Friday, 24 October 2014

சாதனை படைத்த நிலக்கரி கொள்ளை !

சாதனை படைத்த நிலக்கரி கொள்ளை !


நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் மூலம் 150 கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டதாக நேற்று பாராளுமன்றத்தில் அரசாங்கம் ஒத்துக்கொண்டது.

ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ஹா்ஷ டி சில்வா எட்டு மாதங்களுக்கு முன் எழுப்பிய கேள்வியொன்றுக்கு நேற்றுதான் மின்சார எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி பதிலளித்தாா்.

அரசாங்க கொள்வனவு தொடர்பான விதிமுறைகளை மீறி இந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகவும் தரம் குறைந்த இந்த நிலக்கரி கொள்வனவினால் சுமாா் 150 கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் ஏற்றுக் கொண்டாா்.  இந்த நிகழ்வு  தான் அமைச்சராக பொறுப்பேற்க முன்னர் இடம் பெற்றதாகவும் அவா்  கூறினாா்.

முன்னாள் எரிசக்தி அமைச்சா் சம்பிக்க ரணவக்க கூட ஊடகங்களுக்கு இன்று தனது கருத்தை தெரிவித்தாா். ஊழல் இடம்பெற்றுள்ளதை ஏற்றுக்கொண்ட இவா் விதி முறைகளை மீறி கப்பல் கூட்டுத்தாபனம் தான்தோன்றித்தனமாக இந்த கொள்வனவில் ஈடுபட்டதாகவும் அரசாங்கத்தின் உயரதிகாாிகள் சிலரது போக்கே இதற்கு காரணம் என்றும் கூறினாா்.

நடக்கின்ற இந்த சம்பவங்களைப் பாா்க்கின்ற போது  இதன் பின்னணி வேறொரு இலக்கை  நோக்கி நகா்கின்றதா என்ற சந்தேகம் எழுகிறது.

இரண்டு அமைச்சா்களும் ஒருவரை மற்றவர் குற்றம் சாட்டுகின்ற ஒரு போக்கை அவதானிக்க முடிகிறது. காலத்திற்கு காலம் அமைச்சா்கள் மாறினாலும் இது மஹிந்த ராஜபக்ஷ ஆடசிக் காலத்தில் இடம்பெற்றிருக்கிறது என்பதே உண்மையாகும்.

அரசாங்கம் ஒரேயடியாக பாராளுமன்றத்தில் 150 கோடி ரூபாய்கள் தொடா்பான மோசடியை எவ்வித சஞ்சலமுமின்றி ஏற்றுக்கொண்டிருக்கின்றது. இது ஆளும், எதிா்க்கட்சியினரிடையே ஆச்சரியத்தை தோற்றுவித்திருக்கிறது.

இதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் ஊழல் தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டால் அந்த கேள்விகளுக்கு பொறுப்பான அமைச்சர்கள் ஒழுங்காக ஒருபோதும் பதிலளிப்பது கிடையாது.  கேள்வி கேட்கும் எதிா்க்கட்சி அங்கத்தவரை  கடுப்பேற்றும் நையாண்டி பதில்களைத்தான் ஆளும் கட்சினர் வழங்கி வந்தனர்.

ஊழல் தொடர்பான விவகாரம் வரும் போதெல்லாம், “உங்கள் ஆட்சிக் காலத்தில் அப்படி நடந்ததே இப்படி நடந்ததே“ என்று புரளி பண்ணுவதே பாராளுமன்றத்தின்  வழக்கமாக இருந்தது.  இத்தகைய புரளிகளை தொடா்பாக சபாநாயகர்  அவ்வப்போது  ஆளும் தரப்பினரை கண்டித்தும் உள்ளாா்.  சாியான பதிலை வழங்குமாறு பணித்தும் உள்ளாா்.

ஆனால் இந்த நிலக்கரி ஊழல் தொடா்பாக மிகவும் உற்சாகமாகவும், தெளிவாகவும்  அரச தரப்பில் பாராளுமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டது. வாய் நோகாமல் 150 கோடிகள் இழப்பு என்றும் கூறப்பட்டது.

இந்த பதிலைக் கேட்டு எட்டு மாதங்களுக்கு முன்னர்  வினா தொடுத்த ஹா்ஷ டி சில்வாவே அதிர்ந்து போயுள்ளாா்.

சம்பிக்கவின் கட்சிக்கும் மஹிந்த அரசிற்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியிருக்கும் நிலையில் அரசாங்கம் இப்படி வெளிப்படையாக தவறை ஏற்றுக்கொண்டிருப்பதில் இரகசியங்கள் நிறைய இருக்க வாய்ப்பிருக்கின்றன.

தோ்தல் காலம் என்பதால் வெகு விரைவில் விஷயங்கள் வெளிச்சத்திற்கு வரும்.


No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...