அல்ஜீரியாவின் வடக்கு நகரமான பாலிதாவில் பொலிசாரின் நடவடிக்கையை எதிர்த்து ஓர் இளைஞர் தன்னைத்தானே தீ மூட்டிக்டகொண்டுள்ளார்.
25 வயதான இந்த இளைஞன் தனது முறைப்பாட்டை பொலிஸார் ஒழுங்காக விசாரணை நடாத்தாத காரணத்தினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனக்குத் தானே தீமூட்டிக்கொண்டிருப்பதாக பிரஸ் ரிவி இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
தூனிசியாவில் ஓர் இளைஞனின் மரணம் அந்த நாட்டு தலைவனை நாட்டை விட்டே ஓட வைத்தது. எகிப்தில் பொலிசாரின் தாக்குதலுக்கிலக்காகி மரணித்த ஒரு இளைஞனுக்காக தஹரீர் சதுக்கத்தில் அணி திரண்ட இளைஞர்கள் அந்த நாட்டையே இன்று செயலிழக்கச் செய்திருக்கின்றனர்.
அல்ஜீரியாவின் அடக்குமுறை ஆட்சி தொடரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களினால் அதிர்ந்து போக வாய்ப்புமிருக்கிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகரமான அல்ஜியர்ஸில் உள்ள தொழில் வாய்ப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் முன்னால் தொழிலற்ற நூற்றுக்கணக்கானோர் அணிதிரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு துணைபோன அரபு நாடுகளில் உள்ள அடக்குமுறை ஆட்சியும், ஊழல், பட்டினி,வேலை வாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகள் மக்களை போராட்டத்திற்கு தள்ளியிருக்கிறது.