Wednesday 7 January 2015

1943 ஜனவரி 7: 'அணுகுண்டு நோய்' கொன்ற சடாகோ சசாகி பிறந்த தினம்

ரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானைச் சரணடைய வைக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த அமெரிக்கா, அந்நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் முறையே 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9-ல் அணுகுண்டுகளை வீசியது. இந்த இரண்டு கொடூரச் சம்பவங்களிலும் 1 லட்சத்து 29 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். கதிரியக்கத்தின் காரணமாகக் குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கானவர்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்தார்கள். அந்தக் குழந்தைகளில் ஒருவர்தான் சடாகோ சசாகி. 1943 ஜனவரி 7-ல் பிறந்தவர் அவர். ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டபோது சகாகிக்கு இரண்டே வயதுதான்.

ஹிரோஷிமாவின் மிசாசா பாலத்துக்கு அருகில் சசாகியின் வீடு இருந்தது. அதாவது, அணுகுண்டு விழுந்த இடத்திலிருந்து சுமார் 1.7 கி.மீ. தொலைவில். குண்டுவிழுந்த அதிர்ச்சியில் வீட்டின் ஜன்னல் வழியே வெளியில் தூக்கியெறியப்பட்டாள் சசாகி. பதறிப்போன அவளது அம்மா, ஓடிச்சென்று பார்த்தபோது சசாகி உயிருடன்தான் இருந்தாள். அவளைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து ஓடினார் அவளது அம்மா. மொத்த நகரமும் அழிந்துபோனதால், அருகில் இருந்த மியோஷி நகரில் தனது உறவினர் வீட்டில் தங்கினார். அதன்பின்னர் மற்ற குழந்தைகளைப் போலவே சாதாரணமான வளர்ந்தாள் சசாகி.
அவளுக்கு 11 வயதானபோது கழுத்திலும், காதின் பின்புறத்திலும் வீக்கங்கள் ஏற்பட்டன. சில மாதங்களிலேயே அவளது கால்களில் ஊதா நிறப் புள்ளிகள் ஏற்பட்டன. அவளுக்கு ரத்தப் புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவளது அம்மாவோ இதை அணுகுண்டு நோய் என்று அழைத்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள் சசாகி. அவளைக் காண வந்த அவளது தோழிகளில் ஒருத்தியான சிசுக்கோ ஹமாமாட்டோ, தங்க நிறத் தாள் ஒன்றை மடித்து, (ஜப்பானின் பண்டைய கலையான ஓரிகாமி முறையில்) கொக்கு ஒன்றை உருவாக்கினாள்.

1,000 காகிதக் கொக்குகளை உருவாக்கினால் விரும்பியது நடக்கும் என்பது ஜப்பானியர்களின் நம்பிக்கை. அதன்படி, நோய் பாதிப்புக்கு இடையிலும், 1,000 காகிதக் கொக்குகளை உருவாக்கும் வேலையில் இறங்கினாள் சசாகி. எனினும், அவளால் 644 கொக்குகளைத்தான் உருவாக்க முடிந்தது. 1955 அக்டோபர் 25-ல் ரத்தப் புற்றுநோய்க்கு பலியானாள் சசாகி. அதன்பின்னர், அவளது பள்ளி நண்பர்கள் இணைந்து 1,000 காகிதக் கொக்குகளை உருவாக்கினார்கள். அவை அனைத்தும் அவளது உடலுடன் சேர்த்துப் புதைக்கப்பட்டன. அவளது நினைவாக, 1958-ல் ஹிரோஷிமா அமைதி நினைவுப் பூங்காவில் தங்கக் கொக்கை சுமந்து நிற்கும் சடாகோவின் சிலை நிறுவப்பட்டது. அந்தச் சிலையின் அடிப்பகுதியில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள் இவை:
இதுதான் எங்கள் கூப்பாடு,
இதுதான் எங்கள் பிரார்த்தனை,
உலகில் அமைதி வேண்டும்.
tamil.thehindu.com

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...