Friday, 7 January 2011

வர்த்தக மயமான ஹஜ்ஜும் வலிகளோடு மீண்டுவந்த ஹாஜிகளும்!!

இலங்கையிலிருந்து மக்கா சென்ற ஹாஜிகள் பட்ட இன்னல்களை முறைப்பாடுகளாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறு அதன் பணிப்பாளர் ஹாஜிகளை வேண்டியிருந்தார். அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட முறைப்படொன்றின் பிரதியொன்று நவமணி பத்திரிகைக்கும், பத்ர்களத்திற்கும் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.


இலங்கையில் வர்த்தகயமமாக மாறிக்கொண்டிருக்கும் ஹஜ் பிரயாணம், பணத்தை குறியாக வைத்து இயங்குகின்ற ஒருசில ஹஜ் முகவர்கள், ஊடகங்களில் ஹஜ் உம்ராவிற்கு கிடைக்கின்ற அதீத விளம்பரம் போன்றவை ஹஜ்ஜின் மகத்துவத்தை கேள்விக்குறியாக்கியிருக்கிறது என்பதனை இந்த ஹாஜியின் முறைப்பாடு தெளிவாக காட்டுகிறது.சில மோசடி ஹஜ் முகவர்கள் ஊடகங்களில் சிறப்பான வசதிவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாக பொய் வாக்குறுதிகளை விளம்பரப்படுத்தி ஹாஜிகளிடமிருருந்து பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.இவ்வருடம் பல இலட்சம் பணத்தை கொடுத்து ஹஜ் கடமைக்காக சென்ற ஹாஜிகள் பட்ட இன்னல்களை இங்கு இணைக்கப்பட்டுள்ள கடிதமும், காணொளியும் (வீடியோ) சாட்சி பகர்கின்றன.
28.12.2010.
அல்ஹாஜ் வை. எல் எம் நவவி,
பணிப்பாளர்,
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்; திணைக்களம்,
180, டீ.பீ ஜாயா மாவத்தை,
கொழும்பு.10

அஸ்ஸலாமு அலைக்கும்

இவ்வருட ஹஜ் பிரயாணத்தின் போது இடம் பெற்ற குறைபாடுகள் பற்றிய முறைப்பாடு

நான்  ஏற்கனவே இரு முறை ஹஜ்ஜூக்கு சென்ற அனுபவத்தையும் இம்முறை குடும்பம் சகிதம் அங்கு சென்று அனுபவித்த சில கசப்பான நிகழ்வுகளையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன்.

இம்முறை மினாவில் ஹாஜிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியமும், இன்னல்களும், அவலங்களும் இதற்கு முன்னைய ஹஜ் பிரயாணங்களில் எப்போதுமே இடம்பெறவில்லை என்பதை உறுதியுடன் கூறுகின்றேன்.

சென்ற வருடங்களில் ஹஜ் முகவர்களே நேரடியாக “முதவ்வாக்”களை ஏற்பாடு செய்யும் நடைமுறை இருந்து வந்துள்ளது. அதன் போது இலங்கையிலிருந்து செல்லும் ஹாஜிகள் பல் வேறு “முதவ்வாக்க”ளின் கீழ் பொறுப்புக் கொடுக்கப் படுவார்கள்.

ஆனால் இம்முறை இலங்கை ஹஜ் கமிட்டியினரே இந்த ஏற்பாட்டை செய்யப் பொறுப்பேற்றிருந்தனர். வழமைக்கு மாற்றமாக ஹஜ் கமிட்டி இலங்கையிலிருந்து சென்ற அத்தனை ஹாஜிகளையும் ஒரே முதவ்வாவிடம் ஒப்படைத்திருந்தனர்.

இம்முறை ஹாஜிகள் சந்தித்த அத்தனை பிரச்சினைகளுக்கும் ஹஜ் கமிட்டியினர் செய்த இந்தத் தவறேமூல காரணமாய் மாறியது என தங்களை இனம் காட்டிக் கொள்ள விரும்பாத 80 வீதமான ஹஜ் முகவர்கள் எங்களிடம் கூறினார்கள்.

26.12.2010 அன்று ஞாயிறு வீரகேசரி பத்திரிகையில் ஹஜ் கமியிட்டடியினர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இதை மறைமாக ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

இம்முறை ஹஜ் பிரயாண ஏற்பாடு தொடர்பாக குற்றச்சாட்டுகள் பல இருக்கின்றன அவற்றில் சிலவற்றை மாத்திரம் தொட்டுக் காட்ட விரும்புறேன்.

நாம் 41ம் இலக்க முதவ்வா அலுவலகத்தினரால் வழி நடாத்தப் பட்டோம்.

• சுமார் 4000 பேர் தங்கியிருக்க வசதியுள்ள கூடாரங்களில் (வநவெ) 5800 பேரை திணித்தார்கள். இதனால் பலர் பகல் நேரங்களில் மாத்திரம் கூடாரத்துக்குள் இருந்து விட்டு இரவு நேரங்களில் பாதைகளில் தூங்கியதையும் காண நேர்ந்தது.


• இந்த 5800 பேருக்கும் சமைப்பதற்கு ஒரு சமையலறை தான் ஒதுக்கப்பட்டிருந்தது. மேலும் தண்ணீர் வசதியுட்பட மலசல கூட வசதிகளும் மிகவும் மோசமான நிலையிலேயே இருந்தது. சில சந்தர்ப்பங்களில் கழிவு நீர் கூட கூடாரங்களுக்குள்ளேயே வழிந்தோடியது. பிரிதொரு சந்தர்ப்பத்தில் அந்த அசுத்தமான (நஜீஸ்) தண்ணீர் சுமார் அரையடி வரை சமையலறைக்குள் தேங்கி நின்றது. மேற் பார்வை செய்ய வந்த சவுதி ஹஜ் கமியிட்டியினர் கூட அங்கு வைக்கப் பட்டிருந்த முறைப்பாட்டுப் புத்தகத்தில் ஏற்பாடுகள் மிகவும் மோசமான நிலையிலுள்ளதாகவே குறிப்பொன்றை எழுதிவிட்டுச்சென்றார்கள்

• மினாவிலிருந்து அரபாவிற்கு செல்லும் பஸ் பிரயாணம் மிக மோசமான அனுபவமாகவே எங்களுக்கு இருந்தது. இரவு 10.00 மணியிலிருந்து அடுத்த நாள் பகல் 12.00 மணி வரை பஸ்ஸில் இடம் பிடிக்க அங்குமிங்கும் ஓடிக் களைத்த ஹாஜிகளின் அவஸ்தையை காணப் பரிதாபமாய் இருந்தது.

• இலங்கை ஹாஜிகளை ஏற்றிச் செல்ல கிட்டத்தட்ட 100 பஸ்களின் தேவையிருந்தது. ஆனால் சுமார் 40 இற்கும் 50 இற்கும் இடைப்பட்ட பஸ்களே சேவையில் ஈடுபடுத்தப் பட்டிருந்தது. இதன் காரணமாக 50 பேர் பயணிக்கும் பஸ் வண்டிகளில் ஆண்களும் பெண்களுமாக 100 அல்லது 125 பேர் ஏற்றப் பட்டார்கள். இதனால் வயோதிபர்களும் பெண்களும் மிகவும் சிரமப் பட்டார்கள். மருத்துவ  வசதிகளை மேற்கொள்வதற்காக பல மருத்துவர்களை நியமித்துள்ளதாக கூறப்பட்டபோதிலும் மருத்துவர்கள் என்பவர்களை மருந்துக்கும்  காணக்கிடைக்க வில்லை.

• .இந்த தேவைகளை சிறப்புற மேற்கொள்வதாகக் கூறியே ஒரு ஹாஜியிடம் தலா 1000 ரியால்கள் அறவிடப் படுகின்றது கட்டணத்துக்குறிய சேவை கிடைக்கவில்லையே என முகவர்களிடம் முறையிட்டபோது அந்தக் கட்டணத்தை பெற்றுக் கொண்ட முதவ்வாவிடம் தான் இது பற்றி கேட்க வேண்டும் என அவர்களும் அங்கலாய்ததனர்.

இதை யார் பெற்றுக் கொண்டார்களோ எவர் பெற்றுக் கொண்டார்களோ அது எங்களுக்கு தேவையில்லாத ஒரு விடயம். அதை அல்லாஹ்விடமே பொறுப்பு சாட்டுவோம்.

நாம் சொல்ல வருவது என்னவென்றால் நிர்வாகத் திறமையில்லாத பொம்மைகளிடமும் அல்லாஹ்வை அஞ்சாத மோசடிக் காரர்களிடமும், எதிர் காலத்திலும் இப்படியான பொறுப்புகள் வழங்கப் படக்கூடாது என்பதாகும். ஏனெனில் ஓரு முஸ்லிமின் வாழ்க்கையின் இலட்சியப் பயணமான ஹஜ்ஜின் போது அவர்களுக்கு இந்தளவு இன்னல்களும்  அநீதியும் இழைக்கப் படக்கூடாது.

• அது மட்டுமல்லாமல் அஸீஸியாவில் இலங்கை ஹாஜிமாரை நிறுத்த இடமளிக்க மாட்டோம் என பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் வாக்குறுதியளித்து விட்டு அதற்கு நேர் மாற்றமாகவே  நடந்து கொண்டார்கள்.

இதனால் தொழுகைக்கு செல்வதற்கும் கூட ஹாஜிமார் (வாகனத்தில் செல்ல) செலவு செய்ய வேண்டியிருந்தது. சில ஹாஜிமார்கள் அஸீஸியாவிலேயே நான்கைந்து நாட்கள் தங்க வைக்கப் பட்டு அதற்குப் பின்பு தான் ஹரம் ஷரீப் அழைத்துச் செல்லப் பட்டார்கள் .இவர்கள் 3,25000 ருபா ஹஜ் கட்டணமாக வழங்கியது தான் இதற்காண காரணமாய் கூறப்படுகின்றது.

• பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், போன்ற நாடுகளிலிருந்து வந்த ஹாஜிமார்களுக்கு அந்நாட்டுக்கு பொறுப்பான முதவ்வாக்கள் எம்மை விட திருப்திகரமான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

பணிப்பாளர் அவர்களே!  மேற் கூறப்பட்ட பிரச்சினைகள் அனைத்தையும் உங்கள் திணைக்கள அதிகாரிகளுடன் நீங்கள் நேரில் வந்து பார்த்தீர்கள் அல்லாவா?  ஏன்? ஹஜ் கமிட்டி பிரதானிகளான ஆஸாத் சாலி, ஆளுனர் அலவி மௌலானா மற்றும் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோரும் கூட வந்தார்களே?

மினாவில் அவர்களுக்கும் ஹாஜிகளுக்கும் இடையில் வாக்கு வாதங்கள் மிகவும் உயர்ந்த தொனியில் இடம்பெற்றது. ஹாஜிகள் இஹ்ராம் உடையுடன் இருந்ததால் வாக்கு வாதம்  அந்தளவோடு முடிந்தது. இவையனைத்தும் உங்களுக்கு தெரியாத விடயமல்லவே!.

 'ஹஜ்ஜில் குறைப்பாடுகளா? முறைப்பாடுகளைத் தெறிவியுங்கள்' என்ற உங்கள் திணைக்களத்தின் அறிவிப்பை பத்திரிகைகளில் பார்த்து உண்மையில் நான் வியப்படைந்தேன். சில வேளை எழுத்து மூலம் இக் குற்றச் சாட்டுகள் பெற்றப்பட வேண்டும் என்பதற்காக இந்த அறிவிப்பை செய்திருப்பீர்கள் என்றே நான் கருதுகின்றேன். இல்லாவிட்டால் உங்களின் இந்த அறிவிப்பை வேடிக்கையாகவும் விநோதமாகவும் தான் பார்க்க வேண்டியிருக்கும்.

ஹாஜிகள் எல்லோரும் முறைப்பாடுகளை எழுதி உங்களுக்கு அனுப்புவார்கள் என்று எதிர் பார்க்க முடியாது. எப்படியோ ஹஜ்ஜூ செய்தோம் நடந்த குறைகளுக்கு பொறுமை கொள்வோம் அல்லாஹ் அதற்கு கூலி தருவான். இப்படித்தான் அநேகமான ஹாஜிகளின் மனோ நிலை.

முகவர்களைப்  பொருத்தவரை ஹஜ் கமிட்டியின் மீது எப்படியும் நேரடியாக குறை கூறத் துணிய மாட்டார்கள். அது அவர்களுடைய பிழைப்பை கெடுத்து விடும். இந்த பலவீனத்தை பயன்படுத்தி சதா தவறாய் வயிறு வளர்ப்பவர்களையும் குறுக்கு வழியில் கோடீஸ்வரராக முயல்பவர்களையும் அனுமதிக்க முடியுமா? அல்லாஹ்விற்காக கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

அகவே வரும் ஒரு சில முறைப்பாடுகளை வைத்தாவது, முஸ்லிம் சமய பண்காட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் என்ற வகையில். உண்மையிலேயே உங்களுக்கு ஏதாவது செய்ய முடியுமென்றால், உடனடியாக இந்தப் பிரச்சினையை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வாருங்கள். எதிர்காலத்திலாவது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். வர்த்தக மயமாக உருவெடுத்து வரும் ஹஜ் வணக்கத்தை பாதுகாத்திட பணிப்பாளர் என்ற வகையில் உங்களுக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள். மறுமையில் இதற்கு அல்லாஹ்வின் சன்னிதானத்தில் நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்.

நன்றி
உண்மையுள்ள
அமானுல்லாஹ் ஷரீப்

No comments:

Post a Comment

ஞானசார தேரர் சிறைச்சாலையில் 'ஜம்பர்' அணிவது பிரச்சினையா?

ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தை வைத்து சிங்கள இனவாதிகள் தமது வழமையான இனவாத பிரசாரத்தை முடுக்கி விட்டுபோராட்டங்களை ஆரம்பித்...