சிரியாவில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் வன்முறைகளையும் கடந்து, கடந்த சில வாரங்களாக உக்ரேன் செய்திகள் உலக ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன. அமைதியாக இருந்த உக்ரேனில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக என்ன நடக்கின்றது..? ஏன் அங்கு வன்முறைகள் உச்சக் கட்டத்தை அடைந்தன..?
காரணம் ஐரோப்பிய ஒன்றியம். ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய வேண்டும் என்று உக்ரேனில் ஒரு பகுதியினர் நடத்திவரும் போராட்டமும் அதற்கு எதிராக அரசு எடுத்த நடவடிக்கைகளும்தான் இந்த உச்ச வன்முறைக்கும், அந்நாட்டு அதிபரும், பிரதமரும் பதவியைவிட்டோடியுள்ள நிலைக்கும் காரணம்.
சோவியத் ஒன்றியக் கூட்டமைப்புக்குள் இருந்து பிரிந்து தனித்தேசமானதுதான் உக்ரேன். தனித் தேசமானபோதும் அது தமது செ(ர)ல்வாக்குக் கட்டுப்பட்ட தேசமாக இருக்க வேண்டும் என்பது ரஷ்ய ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பு. ஆனால், அதனை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைத்து ரஷ்யாவை ஓரங்கட்டிவிடுவதுடன், பொருளாதார நலன்களையும் அடையவேண்டும் என்பது மறுதரப்பின் எதிர்பார்ப்பு. இந்த இரு தரப்புக்கும் இடையில் சிக்கித்திணறுகின்றது உக்ரேன்.
உக்ரேன் நிலைமைகளைப் பார்ப்பதற்கு முன்பாக ஐரோப்பிய ஒன்றியம் குறித்துச் சற்று மேலோட்டமாகப் பார்ப்போம். 1992ம் ஆண்டு 12 ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து அமைத்துக்கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் (European Union அல்லது EU) இப்போது 28 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு என பொதுவான ஐரோப்பியச் சட்டவிதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டங்களுக்கும் உட்பட்டே அந்த நாடுகள் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும்.
அத்துடன், இந்த 28 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 21 நாடுகள் ‘நோட்டோ’ (NATO) அமைப்பிலும் உறுப்பு நாடுகளாக உள்ளன. ஆனாலும், ஐரோப்பிய ஒன்றியக் கூட்டுப் படையொன்றை அமைப்பதை அடுத்த இலக்காகக்கொண்டு இந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை ஒரு பாதுகாப்பு எல்லைக்குள் கொண்டுவருவதாக இந்த படையமைப்பு விளங்கும் என்று கருதப்படுகின்றது. அதேவேளை, பொருளாதார ரீதியாகவும் ஒரு பலமிக்க கட்டமைப்பாக ஐரோப்பிய ஒன்றியம் மாற்றமடைந்துவருகின்றது.
உலகில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் சீனா, இந்தியா என்ற இரு நாடுகளுக்குள் அடைந்துகிடக்க, இப்போது இன்னொரு மூன்றில் ஒரு பகுதியினருக்கும் அதிகமானவர்கள் இந்த ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் உள்ளடங்கியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய ஒன்றிய அவை, ஐரோப்பிய நீதிமன்றம், ஐரோப்பிய மத்திய வங்கி ஆகிய பல்வேறு அமைப்புக்களை உள்ளடக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு (ஒவ்வொரு நாட்டுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கையில்) தங்கள் நாட்டு உறுப்பினரைத் தெரிவு செய்கின்றனர்.
இந்த ஐரோப்பிய ஒன்றியத்தில் இறுதியாகக் கடந்த ஆண்டு யூலை முதலாம் திகதி இணைந்து கொண்டது குரோசியா. இப்போது இந்த அணியில் தங்கள் நாட்டையும் இணைந்துகொள்ள உக்ரேனின் ஒரு பிரிவினர் முயன்று வருகின்றனர். இதனைவிட துருக்கியும் தம்மை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைப்பதற்குக் கடுமையாக முயன்று வருகின்றது (இதுகுறித்து இன்னொரு தருணத்தில் பார்ப்போம்).
தங்கள் நாட்டை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைப்பதற்கு உக்ரேனியர்கள் போலந்தை உதாரணமாகக் கூறுகின்றனர். வளங்கள் பல இருந்தும், உக்ரேன் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. எனவே இந்தச் சரிவில் இருந்து மீள ஐரோப்பிய ஒன்றியத்தின் பக்கம் சாய்வதா? அல்லது ரஷ்யாவுடன் ஒண்டிக்கொண்டிருப்பதா என்ற நிலை. தமது நாட்டுக்கு அருகில் உள்ள போலந்து, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்ததன் பின்னர் பெரும் பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளதாகக் கூறும் உக்ரேன் எதிர்க்கட்சியினர், தங்கள் நாட்டையும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தகம் மேற்கொள்ளும் வகையில் ஒன்றிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கினார்கள்.
ஆனால், உக்ரேன் அதிபர் விக்டர் யானுகோவிச் ரஷ்யாவுடன் அதிகம் உறவைக் கொண்டிருக்க விரும்புபவர். தமது நாட்டை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைப்பதற்கு எதிரான கொள்கையைக் கொண்டிருப்பவர். எதிர்க்கட்சியினர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் கருத்துக்களை வலியுறுத்தத் தொடங்கியநிலையில்தான், அதிபர் விக்டர் யானுகோவிச் ரஷ்யா சென்று அதிபர் விளாடுமீர் புட்டீனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது, உக்ரேனுக்கு சலுகை விலையில் எரிவாயுவை வழங்குவதுடன், பல பில்லியன் டொலர்களை செலுத்தி உக்ரைன் நிறுவனங்களின் பிணை முறிகளையும் ரஷ்யா கொள்வனவு செய்ய முன்வந்து உடன்படிக்கைகளைச் செய்துகொண்டது. அத்துடன், அரசு நிறுவனங்களில் சுமார் 15 பில்லியன் டொலர் முதலீடு செய்யும் திட்டம் ஒன்றை மேற்கொள்வதாகவும் ரஷ்யா உறுதியளித்துள்ளது.
ரஷ்யாவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகச் செயற்பாடுகள் பலவற்றில் இருந்து உக்ரேன் விலகிக் கொண்டது. இது ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த நடவடிக்கையில் பின்னடைவை ஏற்படுத்தியது. ஐரோப்பிய ஒன்றியதுடன் உக்ரேன் இணைவதனை தடுப்பதற்காகவே ரஷ்யா வேண்டுமென்று இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
அதிபர் விக்டர் யானுகோவிச்சின் நடவடிக்கையால் கொதிப்படைந்த எதிர்க்கட்சியினர், கடந்த நவம்பர் மாதம் போராட்டத்தில் குதித்தனர். ரஷ்யாவினுடைய உதவியை பெறுவதற்காக உக்ரேனின் நிறுவனங்களையும் வருமான மார்க்கங்களையும் ரஷ்யாவிடம் யனுகோவிச் தாரைவார்த்துவிட்டதாகக் குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகளின் தலைவரும் குத்துச்சண்டை வீரருமான விடாலி கிலிட்ஷோகோ, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டவர மொஸ்கோவுடனான பொருளாதார ஒப்பந்தத்தை திரும்பப் பெறுமாறு சிறையில் இருந்தபடியே கோரிக்கை விடுத்தார்.
ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள அதிபர் மறுத்துவிட்டார். போராட்டம் தொடர்ந்தது. எதிர்க்கட்சிகளின் போராட்டத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமீர் புட்டீன் கடும்கண்டனம் தெரிவித்தார். இதேவேளை, போராட்டத்தைக் கட்டுப்படுத்த அதிபர் விக்டர் யானுகோவிச் அனைத்து வழிமுறைகளையும் கையாண்டார். நிலைமையை விளக்கி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் யானுகோவிச், ‘தேர்தல் மூலம் மக்கள் வாக்களித்தே தாங்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததாகவும், எதிர்க்கட்சியினர் ஜனநாயகம் பற்றி கவலைப்படவில்லை. அவர்கள் எல்லை தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அரசுக்கு எதிராக மக்களை திரட்ட அழைப்பு விடுக்கின்றனர். என்னைப் பதவியில் இருந்து நீக்கி விட வேண்டும் என்று முயற்சிக்கின்றனர். இந்த மோதல்களுக்கு காரணமானவர்கள் சட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்’ என எச்சரிக்கை விடுத்தார்.
அத்துடன், போராட்டத்திற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்பவர்களையும், போராடுபவர்களையும் ஐந்து ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய சட்டங்களையும் நாடாளுமன்றம் மூலம் நடைமுறைக்குக் கொண்டுவந்தார். போராட்டக்காரர்களை அடக்குவதற்காக படையினர் தலைநகரில் கொண்டுவந்து குவிக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்ட எதிர்க்கட்சி ஆதாரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இதனால் போராட்டம் இன்னும் உத்வேகம் பெற்றது.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைன் இணைய வேண்டும் என்றும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வலியுறுத்தியும் புதிய போராட்டத்தை மேற்கொண்ட அவர்கள், அதிபர் விக்டர் யானுகோவிச் பதவி விலகக்கோரியும் தலைநகர் கீவில் குவியத் தொடங்கினார்கள். இதேவேளை, தலைநகர் கீவில் இருந்து படைகளைத் திரும்பப்பெறுமாறு அமெரிக்கா வலியுறுத்தியது.
அதேவேளை, ஜேர்மனி பிரதமர் ஏஞ்சலா மர்க்கலுடன், அதிபர் ஒபாமா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நிலைமைகள் குறித்து ஆலோசித்தார். இதேவேளை, அதிபர் யானுகோவிச்சிடம் தொலைபேசியில் பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடோன், ‘எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை காலம் தாழ்த்தாமல் அமைதியான முறையில் முடிவுக்கு கொண்டு வருமாறும், தற்போது அவசர நிலையை பிரகடனப்படுத்தினால் போராட்டம் தீவிரமடையும் என்று எச்சரித்தார்.
இதேவேளை, போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், போராட்டத்தைத் தணிக்க போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட அனைவருக்கும் பொது மன்னிப்பு அளிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி ஆதரவுடன் மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதிபரின் நிபந்தனைகளை எதிர்க்கட்சி நிராகரித்து விட்டது. அதிபர் பதவி விலகும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் எதிர்க்கட்சி அறிவித்தது. இதனால், உக்ரேன் பிரதமர் மிகோலா அகாரோ தனது பதவியைவிட்டு விலகினார். அதிபர் தொடர்ந்து பதவி வகித்துவந்தார். அதிபர் யானுகோவிச் பதவி விலக வேண்டும் அல்லது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறத் தொடங்கியது. கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்ந்த போராட்டம், கடந்த 17ம் திகதி திங்களன்று மோசமடைந்தது.
கலவரத்தை அடக்க நடந்த மோதலில் சிலர் கொல்லப்பட்டதையடுத்து, மறுநாள் 18ம் திகதி செவ்வாய்க்கிழமை போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. தலைநகர் கீவ்வில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பல்லாயிரக் கணக்கில் குவிந்தனர். அவர்களைத் தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டது. கட்டடங்கள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. மறுநாள் புதன்கிழமை வரை தொடர்ந்த வன்முறையில் சுமார் 75 பேர் வரை கொல்லப்பட்டு, நூற்றுக்கணக்கானவர்கள் காயங்களுக்கு உள்ளானார்கள். கொல்லப்பட்டவர்களில் 7 காவல்துறையினரும் அடங்கியிருந்தனர். இருதரப்பிலும் காயமுற்ற 255 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
உக்ரேன் வன்முறைகள் உச்சமடைந்ததால், ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்கவும் உடனடியாகத் தலையிட்டன. உக்ரேன் மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடையைக் கொண்டுவந்தது. கடந்த 21ம் திகதி வெள்ளிக்கிழமை பிரசெல்சில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டு இந்தத் தடை கொண்டுவரப்பட்டது. இந்தத் தடையில் மருத்துவ உதவிகள், காயமடைந்தவர்கள் மற்றும் அரசு அதிருப்தியாளர்களுக்கு விசா வழங்குதல் ஆகியவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. தலைநகரில் இருந்து படையினரை விலக்கிக்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது. அரசாங்கமும் மற்றும் எதிர்கட்சியினர் பேச்சுவார்த்தையை நடத்தி வன்முறைகளை நிறுத்தத் தவறிய நிலையில் இந்தத் தடை கொண்டுவரப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இதேவேளை, அமெரிக்காவும் இதில் தலையிட்டது. இந்த வன்முறைகளுக்கு காரணமானவர்கள் உக்ரேன் ஆட்சியாளர்கள் எனக் கடுமையாகக் குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, உக்ரேனில் பெரும்பான்மையான மக்கள் வர்த்தகம், கலாசார பரிமாற்றம் போன்றவற்றில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதில் ஆர்வமாக உள்ளனர் என்றும் அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் தெரிவித்தார்.
அத்துடன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் சில தலைவர்கள் மற்றும் ரஷ்ய அதிபருடன் தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு பேச்சுக்களையும் ஒபாமா நடத்தினார். இதன்போது, உக்ரேனில் வன்முறை நீடிக்காமல் தடுத்து சுமூகமாகத் தீர்வுகாண உரிய முயற்சிகளை எடுக்குமாறு அந்நாட்டுத் தலைவர்களிடம் ஒபமா வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகைத் தகவல்கள் தெரிவித்தன. அத்துடன், உக்ரேனின் 28 அரச அதிகாரிகளுக்கு விசா வழங்கவும் அமெரிக்கா தடை விதித்தது.
இதேவேளை, உக்ரைனில் உள்ள தனது நாட்டுத் தூதரகம் தாற்காலிகமாக மூடப்படுவதாக கனடா அறிவித்தது. அரசு எதிர்ப்பாளர்கள் புகலிடம்தேடி கனடா தூதரகத்தில் நுழைய முயன்றதையடுத்து கடந்த 20ம் திகதி வியாழக்கிழமை இந்த முடிவை அந்த நாடு எடுத்துள்ளது. கனடா பிரதமர் ஸ்ரீபன் ஹார்பர் கூறுகையில், உக்ரேனில் நிகழும் வன்முறைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். யானுகோவிச் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு புதிய பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். உக்ரேனில் சுமார் ஒன்றேகால் இலட்சம் கனடா நாட்டினர் வசிப்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, உக்ரேனில் நிகழ்ந்து வரும் விரும்பத்தகாத அனைத்து சம்பவங்களுக்கும் கிளர்ச்சியாளர்களே பொறுப்பு என்று குற்றம்சாட்டிய ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெல்கோவ், இந்த விவகாரத்தில் அதிபர் புட்டீனின் கருத்துப்படி ஆட்சிக் கவிழ்ப்பை நோக்கியே போராட்டங்கள் நிகழ்வதாகவும், ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக அவர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை ரஷ்யா கவனித்துக் கொண்டிருக்கிறது’ என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ஜேர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஃப்ராங் வால்டர் ஸ்டீமினீயரை சில தினங்களுக்கு முன்னர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் உக்ரேனில் எதிர்க்கட்சியினர் கிளர்ச்சியில் ஈடுபட ஊக்குவிப்பதாக கண்டனம் தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நிலைமை இவ்வாறிருக்க, உக்ரேன் எதிர்க்கட்சிகளின் தொடர்போராட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் உக்ரேன் அதிபர், அதிபர் மாளிகையில் இருந்து இரகசியமாகத் தப்பிச் சென்றுள்ளார். நாடாளுமன்ற வாக்கெடுப்பை ஏற்க மறுத்த அவர், தானே அதிபர் பதவியில் நீடிப்பதாகவும், நாடாளுமன்ற நடவடிக்கை அனைத்தும் சட்டவிரோதமானது என்று கூறியதுடன், நாட்டில் தீவிரவாதத்தை தூண்டிவிடும் சமூகவிரோதிகளின் செயல்பாடுகளை ஏற்று எதிலும் கையெழுத்து போட மாட்டேன் என்று கூறிவிட்டு, பதவி விலகல் கடிததத்தில் கையப்பமிட மறுத்துவிட்டுடே அதிபர் மாளிகையில் இருந்து இரகசியமாக உலங்குவானூர்தியில் தப்பிச்சென்றுள்ளார்.
விமான நிலையம் ஒன்றில் இருந்து ரஷ்யாவிற்கு தப்பிச்செல்ல இருந்த அதிபரை, படையினர் தடுத்து நிறுத்தியதால், உக்ரேனின் கிழக்குப் பகுதியில் தலைமறைவாகத் தங்கியிருப்பதாகக் கூறப்படுகின்றது. தற்போது இவரைக் கைது செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அதிபர் பங்கேற்காமலேயே நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டிய ஆளுங்கட்சிக்கு ஆதரவான அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், சபாநாயகரை தேர்வு செய்து அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியை பறித்து தீர்மானம் நிறைவேற்றியதுடன், வருகிற மே 25ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்தனர். எதிர்கட்சித் தலைவியையும் விடுதலை செய்ய நாடாளுமன்றத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இதனையடுத்து மறுநாள் சனிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவி விடாலி கிலிட்ஷோகோ சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ரஷ்யாவுடன் செய்துகொள்ளப்பட்ட இயற்கை எரிவாயு இறக்குமதி உடன்பாட்டில் இடம்பெற்ற ஊழல் தொடர்பாக ஏழாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2011ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த இவர், கடந்த 22ம் திகதி சனிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இரு தடவைகள் பிரதமாராகப் பதவி வகித்த இவரை, உக்ரேன் இடைக்காலப் பிரதமராகப் பதவியேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், எதிர்வரும் மே மாதம் தேர்தலுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இப்பதவியை ஏற்க இவர் விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, விடுதலை செய்யப்பட்ட உக்ரேன் எதிர்க்கட்சி தலைவி, சுதந்திர சதுக்கத்தில் அதிபருக்கு எதிராகப் போராடிவருபவர்களிடையே பேசியபோது, அதிபர் விக்டர் யனுகோவிச்சின் சர்வாதிகாரம் வீழ்ந்தது. ஜனநாயகம் வென்றது என்று தெரிவித்ததுடன், இந்த இடத்தில் கொலைசெய்யப்பட்ட மக்களுக்கு யார் காரணமோ அவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் சூளுரைத்தார்.
எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து, அந்நாட்டில் கூட்டாட்சியை நிறுவ வேண்டும் என அமெரிக்கா தற்போது வலியுறுத்தத் தொடங்கியுள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜே கார்னி இதுகுறித்துக் கூறுகையில், தற்போது அங்கு ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் எங்களது குறிக்கோள்களை நெருங்கி வந்துள்ளன. அந்நாட்டு மக்கள் எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்கான கோட்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்காமல் அரசு வழிநடத்தப்பட வேண்டியது அவசியம். உக்ரேனில் அமைதியை நிலைநாட்டவும், அரசு நிறுவனங்கள் முறையாகச் செயல்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். அந்நாட்டில் வலுவான ஜனநாயகம் மலர ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச அமைப்புகள் மற்றும் எங்கள் கூட்டணி நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா உதவும் என்று ஜே கார்னி தெரிவித்தார்.
அமைதியாக இருந்த உக்ரேன் இப்போது ஒரு புயலைச் சந்தித்து ஓய்ந்திருக்கின்றது. இனி உக்ரேன் யார் வசம் செல்லப்போகின்றது என்ற கேள்வியே முக்கியமானது. ஏற்கனவே ரஷ்யத் தலைநகரை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சுற்றிவளைத்திருக்கின்றன. இதில் உக்ரேனும் சேர்ந்துகொண்டால் ரஷ்யா ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிலைக்குச் சென்றுவிடும் என்பதால், இந்த இணைவுக்கு ரஷ்யா எதிராகவே இருக்கும் என்பது உறுதியானது. ஆனால், உக்ரேனை இணைப்பதன் மூலம் ரஷ்யாவைத் தனிமைப்படுத்திவிட முடியும் என்று கருதுபவர்கள் எதிர்க்கட்சியினரை ஆட்சிக்குக் கொண்டுவரவே விரும்புவார்கள். இந்த இரு பகுதியினருக்கும் இடையேயான மோதலில் யார் வெற்றிபெறப்போகின்றார்கள்..? எதிர்வரும் மே மாதமே விடை தெரியும்.
நன்றி: ஈழமுரசு