பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் பேர்ல் சதுக்கத்தில் அரசாங்கத்திற்கெதிராக திரண்டிருந்த மக்கள் மீது பாதுகாப்புப் படை தாக்கியதில் 4 பேர் மரணமாகியுள்ளதாகவும், 60 பேர் காணமாகியுள்ளதாகவும் பிரஸ் ரிவி இணையதளம் தெரிவிக்கிறது.
நகரில் குவிக்கப்பட்டுள்ள இராணுவ கவச வாகனங்கள் மக்கள் பேர்ல் சதுக்கத்தில் ஒன்று கூடுவதை தடுத்து வருகிறது.
கடந்த 40 ஆண்டுகளாக பிரதமராக இருக்கும் அந்நாட்டின் அந்நாட்டு மன்னரின் உறவினரான கலீபா பின் ஸல்மான் அல் கலீபாவை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும், அந்நாட்டில் அரசியல் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும், ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அந்நாட்டுமக்கள் கோரி வருகின்றனர்.
எகிப்தின் முபாரக்கின் இராஜினாமாவைத் தொடர்ந்து, பஹ்ரைன் மக்கள் கடந்த திங்கட் கிழமை தமது போராட்டத்தை ஆரம்பித்தனர்.
கடந்த 200 வருடங்களாக பஹ்ரைனை ஆளும் மன்னர் குடும்பத்திற்கு எதிராக மக்கள் கோஷமிட்டு வருகின்றனர். மன்னர் ஆட்சியை தமது நாட்டிலிருந்து துடைத்தெறிநந்து விட்டு மனித உரிமைகளைப் பாதுகாக்கின்ற அரசு ஒன்று உருவாக வேண்டுமென்று அவர்கள் கோரி வருகின்றனர்.
25 அமைச்சர்களைக் கொண்ட பஹ்ரைன் அரச சபையில் 80 வீதமானவர்கள் அரச குடும்பத்தினால் தெரிவு செய்யப்படுகின்றனர். மிகுதி 20 வீதமானவர்கள் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர்.