Wednesday 7 January 2015

ஓவியர், கவிஞர், எழுத்தாளர் என்ற பன்முகத் திறன் கொண்ட கலீல் ஜிப்ரான்

# லெபனான் நாட்டில் பஷ்ரி என்ற நகரில் பிறந்தவர். இவரது 12-ம் வயதில் குடும்பம் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தது. அரேபிய மொழி, ஆங்கிலம், பாரசீக மொழிகள் அறிந்தவர். ஓவியத்தில் இவருக்கு இருந்த திறனை அறிந்த அவரது ஆசிரியர்கள் இவரை பாஸ்டனில் உள்ள ஓவியப் பள்ளியில் சேர்த்துவிட்டனர்.
# அப்போது இவர் வரைந்த படங்களை ஒரு வெளியீட்டாளர் தனது புத்தகங்களின் அட்டைகளில் பயன்படுத்திக்கொண்டார். இளம் வயதிலேயே இலக்கிய உலகிலும் அடியெடுத்து வைத்துவிட்டார்.
# 15 வயதில் பெய்ரூத் சென்று உயர் கல்வி பயின்றார். அங்கே கல்லூரி இலக்கிய பத்திரிகையை நண்பர்களுடன் சேர்ந்து வெளியிட்டார். கல்லூரி-கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜிப்ரான் இலக்கிய, அரசியல் புரட்சியாளர் என்று கருதப்பட்டார்.
# 1902-ல் பாஸ்டன் திரும்பினார். இவரது கட்டுரை வடிவிலான கவிதைகள் அடங்கிய ‘தி ப்ராஃபெட்’ வெளிவந்த சமயத்தில் ஐரோப்பிய நாடுகளில் புகழ்பெற்றார்.
# இதன் பதிப்புகள் தொடர்ந்து வெளிவந்தன. இது 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. அமெரிக்காவில், 20-ம் நூற்றாண்டில் மிகச் சிறப்பாக விற்பனையான புத்தகமாகத் திகழ்ந்தது.
# கடுமையான விமர்சனங்கள் எழுந்தாலும் இவரது புத்தகங்கள் நன்றாக விற்பனையாகின. அரேபிய, ஆங்கில, பாரசீக மொழிகளில் கவிதை தொகுப்புகள், கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
# இவரது படைப்புகளை சிரத்தையுடன் தேடிக் கண்டுபிடித்து உலகுக்கு அளித்த பெருமை இவரது காரியதரிசி பார்பரா யங்கையே சாரும். ஜிப்ரான் தனது முற்போக்கு சிந்தனைகள் காரணமாக மதகுருமார்கள், அதிகாரிகளின் கோபத்துக்கு ஆளானவர். ‘ஒட்டுமொத்த உலகமும் எனக்கு தாய்நாடுதான். அனைவரும் என் சக குடிமகன்கள்’ என்று இவர் கூறுவார்.
# உலகின் பல இடங்களில் இவரது ஓவியக் கண்காட்சிகள் நடைபெற்றுள்ளன. லெபனானில் ஜிப்ரான் அருங்காட்சியகத்தில் இவரது ஓவியங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவரது புத்தகங்கள் உலக அளவில் விற்பனையில் மூன்றாம் இடம் வகித்துவருகிறது.
# இவரது படைப்புகள் ஒவ்வொரு தனிமனிதனின் எண்ணங்களையும் பிரதிபலிப்பவையாக இருக்கின்றன. வாழ்க்கை சம்பந்தமான தீவிர சிந்தனைகள் கொண்ட இவரது படைப்புகள் உலகம் முழுவதும் 22-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
# உலகின் மகத்தான சிந்தனையாளர்களில் ஒருவர். எழுத்தாளர், ஓவியர், தத்துவவாதி, கவிஞர். உலகம் முழுவதும் இலக்கிய நட்சத்திரமாகக் கொண்டாடப்பட்டுவரும் கலீல் ஜிப்ரான் 48-ம் வயதில் மரணமடைந்தார்.

1943 ஜனவரி 7: 'அணுகுண்டு நோய்' கொன்ற சடாகோ சசாகி பிறந்த தினம்

ரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானைச் சரணடைய வைக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த அமெரிக்கா, அந்நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் முறையே 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9-ல் அணுகுண்டுகளை வீசியது. இந்த இரண்டு கொடூரச் சம்பவங்களிலும் 1 லட்சத்து 29 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். கதிரியக்கத்தின் காரணமாகக் குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கானவர்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்தார்கள். அந்தக் குழந்தைகளில் ஒருவர்தான் சடாகோ சசாகி. 1943 ஜனவரி 7-ல் பிறந்தவர் அவர். ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டபோது சகாகிக்கு இரண்டே வயதுதான்.

ஹிரோஷிமாவின் மிசாசா பாலத்துக்கு அருகில் சசாகியின் வீடு இருந்தது. அதாவது, அணுகுண்டு விழுந்த இடத்திலிருந்து சுமார் 1.7 கி.மீ. தொலைவில். குண்டுவிழுந்த அதிர்ச்சியில் வீட்டின் ஜன்னல் வழியே வெளியில் தூக்கியெறியப்பட்டாள் சசாகி. பதறிப்போன அவளது அம்மா, ஓடிச்சென்று பார்த்தபோது சசாகி உயிருடன்தான் இருந்தாள். அவளைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து ஓடினார் அவளது அம்மா. மொத்த நகரமும் அழிந்துபோனதால், அருகில் இருந்த மியோஷி நகரில் தனது உறவினர் வீட்டில் தங்கினார். அதன்பின்னர் மற்ற குழந்தைகளைப் போலவே சாதாரணமான வளர்ந்தாள் சசாகி.
அவளுக்கு 11 வயதானபோது கழுத்திலும், காதின் பின்புறத்திலும் வீக்கங்கள் ஏற்பட்டன. சில மாதங்களிலேயே அவளது கால்களில் ஊதா நிறப் புள்ளிகள் ஏற்பட்டன. அவளுக்கு ரத்தப் புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவளது அம்மாவோ இதை அணுகுண்டு நோய் என்று அழைத்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள் சசாகி. அவளைக் காண வந்த அவளது தோழிகளில் ஒருத்தியான சிசுக்கோ ஹமாமாட்டோ, தங்க நிறத் தாள் ஒன்றை மடித்து, (ஜப்பானின் பண்டைய கலையான ஓரிகாமி முறையில்) கொக்கு ஒன்றை உருவாக்கினாள்.

1,000 காகிதக் கொக்குகளை உருவாக்கினால் விரும்பியது நடக்கும் என்பது ஜப்பானியர்களின் நம்பிக்கை. அதன்படி, நோய் பாதிப்புக்கு இடையிலும், 1,000 காகிதக் கொக்குகளை உருவாக்கும் வேலையில் இறங்கினாள் சசாகி. எனினும், அவளால் 644 கொக்குகளைத்தான் உருவாக்க முடிந்தது. 1955 அக்டோபர் 25-ல் ரத்தப் புற்றுநோய்க்கு பலியானாள் சசாகி. அதன்பின்னர், அவளது பள்ளி நண்பர்கள் இணைந்து 1,000 காகிதக் கொக்குகளை உருவாக்கினார்கள். அவை அனைத்தும் அவளது உடலுடன் சேர்த்துப் புதைக்கப்பட்டன. அவளது நினைவாக, 1958-ல் ஹிரோஷிமா அமைதி நினைவுப் பூங்காவில் தங்கக் கொக்கை சுமந்து நிற்கும் சடாகோவின் சிலை நிறுவப்பட்டது. அந்தச் சிலையின் அடிப்பகுதியில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள் இவை:
இதுதான் எங்கள் கூப்பாடு,
இதுதான் எங்கள் பிரார்த்தனை,
உலகில் அமைதி வேண்டும்.
tamil.thehindu.com

Wednesday 19 November 2014

இன்று 19.11.2014 சா்வதேச கழிப்பறை (Toilet) தினம்!

இன்று 19.11.2014  சா்வதேச கழிப்பறை (Toilet) தினம்!


ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்பின்படி உலகம் முழுவதும் சுமாா் 2.5 பில்லியன் மக்கள் கழிப்பறை மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் அற்றவா்களாக இருக்கின்றாா்களாம்.

கழிப்பறை மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று.
விஞ்ஞான, தொழிலநுட்ப ரீதியில் அறிவின் உச்சத்தைத் தொட்டுவிட்டதாக மாா்தட்டும் இந்த மனித சமூகம், மனிதனின் அடிப்படை தேவைகளை பூா்த்தி செய்வதில் இன்னும் பூஜ்யமாகத்தான்  இருக்கிறது என்பதற்கு இந்த ஐநா புள்ளி விபரம் சிறந்த சான்று.

ஓாிரு வருடங்களுக்கு முன்னா் கொழும்பில் முஸ்லிம் மாணவா்களின் கல்வி பின்னடைவு பற்றிய ஒரு செயலமா்வு இடம்பெற்றது. அதில் ஊடகவியலாளா் என்.எம். அமீன் ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டாா்.

கொழும்பு முஸ்லிம் மாணவா்களின் கல்வியின் பின்னடைவிற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக தமது வீடுகளில் மலசல கூட கழிப்பறை வசதிகள் இல்லாமல்  இருப்பதுதான் என்று கூறினாா்.

கொழும்பில் முஸ்லிம்கள் செரிவாக வாழ்வதால் பல வீடுகளுக்கு ஓரிரண்டு கழிப்பறைகளே இருப்பதாகவும் காலைநேரங்களில்  கழிப்பறையின் நெருக்கடி காரணமாக உாிய நேரத்தில் பிள்ளளைகள் பாடசாலைக்கு செல்ல முடியாமல் இருப்பதாகவும் கூறினாா். தொடா்ந்து பாடசாலைக்கு சமுகமளிப்பதில் தவறும் மாணவா்களின் நிலை கல்வியில் மிகவும்  பின் தங்கிய நிலைக்கு சென்று விடுவதாகவும் அவா் கூறினாா்.

தலைநகரான கொழும்பில் மிக அதிக முஸ்லிம் ஜனத்தொகையைக் கொண்ட கொழும்பு மத்திய தொகுதியில்தான் இந்தப் பிரச்சினை இருப்பதாக உணர முடிகின்றது. கழிப்பறை போன்ற ஒரு மனிதனுக்கு தேவையான  அடிப்படை உாிமையை பெற்றுக்கொள்ள திராணியற்றவா்களாவே முஸ்லிம்கள் இருக்கின்றாா்கள் என்பதற்கு அது சிறந்த சான்று.

எமது அண்மைய நாடான இந்தியாவில் சனத்தொகை 120 கோடி. இதில் 60 கோடி பேருக்கு கழிப்பிட வசதி இல்லையாம். இத்தகவலைக் கேட்டு ஐ.நா செயலாளா் பான் கீ மூன் அதிா்ச்சியடைந்ததாக தி இந்து பத்திரிகையில் செய்தியொன்றை வாசித்தது ஞாபகம். இந்த செய்தி எனக்கும் இது அதிா்ச்சியாகவே இருந்தது.

இந்திய கழிப்பறை விவகாரம் பிராந்திய அரசியலில் கூட இது பேசு பொருளானது.

மீனவா், தமிழா், சீன ஆதிக்கம் தொடா்பாக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் அடிக்கடி சா்ச்சைகள் உருவாகிவரும் நிலையில் எமது அமைச்சா் சுசில் பிரேம ஜயந்த  கடந்த வருடம் “ தனது நாட்டு மக்களின் கழிப்பறை பிரச்சினையை தீா்த்துக் கொள்ள முடியாத இந்தியா எங்கள் உள்நாட்டு பிரச்சினையை தீா்கக முனைவது வேடிக்கையானது” என்று கூறினாா்.

இதற்கு எதிா்வினையாற்றிய தென் இந்திய தொலைக்காட்சி ஊடகங்கள் “ ஒரு சுண்டைக்காய் நாடு இந்தியாவை அச்சுறுத்துவதா”  என கேள்விகள் கூட எழுப்பின.

இந்தியாவை ஆட்டிப்படைக்கும் ஒரு பிரச்சினையாகவே இந்த கழிப்பறை பிரச்சினை இருக்கிறது.

இன்றைய கழிப்பறை தினம் தொடா்பாக  இன்று காலை இந்திய தொலைக்காட்சிகளில் பல செய்தி விவரணங்கள் இடம் பெற்றன. இந்தியா இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட பல தசாப்தங்கள் ஆகும் என அறியக் கிடைத்தது.

செய்மதிகளை விண்ணுக்கு  அனுப்பி விண்ணில் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்யும் ஒரு நாடு மண்ணில் வாழும் மக்களின் பிரச்சினையை மறந்திருக்கின்றதா என்ற கேள்வி எழுகிறது. 

ஒரு தீபாவளிக்கு 5000 கோடி ரூபாய்களை பட்டாசு கொளுத்துவதற்கு இந்தியா்கள் செலவிடுகின்றாா்கள். இவற்றை தவிா்த்து விட்டு மனிதனின் அடிப்படை தேவையின்பால் கவனம் செலுத்துவதே அவசரமானது அவசியமானது.

சா்வதேச கழிப்பறை தினத்தையொட்டி  பிபிஸி இணையதளம் வெளியிட்டிருந்த படங்கள் இவை -

















Tuesday 18 November 2014

புற்று நோய்க்கு மருந்தாகும் நித்தியக்கல்யாணி அல்லது சுடுகாட்டு மல்லி

நித்தியக்கல்யாணி அல்லது சுடுகாட்டு மல்லி என்று அழைக்கப்படும் இத்தத் தாவரத்தை நீங்கள் பல இடங்களில் பார்த்திருப்பீா்கள்.

புற்று நோய்க்கு மருந்தாகும் இந்தத் தாவரம் பற்றியும் நோய் தீா்க்கும் அதன் மகத்துவம் பற்றியும் நான் அறிந்த நாளிலிருந்து அந்த தாவரம் மீது எனக்கு அன்பும் மதிப்பும் மாியாதையும் ஏற்பட்டிருக்கிறது.

ஊதா நிறப் பூக்களையும் கடும் பச்சை நிற இலைகளையும் கொண்ட இந்த தாவரம் பல மருத்துவ குணங்களைக் கொண்டது.
இதன் தாவரவியல் பெயா் வின்கா ரோசியா (vinca rosea).
புற்றுநோய்க்கான வேதியியச் சிகிச்சையில் (Chemotheraphy) பயன்படும் வின்கிரிஸ்டின் (Vincristine) என்ற மருந்து முற்றாக இதிலிருந்தே தயாாிக்கப்படுகிறது.

இந்தத் தகவலை மஹரகம தேசிய புற்று நோய் ஆராய்ச்சி நிலையத்தில் கடமையாற்றிய வைத்தியா் ஒருவா் என்னிடம் கூறினாா். எனக்கு ஆச்சாியமாக இருந்தது. நாங்கள் யாருமே மதிக்காத இந்தப் பூவுக்குள் இப்படி ஒரு சக்தி புதைந்து கிடக்கிறதா?

அதன் பிறகு இணையத்தில் கொஞ்சம் தட்டிப் பாா்த்தேன்.
புற்று நோய் மட்டுமல்ல நீரிழிவு நோய்க்கும் சிறந்த மருந்தாக இது இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் கிடக்கின்றன.

ஆனால் கிராமப்புற மக்கள் இதை சுடுகாட்டுமல்லி என்று அழைக்கின்றாா்கள்.
கிராமப்புரங்களில் இந்தத் தாவரம் தொடா்பாக நல்ல கருத்து இல்லை.
சுடுகாடுகளில் இது செழித்து வளா்வதால், இதை வீடுகளில் நட்டால் அந்த வீட்டில் மரணங்கள் சம்பவிக்கும் என்ற மூட நம்பிக்கை இருப்பதால் நித்தியகல்யாணிக்கு மவுசு இல்லையென்றும் அந்த டாக்டா் கூறினாா்.

பன்னாட்டு மருந்து தயாாிப்பு நிறுவனங்களுக்கு இலாபம் வழங்கும் அடிப்படையில் தான் எமது மக்களின் நம்பிக்கைகளும் இருக்கின்றன. சிலவேளை நம்பிக்கைகள் அப்படிதான் வளா்க்கப்பட்டிருக்கின்றன. இலங்கை மருத்துவ தாவரங்கள் நிறைந்த ஒரு நாடு. எமது நாட்டில் விளையும் பல தாவரங்களுக்கான மருத்துவ வணிக காப்புாிமையை (Patent) பன்னாட்டு கம்பனிகள் கொள்ளையிட்டு விட்டன.

இலங்கையில் அாிய தாவர வளங்களை கொள்ளையிடுவதற்கு இந்த தாவரங்களின் தாயகமான சிங்கராஜ வனத்தை சுரண்டுவதற்கு பன்னாட்டு கம்பனிகள் பல முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

சிங்கராஜ வனத்தில் இருக்கின்ற மருத்துவ தாவரங்களை ஒழுங்கான தொழில்நுட்பம் ஒன்றை பயன்படுத்தி மருந்துகளை உற்பத்தி செய்தால் வெளிநாட்டிற்கும் அவற்றை ஏற்றுமதி செய்யலாம்.

 இந்தியாவில் பல நுாறு ஏக்கா் நிலங்களில் இந்தத் தாவரம் பயிாிடப்பட்டு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது

மனித நேயம் கொண்ட ஒரு ஜனாதிபதி ஜோசே முஜிகா!

பிச்சை வாங்கியும், வாிகளினால் மக்களைச் சுரண்டியும் ஆடம்பர பெருவாழ்வு வாழும் எமது “மகாராசா”க்களுக்கு மத்தியில்
மனித நேயம் கொண்ட ஒரு ஜனாதிபதி!

ஜோசே முஜிகா!


உலகில் மிகவும் எளிமையான ஜனாதிபதி உருகுவே நாட்டின் தலைவா் ஜோசே முஜிகா அவா்கள்தான். 79வயதை உடைய ஜோசே முஜிகா கடந்த 2010ம் ஆண்டு உருகுவேயின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றாா்.
உருகுவே கிளா்ப்படையின் ஒரு போராளியாக இருந்த இவா் 2009 ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா்.

உலகிலேயே மிகவும் எளிய ஜனாதிபதியாக வா்ணிக்கப்படும் இவா் தனக்குக் கிடைக்கும் 12000 டொலா் சம்பளப் பணத்தில் 90 வீதத்தை மக்கள் நலத்திட்டங்களுக்காக செலவிட்டு வருகின்றாராம்.


மிக வறிய குடும்பத்தில் பிறந்த ஜோசே முஜிகா கியூபா போராட்டத்தின் தாக்கத்தினால் 1960களில் ஒரு போராளியாக உருமாறியிருக்கின்றாா். உருகுவே அரசால் 100 போ்களுடன் சிறைபிடிக்கப்பட்ட இவா், 1971ம் ஆண்டு நிலங்சுரங்கம் ஒன்றை தோண்டி சிறையிலிருந்து தப்பியிருக்கிறாா்.
1985 ஆண்டளவில் Movement of Popular Participation என்ற அரசியல் கட்சியை உருவாக்கி ஜனநாயக நீரோட்டத்தில் சங்கமித்துள்ளாா்.

உலக நாடுகளில் வட்டிக்கு பிச்சை வாங்கியும், வாிகளினால் மக்களைச் சுரண்டியும், லஞ்சம், ஊழல்கள் மலிந்த ஆடம்பர வாழ்க்கையில் நாறும் எமது நாட்டு ஆட்சியாளா்களை விட மனிதநேயமுள்ள இந்த உருகுவே ஜனாதிபதி மேன்மைமிக்கவா்.

ஆனால் உலகின் முன்னணி ஊடகங்கள் இவரை இருட்டடிப்பு செய்கின்றன. மன்னாதி மன்னா்களின் குழியலறையையும், கழிப்பறைகளையும் பேசு பொருளாக்கும் மேற்கத்தைய ஊடகங்கள் மனித நேயம் கொண்ட இத்தகைய மனிதா்களின மனித நேய வாழ்க்கையை மறைத்து விடுகின்றன.
இவா் பாவிக்கும் பழைய வொஸ்வொகன் காரை அதிகளவு பணம் கொடுத்து வாங்குவதற்கு அரபு தனவந்தா் ஒருவா் முன் வந்திருக்கின்றாா். ஆனால் ஜோசே முஜிகா அதனை நிராகரித்துள்ளாா்.

உருகுவே நாட்டைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள
https://www.cia.gov/…/publi…/the-world-factbook/geos/uy.html

Saturday 1 November 2014

ஜனாதிபதியை ஓட வைத்த மக்கள்...!

ஆபிரிக்க நாடான பூர்கினா பாசோவில் மக்கள் வீதியில் இறங்கி ஆா்ப்பாட்டம் செய்துகொண்டிருக்கின்றாா்கள்.

பூர்கினா பாசோவின் ஜனாதிபதி பிலைஸ் கம்பரோ Blaise Compaore கடந்த 27 வருடங்களாக ஆட்சி செய்து வருகிறாா். 2015ம் ஆண்டு இடம்பெறவிருக்கும் தோ்தலில் போட்டியிட்டு மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற ஆசை இவரையும் விட்டு வைக்கவில்லை.

எனவே மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டுமென்பதற்காக அரசியல மைப்பில் மாற்றம் கொண்டு வர முயற்சி செய்தாா். கம்பரோவின் பதவி வெறியை கடுமையாக எதிர்த்த மக்கள் பாதைகளில் இறங்கினாா்கள். போராட்டம் ஆரம்பமானது.

விளைவு வன்முறையாக வெடித்தது. சுமாா் பத்துலட்சம் மக்கள் இந்த போராட்டத்தில் குதித்தனா். போராட்டக்காரர்கள் நேற்றயை தினம் (31.10.2014) பாராளுமன்றத்தையே தீவதை்து கொளுத்தினாா்கள். கம்பரோவின் கட்சித் தலைமையகம் கூட தீ வைத்து கொளுத்தப்பட்டது.

போராட்டம் வலுப்பெற்றதைக் கண்ட கம்பரோ இன்று 01.11.2014 தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். 2011 ஏற்பட்ட அரபு வசந்தத்தோடு பூர்கினா பாசோவிலும் மக்கள் எழுச்சி ஆரம்பமானது.

1982ம் ஆண்டு இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி பூர்கினா பாசோவில் புரட்சிகர மாற்றங்களை உருவாக்கிய ஆபிரிக்காவின் சேகுவேரா என வர்ணிக்கப்பட்ட ஜனாதிபதி தோமஸ் சங்கராவை 15 அக்டோபர் 1987ல், பிரஞ்சு கைக்கூலிகளுடன் இணைந்து கொலை செய்துவிட்டு கம்பரோ ஆட்சிக்கு வந்தாா்.





அன்றிலிருந்து இன்றுவரை 27 வருடங்கள் கம்பரோ தொடராக ஆட்சி செய்துள்ளாா்.

Friday 31 October 2014

சிறுபான்மை கட்சிகளின் பேரம் பேசும் சக்தி ஓரம் போகுமா?



சிங்கள பௌத்த பேரினவாதம் கூர்மையடைந்த நிலையில், 2015 ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் வரப்போகின்றது. 2004ல் வன்னிமக்களின் வாக்குரிமையை தடுத்து நிறுத்தி, ஒரு சிறிய வாக்கு வித்தியாசத்தில் ஐ.தே.க வை தோற்கடித்து ஆட்சியமைத்த மஹிந்த ராஜபக்ஸ, 2009ல் புலிகளை அடியோடு அழித்த பெருமிதத்தில் சிங்கள மக்களின் விடுதலை வீரராக தன்னை அடையாளப்படுத்தி ஆட்சியைப் பிடித்தார்.
2015 தேர்தல் பிரசாரத்திற்கு ஒரு ‘வழி’ வரப்பிரசாதமாக வந்திருக்கின்றது. ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் புலிகள் இயக்கத்திற்கு விதித்திருந்த தடையை நீக்கியதால், தேர்தல் பிரசாரத்திற்கான ஒரு மையப்புள்ளி மஹிந்தவின் மடிமீதே வந்து வீழ்ந்திருக்கின்றது.
பெரஹர ஊர்வலத்திற்கு முன்னால் கசையடிப்பவன் வந்து செய்தி சொல்வது போல், அரசு அச்சிட்ட ‘புலி’ ரணில் போஸ்டர்கள் முன்னால் வெளிவந்து செய்தியை சொல்லி விட்டது.
எதிர்வரும் 2015 ஜனாதிபதித் தேர்தல் புலி பற்றி ஒரு கிலியை தெற்கின் சிங்கள பிரதேசங்களில் பரப்பும் தேர்தலாகத்தான் தடம்பதிக்கப் போகின்றது. ஐரோப்பிய யூனியன் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கியிருப்பது. மஹிந்தவின் தேர்தல் பிரசாரத்திற்கு உதவப்போகின்றது.
இந்தத் தடை நீக்கத்தை அச்சாணியாக வைத்தே மஹிந்தவின் தேர்தல் பிரசாரக் சக்கரம் சுழலப்போகின்றது. தற்போது ஐரோப்பிய யூனியனின் இந்தத் தடை நீக்கத்திற்கும் ரணில் விக்கிரமசிங்க உதவியுள்ளார் என்று மஹிந்த தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஐ.தே.க.வோ இதை ஓர் அப்பட்டமான பொய் என்று அடித்துச் சொல்கின்றது.
புலிகள் மீதான தடை நீக்கம் மஹிந்த அரசாங்கத்திற்கு அனுகூலமாக இருப்பதால், புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீக்கத்தை அரசாங்கம் அறிந்தும், அறியாதது போல் இருந்திருப்பதற்கான சாத்தியங்கள் நிறையவே இருப்பதாகவும் நம்பப்படுகின்றது.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஐரோப்பிய யூனியன் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு வருவதை அறியயாமல் இருந்தது கூட பல சந்தேகங்களை எழுப்புகின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் மிகவும் பொறுப்புவாய்ந்த இராஜதந்திர ரீதியில் செயற்படவேண்டிய நிலையிலுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு இந்த வழக்கு விவகாரத்தில் கோட்டைவிட்டு விட்டதையும், அந்தக் குற்றத்தை எதிர்க்கட்சியின் மீது திணிப்பதையும் சிறுபிள்ளைத்தனமான செயலாகத்தான் சொல்ல வேண்டியிருக்கின்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போர் குற்ற விவகாரத்தில் மின்சாரக் கதிரையை முத்தமிடவும் தயாரென முழங்கி சிங்கள வாக்குகளை கொள்ளையடித்த ராஜபக்ஸ இம்முறை ஐரோப்பிய யூனியனின் புலி தடை நீக்கத்தை அடிப்படையாக்கி மீண்டுமொருமுறை வாக்குகளை கொள்ளையிட முன்வரலாம்.
இது இப்படியிருக்க, மஹிந்தவின் கூட்டணிக் கட்சிகளுக்குள்ளேயே இப்போது குழப்பம் வந்திருக்கின்றது.
மஹிந்த அரசின் தோழமைக் கட்சியான, கடும் போக்கு சிங்கள பௌத்த கட்சியான ஹெல உறுமய மஹிந்த அரசின் அதிகாரத் து’பிரயோகம் மற்றும் சிங்கள மக்களின் உரிமைகள் தொடர்பாக போராடப் போவதாக தருணம் பார்த்து அறிவித்திருக்கின்றது.
ஹெலஉறுமய கட்சியின் பாராளுமன்ற அங்கத்தவர் அத்துரலியே ரத்ன தேரர், அக்டோபர் 14ம் திகதி தமது கட்சி 18வது அரசியல் யாப்பை ஆதரித்ததன் மூலம் தாம் தவறிழைத்து விட்டதாகவும் அறிவித்தார்.
அதுமட்டுமல்லாமல்,
ஹெல உறுமய கட்சி, இந்நாட்டின் அரசியல் யாப்பில் அவசர மாற்றங்கள் வரவேண்டும் என்று கூறி உத்தேச அரசியல் யாப்பு தொடர்பான வரைபொன்றை முன்வைத்திருக்கிறது.
இந்த வரைபில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையின் அதிகாரங்களைக் குறைப்பது மற்றும் அமைச்சரவையை 20 அல்லது 25 ஆக குறைப்பது போன்ற யோசனைகளை முன்வைத்துள்ளது. தமது கட்சி முன்வைத்துள்ள இந்த வரைபை ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக அது அறிவித்துள்ளது.
இந்த நிகழ்வுகளால் ஆளும் கட்சியின் அரசியல் தளம் கொஞ்சம் கொஞ்சமாக அதிர்வடைந்து வருவதையே எடுத்துக் காட்டுகின்றது.
பேரம் பேசும் அரசியலின் அடையாளங்களாக இருந்த தமிழ், முஸ்லிம் சிறுபான்மைக் கட்சிகளின் செயற்பாட்டிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இந்த ஜனாதிபதித் தேர்தலை மாற்றவே தெற்கின் இனவாதசக்திகள் இலக்கு வைத்திருக்கின்றார்கள் என்பதை அவர்களின் செயற்பாடுகளே சொல்லி வருகின்றன.
ஒரு காலத்தில் ‘‘நாட்டின் தலைவர்களை உருவாக்குவது நாம்தான்’’ என்று மார்தட்டி, கூப்பாடு போட்டு தெற்கின் சிங்கள இனவாத சக்திகளை தட்டியெழுப்பிய சிறுபான்மை கட்சிகளின் அரசியல் தலைவர்கள் அதிர்ந்துபோய் நிற்கின்றார்கள்.
தேர்தல்களின் போது சிறுபான்மை அரசியல் தலைமைகள் சிங்கள தலைவர்களிடம் மண்டியிட்டு பேரம் பேசி வசந்ததத்தை சுவாசித்து வாழ்ந்தவர்களாகவே இருந்திருக்கின்றார்கள்.
இவர்களினால் பேரம் பேசி பெறப்பட்ட எந்த அமைச்சர் பதவிகளாலும் சாதாரண மக்களுக்கு எவ்வித புண்ணியமும் கிடைக்கவில்லை. மாறாக, சிறுபான்மை மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்கள் ஓரம் கட்டப்பட்டதைத் தவிர எதுவுமே நிகழவில்லை.
அண்மைய பேருவளை, அளுத்கம நிகழ்வுகள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. சமூகத்திற்கு எவ்வித பலனுமில்லாத இந்த பேரம் பேசிப் பெறப்பட்ட அமைச்சர் பதவிகளை, சோரம் போய் பெறப்பட்ட சொத்தாய்தான் சமூகம் பார்க்கிறது.
ஹெல உறுமய இந்த ‘பேரம்’ பேசும் அரசியலுக்கு ஓர் ஆப்பு வைக்கத்தான் இப்போது அணி திரண்டிருக்கிறது. பேரம் பேசும் அரசியலை ஒரம் கட்டும் ஓர் உபாயத்தைத்தான் மஹிந்தவிற்கு முன் வைத்திருக்கிறது.
ஹெல உறுமய கட்சி, அரசியல் யாப்பில் மாற்றங்கள் வரவேண்டும் என்று கூறி உத்தேச அரசியல் யாப்பு தொடர்பாக முன்வைத்துள்ள வரைபில், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையின் அதிகாரங்களைக் குறைப்பது மற்றும் அமைச்சரவையை 20 அல்லது 25 ஆக குறைப்பது போன்ற யோசனைகளை முன்வைத்துள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய அமைச்சரவையைக் கொண்ட நாடாக வர்ணிக்கப்படுகின்ற இலங்கையின் இந்த ‘மெகா’ அமைச்சரவை நாட்டிற்கே ஒரு சாபக்கேடாகத்தான் அனைத்து மக்களாலும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஆனால், அமைச்சரவையை 20-25 ஆக குறைப்பது என்ற ஹெலஉறுமயவின் யோசனையால் சிறுபான்மைக் கட்சித்தலைவர்கள் கதிகலங்கிப் போயிருக்கின்றார்கள். அமைச்சரவை மட்டுப்படுத்தப் படுவதால் தமது கட்சிகளுக்குள்ளும் பிரச்சினைகள் உருவாக வாய்ப்பிருப்தால் காய் நகர்த்தல்களை எப்படி சமாளிப்பதென்று கற்பனை செய்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அமைச்சரவை குறைப்பு, சிறுபான்மை கட்சிகளுக்கும், எதிர்க்கட்சி அங்கத்தவர்களுக்கும் ஏலம் போட்டு அமைச்சர் பதவிகளை விற்பனை செய்ய மஹிந்த அரசிற்கு முடியாமல் போகலாம்.
எதிர்க் கட்சினரை அமைச்சர் பதவிகளைக் காட்டி தம்பக்கம் இழுத்தெடுக்கும் அரசியல் தந்திரத்தை ஒருவகையில் இது பாதித்தாலும், இந்த மிகப்பெரிய கபினட் அமைப்பின் மூலம் சிறுபான்மைக் கட்சிகள் ஏதும் அடைந்துவிடக் கூடாது என்பதில் ஹெல உறுமய அவதானமாக இருக்கின்றது.
ஹெல உருமய 2004, 2009 ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் போது மஹிந்த ராஜபக்ஸவின் வெற்றிக்கு தெற்கில் இனவாதத்தை விதைத்து வெற்றி பெறுவதற்காக சூழலை உருவாக்கியதற்கான பெருமை தனக்குரியதாக கூறிவருகின்றது.
தேர்தல் காலங்களில இலங்கையின் இரண்டு தேசிய கட்சிகளும் சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களின் உரிமைகளை பலியிடுவதாக ஹெலஉறுமய கட்சி குற்றம் சுமத்தி வந்தது.
யுத்தத்திற்குப் பின்னரான இலங்கையின் சிறுபான்மை சமூகங்களை கருவறுக்கும் சிங்கள பௌத்த கடும்போக்காளர்களின் செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இனிவரும் ஜனாதிபதியை உருவாக்கும் செயற்திட்டத்தில் சிங்கள கடும்போக்காளர்களிடையே பெரும் போட்டி நிலவுகின்றது.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவும், அதிகார துஷ்பிரயோகம், ஊழல், மோசடி, அடாவடித்தனங்களால் அரசின் செல்வாக்கு சரிந்து வரும் நிலையில், மக்களை திசை திருப்பி வாக்குகளைப் பெறுவதற்கு இனவாதம் ஒன்றே இலக்காக அமைய வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
ஹெல உறுமயவின் ஏழு அம்சத்தில் இருக்கும் அமைச்சரவை குறைப்பு, சிறுபான்மை கட்சிகளின் பேரம் பேசி ‘அமைச்சர் பதவி’ பிச்சைவாங்கும் அரசியலுக்கு ஒரு அடியையே கொடுத்திருக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய மந்திரி சபையைக் கொண்ட இலங்கைத் திருநாட்டின் மந்திரி சபையால் சிறுபான்மை உரிமைகள் சிறை வைக்கப்பட்டது என்பது வேறு விடயம்.
அதிகமானோருக்கு அமைச்சு பதவிகளை வழங்கி சிறுபான்மைக் கட்சித் தலைவர்களை சிறைவைக்கும் இந்த நிறைவேற்று அதிகாரத்தால் அந்த அமைச்சரைத் தவிர, அவர் சார்ந்த சமூகத்திற்கு எவ்வித பலனுமில்லை என்று மக்கள் உணர்ந்திருந்தாலும், இனவாதிகள் என்னவோ இந்த அமைச்சுப் பதவிகள் சிறுபான்மை சமூகத்திற்கு கிடைத்திருக்கின்ற பாதுகாப்புக் கவசங்களாகவும், கிரீடங்களாகவுமே பார்க்கின்றார்கள்.
சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையில் சமூக நலன்சார்ந்த, கல்வி, பொருளாதார, வாழ்வுரிமை, பாதுகாப்பு உட்பட்ட விடயங்களை அடிப்படையாக வைத்து பேரம் பேசப்படாத அரசியலில், சிறுபான்மை சமூகங்கள் அன்றுபோல் இன்றும் தனிமைப்பட்டு அநாதரவாகவே இருக்கின்றன.
(26.10.2014 தமிழ்த்தந்தி பத்திரிகையில் பிரசுரமான கட்டுரை)

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...