Thursday, 13 March 2014

மலேசிய விமானம் தொடர்பாக செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டது சீனா


சீன அரச இணையதளம் ஒன்று காணாமல் போன மலேசிய விமானத்தின் சேதமடைந்த பாகங்கள் தென்படும் செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளதாக சீனாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹூவா தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :- 

வியட்நாமின் தெற்கு முனை மற்றும் மலேசியாவின் கிழக்கு பகுதிக்கு இடையில் கடந்த மார்ச் 9ம் தேதி காலையில் செயற்கைக்கோள் எடுத்த படங்களில் "மூன்று சந்தேகத்திற்குரிய மிதக்கும் பொருட்கள்" மாறுபட்ட அளவுகளில் தென்பட்டுள்ளன. காணாமல் போனதாக சந்தேகிக்கப்படும் விமானத்தின் பாகங்கள் அதிகபட்சம் 22-24 மீட்டருக்குள் இருக்கும் என அளவிடப்பட்டுள்ளது. 

Wednesday, 12 March 2014

சிங்கள ராவணா பலய ஆர்ப்பாட்டத்திக்கு தடை





சிங்கள பௌத்த இனவாத அமைப்பான ராவணா பலய  இன்று (12.03.2014 )ஒழுங்கு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தை நேற்று கொழும்பு கோட்டை நீதிமன்றம் தடைசெய்தள்ளது.

ராவணா பலய அமைப்பும், சட்டக் கல்லூரிக்கு தோற்றிய  மாணவர்கள் சிலரும் இதை ஒழுங்கு படுத்தியிருந்ததாக அறிய வருகிறது.

கோட்டை மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய இடங்களில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற விருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



மலேசிய விமானம் சென்ற திசை உறுதியாக தெரியவில்லை: விமானப்படை அதிகாரி



தென் சீனக் கடலில் மாயமான மலேசிய விமானம் எந்த திசையில் சென்றிருக்கும் என்பது தெரியவில்லை என மலேசிய விமானப் படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
விமானத்தை தேடும் பணி தொடர்ந்தது நடைபெற்றுவருகிறது. 

தேடுதல் எல்லை விரிவாக்கப்பட்டு ஆயிரம் கடல்மைல் பரப்பில் 10 நாடுகளைச் சேர்ந்த 36 போர் விமானங்கள், 40 போர்க்கப்பல் கள், நூற்றுக்கணக்கான படகுகள் விமானத்தை தேடி வருகின்றன.

இந்நிலையில், காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், ரேடர் தொடர்பில் இருந்து விலகுவதற்கு முன்னர் மீண்டும் மலேசியாவுக்கே திரும்ப முயற்சித்திருக்கலாம் என அந்நாட்டு விமானப்படை அதிகாரி தெரிவித்துள்ளார் இருப்பினும் விமானம் சென்ற திசை உறுதியாக தெரியவில்லை என கூறினார்.

கோட்டா பாரு என்ற பகுதியில் இருந்து விமானம் திசை மாறி மலாகா ஜலசந்தி பகுதியில் மிகவும் தாழ்வாகப் பறந்திருப்பது ரேடார் பதிவுகளின் மூலம் தெரியவந்துள்ளதாக வெளியான செய்திகளை அந்த அதிகாரி மறுத்துள்ளார்.

நன்றி - தி இந்து 

மலேசிய விமானத்தின் மர்மம் தொடர்கிறது...!


தென் சீனக் கடலில் பறந்தபோது கட்டுப்பாட்டு அறை ரேடாரில் இருந்து மாயமாக மறைந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் என்னவானது என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
அந்த விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதா, கடலில் மூழ்கியதா, தீவிரவாதிகள் குண்டுவைத்து தகர்த்தனரா அல்லது கடத்திச் சென்றனரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. 3 நாள்களாகியும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.

தேடுதல் பணியில் 10 நாடுகள்
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பேருடன் சனிக்கிழமை அதிகாலை 12.41 மணிக்குப் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 1.30 மணி அளவில் கட்டுப்பாட்டு அறை ரேடாரில் இருந்து மாயமாக மறைந்தது.
இதைத் தொடர்ந்து மலேசியா முதல் வியட்நாம் வரையிலான கடல் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை 3-வது நாளாக தேடுதல் பணி நீடித்தது. 40-க்கும் மேற்பட்ட கப்பல்கள், 36-க்கும் மேற்பட்ட விமானங்கள் தென் சீனக் கடல் பகுதியில் சல்லடை போட்டு தேடுகின்றன.

மலேசியா மட்டுமன்றி சீனா, சிங்கப்பூர், வியட்நாம், தாய்லாந்து, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், அமெரிக்கா, நியூஸிலாந்து ஆகிய 10 நாடுகளின் போர்க்கப்பல்கள், அதிநவீன போர் விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மீனவர்கள் கூட்டு முயற்சி
பன்னாட்டு கடற்படை, விமானப் படை இணைந்து தேடியும் விமானத்தை கண்டுபிடிக்க முடியாததால் உள்ளூர் மீனவர்கள் தற்போது தேடுதல் பணியில் களம் இறங்கியுள்ளனர். மலேசியா மற்றும் தாய்லாந்தை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்குள் சென்றுள்ளனர்.
வியட்நாம் எல்லைப் பகுதியில் இதுவரை எதுவும் கிடைக்காததால் தாய்லாந்தை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் தாய்லாந்து கடற்படை தேடுதல் பணியைத் தொடங்கியுள்ளது.

காத்திருக்கும் உறவினர்கள்
காணாமல் போன மலேசிய விமானத்தில் 152 சீனர்கள் பயணம் செய்தனர். அவர்களின் குடும்பத்தினர் பெய்ஜிங்கில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
விமானத்தில் சென்னையைச் சேர்ந்த பெண் உள்பட 5 இந்தியர்கள் மற்றும் கனடாவைச் சேர்ந்த இந்தியர் ஆகியோரும் பயணம் செய்தனர். அவர்களது குடும்பத்தினரும் தவிப்புடன் காத்திருக்கின்றனர்.

வியட்நாம் எல்லையில் இரண்டு இடங்களில் பெட்ரோல் படலங்கள் மிதப்பதை அந்த நாட்டு ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். அந்தப் படலம் சேகரிக்கப்பட்டு கோலாலம்பூர் ஆய்வகத்தில் சோதிக்கப்பட்டது. இதில், கடலில் பரவியிருந்த பெட்ரோல் படலம் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் எரிபொருள் அல்ல என்பது தெரியவந்தது.

போலி பாஸ்போர்ட் பயணி அடையாளம் தெரிந்தது
மலேசிய விமானத்தில் 4 பேர் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்திருப்பதாக முதலில் தகவல்கள் வெளியாகின. அவர்களில் 2 பேர் மட்டுமே சந்தேகத்துக்கு உரியவர்கள் என்று மலேசிய போலீஸார் தற்போது தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மலேசிய காவல் துறை தலைவர் காலித் அபுபக்கர் நிருபர்களிடம் பேசியபோது, 2 பேர் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்துள்ளனர். அவர்களில் ஒருவரின் அடையாளத்தைக் கண்டுபிடித்துள்ளோம். அவர் மலேசியாவைச் சேர்ந்தவர் அல்ல என்றார்.
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் டிக்கெட் எடுத்த 5 பேரின் உடமைகள் கோலாலம்பூர் விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் விமானத்தில் ஏறவில்லை.

நன்றி - தி இந்து

Tuesday, 11 March 2014

நாங்கள் அடிப்போம்! நீங்கள் அழக் கூடாது..!


இலங்கையில் இடம் பெற்ற மற்றும் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் , அடக்கு முறைகள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைக் கவுன்ஸிலுக்கு தகவல்கள் வழங்குவதையும், வழங்குவோரையும்  நாட்டுக்கே துரோகம் இழைப்போராக  இன்று சிங்கள இனவாதிகள் அடையாளப்படுத்தி அச்சுறுத்தி வருகின்றனர்.

இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகங்கள் தமக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாக   யாரும் எவருக்கும் எந்த தகவலும் வழங்கக் கூடாது அப்படி வழங்குவது இந்த நாட்டையே காட்டிக் கொடுப்பதற்கு நிகரானது என்று பிரசாரம் செய்யப்படுகின்றது.

1988 1989 களில் ஜேவிபி போராட்டத்தின் போது  ஐ.தே.க அரசின் இராணுவ, பொலிஸ் மற்றும் துணைப்படைகளால்  கடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான  இலங்கையின் தென்பகுதி  சிங்கள இளைஞர் யுவதிகளுக்காக தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஐ.நா மனித உரிமைக் கவுன்ஸிலுக்கு தகவல் கொடுக்க முயற்சி செய்ததை யாரும் தேசத் துரோகமாக பார்க்கவில்லை.

அதற்கு காரணம் 88, 89 காலப்பிரிவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்கள் இருசாராரும் சிங்களவர்கள்.  சிங்கள அரசுக்கு எதிராக சிங்கள இளைஞர்கள் கிளர்ச்சி செய்த போது அதனை அடக்குவதற்காக சிங்கள அரசு மனித உரிமையை மீறியது.

அப்போதைய எதிர்க் கட்சி தரப்பிலிருந்த மகிந்த ராஜபக்ஸவின் சுதந்திரக் கட்சியினரின் இந்த செயற்பாட்டை ஆளும் கட்சிக்கு எதிராக கொண்டு வரும் ஒரு சாதாரண செயற்பாட்டாகவே சிங்கள மக்கள் பார்த்தனர்.



இந்த காணொளி பிரபல ஊடகவியலாளர் பில் ரீஸ் இலங்கை மோதல்கள் குறித்து  தயாரித்த  பிரிந்த தீவகம்  என்ற விவரணம். ஐ.தே.க. ஆட்சியின் போது எதிர்க்கட்சியிலிருந்த மஹிந்த ராஜபக்ஸவின் மனித உரிமை போராட்டம் தொடர்பாகவும் இது பேசுகிறது.

நாட்டுக்கு இழைக்கும் துரோகமாக யாரும் பார்க்கவில்லை. காரணம் மனித உரிமையை மீறி கொலை செய்யப்பட்டவர்களும், கொலையாளிகளும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். சிங்கள இனத்தவர்கள்.  எனவே இன்று போல் வேறு அர்த்தம் கற்பிப்பதற்கு காரணம் இல்லாமல் இருந்தது.

ஆனால் தற்போதுள்ள நிலைமை மிகவும் வித்தியாசமானது. மனித உரிமை மீறல் தொர்பாக அரசின் மீது குற்றம் சாட்டுபவர்கள் சிறுபான்மை இனத்தவர். குற்றம் சாட்டப்படுபவர்கள்  சிங்கள் பெரும்பான்மை இனத்தவர்கள்.

அன்று ஐ.நா மனித உரிமை கவுன்ஸிலுக்கு ஐ.தே.க அரசுக்கு எதிராக தகவல் கொடுக்கப் போன மஹிந்த ராஜபக்ஸவை ஒரு ஹீரோவாக  சிங்கள சமூகம் பார்த்தது.

இன்று சிறுபான்மை சமூகங்கள் தமது பிரச்சினைகளை ஐ.நா அரங்கிற்கு கொண்டு செல்வதை ஒரு துரோகமாக அதே சிங்கள சமூகம் பார்க்கின்றது. நீதியும் நியாயமும் இலங்கையில் இனங்களை வைத்துதான் எடைபோடப்படுகின்றது என்பதற்கு இது சிறந்த உதாரணம்.

பெரும்பான்மை இனத்திற்கு அநீதி இடம்பெற்றால் அதனை ஐ.நாவிற்கு மட்டுமல்ல அதற்கு மேலும் கொண்டு செல்லலாம். அது வீர தீர செயல்.

சிறுபான்மைக்கு அநீதி இடம்பெற்றால், அதை யாரும் எவருக்கும் சொல்லக் கூடாது. அந்த அநீதியை எவரும் கண்டு கொள்ளவும் கூடாது.  இது தான் மஹிந்த அரசின் நிலைப்பாடு...!  நாங்கள் அடிப்போம்! நீங்கள் அழக் கூடாது..!

Tuesday, 4 March 2014

குஜராத் இனக்கலவர வேட்டைக்காரனும், இரையும் ஒன்றிணைந்த மேடை!


2002 ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் நேரடி காட்சியாக மக்கள் மனங்களில் நிறைந்த இரண்டு பேர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரேமேடையில் தோன்றினார்கள்.
சங்க்பரிவார வெறியர்களுக்கு முன்னால் உயிர் பிச்சைக் கேட்டு கூப்பிய கைகளுக்கும், மிரட்சி மிகுந்த கண்களுக்கும் சொந்தக்காரரான குத்புதீன் அன்ஸாரியும், தலையில் காவி ரிப்பனும், இடது கையில் சூலமும் ஏந்தி ஆக்ரோஷமாக வெறிக் கூச்சலிடும் சங்க்பரிவார ஹிம்சையின் நேரடி காட்சியாக ஊடகங்களில் நிறைந்து காணப்பட்ட அசோக் மோச்சியும் கேரளாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் ஒரே மேடையில் கலந்துகொண்டார்கள்.
பல்வேறு இடதுசாரி அமைப்புகளின் கூட்டமைப்பு கேரள மாநிலம் தளிப்பரம்பில் உள்ள சிரவக்கில் என்ற இடத்தில் “இனப்படுகொலையின் 12 ஆண்டுகள்” என்ற பெயரில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது.
முஸ்லிம் இனப்படுகொலையின் வேட்டைக்காரனுடைய முகமாக உயர்த்திக் காட்டப்பட்ட தலித் இளைஞனான அசோக் மோச்சி மனம் வெதும்பி இறுதியில் சங்க்பரிவாரத்தின் துவேச அரசியலுக்கு எதிராக குரல் எழுப்ப முதன் முதலாக மேடையில் தோன்றியுள்ளார்.
வெறுப்பு அரசியலை வளர்த்தும் சங்க்பரிவாரத்தின் தந்திரங்களை குறித்து இருவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கும் அபூர்வமான காட்சியை காண ஏராளமானோர் நிகழ்ச்சியில் திரண்டிருந்தனர்.
கலவரத்தின் அக்னிக்கு பதிலாக நேற்று அன்ஸாரிக்கு, மோச்சி சுகந்தம் மிகுந்த ரோஜாப்பூவை வழங்கினார். அன்றும், இன்றும் செருப்பு தைக்கும் தொழிலாளியாக வாழ்ந்து வரும் மோச்சி, செலவுகள் தாங்க முடியாததால் திருமணம் கூட செய்யாமல் இருக்கிறார். அவருடைய முகத்தில் பழைய கொடூரம் இன்று இல்லை. புன்சிரிப்புடன் காணப்பட்டார். மோச்சியின் வார்த்தைகளில் அன்பு கலந்திருந்தது. மனிதநேயத்தை விளக்க எந்த மொழியும் தடையில்லை என்று கூறி அன்ஸாரியை கட்டி அனைத்து மோச்சி கூறினார்.
மோச்சி மேலும் கூறும்போது; ‘இனி மேலாவது நாம் வெறுப்பின் அரசியலை நிறுத்தியே தீரவேண்டும். இனப்படுகொலை ஏற்படுத்திய வேதனையால் விழிப்புணர்வு பெற்ற நான் அதன் பிறகு யாருக்கும் வாக்கு அளிக்கவில்லை. எனது மனதில் உள்ள எதிர்ப்பை நான் தெரிவித்தேன். நான் என்னையே கொள்ளையடித்தேன். இனியாவது எனக்கு அதில் இருந்து விடுதலை வேண்டும்.’ என உரக்கக் கூறினார்.
குத்புதீன் அன்ஸாரி பேசும்போது; ‘இது ஒரு மாற்றத்தின் துவக்கமாக அமையட்டும். கேரளாவின் அன்பு தாங்கமுடியாமல் தவிக்கிறேன். குஜராத் இன்று அமைதியாக உள்ளது. காரணம், மோடி பிரதமராக துடிப்பதே. வளர்ச்சியின் மந்திரங்களை அவர் கட்டவிழ்த்து விடுகிறார். அவ்வாறு குஜராத்தில் வளர்ச்சி ஏற்பட்டிருந்தால் எனது மாநிலத்தவரான அசோக் மோச்சிக்கு செருப்பு தைத்து பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டிருக்குமா?’ என்று கேள்வி எழுப்பிய அன்ஸாரி தனது உரையில் குஜராத் மோடியின் வளர்ச்சி என்ற மாயையை தோலுத்துக் காட்டினார்.
இந்நிகழ்ச்சியில் ஸஈத் ரூமி எழுதிய ‘நான் குத்புதீன் அன்ஸாரி’ என்ற சுய சரிதை நூல் வெளியிடப்பட்டது. பல்வேறு இடதுசாரி ஆர்வலர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நன்றி - http://indru.todayindia.info

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...