இலங்கையின் பதுளை நகரில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான கடையில் புத்தரின் படம் பொறிக்கப்ட்ட கையுறை ஒன்றை விற்பனை செய்தார் என்ற குற்றஞ்சாட்டி குறித்த கடை உரிமையாளரும் அந்தக் கடை ஊழியர் ஒருவரும் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை தலா 5000 ரூபாய் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
இது தொடர்பாக நேற்று பதுளை நகரில் முஸ்லிம்களை எதிர்த்து ஓர் ஆர்ப்பாட்டமும் இடம் பெற்றது.
முஸ்லிம்கள் பௌத்த மதத்திற்கு எதிராக செயற்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தும் இந்த வியாபாரியின் கைதை ஆதரித்தும் அவர்களுக்குத் தண்டனை வழங்கக் கோரியும் நேற்று வெள்ளிக்கிழமை பொது (பௌத்த) பல சேனா என்ற அமைப்பு பதுளை நகரில் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இன்று (சனிக்கிழமை) காலை குறித்த கடையின் உரிமையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தேன்.
அவரிடம் புத்தரின் படம் பொறிக்கப்பட்ட எவ்வித கையுறைகளும் இருக்கவில்லை என்றும் அப்படி பௌத்தர்களின் மனதை நோகடிக்கும் வகையிலான வியாபாரத்தை செய்வதற்கு தனக்கு எவ்வித அவசியமும் இல்லையென்றும், பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இத்தகைய முயற்சிகளை சிறுபான்மை சமூகங்கள் ஒருபோதும் செய்யமாட்டார்கள் என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.
வியாழக்கிழமை அன்று கடைக்கு கையுறை ஒன்றை வாங்க வந்த வாலிபர் ஒருவர் கையுறை ஒன்றை 160.00 ரூபாய் கொடுத்து வாங்கி விட்டு தன்னிடம் அதற்கான பற்றுச் சீட்டு ஒன்றை கேட்டதாகவும், அதற்கான விலையை ஒரு தாளில் குறி்ப்பிட்டு தான் கொடுத்ததாகவும் கூறினார்.
ஓர் அரை மணித்தியாலம் தாமதித்து அவரின் கடைக்கு வந்த பதுளை பொலிஸ் நிலையத்ததைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள்,
கடையில் விற்பனைக்கு வைத்திருக்கும் கையுறைகளை சோதனையிட வேண்டும் என்று வேண்டியதாகவும் புத்தரின் படம் பொறிக்கப்பட்ட கையுறைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறி அந்த வகையான புத்தரின் படம் பொறிக்கப்பட்ட கையுறைகளை காட்டுமாறும் கடை உரிமையாளரை நிர்ப்ந்தித்திருக்கின்றனர்.
அதனை மறுத்த கடை உரிமையாளர் தாம் அப்படி புத்தரின் படம் பொறிக்கப்பட்ட எவ்வித கையுறையையும் யாருக்கும் விற்க வில்லையென்றும் கூறியிருககின்றார்.
உடனே பொலிஸார் வெளியே நின்றுக்கொண்டிருந்த ஏற்கனவே கடைக்கு வந்து கையுறை வாங்கிய இளைஞரை அழைத்து அவரின் கையிலிருந்த கையுறையை கடை உரிமையாளருக்கு காட்டியிருக்கின்றனர். அந்தக் கையுறை ஜோடியில் ஒன்றில் புத்தரின் படம் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்ட கடை உரிமையாளர் அதிர்ச்சியடைந்திருக்கின்றார்.
தான் இப்படியான கையுறையை யாருக்கும் விற்பனை செய்யவில்லையென்றும் தனது கடையில் இத்தகைய கையுறைகள் கிடையவே கிடையாது என்றும் அடித்துக் கூறியிருக்கின்றார.
இதனை ஏற்க மறுத்த பொலிஸார் கடை உரிமையாளரை பொலிஸுக்கு வருமாறு அழைத்திருக்கின்றனர். கடைக்கு வெளியே வரும் போது பல ஊடகவியலாளர்கள் கடைக்கு வெளியே காத்துக் கிடப்பதையும் பல கோணங்களிலிருந்தும் கடையையும், கடை உரிமையாளரையும் படமெடுப்பதையும் அவதானித்திருக்கின்றார்.
இதைப்படிக்கும் போதே ஏதோ திட்டமிட்டு நடக்கும் நாடகம் என்பதை உங்களால் புரிந்துக் கொள்ள முடியும்.
பொலிஸார் கடை உரிமையாளர் கைது செய்து பதுளை பொலிஸ் நிலையத்திற்கு செல்லும் போது இது விடயமாக முறைப்பாடு செய்வதற்கு ஏற்கனவே ஒரு பௌத்த தேரர் பொலிஸ் நிலையத்தில் வந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
கடை உரிமையாளருக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்கு இந்தக் கொடுக்கல் வாங்கலில் சம்பந்தமே படாத இந்த பௌத்த தேரருக்கு எவ்வித உரிமையுமில்லை. இதற்கான முறைப்பாட்டை அந்த கையுறையை வாங்கிய இளைஞனே வழங்க வேண்டும். ஆனால் எதற்கும் சம்பந்தம் இல்லாத இந்த பௌத்த பிக்குவின் முறைப்பாடே இதன் பின்னணியில் இருக்கின்ற முஸ்லிம் இனவாத நாடகத்தை எடுத்துக்காட்டுகின்றது.
அண்மைக்காலமாக பதுளையில் உருவாகிவரும் முஸ்லிம் களுக்கு எதிரான இனவாத வேலைத்திட்டங்களின் பின்னணியில் ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள். ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டணியில் மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த தயாசிரி எனபவர் இந்த பௌத்த பல சேனா என்ற அமைப்பில் முன்னணி செயற்பாட்டாளராக இருக்கின்றார்.
கைது செய்யப்பட்ட கடை உரிமையாளருக்கு சார்பாக எந்த சட்டத்தரணியும் ஆஜராக முன்வரக் கூடாது என்று சட்டத்தரணிகள் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றனர்.
இருந்த போதிலும் பெரும்பான்மை இன சட்டத்தரணிகள் ஆறு பேர், (அதில் ஒருவர் பெண் சட்டத்தரணியாவார்) சுயேச்சையாகவே கடை உரிமையாளருக்காக நீதிமன்றில் ஆஜரானதாக தெரிய வருகின்றது.
அண்மைக்காலமாக இந்த பௌத்த பல சேனா அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிராக பல துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு சிங்கள மககளை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டி வரும் மோசமான செயலை செய்து வருகின்றது. அரசியல் ரீதியாக இந்த அமைப்பிற்கு கிடைக்கும் ஆதரவிற்கு அஞ்சி முஸ்லிமகள் வாய் மூடி மௌனிகளாக இருக்கின்றார்கள்.
நேற்று வெள்ளிக்கிழமை பதுளை பள்ளிவாசலுக்கு ஜும்ஆ தொழுகைக்காக சென்ற இரண்டு முஸ்லிம்கள் இந்த ஆர்ப்பாட்டக் காரர்களினால் தாக்கப்பட்டிருக்கின்றார்கள். தமக்கு எதிராக தாக்குதல் நடாத்தியவர்களை பொலீசில் முறைப்பாடு செய்வதற்கும் முடியாதவர்களாக , பயந்தவர்களாக இவர்கள் இருக்கின்றனர். ஆளும் தரப்பில் இருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட இப்பிரச்சினையை மூடி மறைக்க முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
பதுளையில் வளர்ந்து வரும் இந்த இனவாத செயற்பாட்டை தடுப்பதற்கோ, தட்டிக்கேட்பதற்கோ யாருமே முன்வராத நிலையில் பதுளை முஸ்லிம்கள் அனாதரவாக மாறியிருக்கின்றார்கள்.
பதுளை பள்ளிவாசல் நிர்வாகம் கூட இந்த ஆளும் தரப்பு அரசியல்வாதிகளின் ஆலோசனையின் பேரிலேயே செயற்படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சாற்றுகின்றனர்.