சஊதி நிதி இன்று இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பாரிய சிந்தனைக் குழப்பங்களை தோற்றுவித்து வருகிறது.
ஒரே பள்ளிவாசல்; நிர்வாகத்ததில் ஆயிரம் கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியில் ஒற்றுமையாக வாழ்ந்த சமூகம், இந்த முஸ்லிம் சமூகம். இப்போது இந்த சமூகத்தில் ஒற்றுமை சிதறடிக்கப்பட்டு இருக்கிறது. மஸ்ஜிதுக்கு மஸ்ஜித் குரோதம் வெடித்துக் கொண்டிருக்கிறது. ஆயிரம் கருத்து முரண்பாடுகளுடன் ஒரு பள்ளிவாசலில் அல்லாஹ்வை வணங்கி வந்த இந்த சமூகம், ஒரே உறவுகளாய் ஒரே ஜமாஅத்தாய் வாழ்ந்த இந்த சமூகம், ஊர்களில, நகரங்களில், கிராமங்களில் பிரிந்து நின்று சண்டையிடுகின்றன. குடும்பங்கள் பிளவுபட்டு கொந்தளித்துக் கொண்டிருக் கின்றன. அல்லாஹ்வின் இல்லங்கள் முஸ்லிமின் இரத்தத்தில் உறைந்து அவமானப்படுகிறது. எமக்குள் பிரிவினை உருவாக்க சதி செய்த பூகோள அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் பிதாமகன்கள் பின்னால் இருந்து பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர்.
தீவிரவாதமும்;, சண்டையும், சச்சரவுகளும், ஒற்றுமையின்மையும் நோய்களாய் இந்த சமூகத்தை எப்படிப் தொற்றின? இதன் பூகோள அரசியல் பின்னணியை ஏன் நாம் புரியாமல் இருக்கின்றோம்? இன்று இஸ்லாத்திற்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயருக்கு காரணம் என்ன?
அறியாமையின் பக்கமும், அநியாயத்தின் பக்கமும், அட்டகாசத்தின் பக்கமும் வெகு வேகமாக நகர்ந்துக் கொண்டிருக்கும் உலகை நாசத்திலிருந்து காத்து நேர்மையின் நிழலில் நிறுத்த வேண்டிய சமூகம். அல்குர்ஆனின் கட்டளைகளுக்கு அடிபணிந்து, மனிதநேயத்தின் பால் முழு உலகையும் கொண்டு வரவேண்டும் என ஆவல் கொண்ட சமூகம் ஏன் இந்த இழி நிலைக்குத் தள்ளப்பட்டது?
எரியும் பிர்சினைகள் எவ்வளவோ இருக்க இந்த சமூகத்தை தீவிரவாதத்திலும், தீராத சர்ச்சைகளிலும், விதண்டா வாதங்களிலும் மூழ்கிக் கிடப்பதற்கு பிக்ஹ§ பிரச்சினைகளை வெறுப்புப் பேச்சுகளாய் பேசித் திரிவதே இஸ்லாத்தின் அழைப்புப் பணி என்று அர்த்தப்படுத்திக் கொடுத்த அந்த அரசியல் சக்தி எது?
வெளிநாட்டுப் பணத்தால் முஸ்லிம் உம்மத்தின் ஒரு பிரிவினரை மூளைச் சலவை செய்தது யார்? இந்தப் பிரிவினர் நாளுக்கு நாள் அவர்களுக்குள்ளேயே பிளவு பட்டு, கருத்து முரண்பட்டு குழுக்களாய் பிரிந்து புதிய புதிய பெயர்களில் இயக்கங்கள் அமைத்து செயற்படுவதில் மறைந்திருக்கும் மர்மம் என்ன?
இவை எல்லாவற்றிற்கும் இருப்பது ஒரே ஒரு பதில்!
அது தான் சஊதி தஃவா பணம்!
பணத்தை வீசி முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைக்க சஊதிக்கு ஏன் இப்படி ஒரு தேவை?
உட்பூசல்களைகயும், பிரிவினையையும் அது எதற்காக ஏனைய முஸ்லிம்கள் வாழும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும்?
சஊதியின் மன்னர் அரசியலுக்கும், அமெரிக்காவின் எண்ணெய் அரசியலுக்கும் உள்ள உறவின் பிறப்பே இந்த முஸ்லிம் உம்மத்தை கூறு போடும் சஊதியின் சதி!
அதை வேறுவிதமாக இப்படியும் சொல்லலாம்.
சஊதி அரேபியா உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் சொந்தமான பூமி! ஏனைய முஸலிம்களுடனான அதன் உறவு ஈமானோடு தொடர்புடையது. அது அல்குர்ஆன் பிறந்த பூமி! அல்லாஹ்வின் தூதர் வளர்ந்த பூமி! அல்லாஹ்வின் தீன் எழுந்த பூமி! அல்லாஹ்வின் தீனை நிலைநாட்டுகின்ற, பாதுகாக்கின்ற தார்மீக பொறுப்பு அந்த நாட்டிற்கு இருக்கிறது. உலகளாவிய முஸ்லிம் உம்மத்தை பாதுகாக்கின்ற பொறுப்பும் அந்த நாட்டிற்கு தான் இருக்கிறது. இஸ்லாமிய கிலாபத்தின் தாத்பரியமும் இதைத்தான் சொல்கிறது. சஊதியை அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துவது முழு முஸ்லிம் உம்மத்தையும் ஆதிக்கம் செய்வதற்கு ஒப்பானதாகும்.
இன்று அமெரிக்க ஏகாதிபத்தியம் முழு உலகையும் விழுங்கிக் கொண்டிருக் கிறது. அது சூறையாடிய ஆபிரிக்க நாடுகள் பஞ்சத்தில் மரண படுக்கையில் வீழ்ந்து கிடக்கின்றன. மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்திற்கு கண்ணை வைத்த அமெரிக்கா தான் முஸ்லிம்களால் வெறுக்கப்படுகின்ற ஒரு நாடுஎன்பதையும் நன்கு உணர்ந்திருக்கிறது. அது தனது எண்ணெய் வியாபாரத்தை பாதுகாப்தற்காக சஊதி மன்னராட்சியை பாதுகாக்கிறது. அமெரிக்காவிற்கு சஊதி மன்னராட்சியை பாதுகாப்பதென்பது தனது நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கு சமனான விடயமாகும். சஊதியில் மன்னராட்சி சரிவதென்பது அமெரிக்காவின் சரிவுக்கு சமனானதாகும்.
இருபதாம் நூற்றாண்டில் மத்திய கிழக்கிலும், இந்திய உபகண்டத்திலும் தோற்றம் பெற்று வளர்ந்து வரும் கிலாபத் சிந்தனையும், இஸ்லாமிய அரசு பற்றிய கருத்தியலும், சஊதியின் வயிற்றில் மட்டுமல்ல அமெரிக்காவின் வயிற்றிலும் புளியைக் கரைத்து வருகிறது.
காலமெல்லாம் எண்ணெய் சூறையாடலை ஒழுங்காகவும், நேர்த்தியாகவும் நடாத்த முடியும் என்று நம்பிக்கொண்டிருந்த அமெரிக்காவுக்கும், காலமெல்லாம் மன்னர்களாக மகுடம் சூடி அறியாமையின், ஜாஹிலிய்யத்தின் ஜாம்பவான ;களாக ஜொலிக்க முடியும் என்று கனவு கண்டுக்கொண்டிருந்த சஊதிக்கும் இது இடையூறாகவே இருந்தது.
மத்திய கிழக்கில் எழுந்து வந்த இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கமும், பலஸ்தீன் போராட்டமும், இந்திய உபகண்டத்தில் உதயமான ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கமும் கிலாபத் சிந்தனையை கூர்மைப்படுத்தின. எழுபதுகளின் இறுதிப் பகுதியில் ஈரானில் ஏற்பட்ட மன்னராட்சியின் வீழ்ச்சியும், ஷீஆ அடிப்படைவாத ; எழுச்சியும் சஊதியை குலை நடுங்க வைத்தன.
இந்த கிலாபத் கருத்தியல்வாதிகளை, இயக்கங்களை தனது கைக்குள் வைத்திருக்கும் நோக்கில் சஊதி அரசாங்கம் ஆரம்பம் முதல் இந்த இயக்களுக்கு நிதியதவியை வழங்கி போஷித்து வளர்த்தது. தனது பெற்றோல் பணத்தின் பொறிக்குள் தான் சார்ந்த அமெரிக்க அரசியல் நலன்சார்ந்த எஜன்டாவிற்குள் இஸ்லாமிய அரசியல் சித்தாந்தவாதிகளை சிக்கவும் வைத்தது.
அமெரிக்காவின் அனுசரணையுடன் இலங்கையில் கொண்டு வந்து கொட்டப்பட்ட பெற்றோல் டொலர்களால் இஸ்லாமிய அரசியல் சிந்தனையை வாயிலும் அதற்கு நேரெதிரான மன்னராட்சியை இதயத்திலும் வைத்துக்கொண்ட இஸ்லாமிய அழைப்பாளர்கள் என தம்மைத் தாமே அழைத்துக் கொண்ட கூலிப்பட்டாளங்களின் கூட்டங்கள் அந்த நிதிச் சதியில் பிறப்பெடுத்தன.
கிலாபா மற்றும் பித்அத் எதிர்ப்பு கருத்தியல் காவிகளான தலைவர்களுக்கு 'மப்ஊஸ்' என்ற பட்டம் (சஊதி பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம்) வழங்கி ஆயிரக்கணக்கில் மாதாந்த கொடுப்பனவும் வழங்கியது சஊதி அரசு.
சஊதியில் மூளைச்சலவை செய்யப்பட்ட இவர்களுக்கு சஊதிக்கும், அமெரிக்காவுக்கும் பாதகம் இல்லாமல் தஃவாவை வடிவமைக்கும் பொறுப்பும் வழங்கப்பட்டது. 70 களின் இறுதிப் பகுதியில் அமெரிக்காவுக்கும் சோவியத் ரஷ்யாவுக்கும் இடையில் இருந்த பனிப்போரின் முக்கிய பாத்திரங்களாக இந்த 'பெற்றோல் டொலர் புண்ணியவான்கள்' பாவிக்கப்பட்டார்கள்.
சஊதியின் இஸ்லாத்திற்கு முரணான செயற்பாடு;களையும் தமது சம்பளப் பணத்தையும் பாதுகாத்துக் கொண்டு சேவையாற்றும் சிறந்த இஸ்லாமிய அழைப்பாளர்களாக (தாஈகளாக) இவர்கள் உருவாகினார்கள்.
தொன்னூறுகளின் ஆரம்பத்தில் கிலாபத் இயக்கங்களுக்கு போட்டியாக சஊதி அரசு தனக்கே உரிய, தனது கட்டுப்பாட்டில் இயங்கும் பித்அத்களுக்கு எதிராக போராடும் 'வஹ்ஹாபிஸ' கருத்தியலை களம் இறக்கியது. அந்தக் காலப்பிரிவில் வளைகுடாவில் ஏற்பட்ட ஈராக், குவைத் பிரச்சினை அமெரிக்காவிற்கு மத்திய கிழக்கில் கால் பதிக்க சிறந்த காரணமாக மாறியது.
90களில் ஈராக் இராணுவம் குவைத் நாட்டை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து,அமெரிக்க படையின் குவைத் மீட்பிற்கு பிறகு வஹ்ஹாபிஸத்தையும், கிலாபத் சிந்தனையையும் இரு கூறுகளாக மாற்றி சஊதி, அமெரிக்க உளவு நிறுவனங்களின் மேற்பார்வையில் இந்த தஃவா இயக்கங்களுக்கு நிதி வழங்கப்பட்டு வந்தது.
பித்அத் எதிர்ப்பு வஹ்ஹாபிஸ இயக்கங்களுக்கு சஊதியும், கிலாபத் கருத்தியல் கொண்ட இயக்கங்களுக்கு குவைத்தும் பகிரங்கமாகவே உதவியளித்து வருகின்றன. சமூகத்தில் தீவிரவாத சிந்தனைகளை வளர்த்து, கருத்து முரண்பாடுகளுக்குள் மூழ்கி கிடக்கும் ஒரு சமூகம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. இஸ்லாத்தின் அடிப்படை நோக்கத்திலிருந்து வேறுபக்கம் திசை திருப்பி சில்லறை பிரச்சினைகளுக்குள்ளும், பிரிவினைகளுக்குள்ளும் சமூகத்தை சிக்க வைப்பதில் சஊதி வெற்றி யும் கண்டிருக்கிறது.
உண்மையில் சஊதி அரசாங்கம் இஸ்லாத்தின் மீது பற்றுக்கொண்ட ஒரு நாடாக தன்னை அடையாளப்படுத்த வேண்டும் என்ற அவசியம் அதற்கு இருக்குமேயானால், தன்னுள் குடிகொண்டுள்ள ஜாஹிலிய்யத்தான அசிங்கங்களை அகற்றி ஓர் உண்மை முஸ்லிம் நாடாக அதற்கு முன்னுக்கு வர முடியும். உலகளாவிய இஸ்லாத்தின் தலைமைத்துவத்தை ஏற்று முழு உலகிற்கும் வழிகாட்டவும், முன்னுதாரணமாய் திகழவும் அதற்கு முடியும்.
ஆனால் சஊதி தன் தலையில் சூடிக்கொண்டிருப்பதோ மௌட்டீகத்தின் மறுபிறப்பான மன்னராட்சி அரசு !
ஷரீஆ சட்டம் என்ற போர்வையில் இருப்பதோ வலிமையாளன், எளிமைமையானவனை ஏய்த்துப் பிழைக்கும் சமூக அநீதி! அந்த நாட்டிற்கு சென்று வந்தவர்கள் சொல்வதெல்லாம் இஸ்லாத்திற்கும் சஊதிக்குமான இடைவெளி மிக மிக அதிகம் என்பதே.
இஸ்லாத்தை விட்டும் தூரமாக பயணித்துக் கொண்டிருக்கும் சஊதி போன்ற ஒரு நாடு எமது நாட்டில் பள்ளிவாசல்கள் கட்டுவதற்கும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வுகளுக்கும், துல் ஹஜ் மாதம் உழ்ஹிய்யா என்ற மாடுகளை பலியிட்டு பகிரும் செயற்பாட்டிற்கும் பல கோடிக்கணக்கான ரூபாய்களை தனது ஏஜன்ட்கள் மூலம் வழங்கி வருவதை நாம் எல்லோரும் அறிவோம். இந்த நடவடிக்ககைகள்; இந்த நாட்டில் சிங்கள பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் இன ரீதியிலான விரிசல்களை ஏற்படுத்த திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வேலைத்திட்டங்களில் ஒன்று என்பதை அனேகம் பேர் அறியாமல் இருக்கின்றனர்.
சஊதி நாட்டில் பணிப்பெண்களாக தொழில் புரிபவர்களுக்கு பல இன்னல்கள், கொடுமைகள் நிகழ்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர்களுக்கு ஒழுங்கான ஊதியம் வழங்கப்படாமல் அடிமைகள் போல நடாத்தப்படுவதாக குற்றச்சாட்டுகளும் உள்ளன. ஏழைகளுக்கு ஒழுங்கான ஊதியம் கொடுக்காதவர்கள்;, அந்நிய பெண்களை பணிப்பெண்ணாய் தன் வீட்டிற்குள் அனுமதித்து அவர்களை கொடுமை செய்பவர்கள்;, அவர்களை மானபங்கப் படுத்துபவர்கள், உண்மை முஸ்லிமாக இருப்பார்களா? அவர்களிடமிருந்து உண்மையான இஸ்லாத்திற்கான உதவியைத்தான் எதிர்பார்க்க முடியுமா? என்ற கேள்வியின் நியாயத்தன்மையை நிறைய பேர் புரியாமல் இருக்கின்றார்கள். இஸ்லாமிய பிரசாரம் என்ற போர்வையில் இலங்கை போன்ற நாடுகளில் பணத்தைக் கொண்டு வந்து கொட்டாமல், தனது நாட்டில் பணிப்பெண்களாக தொழில் புரியும் ஏழை பெண்களுக்கு கருணை காட்டி இஸ்லாம் போதிக்கும் மனித நேயத்தை உலகிற்கு பறைசாற்ற முடியும்.
ஒரு வாதத்திற்கு எல்லா அரபுகளும் அப்படியல்ல, அந்நாட்டிலுள்ள நல்லவர்கள் தான் எமக்கு, எமது தஃவா இஸ்லாமிய பிரசார பணிகளுக்கு பணம் தருகிறார்கள் என்று வைத்துக் கொண்டால், தனது நாட்டில் நடக்கும் இந்த கொடுமைகளை ஏன் இந்த நல்லவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? சவுதி நாட்டில் இடம்பெறும் அநீதிகளை தடுத்து நிறுத்தி இஸ்லாத்தின் பெயரை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்காமல் இலங்கை நாட்டிற்கு பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு நிதியும், ஹஜ் மாதத்தில் மாடுகளை அறுத்து பலியிடும் உழ்ஹிய்யா கடமையை ஊக்குவிக்க பணமும், நோன்பு துறக்கும் இப்தாருக்கு ஈத்தம் பழங்களை வழங்குவதால் இவர்களின் கடைமை நீங்கு விடுமா?
வாழ்க்கையின் கஷ்டங்களிலிருந்து மீண்டு வரும் எண்ணத்தில் தனது நாட்டிற்கு வரும் தொழிலாளர்களுக்கு சஊதி கொடுக்கும் சித்திர வதையை வாயால் சொல்லித் தீர்க்கத்தான் முடியுமா? சொந்தங்களை பிரிந்து அபலைகளாய் அந்த நாட்டில் தஞ்சம் புகும் பணிப்பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமை களுக்கு அந்த நாடின் சட்டங்களால் கூட பாதுகாப்பு வழங்க முடிவதில்லையே! சுருக்கமாக சொன்னால் அன்று இஸ்லாம் ஒழித்துக்கட்டிய அடிமைத்துவத்தை இன்றைய அரேபிய குபேரர்கள் அச்சொட்டாக உயிர்ப்பித்து இருக்கிறார்கள். அன்றைய அடிமைகள் பட்ட துன்பத்திற்கும் இன்றைய தொழிலாளர்கள் படும் துன்புறுத்தல்களுக்கும் எவ்வித வித்தியாசமுமில்லை.
அன்றைய ஜாஹிலிய்யா அறியாமைக் காலத்தில் வாழ்க்கை முழுவதும் அடிமையாக இருந்த நிலை மாறி இன்றைய சஊதியின் நவீன ஜாஹிலிய்யத்தில் இரண்டு அல்லது அதற்கு கூடிய வருடங்கள அடிமையாக இருக்க வேண்டிய நிலை தொழிலாளர்களுக்கு எற்பட்டிருக்கிறது. இந்த இரண்டு வருட அடிமை வாழ்வில் அவர்களுக்கு ஊதியமாய் வழங்கப்படுவதோ மிகவும் சொற்ப பணம். சொற்ப பணத்திற்கு 24 மணிநேரமும் உழைக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை. இத்தகைய இஸ்லாம் விரும்பாத அத்தனை செயல்களுக்கும் முன்னுதாரணமாக இந்த முடியாட்சி நாடு விளங்குகிறது.
மன்னராட்சி மூலம் இஸ்லாமிய ஆட்சி தொடர்பான இஸ்லாத்தின் அடிப்படையை தகர்த்துக் கொண்டிருக்கும் சஊதி நாடு, அது செய்யும் குற்றங்களை மூடி மறைத்து உலக முஸ்லிம்களை வேறு பக்கம் திசை திருப்பவே தனது ஏஜன்டுகள் மூலம் பிக்ஹ§ என்ற இஸ்லாமிய வழிபாடுகள் சார்ந்த கருத்து முரண்பாடுகளை பிரச்சினைகளை பிரச்சாரமாக்கியிருக்கிறது.
அல்குர்ஆனின் பக்கம் மக்களை அழைக்கின்ற மனித நேயத்திற்கு அழைப்பு விடும் மகத்தான பணியை அது மறைத்து வைத்திருக்கிறது. பெயரளவில் அது குர்ஆனை சட்டநூலாக வைத்திருக்கிறது.
ரசூலுல்லாஹ தொழுததைப் போன்று தொழ உலகிற்கு பிரசாரம் புரியும் சஊதி அரசு, றசூலுல்லாஹ் ஆட்சி செய்தது போல் செய்வதற்கு தயக்கம் காட்டுகிறது. ரசூலுல்லாஹ் மிகவும் வெறுத்த ஆடம்பரத்தை அது அணைத்து பிடித்துள்ளது. தொழுகையும் 'பித்அத்' என்ற எதிர்ப்பு நிலை மட்டுமே இதன் தஃவாவின் அடிப்படையாக மாறியிருக்கிறது.
ஒரு தெருவில் இரண்டு மூன்று பள்ளிவாசல்களை கட்டி சமூகத்தை கூறுபோடும் இதன் போக்கில் ஸக்காத் பெயரளவில் உச்சரிக்கப்படும் ஒன்றாகவெ இருக்கிறது. பட்டினியால் வாடும் நாடுகள் பல இருக்க இலங்கைக்கு இறைச்சிக்காக கோடிக்கணக்கான பணத்தை கொட்டிக் கொண்டிருக்கிறது.
அரபுகளின் ஸக்காத் பணத்தை அறவிட்டு இலங்கை போன்றதொரு நாட்டிற்கு வழங்கினால் எத்தனை ஏழைகளை வறுமையின் கோரப்பிடியிலிருந்து மீட்டெடுக்கலாம்? றசூலுல்லாஹ் தொழுதது போல் தொழ மட்டும் தானா வேண்டும்? றசூலுல்லாஹ் செய்தது போல் ஸக்காத் கடமையை செய்யக் கூடாதா? பள்ளிவாசல்களை மட்டும் தான் கட்டவேண்டுமா? பாடசாலைகளை கட்டி இந்த முஸ்லிம் சமூகத்தை முன்னேற விடக் கூடாதா?
தஃவா என்ற பதம் பிக்ஹ§ பிரச்சினைகளை முன் வைத்து வாதாடும் வாய்ச்சண்டை களமாக கொச்சைப்பட்டு நிற்கிறது. உண்மையான இஸ்லாமிய தஃவாவின் மனித நேய ஒளியில் உலகம் ஒளிர வேண்டிய காலத்தில் சர்ச்சைகளை இலங்கைக்கு ஏற்றுமதி செய்து சஊதி இன்பம் காணுவதின் பின்னணியில் அமெரிக்க நலன் காக்கும் ஓர் அரசியல் இருக்கிறது.
சஊதி பணத்தில் சுவாசித்து உயிர் வாழும் அத்தனை இயக்கங்களும் இன்று ஒன்று ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கின்றன. தன்னை தௌஹீத் என்று பிரகடனப்படுத்திக் கொள்பவர்கள், மாற்றுக் கருத்துள்ள மௌலானா மௌதூதியை வழிகேடர் என்று வரிந்து கட்டிக்கொண்டு பிரசாரம் செய்கின்றனர்.
கிலாபத் சிந்தனையை கூலிக்காக பேசுகின்ற ஏனைய இயக்கங்கள் தௌஹீத்வாதிகளை திட்டித் தீர்க்கின்றனர்.
ஒரே நாட்டின் நிதி மூலத்திலிருந்து உதவி பெற்று பல கூறுகளாய், பல ஜமாத்களாய், பல பிரிவுகளாய் பிரிந்து நின்று இவர்கள் ஒற்றுமையின் கயிற்றைப் பற்றிப்பிடியுங்கள் என்று பிரசாரம் புரிகின்றனர். இவர்களிடம் இல்லாத ஒற்றுமை இவர்களின் பிரசங்கஙகளை கேட்பதால் மக்களுக்கு எப்படி வரும்?
இறுதியாக, இன்னுமொன்று சொல்ல இருக்கிறது. அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களும் , அவரின் உத்தம தோழர்களும் தன் சொந்த உழைப்பிலேயே இஸ்லாமிய பணி புரிந்தார்கள். அவர்களின் இஸ்லாமிய பிரசாரத்தின் பின்னணியில் எதிரிகளின் அரசியல் நலன் காக்கும் எந்த எஜன்டாக்களும் இருக்கவில்லை.
முனாபிக்குகளின் 'முதுகு சொறியும்' அரசியலை அவர்கள் ஒரு போதும் செய்யவில்லலை. அபூஜஹ்ல்களிடம் ஊதியம் அறவிட்டு அவர்கள் ஒரு போதும் தஃவா இஸ்லாமிய அழைப்புப் பணி செய்யவில்லை. அவர்கள் தன் சொந்த உழைப்பிலே அவர்கள் இஸ்லாத்தை உயிர்ப்பித்தார்கள். மனித நேயத்தை வளர்த்தார்கள்.
ஆனால் இன்றைய இஸ்லாமிய அழைப்புப் பணியாளர்கள் ரசூலுல்லாஹ் செய்யாத அழைப்புப் பணிக்காக ஊதியம் பெறும் அதி நவீன பித்அத்தை செய்து வயிறு வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.