கெபாவா துலி யாங் மஹா முலியா பாதுகாசேரி பாகிந்தா சுல்தான் ஹாஜி ஹஸ்ஸனல்போல்கியா அல் முயிஜாதீன் வதாவுல்லா இப்னிஅல்மார்ஹம் சுல்தான் ஓமர் அலி சாய்புதீன்சாஅதுல் காய்ரி வாத்தியன் ஜிசிபி, ஜிசிஎம்ஜி(கொஞ்சம் மூச்சு வாங்கிக்குங்க) என்ற பெயர் படைத்த புருணே சுல்தான் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழ்பவர்.
1946-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி பிறந்த சுல்தானுக்கு கடைசியாக கிடைத்த தகவல்களின் படி 3 மனைவிகள் மூலம் 5 மகன்கள், 7 மகள்கள் உள்ளனர். ராணி அனக் சலேஹா முதல் மனைவியாக செயல்படுகிறார். சுல்தானது இரண்டாவது மனைவி ராணி மரியத்தை 2003-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இப்போதைய இரண்டாவது மனைவி அஸ்ரினாஸ் மஹர் ஹக்கீம் சுல்தானை விட 32 வயது இளையவர்.
சுல்தானின் 5 வது மகள் 32 வயதான ஹபிசா வணிக மேலாண்மையில் பட்டம் பெற்றவர். பிரதமர் அலுவலகத்தில் வேலை செய்யும் 29 வயதான முகமது ருசானியை அவர் 2012 செப்டம்பர் 20-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்துக்கு 40 மில்லியன் யூரோ (சுமார் ரூ 270 கோடி) செலவாகியிருக்கிறது. 3000 விருந்தினர்கள் கலந்து கொண்ட 4 நாட்கள் திருமணத்தில் வைரங்கள் பதிக்கப்பட்ட கண்ணைப் பறிக்கும் உடைகளில் மணமக்கள் ஜொலித்தனர்.
திருமண விழாவில் தாய்லாந்து பிரதமர், மலேசிய பிரதமர், கம்போடியா பிரதமர் உள்பட ஏராளமான வெளிநாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
புருணே சுல்தானிடம் $15 பில்லியன் யூரோ (சுமார் ரூ 1 லட்சம் கோடி) சொத்து உள்ளது. ஒரு காலத்தில் $20 பில்லியனுக்கும் அதிக சொத்துடன் உலகிலேயே முதல் பணக்காரராக இருந்த சுல்தான் அவற்றை எல்லாம் எப்படி சம்பாதித்தார், எப்படி செலவழிக்கிறார் என்று சில விவரங்களை பார்க்கலாம்.
சுல்தானின் அரண்மனையில் 2 லட்சம் சதுர அடியில் 1788 அறைகளும், 257 குளியலறைகளும் உள்ளன. பெரும்பாலான அறைகளில் தங்கத்தால் இழைக்கப்பட்ட சுவர் மறைப்புகள் தொங்குகின்றன. குளியலறைகளில் தங்கக் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அவரிடம் மொத்தம் 3,000 முதல் 5,000 கார்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கின்னஸ் புத்தகம் அவரிடம் 500 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் உள்ளதாக பதிவு செய்துள்ளது. அதில் முழுக்க வெள்ளி தகடுகளால் செய்யப்பட்ட காரும் உண்டு.
புருணே சுல்தானின் சகோதரர் ஜெப்ரி போல்கையா உலக அளவில் ஒரு பிளேபாயாக புகழ் பெற்றுள்ளார். அவர் புருணே அரசாங்கத்திலிருந்து $10 பில்லியன் டாலர் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு சுல்தானுடன் பல ஆண்டுகள் வழக்கு நடத்தினார்.
சுல்தான் தனது தனிப் பயன்பாட்டுக்காக தங்கத்தால் இழைக்கப்பட்ட போயிங் 747-400 விமானம் ஒன்றையும், ஆறு சிறு விமானங்களையும் இரண்டு ஹெலிகாப்டர்களையும் வைத்திருக்கிறார். போயிங் விமானத்தில் 400 பேர் பயணம் செய்ய முடியும். மேலும் விமானம் முழுக்க நட்சத்திர விடுதியின் அனைத்து வசதிகளும் இருக்கின்றன.
முடி வெட்டிக் கொள்வதற்காக 15,000 பிரிட்டிஷ் பவுண்டுகள் (ரூ 12.7 லட்சம்) செலவழித்து லண்டனை சேர்ந்த ஒரு சிகை திருத்தும் தொழிலாளியை விமானத்தில் அழைத்து வரச் செய்கிறாராம். ஒரு முறை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் தனி அறை பதிவு செய்து கென் மோடஸ்தோ என்ற சிகை திருத்துபவரை லண்டனிலிருந்து வரவழைத்தாராம். அவருக்கு பல ஆயிரம் டாலர்கள் கட்டணமாக கொடுக்கிறார். லண்டனில் 30 பவுண்டுகள் மட்டுமே வசூலிக்கும் கென் சுல்தானுக்கு 16 ஆண்டுகளாக முடி வெட்டுகிறார்.
மத்தியதரைக் கடலில் மிதக்கும் மாளிகை, உலகின் பல பெரு நகரங்களில் தங்குவதற்காக சொந்த மாளிகைகள் என்று உலகெங்கும் தனது ஜாகைகளை போட்டிருக்கிறார் சுல்தான். லண்டனில் அவருக்கே மட்டுமான மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டுள்ளது.
இவ்வாறாக சொத்து கொஞ்ச கொஞ்சமாக கரைந்து கொண்டிருக்கிறது. அவ்வளவு சொத்தும் எங்கிருந்து வந்தது, அவற்றை யார் சம்பாதித்து கொடுக்கிறார்கள், சுல்தான் அவற்றை எப்படி பராமரிக்கிறார் என்று பார்க்கலாம்.
சுல்தான் 1959-ம் ஆண்டு புருணேயின் அரசியலமைப்பு சட்டத்தின் படி நாட்டின் தலைமை ஆட்சியாளராகவும் 1962-ம் ஆண்டு எடுத்துக் கொண்ட அவசர நிலை அதிகாரங்களுடனும் ஆட்சி புரிகிறார். அவரே புருணேயின் பிரதம மந்திரியாகவும் பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சராகவும் செயல்படுகிறார்.
புருணேயின் எண்ணெய் வளத்தின் பரிமாணத்தை புரிந்து கொள்வதற்கு ஒரு ஒப்பீட்டை பார்க்கலாம்.
அதாவது உலகின் எண்ணெய் உற்பத்தி மதிப்பு ஒரு நபருக்கு ஆண்டுக்கு ரூ 25 ஆயிரம் மதிப்பில் உள்ளது. புருணேயில் தனி நபர் உற்பத்தியின் மதிப்பு அதை விட சுமார் 30 மடங்கு அதிகமாக ஆண்டுக்கு ஒரு நபருக்கு கிடைக்கும் எண்ணெய் மதிப்பு ரூ 7.45 லட்சமாக இருக்கிறது. ஒப்பீட்டளவில் இந்தியாவில் ஒரு நபருக்கு ஆண்டுக்கு சுமார் ரூ 1,500 மதிப்பிலான எண்ணெய் கிடைக்கிறது. புருணேயின் பக்கத்து நாடுகளான மலேசியாவில் ரூ 47 ஆயிரம் மதிப்பு எண்ணெயும், இந்தோனேஷியாவில் ரூ 12 ஆயிரம் மதிப்பிலும் எண்ணெய் ஒரு நபருக்கு ஆண்டுக்கு உற்பத்தியாகிறது.
புருணேயில் சுமார் 4 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். பெரும்பான்மை மக்கள் அரசுப் பணியில் உள்ளனர். அபரிதமான எண்ணெய் வளத்தின் மூலம் கிடைக்கும் பெரு வருமானத்தில் பெரும்பகுதியை தனக்கு வைத்துக் கொண்டு ஆடம்பர வாழ்க்கை நடத்துகிறார் சுல்தான்.
புருணேயின் எண்ணெய் வளங்களை அமெரிக்க நிறுவனமான ஷெல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. எண்ணெய் அகழ்வதற்கான பொறுப்பை ஷெல் புருணே என்ற பெயரில் செய்கிறது. சுல்தானுக்கு போய்ச் சேர வேண்டிய பங்கை கொண்டு சேர்த்து விடுகிறது. அதன் மூலம் புருணே சுல்தான் தனது சொத்துக்களை சேர்த்திருக்கிறார்.
ஷெல் எண்ணெய் நிறுவனம் புருணேவில் 20,000 மைல்களுக்கும் அதிக நீளமான எண்ணெய் குழாய்களை பராமரிக்கிறது. ஒவ்வொன்றும் 40,000 பேரல் பிடிக்கும் சுமார் 50 அடி விட்டத்திலான டாங்குகளில் எண்ணெய் சேமித்து வைக்கப்படுகின்றது. காடுகளின் நடுவில் ஒரு முழுமையான பெட்ரோ வேதி குழுமத்தை ஷெல் உருவாக்கியிருக்கிறது.
புருணே ஷெல் (பிஎஸ்பி) புருணே அரசாங்கமும், ராயல் டச்/ஷெல் குழுமமும் சம அளவு பங்கு வைத்துள்ள கூட்டு நிறுவனம். அது நாட்டின் ஒரே சுத்திகரிப்பு ஆலையை நடத்துகிறது. பிஎஸ்பியும் அதன் துணை நிறுவனங்களும் நாட்டின் மிகப்பெரிய வேலை தருபவர்களாக இருக்கின்றனர். அரசாங்கத்துக்கு அடுத்தபடியாக. பிஎஸ்பியின் சிறு சுத்திகரிப்பு ஆலை ஒரு நாளைக்கு 10,000 பேரல்களை சுத்திகரிக்கிறது. இதன் மூலம் உள்நாட்டுத் தேவைகள் நிறைவு செய்யப்படுகின்றன.
தொழிற்சாலை பகுதியைத் தாண்டி ஷெல் தொழிலாளர்களும் குடும்பத்தினருடன் வசிக்கும் சேரியா என்று நகரீயம் உள்ளது. சேரியா ஒரு கார்ப்பரேட் நகரீயம். ஷெல் விமான நிலையத்தில் சிங்கப்பூர், குவாலாலம்பூர், பாங்காக், பாலி, ஆஸ்திரேலியா, ஹாங்காங் போன்ற இடங்களிலிருந்து ஷெல் ஊழியர்கள் வந்து இறங்குகின்றனர். ஆம்ஸ்டர்டாமிலிருந்து கேஎல்எம் விமானத்தில் ஷெல் தொழிலாளர்களின் குடும்பத்தினர் வந்து சேருகின்றனர். ஷெல் மருத்துவமனையில் பிறந்த குழந்தை, ஷெல் ஊழியர்களுக்கான பள்ளிக்குப் போய், ஷெல் கிளப்பில் ஓய்வெடுத்து, ஷெல் பீச்சில் விளையாடி, ஷெல் கடையில் பொருட்கள் வாங்கி வாழலாம். ஷெல் வானொலி நிலையம் கூட இருக்கிறது.
நாடு முழுவதும் மது பானங்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும் ஷெல் ஆயில் இடங்களில் மது பானங்கள் வழங்கப்படுவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஷெல் நீச்சல் கிளப்பில் நீந்தி விட்டு, ஷெல் டென்னிஸ் கிளப்பில் விளையாடி விட்டு, ஷெல் உணவு கூடத்தில் சாப்பிட்டு விட்டு ஷெல் பேருந்தில் ஏறி ஷெல் விமான நிலையம் போய்ச் சேரலாம்.
புருணேயில் இயற்கை வாயு, 1972-ம் ஆண்டு தொடங்கப்பட்ட புருணே லிக்விபைட் நேச்சுரல் கேஸ் தொழிற்சாலையில் திரவமாக்கப்படுகிறது. அது உலகிலேயே மிகப்பெரிய எல்என்ஜி (திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு) ஆலைகளில் ஒன்று. ஒப்பந்தப்படி புருணே ஜப்பானுக்கு ஆண்டுக்கு 5 மில்லியன் டன் எல்என்ஜி வழங்க வேண்டும். ஜப்பானிய நிறுவனம் மிட்சுபிஷி, ஷெல் மற்றும் புருணே அரசாங்கத்துடன் கூட்டு நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ளது. 1995 முதல் அந்த நிறுவனம் 7 லட்சம் டன் கொரியா வாயு நிறுவனத்துக்கு சப்ளை செய்துள்ளது. உள்நாட்டு மின்சார உற்பத்திக்கு சிறிதளவு பயன்படுத்தப்படுகிறது.
புருணேவில் இது வரை உறுதி செய்யப்பட்ட எண்ணெய் வளம் 2015 வரை போதுமானது. ஆழ்கடல் தேடலின் மூலம் கூடுதல் கையிருப்புகள் கிடைக்கலாம் என்று தெரிய வருகிறது. பொருளாதாரத்தை வேறு திசைகளில் வளர்ப்பதற்கான முயற்சிகள் பெருமளவு வெற்றி பெறவில்லை. எண்ணெய் துறையைத் தவிர விவசாயம், காடுகள், மீன் பிடித்தல், வங்கி ஆகியவையும் சிறிதளவு நடைபெறுகின்றன.
புருணேயின் எண்ணெய் உற்பத்தி 1979ல் 2,40,000 பேரல்களாக இருந்தது. அதன் பிறகு வேண்டுமென்றே குறைக்கப்பட்டு இப்போது ஒரு நாளைக்கு சுமார் 1.5 லட்சம் பேரல் அளவு உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆசிய பசிபிக் பகுதியில் இந்தோனேசியா, மலேசியா, ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து புருணே எல்என்ஜி ஏற்றுமதியில் நான்காவது இடத்தில் உள்ளது. புருணேயின் எண்ணெய் ஏற்றுமதியில் ஜப்பானின் பங்கு 1982ல் 42 சதவீதத்திலிருந்து 1998ல் 19 சதவீதமாக குறைந்தது. தாய்வான், ஆசியான் நாடுகள், அமெரிக்கா ஆகியவை புருணே நாட்டின் எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ளும் மற்ற முக்கிய நாடுகள்.
அரபு நாடுகள், நைஜீரியா, கொலம்பியா, ஈக்வேடர், பர்மா, காஸ்பியன் கடல் என்று எங்கெங்கு நுழைந்தாலும் தனது கறையை படியச் செய்து விடும் பன்னாட்டு எண்ணெய் வியாபரத்தின் இன்னொரு பெருங்கறைதான் புருணே. அந்த எண்ணெய் வளம் உருவாக்கும் வக்கிரமான ஆடம்பரமும், பேராசையும், அதன் உற்பத்தியை கட்டுப்படுத்துவதற்காக செய்யப்படும் பன்னாட்டு அரசியல் கணக்குகளும்தான் புருணே சுல்தான் போன்ற வக்கிரங்கள் உலகில் இருப்பதை சாத்தியமாக்குகின்றன. புருணே சுல்தானும் அவரது சகோதரரும் உலகின் மிகப் பெரிய ஊதாரிகளாகவும் கேடு கெட்ட மனிதர்களாகவும் உருவெடுத்துள்ளனர்.
புருணே சுல்தானின் அரசுக்கும் அரசியலுக்கும் அமெரிக்கா, ஜப்பான், மற்றும் ஐரோப்பிய நாடுகள் குடை பிடித்து நிற்கின்றன. சுல்தானின் பாதுகாப்புக்காக பிரிட்டிஷ் அரசு கூர்க்கா படையணி ஒன்றை கொடுத்துள்ளது. மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் உலகளாவிய எண்ணெய் வழங்கல் சங்கிலியின் ஒரு கண்ணியாக சுல்தான் ஒழுக்கமான முஸ்லீமுக்கு பரலோகத்தில் கிடைப்பதாக வாக்களிக்கப்பட்டுள்ள சொர்க்கத்தை இகலோகத்திலேயே அனுபவிக்கிறார்.
வீடியோ - திருமண வைபவம்
நன்றி- வினவு