Thursday, 29 December 2011

பயங்கரவாதியை போராளியாக மாற்றும், போராளியை பயங்கரவாதியாக மாற்றும் அமெரிக்காவின் அவல அரசியல்!



தேவையான போது அரவணைப்பது, தேவையில்லாத போது அழிப்பது,
இதுதான் வெள்ளை மாளிகையின் வெளியுறவுக் கொள்கை!

தனது ஆதிக்க அரசியலை நிலைநாட்டுவதற்காக ஜிஹாத் என்ற போலி முலாம் பூசி, அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை உருவாக்கியது.
 .
அல்காயிதாவையும் ஏனைய தீவிரவாத இயக்கங்களையும் பாலூட்டி வளர்த்த அமொிக்கா,  ஹமீத் கர்ஸாயி என்ற தனது கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் பொம்மை ஒன்றின் தலைமையில்அந்த நாட்டைக் கொண்டு வந்திருக்கிறது.

ஆப்கானை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்ததன் பின்னர் ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக போராடிய, தன்னால் பாலூட்டி வளர்க்கப்பட்ட அல்காயிதா உட்பட அனைத்து அமைப்புகளினதும் குரல்வளையை அமெரிக்கா அதன் கைகளாலேயே நெரித்தும் வருகிறது.

ரஷ்யாவுக்கு எதிரான ஆப்கானின் போரை மையப்படுத்தி  பாகிஸ்தானின் பெஷாவர் நகரை பயங்கரவாதத்தின் பண்ணையாக அமொிக்கா மாற்றியது. இதன் மூலம் ஆயிரக் கணக்கான இளைஞா்கள் தீவிரவாதிகளாக தோற்றம் பெற்றனா்.

அது மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளிலிருந்து  இஸ்லாமிய இளைஞர்கள்  இந்த ஜிஹாதிய முலாம் பூசப்பட்ட “போலி கூலிப்படை” களுக்காக அணி திரட்டப்பட்டனா். 

அமெரிக்காவின் நலன் சாா்ந்த இந்த யுத்தத்திற்காக ஆள்பலத்தை சோ்ப்பதிலும், அணி திரட்டுவதிலும், அமெரிக்க உளவு நிறுவனமான சீஐஏ, பாகிஸ்தானின் உளவு நிறுவனமான  ஐஎஸ்ஐ மற்றும் அரபு நாட்டு உளவு நிறுவனங்களுடன் இணைந்து உலகளாவிய இஸ்லாமிய அமைப்புகளும் அயராது உழைத்தன.

அமெரிக்காவால் தூண்டி விடப்பட்ட  ஆப்கான் போரும் அதன் பின்விளைவுகளுமே சமகாலத்தின் இஸ்லாத்தின் மீதான மோசமான தோற்றப்பாட்டை உருவாக்க காரணமாகியிருக்கின்றன. 

தீவிரவாதிகளை உருவாக்கி இஸ்லாத்தின் புனிதத்தைக் களங்கப்படுத்துவதற்கும், அரபு தேசங்களின் வளங்களை கொள்ளையிடுவதற்கும்  அமெரிக்கா வகுத்த வியூகம் ஆப்கானில் “ஜிஹாத்” ஆக அரங்கேற்றப்பட்டது. ஒரு கல்லைக் கொண்டு அமெரிக்கா இரண்டு பழங்களை பறித்துக் கொண்டது.

உலக அரசியலில் தலை கீழான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும்,  சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பின்னா் அமெரிக்க ஏகாதிபத்தித்தின் கைகள் ஓங்குவதற்கும்  இந்த ஆப்கான் போா் ஒரு விதத்தில் வழி வகுத்தது எனலாம்.

அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கும் அதன் இராணுவ அக்கிரமிப்பிற்கும் ஓர் உந்து சக்தியை இந்த “ஆப்கான் ஜிஹாத்”  அமைத்துக் கொடுத்தது. பிற்காலத்தில், இந்தப் போரின்  கதாநாயகர்களைத்  தேடி ஒழிப்பதாகக் கூறிக் கொண்ட அமெரிக்கா பல  முஸ்லிம் நாடுகளை ஆக்கிரமித்து, குண்டு வீசி அழித்து துவம்சம் செய்தது.

அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்பு, சுரண்டல்  அரசியலை நிலை நாட்டுவதற்காகவே, 1980களில் பாகிஸ்தானை தீவிரவாதத்தின் தொட்டிலாக அமெரிக்கா மாற்றியது.   இந்த விளைவின் பாதிப்பை பாகிஸ்தான் இன்று  நன்றாகவே உணா்ந்து வருகிறது. உலக பயங்கரவாதத்தின் ஒரு குறியீடாக பாகிஸ்தான் மாற்றம் பெறுவதற்கு அமெரிக்கா வடிவமைத்த ஆப்கான் போரே அடிப்படைக் காரணமானது.

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற பழமொழி பாகிஸ்தானுக்கு இன்று சரியாக பொருந்திப் போகிறது.

அமெரிக்கா போன்ற ஒரு நாட்டின் ஏகாதிபத்திய அரசியல் தேவைகளுக்காக, அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக விதைக்கப்பட்ட  தீவிரவாதம், இன்று ஒரு விஷ விருட்சமாக பாகிஸ்தானில்  வளா்ந்திருக்கிறது.   ஜனநாயகத்தின்  அடிப்படைகளை தகா்க்கும் அளவிற்கு அங்கு  தீவிரவாதம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது.

பாகிஸ்தான் மக்களுக்கு தீவிரவாதத்தை அரசியல் பாலாக ஊட்டிய  அதன் ஆட்சியாளா்களையே இன்று பதம் பாா்க்கும்  அளவிற்கு அது மாறியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல்,  ஏகாதிபத்தியத்தின் எடுப்பாா் கைப்பிள்ளையாக இருந்த பாகிஸ்தானை  அமொிக்காவும் சோ்ந்து இப்போது பதம் பார்க்க ஆரம்பித்திருக்கிறது.

அமெரிக்காவால் எந்த நேரத்திலும் எதுவும் செய்ய முடியுமான ஓர் இறையாண்மையற்ற ஒரு நாடாக பாகிஸ்தான் சீர்குலைந்திருக்கிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை அதன் 'வெளியுறவு' அரசியல் அகராதியில் நீண்ட நாள் நண்பனுமில்லை, நீண்ட நாள் எதிரியுமில்லை என்ற நியதி நேர்த்தியாக பின்பற்றப்படுகிறது. 

பாகிஸ்தானில் உருவாக்கப்பட்ட,  அமெரிக்க அரசியல் நலன் சாா்ந்த ஜிஹாதிய பண்ணையில் புடம் போடப்பட்ட உஸாமா பின் லாதின், லிபியாவின் ஹாகிம் பில் ஹஜ் போன்றோா்  அமெரிக்காவின் ஏகாதிபத்திய அரசியல் காய் நகர்த்தலுக்காக எவ்வாறு பயன்படுத்தப்பட்டார்கள் என்பதை நாம் இன்னும் உணராமலேயே இருக்கிறோம்.

அமெரிக்காவின் அரசியல் தேவைக்காக லிபியாவை சின்னாபின்னப்படுத்திய  அப்துல் ஹாகிம் பில் ஹஜ் என்பவரைப் பற்றி எங்களில் எத்தனைப் பேருக்குத் தொியும்?

அப்துல் ஹாகிம் பில் ஹஜ்!

கதாபியின் வீழ்ச்சிக்குப் பிறகு திரிப்போலியின் இராணுவ தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் இந்த பில் ஹஜ் லிபியாவின் அல்காயிதா அமைப்பின் தற்போதைய தலைவர் ஆவாா். இவர் 1966ம் ஆண்டு  திரிப்பொலியில் பிறந்தவர்.

அல்காயிதா அமைப்பின் முக்கிய உறுப்பினராக அறியப்பட்ட இந்த அப்துல் ஹாகிம் பில் ஹஜ். ஆப்கான் போராட்டத்திற்காக பாகிஸ்தான் பெஷாவரைத் தளமாகக் கொண்டு இயங்கிய “ஜிஹாதிய பண்ணையில்” அமெரிக்கா சீஐஏ மற்றும் பாகிஸ்தானிய உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ இனால் மிகவும் திட்டமிட்டு  வளர்த்தெடுக்கப்பட்ட  ஒரு தீவிரவாதி!.

1980களில் ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷ்யப் படையை விரட்டுவதற்காக வேண்டி சவூதி அரேபிய “பெட்ரோ டொலா்” நிதி மூலங்களால் நிர்வகிப்பபடுகின்ற இஸ்லாமிய இயக்கங்களின் உதவியினால், 'ஜிஹாத்' போராட்டப் பயிற்சிக்காக,  பாகிஸ்தானுக்கு பலி கடாவாக கொண்டு வரப்பட்ட  ஒருவர்தான் இந்த அப்துல் ஹாகிம் பில் ஹஜ் .

சவுதி முதலாளியத்தின் அடையாளமாகவும்,  கட்டட வணிகத்தின் பெரு விருட்ஷமாகவும், அமெரிக்க ஜனாதிபதிகளான புஷ் குடும்பத்தின் நெருங்கிய சகாவாகவும் இருந்த பின் லாதீன் குடும்பத்திலிருந்து உருவான  ஒசாமா பின் லாதீனுக்கும் அப்துல் ஹாகிம் பில் ஹஜ்ஜுக்கும் இடையிலான  தொடர்பு பாகிஸ்தானில் தான் ஏற்பட்டது.

இந்த அப்துல் ஹாகிம் பில் ஹஜ் அமெரிக்காவால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள , அல்காயிதாவுடன் தொடா்புடைய  Libyan Islamic Fighting Group (LIFG)  லிபிய இஸ்லாமிய போராட்டக் குழுவின் தலைவராவார்.

அமெரிக்காவின் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் வரிசையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அடுத்ததாக 28 வது வரிசையில் அப்துல் ஹாகிம் பில் ஹஜ் உடைய லிபிய போராட்டக்குழுவின் Libyan Islamic Fighting Group (LIFG) பெயரே குறிக்கப்பட்டு இருக்கிறது.

தனது நாட்டினால் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பின் தலைவரான ஹாகிம் பில் ஹஜ்ஜை, லிபிய போராட்டத்தில் முன்னணி வீரராக  இன்று அமெரிக்க ஊடகங்கள் புகழ்ந்து பாராட்டி வருகின்றன.

வேடிக்கை என்னவென்றால், ஆப்கானிஸ்தானில் அல்காயிதாவிற்கு எதிராக யுத்தம் செய்கின்ற நேட்டோ படைகள், லிபியாவில் அல்காயிதாவோடு ஓரணியில் இணைந்து கதாபிக்கு எதிராக யுத்தம் செய்து வருகின்றன.

இதிலிருந்து அல்காயிதா தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு ஒரு போலி அரசியல் நாடகம் என்பது தெளிவாகப் புரிகின்றது.

சதாம் ஹுஸைனுக்கும், கதாபிக்கும் எதிராக அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக குற்றஞ்சாட்டி வந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். 

2001 செப்டம்பா் 11 தாக்குதலுக்குப் பின்னா் லிபியாவும், ஈராக்கும் அல்காயிதா தீவிரவாதிகளுக்கு உதவி செய்வதாக,  அமெரிக்கா மொட்டைத் தலைக்கும் முழங் காலுக்கும் முடிச்சு போடும் ஒரு போலி குற்றச்சாட்டை முன் வைத்து அந்த இரண்டு நாடுகளையும் அச்சுறுத்தியது. 

இரட்டைக் கோபுர தாக்குதலில் கலந்து கொண்ட 19 பேரில் ஈராக்கிய, லிபிய பிரஜைகள் யாரும் இருக்கவில்லை. ஆனால் தாக்குதலில் நேரடியாக தொடா்பு பட்டவா்களில்  15 பேர் சவுதி பிரஜைகளாவா்.  வேடிக்கை என்னவென்றால், இது விடயமாக சவுதியை கண்டிக்காத அமெரிக்கா ஈராக்கையும், லிபியாவையும் கண்டிக்கவும் தண்டிக்கவும் முன் வந்தது. 

இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தே அந்நாடுகளுக்கான ஆக்கிரமிப்பை ஐ.நா சபையும் நியாயப்படுத்தியது.

ஆனால் அல்காயிதா என்ற அமைப்பிற்கும் சதாம் ஹுஸைனுக்கோ, லிபிய தலைவா் முஅம்மா் அல் கதாபிக்கோ எவ்வித உறவும் இருந்தில்லை. எதிரும் புதிருமான அரசியல் தளங்களைக் கொண்ட அல்காயிதாவையும், கதாபி - சதாம் அணியையும் ஒன்றிணைத்து முடிச்சுப் போடுவதில் மேற்குலக ஊடகங்கள் வெற்றி கண்டன.

சதாமும், கதாபியும் அல்காயிதா அமைப்பின் பரம எதிரிகளாவர். அமெரிக்க அரசியல் நிகழ்ச்சி நிரலின் தேவைக்காக உருவாக்கப்பட்ட அல் காயிதா போன்ற தீவிரவாத கொலைக்கும்பல்களை அழிக்கின்ற, ஒடுக்குகின்ற ஒரு அரசியல் நிலைப்பாட்டிலேயே கடந்த காலங்களில் சதாமும், கதாபியும்  இருந்திருக்கின்றார்கள்.

அல்காயிதாவோடு தொடா்பு வைத்திருப்பதாய் யாரையெல்லாம் அமெரிக்கா போலியாக குற்றம் சாட்டியதோ, அந்த நாடுகளை வீழ்த்துவதற்கு,  இன்று அல்கைதாவையே ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தும்  ஓர் அவல அரசியலை அமொிக்கா செய்து வருகின்றது.

சமகால நிகழ்வுகளைப் பார்க்கும் போது அல்காயிதாவுக்கும் அமெரிக்காவிற்கும் உள்ள அடிப்படை உறவு அம்பலத்திற்கு  வந்திருக்கிறது.

அப்துல் ஹாகிம் பில் ஹஜ் ஆப்கானின் போராட்டத்தின் பின்னர் அதே நிகழ்ச்சி நிரலோடு லிபியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  லிபியாவில் அல்காயிதாவின் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

அமெரிக்காவோடு முறுகல் நிலையிலிருந்த கதாபிக்கு எதிரான போராட்டத்தை இவர் ஆரம்பித்தார். மூன்று தடவை கதாபியை கொல்ல இவர் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், அல்காயிதாவை கடுமையான முறையில் அடக்குவதற்கு கதாபி முடிவெடுத்தார். கதாபியின் கடுமையான நெருக்குதல் காரணமாக அல்காயிதா உறுப்பினர்கள் லிபியாவை விட்டு ஓட்டமெடுத்தனா். அவா்களை ஏவி விட்ட அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் தேடினர்.

அப்துல் ஹாகிம் பில் ஹஜ் 2004ம் ஆண்டு பெப்ரவரி மாதம் அரசியல் தஞ்சமடைவதற்காக பிரித்தானியாவிற்குள் ஊடுருவ முயற்சி செய்த போது மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு அமெரிக்க உளவு நிறுவனமான சீ.ஐ.ஏ. இடமும், பிரித்தானிய உளவு நிறுவனமான எம். 16 இடமும் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த இரண்டு உளவு நிறுவனங்களும் பில் ஹஜ்ஜை லிபியாவிடம் ஒப்படைத்தது. லிபியாவில் மூன்று நாட்டு உளவாளிகளினாலும் பலத்த சித்திர வதைகளுக்கு ஆளானதாக அண்மையில் ஹாகிம் பில் ஹஜ்  ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் இருக்கும் அல்கைாயிதா உறுப்பினர்களை காட்டிக்கொடுக்குமாறு லிபியாவின் உளவுத் துறை தலைவரான தற்போது பிரித்தானியாவில் இருக்கும் மூஸா கூஸா தன்னிடம் வேண்டியதாகவும், அப்படிக் கூறும் பட்சத்தில் தனக்கு சித்திரவதைகளிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று அவருக்குக் கூறப்பட்டதாகவும் அப்துல் ஹாகிம் பில் ஹஜ் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

பல ஆண்டுகள் லிபிய சிறையிலிருந்த அப்துல் ஹாகிம் பில் ஹஜ்ஜை, 2010ம் ஆண்டு மார்ச் மாதம் கதாபியின் மகன் சைபுல் இஸ்லாம்  விடுதலை செய்தாா். இதன் போது 700 அல்கைதா உறுப்பினர்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனா்.   விடுதலையின் பின்னர் அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தமது விடுதலைக்கு ஒத்துழைத்த கதாபியின் மகன் சைபுல் இஸ்லாத்திற்கு நன்றி பாராட்டுவதாக பில் ஹஜ் கூறினார்.

இது தொடர்பாக சைபுல் இஸ்லாமும் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போது “  இந்த அல்கைதா அங்கத்தவர்களால் இனியும் நாட்டிற்கு தீங்கு கிடையாது என்று தாம் நம்புவதால் அவர்களை விடுதலை செய்ததாக” அறிவித்தார்.

ஆனால் இவர்களின் விடுதலையின் சுமார் ஒரு வருடங்களின் பின்னர் லிபியாவின் தலையெழுத்தையே மாற்றுவதாய் இந்நிகழ்வு அமையும் என்று கதாபியோ, அவரின் மகன் சைபுல் இஸ்லாமோ கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.

கடந்த வருடம் மத்திய கிழக்கின் மக்கள் எழுச்சியொடு எழுந்து கொண்ட இந்த அப்துல் ஹாகிம் பில் ஹஜ் திரிப்பொலியில் ஆரம்பமான கதாபிக்கு எதிரான மக்கள் போராட்டத்தை மெதுவாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.

அமெரிக்காவினால் பயங்கரவாதியாக லிபியாவிற்கு பிடித்துக் கொடுக்கப்பட்ட அதே அப்துல் ஹாகிம் பில் ஹஜ்ஜை வைத்து லிபிய போராட்டத்தை மேற்குலகு மக்கள் மயப்படுத்தியது. 

தனது நிகழ்ச்சி நிரலில் பயங்கரவாதியாக இருந்த இந்த அப்துல் ஹாகிம் பில் ஹஜ்ஜை சுதந்திர போராளியாக மேற்கின் ஊடகங்கள் சித்தரித்துக் காட்டின.

மக்கள் எழுச்சியை தனது வழமையான அடக்குமுறை அணுகுமுறையால் நசுக்க முயன்ற கதாபிக்கு எதிராக தருணம் பார்த்திருந்த மேற்குலக நாடுகள் தடைகளுக்கு மேல் தடைகளை விதித்தன.   நேட்டோ படைகளின் வான் படைத்தாக்குதல்களைத் தொடுக்கப்பட்டன. 

இந்த நேட்டோவின் உதவியின் மூலம் திரிப்போலி நகரை  அப்துல் ஹாகிம் பில் ஹஜ் கைப்பற்றினார்.   லிபியாவின் வீழ்ச்சிக்கு மேற்குலகின் உதவியும், அல்கைதா உறுப்பினர்களினது போராட்டமும் காரணமாக அமைந்தன. 

பலஸ்தீன் பூமியை அபகரித்து ஏழு தசாப்தங்களுக்கு மேலாக அக்கிரமம் புரியும்,  இஸ்ரேலுக்குக் காட்டாத எதிர்ப்பை கதாபிக்கு காட்டும் அளவிற்கு முஸ்லிம்கள் மேற்குலக ஊடகங்களினாலும், பெட்றோ டொலா்களினால் போஷிக்கபடும் இஸ்லாமிய இயக்கங்களினாலும்,  எகாதிபத்தியத்தின் எடுபிடிகள் வழங்கிய  மாா்க்கத் தீா்ப்புகளினாலும்  மூளைச் சலவை செய்யப்பட்டார்கள்.

கதாபியின் சர்வாதிகார தன்மை தொடா்பில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை. ஆனால் அவரை  ஒத்த அடக்குமுறை ஆட்சியாளர்கள் மத்திய கிழக்கில் அதிகம்  பேர் இருக்கும் நிலையில் கதாபியை மட்டும் கொடுமைக்காரராகவும், சா்வாதிகாரியாகவும்  சித்தரிக்கும் ஏகாதிபத்திய வாதிகளின் சதி வலையில் முஸ்லிம்கள் சிக்கவைக்கப்பட்டார்கள்.

அப்துல் ஹாகிம் பில் ஹஜ் இப்போது அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் லிபியாவின் ஒரு விடுதலைப் போராளி!   

நாளை.....?  வெள்ளை மாளிகை என்ன சொல்லப் போகிறதோ..!
பொறுத்திருந்து பாா்ப்போம்!

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...