Monday, 12 December 2011

அல்லாஹ்வை மறந்து ஐநா படையின் உதவியைத் தேடும் அறிஞர்(?) கர்ளாவி.


அல்லாஹ்வை மறந்து ஐநா படையின் உதவியைத் தேடும் அறிஞர் கர்ளாவி.

சிரியா அரசை வீழ்த்துவதற்கு ஐநா படையின் உதவியை சிரிய மக்கள் நாட வேண்டுமென்று அண்மையில் கர்ளாவி அந்நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுததுள்ளார்.

 இணையத்தில் இந்தச் செய்தியைப் பார்த்த போது

சிங்கள மொழியில் இருக்கின்ற ஒரு பழமொழியே எனக்கு |ஞாபகத்திற்கு வந்தது.

யாருக்கும் தெரியாமல் பையில் மறைத்து வைத்திருந்த பூனை வெளியே பாய்ந்தது என்பதுதான் அந்த பழமொழி.

கர்ளாவியின் இஸ்லாமிய பிரசாரம் என்ற பையிலிருந்த மத்திய கிழக்கில் அமெரிக்க இஸ்ரேல் அரசியல் நலன் காக்கின்ற அரபு அரசியலை பாதுகாக்கும் பூனை வெளியே பாய்ந்து விட்டது.

சிரியாவின் மக்கள் போராட்டத்தை ஏகாதிபத்திய மாற்றுச் சக்திகளின் கைகளுக்கு மாற்றுவதற்கு கர்ளாவி கடும் முயற்சி எடுப்பது தெளிவாக தெரிகிறது.கர்ளாவி கத்தார் நாட்டில் அந்த நாட்டு மன்னனின் அனுசரணையில் வாழும் ஒரு மகோன்னத சிந்தனையாளர். இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் மிகவும் விசுவாசமாகவும் நேசமாகவும் இருக்கும் கத்தார் நாட்டின் அரச குடும்பத்தோடு மிகவும் நெருக்கமாக ஒட்டி உறவாடுபவர்.


கத்தார் மன்னனுக்கும் கர்ளாவிக்கும் உள்ள உறவு

கத்தார் நாட்டுக்கும் இஸ்ரேலுக்கும் உள்ள கள்ள உறவை கண்டு கொள்ளாமல் நடிக்கும் இந்த கா்ளாவி , ஏனைய நாட்டு முஸ்லிம்களுக்கு ஸியோனிஸவாதிகளின்  கொகா கோலாவை பகிஸ்கரிக்க பாடம் நடத்துபவர்.

முபாரக்கின் வீழ்ச்சிக்குப் பின்னா் எண்ணெய் கிடைக்காதா என்று கதிகலங்கி போயிருந்த இஸ்ரேலுக்கு ஆறுதல் கூறி, அனைத்து சலுகைகளையும் நான் தருவேன் என்று கூறியவா்தான் கத்தார் மன்னா். இந்தக் கத்தார் மன்னரும் கர்ளாவியும் இணைபிரியா நண்பர்கள்.

கத்தார் மன்னனுக்கும் இஸ்ரேலிய அமைச்சர் 
ஸிபி லிவினிக்ககும் உள்ள உறவு

இன்று கத்தார் நாடு இஸ்ரேலுக்கு பெற்றோலை மலிவு விலையில் அள்ளிக்கொட்டுகிறது. இது எகிப்தின் மக்கள் எழுச்சியின் போது கத்தார் மன்னர் இஸ்ரேலுக்குக் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று.

இஸ்ரேலுக்கு எண்ணெய் வழங்கும் இந்த வாக்குறுதி வெளியான போது கூட கர்ளாவி இது தொடர்பாக எந்தக் கருத்தும் வெளியிடவில்லை. மௌனமாகவே இருந்து இதனை அங்கீகரித்தார்.

இப்படி ஸியோனிஸத்திற்கு துணை போகின்ற இந்த கர்ளாவிதான் அமெரிக்காவின் இஸ்ரேலின் எதிரிகளை இலக்கு வைத்து எதிரிகளை இலக்கு வைத்து பத்வா பள்ளிக்கூடம் நடத்துகிறார். நாடகம் ஆடுகிறார்.

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் பைதுல் முகத்திஸை தருசிப்பதைக் கூட ஹராம் என்று பத்வா வழங்கியவா்தான் இந்த கர்ளாவி. காரணம் இஸ்ரேலை ஒரு நாடாக ஏற்று அவர்களிடம் அனுமதி கேட்டு அந்த பூமிக்கு செல்வது கூடாது என்று எங்களுக்கு உபதேசிக்கும் கர்ளாவி அந்த நாட்டுக்கு கத்தார் மன்னர் நிபந்தனையற்ற முறையில் இன்று உதவி செய்து வருவதை ஏற்றுக்கொள்கிறார். அங்கீகரிக்கின்றார்.

அமெரிக்காவிற்கு எதிரியாய் இருப்பவர்ககளை எப்படியாவது இஸ்லாத்தின் எதிரியாக இருப்பவர்களாக சித்தரித்துக் காட்டி சேறு பூசி அவர்களை கொலை செய்யுங்கள் என்று கூறும் அளவிற்கு ஒரு தனிமனிதனான கர்ளாவிக்கு என்ன உரிமை இருக்கிறது?  அவருக்கு யார் அந்த உரிமையை வழங்கியது? ஒரு கைதியை கொலை செய்வதற்கு அவருக்கு பின்புலமாக இருக்கின்ற அமெரிக்கா வும் இஸ்ரேலும் அங்கீகாரம் வழங்கலாம்.  ஆனால் இஸ்லாம் ஒருபோதும் அந்த அங்கீகாரத்தை வழங்காது. ஓரு குற்றவியல் சார்ந்த கொலை செய்யுங்கள் என்ற ஆணைக்கு அமெரிக்காவே அவருக்கு ஓர் அதீத பலத்தைக் கொடுத்திருக்கிறது.

சட்டம், ஒழுங்கு, ஐனநாயகம், மனித உரிமை என்று கூக்குரல் இடுபவர்கள் கூட ஒரு தனிமனிதனான கர்ளாவி இன்னொருவரை பகிரங்கமாக கொலை செய்யுங்கள் என்று கோரிக்கை விடுவதை தவறு என்று  கண்டுகொள்ளவில்லை.

கர்ளாவி சொல்வதை கண்ணை மூடிக்கொண்டு வேதவாக்காக நினைத்து பின்பற்றும் அவரின் பக்தகோடிகள் இந்த '' அவனை கொலை செய்யுங்கள் '' கோரிக்கையை வீரவசனமாக ஏற்றுக்கொண்டார்கள்.

அமெரிக்காவோடு முரண்படும் எந்த நாட்டுத் தலைவருக்கும் எந்த பிரசைக்கும் இந்த கர்ளாவியின் கொலை பத்வா மீண்டும் பிரகடனப்படுத்தப்படலாம்.

(அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் மறைமுகமாக இஸ்லாத்தின் போர்வையில் ஊழியம் புரியும் இவர்களின் செயற்பாடுகளை கருத்து ரீதியாக நான் இங்கு முன் வைக்கும் போது , அதற்கு கருத்து ரீதியாக முகம்கொடுக்காமல் , பதிலளிக்காமல் எனக்கு கொலை அச்சுறுத்தல் மின்னஞ்சல்களையும், போலியான குற்றச்சாட்டுகளையும் இணையம் மூலம்  அனுப்பி வருகின்றனர்.


எனது கருத்தை மறுப்பதற்கு யாருக்கும் உரிமை இருக்கிறது. கருத்து சொல்வதற்கு எனக்கு இருக்கும் உரிமையை மறுப்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது என்பதை இங்கு நான் கூறி வைக்க விரும்புகின்றேன்.


பெற்றோல் டொலர்களுக்காக இஸ்லாம் பேசும் இவர்கள் அதே பெற்றோல் டொலருக்காக என்னைக் கொலை செய்வது பெரிய காரியமுமல்ல. லிபியாவின் தலைவா் கடாபி கட்டிக்கொடுத்த கலாபீடத்தின்  மாநாட்டு மண்டபத்தில் பேச பயிற்சி பெற்று பெரும் மனிதராகி(?) பேச்சாளர்களாக மாறி அவரைக் கொலை செய்த நாளை அல்லாஹ்வின் நாள் என்று கொண்டாடும் நாயை விடக் கேவலமான நன்றிகெட்ட குள்ள நரிக் கூட்டம் எனக்கும் இந்த தண்டனையை வழங்க தயங்க மாட்டார்கள் என்பதை அவா்களின் ஒளிந்து விளையாடும் செயறபாடுகளிலிருந்து புரியக் கூடியதாய் இருக்கிறது.  


எது எப்படி இருப்பினும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்காக இஸ்லாம் பேசும் சமூகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய இந்தக் கைக்கூலிகளின் செயற்பாடுகளை உலகறியச்செய்வது அல்லாஹ்வினதும், அவனது இறுதித் தூதர் நபி (ஸல்) அவர்களினதும் மார்க்கத்திற்கு செய்யும் ஒரு பேறாகவே நான் கருதுகின்றேன்.)

அது மட்டுமல்ல இன்று இந்த கர்ளாவி
அமெரிக்காவின் எதிரியாய் இருக்கும் நாடுகளுக்கு பத்வா வழங்கும் ஒரு பெக்டரியாக அவர் மாறி வருகிறார்.

கடாபியை கொலை செய்ய பத்வா கொடுத்த அவர் பலஸ்தீன் காஸாவில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேலுக்கு கத்தார் மன்னன் குறைந்த விலையில் எரிபொருள் வழங்கி உதவி செய்வதை கண்டுகொள்வதில்லை. கண்டிப்பதில்லை.

உண்மையிலேயே கடாபி அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ஏற்றுக்கொண்ட ஒருவராக இருந்திருந்தால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. ஹுஸ்னி முபாரக்கைப் போல, பின் அலீயைப்போல அமெரிக்காவோ சவூதி அரேபியாவோ அவரை மக்கள் எழுச்சியின் போது பாதுகாத்திருக்கும்.

இன்றுள்ள உலக அரசியல் போக்கில் ஒருவன் இஸ்லாத்தை ஏற்றிருந்து அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அவனை அழிக்கின்ற வேலைத் திட்டம் அமெரிக்காவினாலும் அதன் அடிவருடி முஸ்லிம் நாடுகளினாலும், அந்த நாடுகளின் பணத்தினால் தனது வயிற்றுப் பசியைப் போக்கிக்கொள்கின்ற முஸ்லிம் பெயர்தாங்கிகளினாலும் மிகவும் நேர்த்தியாக நிறைவேற்றப்படுகின்றன.

அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் இந்த பூகோள அரசியலில் அமெரிக்காவிற்கு எதிராக எழுந்து நிற்பது என்பது இஸ்லாத்திற்கு எதிராக நிற்பது போன்றதொரு நிலைமையை இந்த கைகூலி முல்லாக்கள் மக்கள் மனங்களில் தோற்றுவித்திது வருகின்றனர்.  அமெரிக்காவின் அடுத்த நகர்விற்கு சாதகமாக ஈரானுக்கு எதிராக பத்வாக்கள் தயாரிப்பதில் இந்த சர்வதேச முல்லாக்களுடன் சேர்ந்து நமது நாட்டு ''லோகல்'' முல்லாக்கள் சிலரும் முனைப்புடன் இரவு பகலாக இயங்கி வருவதாக அறியக் கிடைக்கிறது.

மத்திய கிழக்கின் எண்ணெய்யைக் கொள்ளையிட அமெரிக்கா நடாத்தும் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு ஏதுவாக அரபு மண்ணை தளங்களாக அமைத்துக் கொடுத்துள்ள அரபு மன்னர்களை இந்தக் கர்ளாவி எப்போதாவது கடிந்து கொண்டுள்ளாரா? அவர்களுக்கு எதிராக பத்வா வழங்கி அந்நாட்டு மக்களை எழுப்பி இருக்கின்றாரா?

ஐ.நா என்பது  அமெரிக்காவின் எடுப்பார் கைப்பிள்ளை. அமெரிக்காவின் அராஐகங்களுக்கு தலை வணங்கும் இந்த ஐநா முஸ்லிம் நாடுகள் தொடர்பாக கொண்டிருக்கும் குரோத நிலைப்பாடு எவ்வாறானது என்பதை ஒரு சிறு பிள்ளையிடம் கேட்டாலும் அதற்கு சரியான விடை கிடைக்கும்.

சிரியாவில் ஐநா தலையிட வேண்டும் என்று கோரும் கர்ளாவியின்  மந்த புத்தி பத்வாவிற்கு பின்னணியில் காட்டிக்கொடுப்பும் கபடத்தனமும் இருக்கிறது.

கர்ளாவின் கருத்தின் படி சிரியா நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு அமெரிக்காவின் அடிவருடியாக செயற்படும் ஐநா வே நீதி செலுத்த வல்லதாம்..  ஐநா சபை உலகை நீதியால் நிறைத்து வருகிறதாம். அதன் துணை கொண்டு சிரியாவைக் காப்பாற்ற அவர் கனவு காணுகிறார்.

இந்த ஐநா முஸ்லிம் உலகிற்கு மாத்திரமல்ல முழு உலகிற்கும்  இழைத்திருக்கும் கொடுமையை எண்ணிப்பார்க்கத்தான் முடியுமா?அமெரிக்காவின் மறைமுக ஏஐன்டாகவும், அரபு மன்னர்களின் அடிவருடியாகவும் செயற்படும் இந்த கர்ளாவியின் பத்வா பூச்சாண்டி , பெற்றோல் டொலர்களுக்காக பிறந்த ஒன்றே அன்றி வேறில்லை.

கர்ளாவியின் அமெரிக்க அரசியல் நலன்காக்கும் இஸ்லாமிய பிரசாரத்தை ஏற்று அவரை புகழ்பாடித் திரிவதற்கு இளிச்சவாயர்களான இலுப்பைப் பூக்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

80களில் ஆப்கானிலிருந்து ரஸ்ய படையை விரட்டியடித்து விட்டு அமெரிக்க படைகளுக்கு அந்த பூமியை தானமாக கொடுத்த ஜிகாதுக்காக அயராது பாடுபட்ட கர்ளாவி, மத்திய கிழக்கின் மக்கள் எழுச்சியோடு மற்றுமொரு முறை விழித்துக் கொண்டிருக்கிறார்.

எகிப்தில் அரசுக்கு எதிராக எழுந்து உயிர் நீத்த இளைஞர்கள் எவ்வளவோ பேர் இருக்க, எழுச்சிக்கு வித்திட்டர்கள் நாங்கள்தான் என்று உறக்கத்திலிருந்து  விழித்து எகிப்துக்கு ஓட்டமெடுத்தர். வெள்ளிக்கிழமை குத்பாவில் வீர உரை நிகழ்த்தி விட்டு கத்தாருக்குள் ஓடி வந்து கண்ணயர்ந்த கர்ளாவி, இன்று சிரியாவைப் பார்த்து சீறிப்பாய்கிறார்.

ஆப்கானை, ஈராக்கை, லிபியாவை, அமெரிக்காவிற்கு தாரை வார்த்து விட்டு, இப்போது சிரியாவைப் பார்த்து  இந்தக் கன்றாவி கண் சிமிட்டுகின்றார்.

அமெரிக்காவிற்கு விசுவாசமாக இருந்து க்கொண்டு கடந்த 200 ஆண்டுகளாக பஹ்ரைன் மக்களின் விருப்பத்திற்கு மாற்றமாக அந்நாட்டை ஆளும் கலீபா குடும்பத்தினரை பதவி விலக வேண்டும் என்று பஹ்ரைன் மக்கள் போராடி வருகின்றனர். அந்த மக்களின் போராட்டத்தை பிரிவினைவாதம் என்று பீற்றித்தள்ளிய கர்ளாவி, அமெரிக்க சார்பான கலீபா மன்னர் குடும்பத்தை காப்பாற்ற அப்பட்டமாக உதவி வருகிறார்.

பஹ்ரைனில் ஆட்சிமாற்றம் ஒன்று ஏற்பட்டால் அங்குள்ள அமெரிக்காவின் ஐந்தாவது பாரிய கடற்படைத்தளத்தை பாதுகாக்கின்ற பிரச்சினை அமெரிக்காவிற்கு ஏற்படும்.

எனவே பஹ்ரைன் நாட்டு எழுச்சியை பிரிவினைவாதம் என்ற போர்வையில் பிரசாரம் செய்த கர்ளாவி அந்நாட்டு மக்களின் போராட்டத்தை நசுக்குவதற்கு சவூதி இராணுவத்தை அனுப்பிவதற்கான நியாயத்தை தோற்றுவித்தார்.
இன்று பஹ்ரைனில் சவூதி இராணுவம் போராட்டக்காரர்கள் மீது பல கொடுமைகளை நிகழ்த்தி வருகிறது.

2009ம் ஆண்டு காஸாவில் இடம்பெற்ற சம்பவம் நிகழ்காலத்தில் மிக மோசமான கொலைகளாகக் கருதப்படுகின்றன. சுற்றி வர அரபு நாடுகளை வைத்துக்கொண்டு அவர்களைக்காப்பாற்ற யாருமேயில்லையா என்று கதறும் போது மௌனமாக பார்த்துக் கொண்டுருந்த சவூதி அரேபியா பஹ்ரைனில் போராட்டத்தை நசுக்கி அமெரிக்க கடற்படைத்தளத்தை பாதுகாக்க தனது இராணுவத்தை அனுப்பியது.

காஸா கொலைகளைப் பார்த்து முஸ்லிம்கள் பதறிய போது பார்வையற்ற குருடர்களாய் இருந்து அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த அரபு மன்னர்களைப்பற்றி இந்தக் கர்ளாவி எந்த பத்வாவையும் வெளியிடவில்லை.

பஹ்ரைனில் அமெரிக்க கடற்படைத்தளத்திற்கு ஆபத்து வருகிறது என்ற நிலையில் பதறிப்போய் பஹ்ரைன் போராட்டத்திற்கு எதிராக பத்வா வழங்குகின்ற கர்ளாவியும், அதனைப் பாதுகாக்க தனது இராணுவத்தை அனுப்பி அந்நாட்டு மக்கள் மீது அட்டகாசம் புரியும் சவூதியும் ஒரே நிகழ்ச்சி நிரலின் இரண்டு நிகழ்வுகளே.

காஸா தாக்குதலின் போது பலஸ்தீனத்திற்குசவூதி அரசு தனது இராணுவத்தை அனுப்பி இஸ்ரேலுக்கு பாடம் புகட்டி இருக்கலாமே!

இதிலிருந்து என்ன புரிகின்றது?

இஸ்ரேலை அடக்காத கர்ளாவியும் அவரது அரபு எஐமானர்களும்  அமெரிக்காவோடு இணைந்து இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருந்த இருக்கின்ற நாடுகளை துவம்சம் செய்ய தொடங்கியிருக்கின்றார்கள்.

லிபியா, சிரியா, ஈராக், ஈரான் போன்ற நாடுகள் இஸ்ரேலுக்கு சிம்மசொப்பனமாக இருந்த இருக்கின்ற நாடுகள். லிபியாவும் ஈராக்கும் அந்த நாடுகளின் போராட்டத்தினால்  தலைவர்கள் கொலை செய்யப்படும் அளவிற்கு போராட்டத்திற்கு சீஐஏ உளவாளிகளின் சதிகளினாலும், கர்ளாவி போன்ற ஏகாதிபத்திய ஏஐன்ட்களின் பத்வாவினாலும்  புத்துயிர் அளிக்கப்பட்டது.

மத்திய கிழக்கில் மீதமிருக்கும் இஸ்ரேல் விரோத நாடுகளில் எஞ்சியிருப்பது சிரியாவும், ஈரானும், லெபனானும் கர்ளாவியின் பத்வா நாடகம் இப்போது சிரியாவிற்கு எதிராக அரங்கேறியிருக்கிறது.  படிப்படியாக அது ஏனைய நாடுகளுக்கு எதிராகவும் அரங்கேறும். மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருந்தவர்கள் குறைந்துகொண்டு வருகிறார்கள்.

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் ஆதரவான நாடுகள் பாதுகாக்கப்படுகின்றன.

மத்திய கிழக்கின் மக்கள் எழுச்சியில் சிக்குண்ட நாடுகளில் எகிப்தும், ரியூனிசியாவும், யெமனும், பஹ்ரைனும் அமெரிக்க  ஆதரவு நாடுகள் அந்தப் போராட்டங்களை  தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்ட அமெரிக்கா அதன் தலைவர்களைப் பாதுகாத்துக்கொண்டு போராடடத்தையும் கர்ளாவி போன்ற அதன் அடிவருடுகளை வைத்து காத்துக்கொண்டது.

அமெரி்க்க நேச நாடுகளைப் பாதுகாக்கின்ற கள்ளத்தனத்தை முப்தியாக வேசமிட்டு பத்வாவாக கர்ளாவி வெளியிட்டு வருகிறார்.

பஹ்ரைன் மக்களின் போராட்டம் வெற்றிபெற்றால் அமெரிக்காவின் பாரிய கடற்படைத்தளத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தலை தவிர்க்கவே இந்த கர்ளாவி பஹ்ரைன் போராட்டத்தை பிரிவினைப் போராட்டம் என்ற அமெரிக்க சார்பு பிதற்றல் பத்வாவை வெளியிட்டு மகிழ்ந்தார்.

எகிப்தின் போராட்டம் முழுக்க முழுக்க மக்கள் போராட்டமாகவே வெடித்தது.
முபாரக்கின் இராணுவம் கூட நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்றே தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்தது.  அந்த நேரம் கடாபிக்கு கொடுத்த கொலை பத்வாவை கர்ளாவி முபாரக்கிற்கு வழங்கவில்லை.  காரணம் முபாரக் அமெரிக்காவின் கையாள், அரபு மன்னர்களின் நேசன்.

தன்னையே கொலை செய்ய காத்துக்கிடந்த முபாரக்கிற்கு வழங்காத பத்வாவை கடாபிக்கு வழங்கியது அவர் அமெரிக்காவின் விரோதி என்ற நிலைப்பாட்டை வைத்தே.

தூனீசியாவில் அட்டகாசம் புரிந்த பின் அலியை இன்று சவூதி அரசு பாதுகாக்கிறது. முபாரக்கை அமெரிக்கா பாதுகாக்கிறது. அவர்களுக்கு நீதி விசாரணை எதுவுமில்லை. பத்வாக்கள் எதுவுமில்லை. காரணம் அவர்கள் அமெரிக்காவின் ஆதரவாளர்கள்.

கடாபியின் மகன் சைபுல் இஸ்லாத்தை சர்வதேச குற்றவியல் மன்றில் நீதிக்காக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடும் இந்த கர்ளாவி கும்பல்கள் பின் அலீ பற்றியும், முபாரக் பற்றியும் மூச்சு விடுவதில்லை. அவர்களை பாதுகாக்கும் அரபுகள் பற்றி வாய் திறப்பதில்லை.

லிபியாவில் அமெரிக்க அரசினால் போசிக்கப்பட்ட போராட்டக்காரர்களால் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட கைதியான கடாபியை கொலை செய்த முறையை இஸ்லாம் அங்கீகரிக்கின்றதா?

கதறக்கதற ஒருவனை கொன்றொழிப்பதை றசூலுல்லாஹ்வின் சுன்னாஹ் அங்கீகரிக்க வில்லை.

அல்லாஹு அக்பர் என்று ஒரு கைதியின் கழுத்தை அறுப்பதை, அவனை அடித்துத் துன்புறுத்தி கொலை செய்வதை இஸ்லாத்தின் உன்னதச் செயல் என்று கர்ளாவியும் அவரின் கும்பல்களும் மார்தட்ட முடியும். ஆனால் அந்தச் செயல் இஸ்லாம் வெறுக்கின்ற இழிவான செயல் என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டிய பொறுப்பு ஓர்  உண்மையான முஸ்லிமுக்கு இருக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்திய நலன்காக்கும் மத்திய கிழக்கு அரபு அரசியலில் தனது வயிற்றுப்பசியை தீர்த்து வரும் கர்ளாவியும் அவரின் கும்பல்களும் அமெரிக்க நவ காலனித்துவத்தின் நிகழ்ச்சி நிரலுக்காக செயற்பட்டு வருகின்றனர்.

மேற்குலகோடு முரண்படும் நாடுகளுக்கு தண்டனையாக உள்நாட்டிலேயே பிரச்சினைகளை உருவாக்கும் , பிரச்சினைகளை உயிராக்கும் வேலைத்திட்டங்களை இந்தச் சக்திகள் செய்து வருகின்றன.

இலங்கையும் அதற்கு விதிவிலக்கல்ல, அண்மைக்காலமாக மேற்குலகோடு இலங்கை ஒரு முறுகல் நிலையில் இருக்கின்றது. கத்தாரை தளமாகக் கொண்டு இயங்கும் அரபு எஐமானர்களின் ஊடக நிறுவனமான அல்ஐஸீரா இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற செய்திகளை ஒளிபரப்பி செனல் 4 தொலைக்காட்சிக்கு அடுத்த நிலையில் செயல்பட்டதையும் நாங்கள் மறக்கக் கூடாது. அல்ஐஸீராவின் இந்த செயற்பாட்டில் ஒரு பாரிய அரசியல் பின்னணி இருக்கிறது. இஸ்ரேலுக்கு எதிராக, காஸா படுகொலைகளுக்கு எதிராக கொடுக்காத பாரிய விளம்பரத்தை அல்ஐஸீரா இலங்கைக்கு எதிராக கொடுத்ததுவும் இந்த பின்னணியில்தான்.

80களில் ஆப்கானில் பெஷாவரில் அமெரிக்கா ஐிஹாத் பாடம் நடாத்திய போது அதில் படித்து பட்டம் பெற்று வெளியேறியவர்கள் இலங்கையிலும் இருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

கர்ளாவியின் சிஷ்யர்களாக இருக்கும் இவர்கள், முக்கிய கலாநிலையங்களில் பொறுப்பானவர்களாகவும், இலங்கை ஊடகங்களினால் ஊதிப்பெருப்பிக்கப்பட்டவர்களாகவும் இருப்பது அமெரிக்காவிற்கு இனமோதல் தொடர்பான எந்தக் காரியத்தையும் இலங்கையில் மேற்கொள்ள இலகுவானதான ஒரு சாதகமான சூழ்நிலை உருவாகி வருவதை உணர முடிகிறது.

அமெரிக்காவிற்கு தேவையான போது ஏதாவது ஒரு சிறிய இனமுறுகலை வைத்து ஐிஹாதிய தீயில் இலங்கையை பொசுக்கிவிட முடியும். அதற்கு ஏதுவாக அரபுகளின் அணுசரணையில் இலங்கையில் இடம் பெறும் நிகழ்ச்சிகளை நான் அவ்வப்போது பத்ர் களத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

அமெரிக்காவின் நவ காலனித்துவ சிந்தனையால் வடிவமைக்கப்பட்டுள்ள, பெற்றோல் டொலர்களால் போஷிக்கப்படுகின்ற இன்றைய இஸ்லாமிய (?) வாதிகள் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு அல்லாமல் அதன் அழிவிற்கே துணை போகின்றனர்.

2 comments:

  1. நல்லதொரு விளக்கம். இவர்கள் தான் பென்னாம் பெரிய சர்வதேச முப்திகள் என நாங்கள் நம்பிக்கொண்டிருக்கிறோம். இதை வாசிக்கும் போது தான் புரிகிறது இவர்களது வில்லங்கம். அது சரி... கர்ளாவி ஒரு பெண்ணின் கையை பிடித்ததை விமர்சிப்பதையே தாங்க முடியாத சிலர் இதை எப்படி ஜீரணிக்கப் போகிறார்கள்.

    ReplyDelete
  2. முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (திருக்குர்ஆன், 5:51)    (www.facebook.com/valifarsangam)

    ReplyDelete

ஞானசார தேரர் சிறைச்சாலையில் 'ஜம்பர்' அணிவது பிரச்சினையா?

ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தை வைத்து சிங்கள இனவாதிகள் தமது வழமையான இனவாத பிரசாரத்தை முடுக்கி விட்டுபோராட்டங்களை ஆரம்பித்...