Wednesday 12 March 2014

மலேசிய விமானத்தின் மர்மம் தொடர்கிறது...!


தென் சீனக் கடலில் பறந்தபோது கட்டுப்பாட்டு அறை ரேடாரில் இருந்து மாயமாக மறைந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் என்னவானது என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
அந்த விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதா, கடலில் மூழ்கியதா, தீவிரவாதிகள் குண்டுவைத்து தகர்த்தனரா அல்லது கடத்திச் சென்றனரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. 3 நாள்களாகியும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.

தேடுதல் பணியில் 10 நாடுகள்
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பேருடன் சனிக்கிழமை அதிகாலை 12.41 மணிக்குப் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 1.30 மணி அளவில் கட்டுப்பாட்டு அறை ரேடாரில் இருந்து மாயமாக மறைந்தது.
இதைத் தொடர்ந்து மலேசியா முதல் வியட்நாம் வரையிலான கடல் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை 3-வது நாளாக தேடுதல் பணி நீடித்தது. 40-க்கும் மேற்பட்ட கப்பல்கள், 36-க்கும் மேற்பட்ட விமானங்கள் தென் சீனக் கடல் பகுதியில் சல்லடை போட்டு தேடுகின்றன.

மலேசியா மட்டுமன்றி சீனா, சிங்கப்பூர், வியட்நாம், தாய்லாந்து, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், அமெரிக்கா, நியூஸிலாந்து ஆகிய 10 நாடுகளின் போர்க்கப்பல்கள், அதிநவீன போர் விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மீனவர்கள் கூட்டு முயற்சி
பன்னாட்டு கடற்படை, விமானப் படை இணைந்து தேடியும் விமானத்தை கண்டுபிடிக்க முடியாததால் உள்ளூர் மீனவர்கள் தற்போது தேடுதல் பணியில் களம் இறங்கியுள்ளனர். மலேசியா மற்றும் தாய்லாந்தை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்குள் சென்றுள்ளனர்.
வியட்நாம் எல்லைப் பகுதியில் இதுவரை எதுவும் கிடைக்காததால் தாய்லாந்தை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் தாய்லாந்து கடற்படை தேடுதல் பணியைத் தொடங்கியுள்ளது.

காத்திருக்கும் உறவினர்கள்
காணாமல் போன மலேசிய விமானத்தில் 152 சீனர்கள் பயணம் செய்தனர். அவர்களின் குடும்பத்தினர் பெய்ஜிங்கில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
விமானத்தில் சென்னையைச் சேர்ந்த பெண் உள்பட 5 இந்தியர்கள் மற்றும் கனடாவைச் சேர்ந்த இந்தியர் ஆகியோரும் பயணம் செய்தனர். அவர்களது குடும்பத்தினரும் தவிப்புடன் காத்திருக்கின்றனர்.

வியட்நாம் எல்லையில் இரண்டு இடங்களில் பெட்ரோல் படலங்கள் மிதப்பதை அந்த நாட்டு ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். அந்தப் படலம் சேகரிக்கப்பட்டு கோலாலம்பூர் ஆய்வகத்தில் சோதிக்கப்பட்டது. இதில், கடலில் பரவியிருந்த பெட்ரோல் படலம் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் எரிபொருள் அல்ல என்பது தெரியவந்தது.

போலி பாஸ்போர்ட் பயணி அடையாளம் தெரிந்தது
மலேசிய விமானத்தில் 4 பேர் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்திருப்பதாக முதலில் தகவல்கள் வெளியாகின. அவர்களில் 2 பேர் மட்டுமே சந்தேகத்துக்கு உரியவர்கள் என்று மலேசிய போலீஸார் தற்போது தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மலேசிய காவல் துறை தலைவர் காலித் அபுபக்கர் நிருபர்களிடம் பேசியபோது, 2 பேர் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்துள்ளனர். அவர்களில் ஒருவரின் அடையாளத்தைக் கண்டுபிடித்துள்ளோம். அவர் மலேசியாவைச் சேர்ந்தவர் அல்ல என்றார்.
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் டிக்கெட் எடுத்த 5 பேரின் உடமைகள் கோலாலம்பூர் விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் விமானத்தில் ஏறவில்லை.

நன்றி - தி இந்து

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...