Tuesday 25 September 2012

தினக்குரலில் சர்ச்சைக்குரிய திரைப்படத்தின் புகைப்படங்கள்!



அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இஸ்லாம் எதிர்ப்பு திரைப்படத்தின் படங்களை பிரசுரித்த இலங்கையின் தமிழ் தேசிய நாளிதழான தினக்குரல் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

இது தொடர்பாக இலங்கை ஷரீஆ கவுன்ஸில் தினக்குரல் பத்திரிகைக்கு அனுப்பியுள்ள கண்டனக் கடிதத்தையும் , துருவம் இணைய தளம் வெளியிட்டுள்ள செய்தியையும் கீழே தருகின்றேன

எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் இலங்கை ஊடகங்கள்

Published On: Sunday 23 September, 2012
 
( முஹம்மட் பிறவ்ஸ் )
உலக முஸ்லிம்களின் எதிர்ப்பைச் சம்பாதித்துள்ள ‘முஸ்லிம்களின் அப்பாவித்தனம்’ திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை இலங்கையிலிருந்து தமிழ்பேசும் மக்களின் தனித்துவக்குரல் எனும் நாமத்துடன் வெளிவருகின்ற ‘தினக்குரல்’ பத்திரிகையும் பிரசுரித்துள்ளது. நேற்று சனிக்கிழமை வெளியான தினக்குரல் (22.09.2012) பத்திரிகையில் புதிய பண்பாடு எனும் அரசியல் பகுதியில் கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் எழுதியுள்ள கட்டுரைக்கே இப்படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
(துருவம் வாசகர்கள் பார்க்காதவண்ணம் இப்படம் தணிக்கைக்கு உட்படுத்தப்‌பட்டுள்ளது)
முஸ்லிம்கள் இப்படத்தை எதிர்க்கிறார்கள் என்று தெரிந்திருந்தும் தினக்குரல் அதற்கு விளம்பரம் அமைத்துக் கொடுத்துள்ளது. இரண்டுபக்கக் கட்டுரையில் இப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளமை முஸ்லிம்களிடையே பலத்த விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்பொருமுறை தினக்குரலின் ஆங்கில இலவச வெளியீடான ஜூனியர் ஸ்டார் இதழில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கார்ட்டூன் படத்தை பிரசுரித்து சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இது முஸ்லிமல்லாத ஒருவரினால் செய்யப்பட்டதாகவும், அது நேரடியாக தினக்குரலில் வெளிவராமல் யாழ்.தினக்குரலில் வெளிவந்ததாகவும் குறிப்பிட்டு அதற்கு ஆசிரியர்பீடம் மன்னிப்பும் கேட்டிருந்தது.

இது இவ்வாறிருக்க, முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள் என்று தெரிந்திருந்தும், இவ்வாறு புகைப்படங்களை பிரசுரித்து முஸ்லிம்களின் எதிர்ப்பையும் விசனத்தையும் தினக்குரல் ஏன் சம்பாதிக்க நினைக்கிறது? தினக்குரல் ஆசிரியர் பீடத்தில் முஸ்லிம்களாகிய இருவர் கடமையாற்றியிருந்தும், ஒரு முஸ்லிம் இக்கட்டுரையை எழுதியிருந்தும் அவர்களையும் தாண்டி இக்கட்டுரைக்கு சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளமை தினக்குரலின் தான்தோன்றித்தனத்தையே காட்டுகிறது.
இன்று அல்லது நாளை தினக்குரல் இதற்காக மன்னிப்புக்கோரலாம். தினக்குரலின் வளர்ச்சியை சகிக்கமுடியாத காழ்ப்புணர்ச்சி கொண்ட சக்திகள்தான் இந்த விசமக் கருத்துகளைப் பரப்புவதாகவும், தினக்குரல் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லையென்றும் மன்னிப்புக்கோரும். அவ்வாறாயின், இது மக்களை தினக்குரலின் பக்கம் திசைதிருப்புவதற்கான ஒரு விளம்பரமாகக்கூட இருக்கலாம்.
சுவர்ணவாஹினியின் செய்தியறிக்கை:

அத்துடன் கடந்த புதன்கிழமை இரவு சுவர்ணவாஹினி தொலைக்காட்சியின் ‘லைவ் 8′ எனும் இரவுநேரச் செய்தியறிக்கையில் இந்த சர்ச்சைக்குரிய திரைப்படத்தின் சிலகாட்சிகள் ஒளிபரப்பட்டுள்ளது. இதற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் கவுன்சில் சுவர்ணவாஹினி நிர்வாகத்துக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுவர்ணவாஹினி நிர்வாகத்திடம் கேட்டபோது, அந்த காட்சிகளின் பாரதூரம் தமக்கு தெரியாது என்றும் அதற்காக தாம் மனம் வருந்துவதாகவும் தெரிவித்திருந்தது. அத்துடன் இத்திரைப்படம் சுவர்ணவாஹினியில் ஒளிபரப்பப்படவுள்ளதாக குறுஞ்செய்திகள் பரவியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அறிக்கை:
சுவர்ணவாஹினி தொலைக்காட்சி நிறுவனம் முஸ்லிம்களை புண்படுத்தும் எந்த படத்தையும் ஒளிபரப்புவதற்கு எந்தவொரு கட்டத்திலும் தீர்மானம் ஒன்று எடுத்திருக்கவில்லை என்று அதன் நிர்வாகம் தம்மிடம் தெரிவித்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக எனது தொலைபேசிக்கும், அதே போன்று இன்னும் எத்தனையோ பேர்களுக்கும் குறுஞ் செய்தியொன்று வந்தது. அது சுவர்ணவாஹினியில் முஹம்மத் நபிக்கு எதிரான அந்த திரைப்படம் காணப்பிக்கப்பட போகின்றார்களாம். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறே இந்த செய்தி அமைந்திருந்தது .தனக்கு இந்த செய்தி கிடைத்ததும் உரிய ஊடக நிறுவனத்தின் முக்கியஸ்தர்களுடன் தொடர்புகொண்டு கேட்டபோது அவர்கள் இதனை தெரிவித்தாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை இந்த குறுஞ்செய்தி குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்தாக கூறிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் தமக்கு வரும் குறுஞ்செய்திகளின் உண்மைத் தன்மை குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டதன் பின்னர், அதனை ஏனையவர்களுக்கு தெரிவிப்பதே நல்லது என்றும் கூறினார்.

அதேவேளை, இஸ்லாத்தையும், முஹம்மத் (ஸல்) அவர்களையும் அவமதிக்கும் விதத்தில் அமெரிக்கா அரசின் உதவியுடன் வெளிவந்துள்ள இந்த திரைப்படத்தை எமது கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில கூடிய கட்சியின் அதியுயர் பீடம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளதாவும் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட் கூறினார். இதனை அமெரி்க்க அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இனவாதத்தை தூண்டும் இணையத்தளம்:
அத்துடன் ‘கொஸிப் லங்கா நியூஸ்’ எனும் இணையத்தளத்தில் ‘முஸ்லிம்களின் அப்பாவித்தனம்’ எனும் திரைப்படத்துக்கு முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளதுடன், வாசர்களின் பார்வைக்கான அந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தையும் (ட்ரெய்லர்), திரைப்படத்தையும் தனது இணையத்தளத்தில் காட்சிப்படுத்தியுள்ளது. யூடியூப் இணையத்தளத்திலுள்ள இந்தப் படத்தின் 13:51 நேரம் கொண்ட முன்னோட்டமும், 1:14:14 நேரம் கொண்ட திரைப்படமும் ‘கொஸிப் லங்கா நியூஸ்’ எனும் இந்த இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. (துருவம் வாசகர்களும் இதனைப் பார்கக்கூடும் என்ற காரணத்தினால் அதன் இணைப்பு இங்கு தரப்படவில்லை)




No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...