Sunday, 18 December 2011

அல்லாஹ்வின் தினமாக உச்சரிக்கப்பட்ட அமெரிக்காவின் தினம்!

அல்லாஹ்வின் தினமாக உச்சரிக்கப்பட்ட அமெரிக்காவின் தினம்!


முஅம்மர் அல் கதாபி கொலை செய்யப்பட்ட நாளை கத்தாரில் வாழும் கர்ளாவி அல்லாஹ்வின் தினமாக பிரகடனப்படுத்தினார்.

லிபியாவில் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளைப்பார்க்கும் போது கர்ளாவி அமெரிக்காவின் தினத்தைத் தான் வேறு வார்த்ததையில் அல்லாஹ்வின் தினம் என்று கூறியிருப்பதாக தெரிய வருகிறது.

கடந்த 17.12.2011 அன்று லிபியாவிற்கு விஐயம் செய்த அமெரிக்காவின் பாதுகாப்பு செயலர் லியோன் பெனெட்டா லிபியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நெருங்கிய ஒத்துழைப்பு இருக்குமென்றும் லிபியாவை பாதுகாக்கும் நண்பனாக இனிமேல் அமெரிக்கா இருக்கும் என்றும் கருத்து வெளியிட்டுள்ளார்.

அல்லாஹ்வின் தினத்தில் உதயமான லிபியாவின் விடுதலைக்கு அமெரிக்கா பாதுகாப்பு வழங்குவது பொருத்தமா?

இப்படி நீங்கள் நினைக்கலாம். கர்ளாவி போன்றவர்களுக்கு அல்லாஹ்விற்கு அடுத்தபடியாக அமெரிக்கா இருக்கிறது என்பதைத்தான் அந்த வார்த்தை தெளிவுபடுத்துகிறது.

கிலாபத் சிந்தனையில் கட்டிஎழுப்பப்படவிருக்கும் லிபியாவிற்கு

 ''நாங்கள் உங்கள் நண்பனாகவும் பங்காளியாகவும் இருப்போம் '' என்று லிபியாவின் பிரதம அமைச்சர் அப்துல் றஹீம் அல் கிப் அவர்களை நோக்கி கூறியிருக்கிறார் லியோன் பெனெட்டா .

செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இந்த அமெரிக்காவின் நிலைப்பாட்டை முன் வைத்திருக்கிறார்.

கர்ளாவியின் அமெரிக்கபா சார்பபான கிலாபத் கனவு லிபியாவிலும் நனவாகவிருக்கிறது. ஆப்கானைப் போல.

80களில் அமெரிக்காவினால் வடிவமைப்பட்ட ஆப்கான் பேராட்டம் வெற்றியடைந்த போது இதே நிலைப்பாட்டையே அமெரிக்கா கொண்டிருந்தது. தற்போதைய ஆப்கானின் நிலையை புரிந்து கொண்ட ஒருவரால் நாளை லிபியாவில் என்ன நிகழவிருக்கின்றது என்பதை அனுமானிக்க முடியும்.

லிபியாவைப் போன்றே, ரஷ்ய சார்பான ஆப்கனை வீழ்த்துவதற்கு அமெரிக்கா அரபு நாடுகளிலிருந்து இயங்கிய உளவு நிறுவனங்களினால் ஐிஹாதிய வெறி ஊட்டப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட்ட இளைஞர்களை அரபு, முஸ்லிம், முஸ்லிம் அல்லாத நாடுகளிலிருந்து ஆப்கானுக்குள் கொண்டு சென்றது.



லிபியா போராட்டத்தின் போதும் அமெரிக்கா அதே பாணியிலான அணுகு முறையை பின்பற்றியது. லிபியாவின் ஊடகவியலாளர் ஒருவர் தனது நாட்டில் பிற நாட்டவர் வந்து போராடுவதாக ஊர்ஜிதப்படுத்தியுமிருந்தார்.

இதில் சுவாரஷ்யமான விடயம் என்ன வென்றால்,  அல்கைதா அமைப்பின் லிபிய கிளையின் முக்கிய உறுப்பினரான ஹாகிம் பில் ஹஐ் என்பவரை இடைக்கால அரசு இராணுவத்தில் ஒரு முக்கிய பொறுப்பில் அமர்த்தியிருக்கிறது.

அல்கைதா அமைப்பின் லிபிய கிளையின் முக்கிய 
உறுப்பினரான ஹாகிம் பில் ஹஐ் 

கலீபா ஹிப்தார் என்பவர் இடைக்கால நிர்வாக லிபியாவின் இராணுவ கமாண்டராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஹாகிம் பில் ஹஐ் தன்னை தானே இராணுவ தளபதியாக சொல்லி வருகிறார்.

ஆரம்பத்தில் போராட்டத்தின் போது இராணுவ கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்த பத்தாஹ் யூனுஸ் போராட்டக் களத்தில் வைத்தே மற்றுமொரு போராட்டக் குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இதே ஹாகிம் பில் ஹஐ் மலேசியாவில் வைத்து சீ.ஐ. ஏ இனால் கைது செய்யப்பட்டு கதாபியிடம் ஒப்படைக்கப்பட்டு லிபியாவில் சிறைவைக்கப்பட்டிருந்தவர். லிபியாவில் கதாபியின் இராணுவமும், பிரித்தானியாவின் உளவு நிறுவனமான எம்.16 னும், சீஐஏஇன் உறுப்பினர்களும் இவரை கடும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தியதாக இவரே ஊடகங்களுக்கு அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த அல்கைதா உறுப்பினரை உள்வாங்கியிருக்கும் லிபியா இராணுவத்திற்கு இன்று அமெரிக்கா உதவி செய்ய தயாராக இருப்பதாக அதன் பாதுகாப்புச் செயலர் அறிவித்தும் இருக்கின்றார்.

இது வேடிக்கையாக இருக்கிறதா?

ஒருபக்கம் அல்கைதாவை தேடும் வேட்டையில் ஆப்கானை ஒவ்வொரு நாளும் அமெரிக்கா அழித்துக் கொண்டிருக்கிறது.

மறுபக்கம் அல்கைதாவை வைத்து லிபியாவில் மக்கள் ஆட்சியை மலர வைக்கப் பார்க்கிறது.

என்ன ஆச்சரியம்?

இந்த நகர்வுகளைப் பார்க்கும் போது ஆப்கானின் அடுத்த பதிப்பாக லிபியா அமைய விருக்கிறது என்பதை உறுதியாக கூற முடியும்.

ஆப்கா்ன், லிபியா இந்த இரண்டு போராட்டங்களும் ஒரே நாட்டிற்காக ஒரே நாட்டின் வெளியுறவுக் கொள்கைக்காக ஒரே விதமாக வடிவமைக்கப்பட்டவை.

அமெரிக்க மற்றும் அரபு முகாம்களின் நிகழ்ச்சி நிரலுக்கு செயற்படும் இஸ்லாமியவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இந்த இரண்டு போராட்டங்கள் தொடர்பாகவும் கொண்டிருக்கின்ற ஒரே நிலைப்பாடும் இதனை தெளிவாக காட்டுகின்றன.

         
          வீதியில் போராட்டக்காரர்களினால் தூக்கிலிடப்பட்ட நஜீபுல்லாஹ்

ஆப்கானின் வெற்றியின் போது அந்நாட்டின் ஜனாதிபதியாய் இருந்த நஜீபுல்லாஹ் வீதியில் உள்ள மின்கம்பத்தில் தொங்கவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.  இந்தக் கொலையை இதே இஸ்லாமிய வாதிகள் அன்று சுவையான சொற்பொழிவுகளாக்கி இளைஞர்களின் இரத்தத்தை சூடேற்றினர்.

இன்று லிபியாவின் தலைவர் கதாபியை மக்கள் முன்னிலையில் அல்லாஹு அக்பர் கோஷமிட்டு அடித்துக் கொன்றனர்.

                              வீதியில் அடித்துக் கொலை செய்யப்பட்ட கதாபி

இந்த இரண்டு கொலைகளின் தன்மை ஒன்றாக இருப்பதுவும், இஸ்லாமிய வாதிகள் என்று தம்மை அழைத்துக் கொள்பவர்கள் இந்தக் கொலைகள் தொடர்பாக கொண்டிருக்கின்ற கருத்தும், இந்தக்கொலைகளால்இவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற மகிழ்ச்சியும் ஒரே நிலையில் இருப்பதுவும் இங்கு முக்கியமாக குறிப்பிடத்தக்கது.

அன்று ஆப்கானை சிறுவர் முதல் பெரியோர் வரை ஆயுத மயப்படுத்திய அமெரிக்கா இன்று லிபியாவையும் அதே பாணியில் ஆயுத மயமாக்கியிருக்கிறது. சாதாரண பிரஜைகளிடம் தொழில் நுட்பத்தில் கூடிய மிகச் சிறிய விமான எதிர்ப்பு ஆயுதங்கள் இருப்பதாகவும் அவற்றைக் களைய  முயல்வது போராட்டக் குழுக்களிடையே பிரச்சினைகளை தோற்றிவிக்கும் அபாயம் இருப்பதாகவும் இடைக்கால நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

இதே முறையிலான குழுக்களுக்கிடையிலான ஆயுதப் பகிர்வை அமெரிக்கா ஆப்கானிலும் நடைமுறைப்படுத்தியது. போராட்டமொன்று வெற்றியடைந்த பினனர் குழுக்களுக்கிடையிலான பிரிவினையைத் தோற்றுவித்து அந்நாட்டை ஸ்திரமற்ற நிலைக்கு கொண்டு செல்வதன் மூலம் அந்நாட்டில் தனது இருப்பையும் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்திக் கொள்ளவே அந்த அணுகு முறையை அமெரிக்கா கையாண்டு வருகிறது.

அமெரிக்காவிற்கு எதிராக இருக்கும் நாடுகளில் எதிரும் புதிருமாக இருப்பவர்களை ஒன்று சேர்த்து தனது எதிராளி ஆட்சியாளர்களோடு மோதவிட்டு தனது இலக்கை அடைவதே அமெரிக்க அரசியல். அதற்காக  முஸ்லிம்கள் தொடர்ந்து ஜிஹாதிய போர்வையில் கர்ளாவி போன்ற ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகளால் பகடைக் காய்களாக பாவிக்கப்படுகின்றார்கள்.

ஆப்கான் போராட்டம் வெற்றியடைந்த அடுத்த நிமிடம் அதிகாரப் பகிர்விற்காக குழுக்களுக்கிடையில் மோதல் உருவானது. ஜனாதிபதி ரப்பானிக்கும் பிரதமர் ஹிக்மரத்தியாருக்கும் இடையில் யுத்தம் மூண்டது.

இருசாராரும் ரொக்கட் தாக்குதல்களை நடாத்திக் கொண்டனர்.  குழுக்களுக்கிடையிலான மோதல் அதிகரித்து ஆயுதக் குழுக்கள் வலுவிழந்த போது, அமெரிக்கா தானே உருவாக்கியிருந்த தாலிபான்களை வைத்து ஆயுதக் குழுக்களை அழித்து தாலிபான்களிடம் ஆப்கானின் ஆட்சிப்பொறுப்பை கையளித்தது. பிறகு தாலிபான்களை துரத்தி விட்டு தனக்கு விசுவாசமான ஒருவரை வைத்து பொம்மை ஆட்சியை ஆப்கானில் நடாத்தி வருகின்றது.  இதுதான் அமெரிக்காவின் நவ காலனித்துவத்தின் நகர்வு. கர்ளாவி கூறும் கிலாபத்தின் புதிய முகம்.

அந்த நவ காலனித்துவம் இன்று லிபியாவில் காலூன்றி இருக்கிறது.  ஆப்கான் போராட்டத்தின் போது ஏற்பட்ட புறச்சூழல்கள் அத்தனையும் லிபிய போராட்டத்தின் போதும் ஏற்பட்டிருக்கின்றன.

இஸ்லாமியவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களின் ஆதரவு, மற்றும் அமெரிக்காவின் தலையீட்டை மறைமுகமாக அதரிப்பது ஆப்கானைப் போல லிபியா விடயத்திலும் ஒரேமாதிரியாகவே இருக்கின்றன.

லிபியாவின் சின்டான் பிரதேசம் ஒரு கிளர்ச்சிக் குழுவின் கைவசம் இருக்கிறது. அங்குள்ள விமான நிலையத்தை அவர்கள் தம் வசம் வைத்திருக்கின்றனர். அந்த பிரதேசத்திற்கு விஜயம் செய்த புதிய லிபியாவின் இராணுவத் தளபதி கலீபா ஹிப்தாரை நோக்கி மாற்று கிளர்ச்சிக் குழுவினர் துப்பாக்கி பிரயோகம் செய்திருக்கிறார்கள். இராணுவத் தளபதி வீதித்தடையை மீறிச் சென்றதால் தாம் துப்பாக்கி பிரயோகம் செய்தாக சின்டான் பிரதேச கிளர்ச்சிக் குழு தெரிவித்திருக்கிறது.

லிபியா ஆப்கானிஸ்தானாக அவதாரமெடுக்க ஆயத்தமாகின்றது.
அல்லாஹ்வின் தினம் அமெரிக்காவின் தினமாகின்றது
அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் மற்றுமொரு நாடு வந்திருக்கிறது
கர்ளாவியின் கனவு நனவாகியிருக்கின்றது.

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...