Sunday 23 January 2011

தூனீசியா - புரட்சியின் கருவறையான ஒரு பட்டதாரியின் கல்லறை!



(தப்பியோடிய தூனிசிய ஜனாதிபதி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் முஹம்மத் போஅஸிஸியை மருத்துவ மனையில் பார்வையிடுகிறார்)

இருபத்தேழு வயது முஹம்மத் போஅஸீஸி ஒரு பட்டதாரி இளைஞன்.  வேலையில்லா பிரச்சினைக்கு ஈடுகொடுக்க அவன் பாதைக்கு இறங்கினான். போராடுவதற்கு அல்ல  பழத்தை மரக்கறியை விற்று தனது பசியை போக்கிக் கொள்வதற்கு. அந்த நடைபாதை வியாபார விவகாரம் உலக ஊடகங்களில் இப்படி இடம்பிடிக்கும் என்று இந்த பட்டதாரி இளைஞன் எண்ணியிருக்கவே மாட்டான்.


தூனிசியா என்ற தனது நாட்டை ஆண்ட ஊழல், மோசடி மிகுந்த அதிகார வர்க்கம் இந்தப் பிரச்சினையால் அதிர்ந்து உடைந்து விழும் என்று உணர்ந்திருக்கவும் மாட்டான்.


அந்த பட்டதாரி இளைஞனுக்கு நடைபாதை வியாபாரத்தை  தொடர்ந்து செய்வதற்கு தூனிசிய அதிகார வர்க்கம் இடம்கொடுக்கவில்லை. பொலீஸ் அவனை வியாபார அனுமதிப் பத்திரம் கேட்டு மிரட்டியது, விரட்டியது. தீராத பிரச்சினைகளுக்குள் அவனைப் போட்டு புரட்டியது .



முஹம்மத் போஅஸீஸி ஒரு முடிவு எடுத்தான். 


திட்டம் வகுத்தான்.

அது மக்களை கசக்கி பிழியும் ஆளும் வர்க்கத்தை அடித்து உதைத்து விரட்டி விட வேண்டும், ஆட்சியைப் புரட்டி தூனிசியாவிற்கு புரட்சியை கொண்டு வரவேண்டும், புதுயுகம் படைக்க வேண்டும் என்பதல்ல.

அந்தத் திட்டம்…!

விரக்தியின் விளிம்புக்கு சென்ற அவனின் வாழ்வை, 
தனது வாழும் உரிமைக்கு தடையாய் இருந்த ஆளும் வர்க்கத்திற்கு  அழுத்த்த்தைக் கொடுப்பதற்கு ஒரு கருவியாய் அவனையே ஆக்க திட்டம் வகுத்தான்.


ஆம்! அவனது முடிவு தன் உயிரை மாய்த்துக் கொள்வது.

அதை அவன் அடுத்த கணமே செயற்படுத்தியும் விட்டான்.
பெற்றோலை தன் மேனியெங்கும் தெளித்து தன்னை அவன் தீயினால் தீண்டிக் கொண்டான். தற்கொலை செய்து கொண்டான்.

இப்படி ஒரு சோக சம்பவம் உலகில் எந்த நாட்டில் இடம்பெற்றாலும், அந்தச் செய்தி, ஊடகங்களில் உயர வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டு, அடுத்த கணம் அப்படியே ஆழத்திற்கு சென்று அமிழ்ந்து, அமைதி அடைந்து விடுவதே வழமை.
முஹம்மத்போ அஸிஸியின் மரணம் அத்தகையதாய் இருக்கவில்லை.


அந்த மரணத்தை தூனிசிய அதிகார வர்க்கம் எப்படித்தான் நினைத்திருக்கும் என்று நினைக்கின்றீர்கள்? 


ஆம்! அந்த இளைஞனின் கதை புதை குழியோடு முடிந்து போய் விடும், புதைந்து போய் விடும் என்றுதான் அவர்கள் நினைத்தார்கள்.
அவனது உடலத்தை அடக்குவதோடு பிரச்சினைகள் அடங்கிவிடும் அடுத்த நாள் முதல் பழைய படி நாட்டு மக்களை ஒரு பிடி பிடிக்கலாம் என்றுதான் தூனீசிய ஜனாதிபதி ஸெய்னுல் ஆப்தீனும் நினைத்திருந்தார்.

அடக்குமுறையை மிகுந்த தனது ஆட்சியை இல்லாதொழிக்க, போஅஸிஸி என்ற ஒரு புரட்சி விதையாய் புதைக்கப்பட்டது என்ற விஷயம் அவருக்குத் தெரிய வர அதிக நேரம் எடுக்கவில்லை.

அரசுக்கு எதிராக மக்கள் அணியணியாய்த் திரண்டார்கள். தடைகளைத் தகர்த்துக் கொண்டு வெள்ளமாய் வீதிகளில் திரண்டார்கள்.

66 உயிர்களை பலியெடுத்து விட்டு மக்கள் பலத்திற்கு முன்னால் எழுந்து நிற்க சக்தியிழந்த அரசு சரிந்து வீழ்ந்தது. பிரளயமாய் பொங்கியெழுந்த ஆவேசத்திற்கு முன்னால் சறுகுகளாகி அடக்குமுறை இராணுவத்தின் பலம் சரிந்து போனது.

துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடுவதைப் பற்றி கேள்வியுற்றிருக்கிறோம்.  ஆனால் தூனீசிய ஜனாதிபதி அப்படி ஓடவில்லை. ஒரு டன் எடையுள்ள தங்கத்துடனும், நாட்டின்  சொத்துக்களையும் சுருட்டிக் கொண்டு ஓடிச் சென்று சவூதியில் தஞ்சமடைந்திருக்கிறார்.  

ஜனாதிபதி ஸெய்னுல் ஆப்தீன் இஸ்லாத்தின் விரோதியாக செயற்பட்டவர்
இஸ்லாத்தை தூனீசியாவின் அச்சுறுத்தல் என்று அடிக்கடி வர்ணித்தவர்,
ஹிஜாப் போன்ற இஸ்லாமிய உடைகளைத் தடுத்தவர்
இஸ்லாத்தைப் பின்பற்றுவதை தனது இரும்புக் கரங்களினால் நசுக்கியவர்
இஸ்லாமிய அறிஞர்களை கொன்று குவித்தவர், சிறையில் வைத்து  சித்திர வதை செய்தவர்.

இன்று சவூதி அரேபியா அந்த அடக்கு முறையாளனை பாதுகாத்து, பத்திரப்படுத்தும் பொறுப்பை பெற்றிருக்கிறது. தூனீசிய மக்கள் எறிந்த குப்பை சவூதி மன்னனின் மடியில் வந்து விழுந்திருக்கிறது. இனம் இனத்தோடு சேர்ந்திருக்கிறது.

மரணம் ஒவ்வொரு மனிதனையும் மௌனமாக்குகிறது.

ஆனால் தூனீசிய நாட்டு மக்களின் மௌனத்தை  ஒரு மரணம் களைத்திருக்கிறது. 


தூனீசியா! 


ஒரு கல்லறை புரட்சியின் கருவறையாக மாறி இருக்கிறது.
உலக வரலாற்றில் ஆயிரக்கணக்கான உயிர்கள்  உரமாக்கப்பட்டு அதிகார வர்க்கங்கள் அடித்து வீழ்த்தப்பட்டிருக்கின்றன.  
அழிக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் தூனீசியாவின் விதி வித்தியாசப்பட்டிருக்கிறது. அந்த மக்கள் உலகிற்கே உன்னதமான ஒரு வழியைக் காட்டியிருக்கின்றார்கள். புரட்சி என்ற உன்னத மொழியை அவர்கள் மொழிந்திருக்கின்றார்கள்.

இனி தூனீசியா ஊழல் மோசடிகளற்ற, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியாத ஓர் உன்னத இஸ்லாமிய நாடாக எழுந்து வரும் என்ற எதிர்ப்பார்பும், நம்பிக்கையும் எல்லோர் மனங்களிலும் துளிர்விட்டிருக்கிறது.


இது இப்படியிருக்க தூனீசியா விவகாரம்,  

மத்திய கிழக்கு மன்னர்களினதும், முஸ்லிம் நாட்டு தலைவர்களினதும் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது. இந்தப் புரட்சி அவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. தூனிசிய பாணியிலான புரட்சி தங்களது நாடுகளிலும் வெடிக்கலாம் என்று இவர்கள் பயந்து நடு நடுங்கிப் போயிருக்கின்றார்கள்.


தனது நாட்டு மக்களுக்கு எல்லா உதவிகளையும் வழங்கி அவர்களை எந்தக்குறையும் இன்றி ஒழுங்காக கவனிக்க வேண்டும் என்ற கவலை மத்திய கிழக்கு ராஜாக்களின் மனங்களில் உருவாகி இருக்கிறது.  குவைத் மன்னர் தனது நாட்டு மக்களுக்கு பலகோடி பணத்தை இலவசமாக வழங்கி அவர்களை கௌரவிக்கப் போவதாக அறிவித்தும் இருக்கிறார்.


எது எப்படியிருப்பினும், 
தூனீசியா நல்லதொரு முன்மாதிரி!  மத்திய கிழக்கு ராஜாக்களுக்கும் அந்த ராஜாக்களுக்கு கூஜா தூக்குபவர்களுக்கும் அழிவு அண்மித்து வருகிறது என்ற செய்தியை தூனீசியா அறிவித்து நிற்கிறது..




2 comments:

  1. Those are all concern about people welcomes the tunisia revolution,your article particle,islam state and Islam Act not remedy for people's poverty,tunisian Revolution not a religious based.

    Saravanan

    ReplyDelete
  2. எம்மில் பலபேருக்கு அப்படி ஒரு நாடு இருப்பதே தெரியாது. களநிலையை கச்சிதமாகவும் கவிதையாகவும் தந்த பத்ர் களம் மீண்டும் ஒரு முறை தன்னை உலகளாவிய அடக்கு முறைக்கு எதிரான முரசாக இனங்காட்டி உள்ளது. பாராட்டுக்கள்.
    Khaibar Base

    ReplyDelete

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...