”ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்…………….. நம்ம தலைவர் கிட்டயே மோதறியா? உன் நெஞ்சுல இருக்குற மாஞ்சா சோத்தை எடுக்காம விடமாட்டேன்….மவனே.” என்று கிடுகிடுக்க வைக்கும் ஆளை என்னவென்று அழைப்பீர்கள்?
“அடியாள்”
“நம்மாள என்னனுடா நெனச்சே? சிங்கம்டா….. தில் இருந்தா வெளிய வாடா” என்று வீட்டின் மீது சோடா பாட்டில் வீசும் ஆளை என்னவென்று அழைப்பீர்கள்?
“அடியாள்”
இறுகக்கட்டிய டை…….
போர்த்தியிருக்கும் கோட்……. மாட்டியிருக்கும் சூட்…….
நாக்கைச் சுழற்றும் ஆங்கிலத்தோடு…… ”உங்கள் நாட்டின் தொலைத்தொடர்பு வசதிகளைப் பெருக்குவதற்காக ஆயிரம் கோடி டாலர்களை கொடுத்து உதவலாம் என்று வந்திருக்கிறோம். எப்படி உங்க வசதி?” என்று கனிவாகக் கேட்கிற கண்ணியவானை ”அடியாள்” என்று சொன்னால் அடிக்கத்தானே வருவீர்கள்?
ஆனால்……
அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகம் படித்த….
அமெரிக்காவின் அதிஉயர் உளவு அமைப்பான தேசிய பாதுகாப்பு நிறுவனத்தால் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட…..
பொருளாதார ஆலோசனை நிறுவனமான மெய்ன்(MAIN) என்கிற மாபெரும் வர்த்தக நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணராக பல்வேறு நாடுகளுக்குப் பயணப்பட்ட……
”ஜான் பெர்கின்ஸ்” தன்னை ஒரு அடியாள் என்றே அழைத்துக் கொள்கிறார்.
சாதாரண அடியாள் இல்லை.
அதுவும் ”பொருளாதார அடியாள்”.
சாதாரண அடியாட்கள் கூலிக்குப் போட்டுத் தள்ளுவார்கள்….. அல்லது சோடாபாட்டில் அடிப்பார்கள்……. காட்டிக்கொடுப்பார்கள்……. தேவைப்பட்டால் கூட்டிக் கொடுப்பார்கள்…….
ஆனால் அமெரிக்கப் பல்கலையில் பொருளாதாரம் பயின்ற ஜான் பெர்கின்ஸ் எப்படியாம்?
”நானும் அப்படித்தான். ஒரே ஒரு வித்தியாசம் அவர்கள் அப்பட்டமாகத் தெருவில் நின்று செய்வதையெல்லாம் நான் படுரகசியமாக காதும் காதும் வைத்த மாதிரி செய்திருக்கிறேன் அத்தனை அட்டூழியத்தையும். நான் செய்தது அனைத்தும் ”நாட்டு நலத்தின்” பெயரால். ஆனால் அடிப்படையில் வித்தியாசம் ஒன்றுமில்லை எனக்கும் அவர்களுக்கும்.” என கடந்த காலங்களில் தான் செய்த அவ்வளவு சதிச் செயல்களையும் அப்பட்டமாகப் போட்டு உடைத்திருக்கிறார் ஜான் பெர்கின்ஸ். அதுவும் தாளமுடியாத குற்ற உணர்ச்சியோடு.
ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாய் அமெரிக்க உளவுக் கும்பலின் சதிகாரச் செயல்களுக்கு எந்தெந்த வகைகளில் துணை போனார் என்று துல்லியமாக புட்டுப் புட்டு வைத்திருக்கிறார் அவர் எழுதியிருக்கிற புத்தகத்தின் மூலம்.
அந்தப் புத்தகத்தின் பெயர்தான் : ”ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்.”
புத்தகம் தமிழில் வெளிவந்து நான்காண்டுகள் ஆயிற்று. அதுவும் ஐந்து பதிப்புகளுக்கும் மேல் வந்தாயிற்று. இன்றுதான் விடிந்திருக்கிறது எனக்கு. உண்மையை ஒளிக்காது சொல்வதானால் இந்த நூலைப் படித்ததும் ஆடிப்போய்விட்டேன் நான். அமெரிக்கா அணுகுண்டு வீசும்…… படைகளை அனுப்பி கொன்று குவிக்கும்……. என்பதெல்லாம் ஊரறிந்த சமாச்சாரங்கள்தான். ஆனால் இவ்வளவு நூதனமாக நாம் விழித்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே தொடையில் கயறு திரிக்கும் என்பதுதான் இந்நூலில் உள்ள அதிர்ச்சிகரமான செய்திகள். விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தை மிக அற்புதமாக தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் இளம் வழக்கறிஞராக இருக்கும் இரா.முருகவேள்.
நெருடாத வார்த்தைகள்…….
எளியோருக்கும் புரியும் வண்ணம் கைபிடித்து அழைத்துச் செல்லும் மிக மிக இலகுவான நடை……
இது ஆளின் பெயரா அல்லது நாட்டின் பெயரா என்று அனாவசியத்துக்கு குழம்பிக் கொள்ளும் என்னைப் போன்ற குழப்பவாதிகளுக்குக்கூட புரிகிற மாதிரி தமிழில் தந்திருக்கிற முருகவேள் கஞ்சத்தனமில்லாமல் மனதார பாராட்டப்பட வேண்டியவர்.
இந்த நூலை ஜான் பெர்கின்ஸ் எழுதியதை விடவும் அவர் எப்படி இன்னமும் உயிருடன் உலவ விடப்பட்டிருக்கிறார் என்பது மிக முக்கியமானது.
இதை 1982 இல் இவர் எழுத ஆரம்பித்தவுடனேயே பலபக்கமிருந்தும் கடும் எதிர்ப்புகள்………கொலை மிரட்டல்கள்……..லஞ்ச பேரங்கள்…….
மீண்டும் எழுதுவதைத் தள்ளிப் போடுகிறார்.
இப்படி ஒருமுறை அல்ல.
நான்குமுறை.
கடைசியாக அவரது ஒரே மகள்
ஜெசிகாவிடம் தனது அச்சத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது அந்தப் பெண் சொல்லிய பதில்தான் மிக அற்புதமானது.
“கவலைப்படாதீர்கள் அப்பா. அவர்கள் உனக்கு முடிவு கட்டினால், நீ விட்ட இடத்திலிருந்து நான் தொடர்வேன். உனக்கு ஒரு நாள் நான் பெற்றுத்தரப் போகும் பேரக் குழந்தைகளுக்காக இதை நாம் செய்தே ஆக வேண்டும்.” இதுதான் அந்த பதில்.
சரி அதில் அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார் அந்த ஜான் பெர்கின்ஸ்? அவரை யார் எதற்காகக் கொல்ல வேண்டும்? என்று நீங்கள் கூவுவது கேட்கிறது. அதை நான் சொல்வதை விட அந்த அமெரிக்கரது வார்த்தைகளிலேயே சொல்வதுதான் சாலச் சிறந்தது. இனி நீங்களாச்சு…… அந்த ஜான் பெர்கின்ஸ் ஆச்சு…..
“பொருளாதார அடியாட்களாகிய நாங்கள் தந்திரம் மிக்கவர்கள்; வரலாற்றிலிருந்து கற்றுக் கொண்டவர்கள். இன்று நாங்கள் வாளேந்திச் செல்வதில்லை. போர்வீரர்களுக்குரிய ஆடைகளோ, கவசங்களோ பூணுவதில்லை. ஈக்வடார், நைஜீரியா, இந்தோனேஷியாவில் நாங்கள்
உள்ளூர் பள்ளியாசிரியர்கள் அல்லது கடைக்காரர்கள் போலத்தான் உடையணிகிறோம். வாஷிங்டனிலும், பாரீசிலும் அரசு அதிகாரிகள் அல்லது வங்கிப் பணியாளர்கள் போன்ற தோற்றத்தில் உலவுகிறோம். அடக்கத்துடனும் இயல்பாகவும் நடந்து கொள்கிறோம்.”
அப்புறம் என்னதான் சிக்கல்? இவ்வளவு எளிமையாகவும், அடக்கமாகவும் உலவுகின்றவர்களை எதற்காக குறி வைக்க வேண்டும்? என்கிற கேள்வி இயல்பாகவே எழத்தான் செய்யும்.
அது இந்தியாவாகட்டும் அல்லது ஈக்வடார் ஆகட்டும்…… உலக வங்கியோ அல்லது ஏதாவது பன்னாட்டு நிதி நிறுவனமோ கோடிக்கணக்கில் கடன் கொடுக்கிறது என்றால், அந்த நாடு பொருளாதாரத் துறையில் ”ஓகோ”ன்னு வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக அல்ல. அப்படி எவராவது நினைத்தால் அவரை விட அடிமுட்டாள் யாரும் இருக்க முடியாது. ஆனால் முட்டாள் என்கிற சந்தேகம் அவர்களுக்குள் ஏற்பட்டுவிட முடியாதபடி கடன் வாங்க வைக்க வேண்டும். அப்படி அவர்களை பெரும் கடன்காரர்கள் ஆக்க வைப்பதற்கான டுபாக்கூர் புள்ளி விவரங்களை அள்ளி வீசுவதுதான் நிபுணர் ஜான் பெர்கின்ஸின் வேலை. இந்த வேலையைச் செய்வதற்காக அவர் ஒவ்வொரு நாட்டிலும் என்னென்ன திரைமறைவு வேலைகளைச் செய்தார் என்பதை மனத்துயரத்தோடும், மாபெரும் குற்ற உணர்ச்சியோடும் விளக்கும் வரிகள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய வரிகள்.
அவருக்கு இடப்பட்ட கட்டளை:
நாடுகளுக்கு மிகப் பெரிய அளவிற்குக் கடன் வழங்கி அதே பணத்தை பெரும் கட்டுமானத் திட்டங்கள் மூலம் அமெரிக்க நிறுவனங்களே கைப்பற்றி திரும்பவும் அமெரிக்காவுக்கே கொண்டு வருவதை நியாயப்படுத்த வேண்டும்.
கடன் வாங்கிய நாடுகளை போண்டியாக்குவதற்கு வேலை செய்ய வேண்டும்.
அப்படி அவற்றை ஓட்டாண்டி ஆக்கினால்தான் அவை எப்போதும் கடன்காரர்களுக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கும்.
அப்போதுதான் அமெரிக்காவுக்குத் தேவையான இராணுவத் தளங்களை அமைப்பதென்றாலோ….. அந்நாட்டில் உள்ள எண்ணெய் போன்ற இயற்கை வளங்களைச் சுரண்டுவது என்றாலோ…. ஐ.நா.சபையில் தனக்கு ஆதரவாக ஓட்டுப் போட வேண்டும் என்றாலோ….. இந்தக் கடன்கார நாடுகள் உறும முடியாது….. திமிர முடியாது…… முக்க முடியாது….. முனக முடியாது.
அதற்கு முதலில் இந்நாடுகளைக் கடன் வாங்க உடன்பட வைப்பதுதான் இந்தப் பொருளாதார அடியாளின் தலையாய பணி.
கடன் வாங்காத நாடுகளின் தலைவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது?
அல்லது எப்படி விமான விபத்திலோ அல்லது சாலை விபத்திலோ பரலோகம் அனுப்பி வைப்பது…..
பொன் கேட்டவர்களுக்குப் பொன்.
பெண் கேட்டவர்களுக்கு பெண்.
இப்படி தான் செய்த அநீதியான செயல்களுக்குப் பிராயச் சித்தமாக அங்கிருந்து வெளியேறி இந்நூலை எழுதியிருக்கிறார் ஜான் பெர்கின்ஸ். உலகத்தின் மூலை முடுக்கில் எல்லாம் ஒளிந்திருக்கும் மர்மப் பகுதிகளை பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்துகிறது இந்தப் புத்தகம். இந்நூல் தொட்டுச் செல்லும் சர்வதேச அரசியல் சமாச்சாரங்களையெல்லாம் எப்பாடுபட்டாலும் ஓரிரு பக்கங்களில் விளக்கி விட முடியாது. மனித குலத்தில் அக்கறை கொண்டவர்கள்…… மனித குலத் துயருக்கு விடிவு காண வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர்கள் என ஒவ்வொருவர் கையிலும் நிச்சயம் இருந்தாக வேண்டிய புத்தகம் இது.
இதையே நூலின் ஆசிரியர் ஜான் பெர்கின்ஸின் வார்த்தைகளில் சொல்வதானால்……
“நமது கடந்தகாலத் தவறுகள் புரிந்து கொள்ளப்பட்டால் மட்டுமே எதிர்காலத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை மக்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள முடியும்.”
ஆம் நானும் நான்காண்டுகளாய் இந்நூலை வாசிக்காத தவறைப் புரிந்திருக்கிறேன்.
நன்றி