Sunday, 15 January 2012

பலஸ்தீன போராளி - ஜோர்ஜ் ஹபாஷ் (George Habash)


பலஸ்தீன் !
ஆக்கிரமிப்பின் குறியீடு
மனித உரிமை மீறலின் அடையாளம்
உயிர் வாழும் அக்கிரமம்,
அநீதியின் அச்சு
சொந்த நாட்டுக்குள் சிறைப்பட்ட
கண்ணீர் கதையின் கரு!

இந்த மக்களின் போராட்டத்தை முஸ்லிம்களின் போராட்டம் என்று மட்டும் பார்க்காமல் மனித இனத்தின் போராட்டமாக பார்க்க வேண்டும்.

உலக ஊடகங்கள் பலஸ்தீன் விவகாரத்தில் ஊமையாக நிற்கின்றன.  வெறுமனே மதச்சாயம் பூசி அந்தப் போராட்டத்தை மலினப்படுத்தியும் வருகின்றன.

சொந்த நாட்டை மீட்கப் போராடும் அவர்களை பயங்கரவாதிகளாக மேற்கின் ஊடகங்கள் பார்க்கின்றன.  கதைகளைப் பரப்புகின்றன.

இந்தப் போராட்டத்தில் முஸ்லிம்கள் அல்லாத நிறைய பேர் அங்கம் வகித்திருக்கின்றார்கள். அங்கம் வகித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த உரிமைப்போராட்டத்திற்கான அவர்களின் பங்களிப்பை ஊடகங்கள் எப்போதும் மறைத்தே வந்திருக்கின்றன.

காரணம் பலஸ்தீன் போராட்டம் தனியாக முஸ்லிம்களின் போராட்டம் என்று காட்டுவதன் மூலம் அவர்களுக்கு அரசியல் ரீதியாக நிறைய ஆதாயம் கிடைக்கின்றது.

அந்தப் போராட்டத்தை முஸ்லிம் போராட்டம் என்று தனிமைப்படுத்தி முத்திரைக் குத்துவதன் மூலம் உலக அளவில் பலஸ்தீனத்திற்குக் கிடைக்கும் ஆதரவிற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

பலஸ்தீன் போராட்டத்தில் அப்படி மூடிமறைக்கப்பட்ட ஒருவர்தான் இந்த ஜோர்ஜ் ஹபாஷ் .

பலஸ்தீன விடுதலைக்காக தனது வாழ்க்கையை முழுதாக அர்ப்பணித்த ஜோர்ஜ் ஹபாஷ் (George Habash), பலஸ்தீனத்தி்ல் லைடா Lydda என்ற நகரத்தில் ஒரு பணக்கார கிறிஸ்தவ ஒத்தொடொக்ஸ் குடும்பத்தில் 1925 ஆகஸ்ட் 1ம் திகதி பிறந்தார்.  

1948 ல், பெய்ரூத்திலுள்ள அமெரிக்க மருத்துவ கல்லூரியில் மாணவராக இருந்த காலத்தில் இஸ்ரேலின் பலஸ்தீன் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடுவதற்காக வேண்டி போராட்ட அணியொன்றை உருவாக்கினார்.

அவரும் அவரது முழு குடும்பமும், தனது சொந்த நகரமான லைடா மக்களில் 95 சதவீதமானோரும் இட்சாக் ரபின் தலைமையில்  இயங்கிய சியோனிச குழுவின்  துப்பாக்கி முனையில் அடித்து விரட்டப்பட்டனர். சட்டவிரோத  இஸ்ரேல் நாட்டின் உருவாக்கம் பலஸ்தீன் மக்கள் மீது கொடும் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டது.

"அந்தக் காட்சியை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. ஆயிரக்கணக்கான பலஸ்தீன் மக்கள் அழுது புலம்பியவாறு ஆனாதரவாக  தங்கள் வீடுகளில் இருந்து அடித்து உதை்து வெளியேற்றப்பட்டார்கள். இந்தக் காட்சிகளை பார்த்த ஒருவனால் போராட்டக் காரனாக மாறாமல் இருக்கவும் முடியாது. "

ஜோர்ஜ் ஹபாஷ் பிற்காலத்தில் ஸியோனிஸ கொடுமைக்கு எதிரான தனது போராட்டத்திற்கான காரணத்தை மேற்கண்டவாறு விபரித்தார்.

1951 இல், தனது மருத்துவ மேல் படிப்பை முடித்துக்கொண்ட ஜோர்ஜ் ஹபாஷ், துணை மருத்துவராக தொழில் புரிய ஆரம்பித்தார். அரசியல் காரணங்களுக்காக ஒரு வருடத்தின் பின்னர் தனது பதவியை இராஜிநாமா செய்து விட்டு  ஜோர்தான் நோக்கி புறப்பட்டார்.  ஜோர்தான் தலைநகர் அம்மானில் ஒரு மருத்துவமனையை திறந்து அங்கு தனது வைத்திய தொழிலை ஆரம்பித்தார். 1952 இல் அவர் எகிப்திய ஜனாதிபதி கமால் அப்துல் நாஸரின் ஏகாதிபத்திய எதிர்ப்பு கொள்கையினால் ஈர்க்கப்பட்டு, அரபு தேசிய இயக்கத்தின் ஸ்தாபக உறுப்பினராக பலஸ்தின் போராட்ட களத்தில் முன்னணிக்கு வந்தார்.

ஜோர்ஜ் ஹபாஷ் மத்திய கிழக்கின் அரபுகளின் ஒற்றுமை தொடர்பாக தனது கவலையை அடிக்கடி வெளியிட்டு வந்தார். தனது இனத்தை இஸ்ரேலுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டு எகாதிபத்தியத்திற்கு அடிமையாக மாறி வருகின்ற வெட்கம் கூச்சமற்ற அரபு ஆட்சியாளர்களை ஜோர்ஜ் ஹபாஷ் கடுமையாக விமர்சித்து வந்தார். அரபு ஆட்சியாளர்கள் மீதான அவரது கபடமற்ற விமர்சனம் அரபு நாடுகளில் அவருக்கு நெருக்குதல்களை உருவாக்கின. இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாடின் அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்தன. 1967 வரை பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் அங்கத்தவராக இருந்த ஜோர்ஜ் ஹபாஷ், 1967ல் இடம் பெற்ற இஸ்ரேலுடனான யுத்தத்தில் அரபு நாடுகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இயக்கத்திலிருந்து வெளியேறினார்.

அதே ஆண்டு டிஸம்பர் மாதம் Popular Front for the Liberation of Palestine (PFLP)  பலஸ்தீன் விடுதலைக்கான மக்கள் முன்னணியை ஆரம்பித்தார். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கும் அடக்குமுறைக்கும் எதிராக இவரின் (PFLP) இயக்கம் பிரசார வேளைகளை அரபு நாடுகளில் முடுக்கிவிட்டது.  சிரியா டமஸ்கஸ்ஸில் ஒரு பிரசார கூட்டத்தில் ஜோர்ஜ் ஹபாஷ் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றார். ஒரு மாத கால சிறைவாசத்தின் பின்னர் எகிப்துக்கு சென்றார். எகிப்தில் ஜனாதிபதி அப்துல் நாஸரோடு கலந்துரையாடி இஸரேலுக்கு எதிரான தனது ஆயுதப் போராட்டத்திற்கு அனுசரணையைப் பெற்றுக்கொள்கின்றார்.

1970ம் ஆண்டு நான்கு விமானங்களைக் கடத்தி வந்து அவற்றில் இருந்த அனைவரையும் விடுதலை செய்து விட்டு மூன்று விமானங்களை ஜோர்தான் பாலைவனத்திலும், ஒன்றை கெய்ரோவிலும் வைத்து வெடிக்க வைத்ததன் மூலம் ஜோர்ஜ் ஹபாஷின் பலஸ்தீன் விடுதலைக்கான மக்கள் முன்னணி (PFLP)  உலகளாவிய ரீதியில் மக்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த விமானக் கடத்தலைக் கண்டித்த ஜோர்தான் மன்னர் ஹுஸைன் தனது நாட்டிலிருந்த பலஸ்தீன் போராட்டக் குழுக்களை உடனடியாக வெளியேற்றினார். பலஸ்தீன் போராட்ட வரலாற்றில் இந்நிகழ்வு கறுப்பு செப்டம்பர்  "Black September". என வர்ணிக்கப்படுகின்றது.

1974களில் ஜோர்ஜ் ஹபாஷ் விடுதலைப் போராட்டத்தில் யாஸிர் அரபாத்தோடும் அவரது இஸ்ரேலை அங்கீகரிக்கின்ற போக்குகளோடும் முரண்பட்டார். யாஸிர் அரபாத் சொந்த நலனுக்காக விடுதலைப் போராட்டத்தை விற்று விட்டதாக ஜோர்ஜ் ஹபாஷ் குற்றம் சாட்டினார்.

ஜோர்ஜ் ஹபாஷ் பலஸ்தீன் போராட்டத்தில் இருக்கின்ற ஹமாஸ், இஸ்லாமிக் ஜிஹாத் போன்ற அமைப்புகளோடு தனது பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டார். 1993ல் இடம் பெற்ற ஒஸ்லோ உடன்படிக்கையை இந்த மூன்று தரப்பினரும் கடுமையாக எதிர்த்தனர். யாஸிர் அரபாத்தை தனது கைகளுக்குள் போட்டுக்கொண்ட அமெரிக்கவும், இஸ்ரேலும் பலஸ்தீன் மக்களின் போராட்டத்தை யாஸிர் அரபாத் என்ற கைக்கூலியை வைத்து கொச்சைப் படுத்தின.

ஒஸ்லோ ஒப்பந்தம் பலஸ்தீன் மக்கள் மீது திணித்த தன்னாட்சிப் பிரதேசம் autonomous territories என்று குறிக்கப்பட்ட பலஸ்தீன் அதிகார சபையை (Palestinian Authority) தீர்வை ஜோர்ஜ் ஹபாஷ், ஹமாஸைப் போன்று இஸ்லாமிக் ஜிஹாதைப் போன்று கடுமையாக எதிர்த்தார். சர்வதேச விதிகளின் படி பலஸ்தீனத்திலிருந்து விரட்டப்பட்ட மக்களுக்கு தனது சொந்த இடங்களில் மீண்டும் குடியேறுவதற்கான உரிமையை இந்த பலஸ்தீன் அதிகார சபை மறுப்பதாக இவர் குற்றம் சாட்டினார்.

2000ம் ஆண்டு ஜோர்ஜ் ஹபாஷ் பலஸ்தீன் விடுதலைக்கான மக்கள் முன்னணியின் தலைமைப் பதவியிலிருந்து விலகினார். தலைமைப் பதவியிலிருந்து விலகினாலும்  இறுதிவரை தனது அமைப்போடு சேர்ந்து பாடுபட்டார். மரணிக்கும் வரை பாலஸ்தீன மக்களின் உரிமைக்கான போராட்டத்தை அவர் கைவிடவில்லை.

பலஸ்தீன் விடுதலைக்கான மக்கள் முன்னணியின் தலைமைப் பதவியை தலைமைத்துவத்தின் பயிற்சியை ஏனையோரும் பெற வேண்டுமென்று மற்ற ஒருவருக்கு வழங்கிவிட்டு சாதராரன அங்கத்தவராக செயற்பட்டார்.  அவரது வாழ்க்கையின் இறுதி நேரத்தில் காஸா மக்களின் கஷ்டங்களை நினைத்து மிகவும் கவலை கொண்டார். இன மத பேதமின்றி பலஸ்தீன் பூமியில் பிறந்தவர்கள்  அத்தனைப் பேரும் அந்த மண்ணின் மைந்தர்களே அவர்களின் உரிமைக்காக தொடர்ந்தது குரல் கொடுப்பது பலஸ்தீன் பிரஜை ஒவ்வொருவரினதும் பிறப்புரிமையாகும் என்ற கருத்தை ஜோர்ஜ் ஹபாஷ் தனது போராட்ட வாழ்க்கையில் நிலைநாட்டினார்.

2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் திகதி ஜோர்ஜ் ஹபாஷ் அம்மானில் காலம் சென்றார். பாலஸ்தீன் அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் அவரது மரணத்தைத் தொடர்ந்து மூன்று நாள் துக்க தினத்தை அறிவித்தார்.

“பலஸ்தீன் மக்களின்  மறுமலர்ச்சியை அவர்களின் எழுச்சியை துடைத்து அழிக்கக் காத்துக் கிடக்கும் அரபு தேசங்கள் அவற்றின் சரிவை வெகு விரைவில் சந்திக்கப் போகின்றன.”  ஜோர்ஜ் ஹபாஷ் ஒரு போது கருத்து தொிவித்தார்.

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...