய படை கால் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றார்.


ஆனால், சிரியாவின் வன்முறையை முடிவிற்குக் கொண்டு வர அந்நாட்டின் மீது தொடுக்கப்பட தயாராகியிருக்கும் அமெரிக்க ஆதரவிலான படை நடவடிக்கையை ஐநா சபையில் ரஷ்யா கண்டித்திருக்கிறது.

லிபியாவின் பாணியில் சிரியாவை அமெரிக்காவிற்கு தாரை வார்த்துக் கொடுக்கும் இஸ்ரேல் அமெரிக்க நட்பாளர்களான சவூதி, கத்தார், குவைத் அரபு நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஓர்அச்சுறுத்தலாக ரஷ்யாவின் கோரிக்கை அமைந்திருக்கிறது.

ரஷ்யாவின் பிரபல அரசியல் ஆய்வாளரான பேராசிரியர் இகோர் பெனரின்  Professor Igor Panarin இஸ்ரேல் பிரித்தானிய அமெரிக்க ஆதரவு சக்திகள் சிரியாவின் உள்நாட்டுப் பிரச்சினையில் பெரும் பங்காற்றி வருவதாக குற்றம் சாட்டியிருக்கிறார். அரபு லீக்கிலிருந்த சிரியாவை தள்ளிவைத்தல் தீர்மானம்  முற்றாக இஸ்ரேலின் தேவைக் கருதி கொண்டுவரப்பட்ட ஒன்று எனவும் அவர் கூறியிருக்கின்றார்.


இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாட்டின் பாதுகாவலராய் இருக்கும் அமெரிக்க முதலாளியம் தான், சவூதி அரேபிய வஹாபிஸத்தின் பாதுகாவலராய் இருக்கின்றது. 


சுருக்கமாகச் சொன்னால் அமெரிக்காதான் மத்திய கிழக்கின் இரு பெரும் சக்திகளான சவூதியையும், இஸ்ரேலையும் பாதுகாக்கிறது. எனவே சவூதியால் பணம் வழங்கி பாதுகாக்கப்படுகின்ற ''இஸ்லாமிய வாதி(?)'' களுக்கு இஸ்ரேலைப் பாதுகாக்கின்ற நிர்ப்பந்தங்கள் (மறைமுகமாக) நிறையவே இருக்கின்றன. இதனை யாராலும் மறுக்க முடியாது.
இந்த அடிப்படையில் தான் கர்ளாவியின் பத்வாக்கள் அமெரிக்க முதலாளியத்தினதும் அரபு வஹாபிஸத்தினதும் அரசியல் திருப்திக்கு ஏற்றவாறு வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.


இஸ்ரேலை அமெரிக்கா நேசிக்கிறது. அமெரிக்காவை அரபு நாடுகள் நேசிக்கின்றன. அரபு நாடுகளை இஸ்லாமிய வாதிகள் (?) நேசிக்கின்றார்கள்.
உறவில் இவர்கள் ஓரணியில்தான். இலக்கில் மட்டும் எப்படி வித்திசாப்படுவார்கள்???.


எல்லோரினதும் இலக்கு ஒன்றுதான்.


அதுதான் மத்திய கிழக்கு முழுவதையும் ஒன்றிணைத்த அகன்ற இஸ்ரேல்!
அது அமைய தடையாக இருப்பவர்களை தட்டி வீழ்த்துவது தான் அமெரிக்க ஜிஹாத்!


ஆப்கானிஸ்தான்...ஈராக்...லிபியா விடயத்தில் இஸ்ரேலின் கனவு நனவாகிவிட்டது. இனி சிரியாவும் ஈரானும் தான்.!


எங்கே? இஸ்லாமியவாதிகளே! (?) 80களில் ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷ்யப் படையை விரட்டி அந்த பூமியை அமெரிக்காவிற்கு பெற்றுக்கொடுக்க அன்று போட்ட அந்த பழைய கோஷங்களை மீண்டும் முழங்குவோமே!
ஸபீலுனா... ஸபீலுனா... அல் (அமெரிக்கா) ஜிஹாத்!  
அல் (அமெரிக்கா) ஜிஹாத்!

1 comment:

ஞானசார தேரர் சிறைச்சாலையில் 'ஜம்பர்' அணிவது பிரச்சினையா?

ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தை வைத்து சிங்கள இனவாதிகள் தமது வழமையான இனவாத பிரசாரத்தை முடுக்கி விட்டுபோராட்டங்களை ஆரம்பித்...