இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரான நண்பர் அஷ்ரப் ஷிஹாப்தீன் அவர்களால் எழுதப்பட்ட உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2011 - மலேசியா பற்றியதொரு ஆக்கம் கிடைக்கப்பெற்றது. அதனை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2011 - மலேசியா
இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - அங்கம் 01
அறிமுகம்
இவ்வருடம் மலேசியாவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக்கான தகவல்கள் தெரிவிக்கும் இலங்கைக்கான கூட்டம் கடந்த 5.2.2011 அன்று நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் போது இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் சில கேள்விகளை எழுப்பினார். அதனைத் தொடர்ந்து நானும் எழுத்தாளர் மானா மக்கீனும் சில கருத்துக்களை முன் வைத்தோம். மலேசியக் குழுவைத் தலைமை வகித்துக் கூட்டி வந்த டத்தோ ஹாஜி முகம்மத் இக்பாலும் அவரது சகபாடியான சீனி நைனாரும் எமது சந்தேகங்களுக்குச் சரியானதும் போதுமானதுமான பதில்களைத் தந்திருக்கவில்லை. சீனி நைனார் ஒரு படி மேலே போய் விடயத்தை வேறு பக்கத்துக்குத் திருப்ப முயன்றார். அதனைத் தொடர்ந்து அந்த அரங்கிலிருந்து நாம் வெளிநடப்புச் செய்தோம்.