Thursday, 19 January 2012

காணொளி - லிபியாவில் இடம்பெற்ற அமெரிக்க ஜிஹாதின் அக்கிரமம்!


இஸ்லாம் வாழ்க்கையின் சகல துறைகளுக்கும் வழிகாட்டும் மார்க்கமாகும்.  அல்லாஹ்வின் இறுதித் தூதை சுமந்து வந்த றசூலுல்லாஹ் (ஸல்) அவர்களை அல்குர்ஆன் அகிலத்திற்கான ஓர் அருட்கொடை என வர்ணிக்கின்றது.

போரின் போதும் சமாதான சூழ்நிலையிலும் ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும்? அவனது செயற்பாடுகள் எப்படி அமைய வேண்டும்? என்று நபி (ஸல்) அவர்கள் எமக்குக் கற்றுத் தந்திருக்கின்றார்கள்.

போர் ஒன்றின் பின்னர் கைதிகள் எவ்வாறு நடாத்தப்பட வேண்டும் என இஸ்லாம் கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது.  நபி (ஸல்) அவர்கள் தனது வாழ்க்கையில் ஒரு தளபதியாக நின்று போரியல் விதி முறைகளை எமக்குக் கற்றுத் தந்திருக்கின்றார்கள்.

பத்ர் போர்க்களத்தில் கைது செய்யப்பட்ட கைதிகளை, அவர்களை வைத்து முஸ்லிம் சிறார்களுக்கு எழுத வாசிக்கக் கற்றுகொடுத்ததன் பின்னர் அவர்களை விடுதலை செய்தார்கள்.  உலகத்திற்கு ஓர் அருட்கொடையாக  அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் வாழ்வின் சகல துறைகளுக்கும் முன்மாதிரி என்று நாங்கள் உரத்து கோஷமிடும் அளவிற்கு  எங்களில் அந்த முன்மாதிரி இல்லை என்பதை எமது சமகால செயற்பாடுகள் சாட்சிகளாக இருக்கின்றன.

இங்கே நீங்கள் காண்பது 2011 செப்டம்பர் மாதம் 20ம் திகதி லிபியாவின் சிர்த் நகரத்தில் புனித இஸ்லாத்தின் பெயரில் ஜிஹாதின் பெயரில் இடம் பெற்ற காட்டுமிராண்டித்தனம் ஒன்றை எடுத்துக் காட்டும் ஒரு காணொளி.

லிபியாவின் தலைவர் கதாபியின் கடைசி நிமிடங்களில் அவரோடு இறுதிவரை நின்று அமெரிக்க நேட்டோ படைகளோடும், பல அரபு நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட அல்கைதா கூலிப்படைகளோடும் போராடிய மேஜர் ஜெனரல் அபூபக்கர் யூனுஸ் அவர்களின் உடலத்திற்கு, அமெரிக்காவினாலும் அதன் அடிவருடி புததிஜீவி யூசுப் அல் கர்ளாவி போன்ற கைக்கூலிகளினாலும் வடிவமைக்கப்பட்ட ஜிஹாதிய வாதிகளால் இழைக்கப்பட்ட கொடுமைகளை இந்தக் காணொளியில் பார்க்கமுடியும்.

அல்லாஹு அக்பர் என்ற வீர முழக்கத்துடன் அரங்கேறும் இந்த அக்கிரமங்களை,  அல்லாஹ்வையும் அவனது துாதர் (ஸல்) அவர்களையும் எற்றுக்கொண்ட ஒருவனால் அங்கீகரிக்க முடியாது.

இறந்த மேஜர் ஜெனரல் அபூபக்கர் யூனுஸ் அவர்களின் முகத்திற்கு நீல நிற சாயத்தை பூசி அவரது உடலத்தை வதைப்படுத்தும் அவரின் உடமைகளை கொள்ளையிடும் “அமெரிக்க ஜிஹாதிய” வாதிகளை அவர்களின் அநாகரிகமான செயல்களை இந்தக்காணொளி தெளிவாகக் காட்டுகிறது.


                             லிபிய இராணுவ மேஜர் ஜெனரல் அபூபக்கர் யூனுஸ்

நாம் ஜாஹிலிய்யா என்று வர்ணிக்கின்ற மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்கள் கூட போர் ஒன்றின் பின்னர் நடக்கும் இத்தகைய அட்டுழியங்களை அனுமதிப்பதில்லை. ஜெனீவா சாசனம் கூட இதனைத் தடுக்கின்றது.

அல்லாஹ்வின் திருப்திக்காக அநீதிக்கு எதிராக போராடுதல் என்ற கருத்தை வழங்கும் ஜிஹாத் என்ற சொல்லாடல் இன்று அநீதியாளர்களின், அநியாயக் காரர்களின் தேவைக்காக அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்தப் படுகின்ற ஒன்றாக மாறியிருக்கிறது.

ஜிஹாத் தொடர்பாக முழு முஸ்லிம் உம்மத்தும் முழுமனதாக ஏற்றுக்கொண்டிருக்கும் பலஸ்தீன் மீட்பை அதற்கான போராட்டத்தை எதிரிகள் திசை திருப்பி விட்டார்கள். பலஸ்தீன் போராட்டம் அநாதையாக்கப் பட்டிருக்கிறது.

பலஸ்தீன் மக்களை தனது சொந்த பூமியில் அநாதைகளாக்கிய இஸ்ரேலிய அக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக முஸ்லிம் உம்மத்தில் ஊற்றெடுத்து வந்த ஜிஹாதிய போர்க்குணம் திட்டமிட்டு திசைதிருப்பப்பட்டிருக்கிறது.

எதிரிகளை விட்டு விட்டு எங்களுக்குள்ளே மோதுகின்ற ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரல் ஒன்றுக்குள் நாங்கள் தள்ளப்பட்டிருக்கின்றோம். அல்லாஹ்வின் எதிரிகள் என்று நாங்கள் காலம் காலமாய் நம்பி வந்தவர்களே இப்போது எங்களுக்கு கட்டளை இடுகின்றார்கள்.

இஸ்ரேலும் அமெரிக்காவும் தனது எதிரிகளை இனம் கண்டு எங்களுக்குக் காட்டித்தருகின்றன. அதற்கு ஜிஹாதிய பத்வா வழங்கி ஆன்மிக உரமிட்டு உணர்வுகளை தட்டிக்கொடுக்க கைக்கூலிகள் பல பேர் காத்துக்கிடக்கின்றார்கள்.

மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு இருந்த அச்சுறுத்தல்கள் கட்டம் கட்டமாக அழிக்கப்படுகின்றன. தடைகள் தகர்க்கப்படுகின்றன. தேசங்கள் சிதைக்கப்படகின்றன.

ஆப்கானைப் போன்று, ஈராக்கைப் போன்று அமெரிக்காவின் அதிகாரத்திற்குக் கீழ் லிபியாவை கொண்டு வந்த திருப்தியில் அடுத்த இலக்கை நோக்கி இந்த ஆன்மீக அட்டகாசம் நகர்ந்துக்கொண்டிருக்கிறது.

இப்போது,  ஐநாவை  சிரியா விவகாரத்தில் தலையிடுமாறு வேண்டி  ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியும், அமெரிக்க ஆதரவு ஜிஹாதின் “கோட் பாதரு'' மான யூசுப் அல் கர்ளாவி கோரிக்கை விட்டிருக்கிறார்.

பலஸ்தீன போராட்டத்திற்கு இன்றுவரை உறுதுணையாக இருக்கும், பலஸ்தீன போராளிகளுக்கு தனது நாட்டில் அலுவலகங்களை அமைத்துக் கொடுத்து, சகல ஒத்தாசைகளையும் வழங்கி சுதந்திரமாக அவர்களை செயல்பட அனுமதித்திருந்த சிரியாவின் நிலையும் நாளை லிபியாவைப் போன்று மாற்றமடையலாம்.

இந்த ஏகாதிபத்திய அரசியல் நலன்காக்கும் இஸ்லாமிய (?) ஏஜன்ட்களின் அடுத்த எஜன்டா எதுவாக இருக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்!



No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...