Friday, 1 June 2012

தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில் இணங்கிச் செல்லுமாறு ரிஸ்வி முஃப்தியின் வேண்டுகோள்! காடைத்தனத்திற்கு சன்மானமும் சமுதாயத்தை விலை பேசலும்

-லத்தீஃப் ஃபாரூக் -


(இலங்கைகான அமெரிக்கத் தூதுவர் பெற்ரீசியா புட்டேனிஸ் உலமா சபை தலைமையகத்திற்கு விஜயம் செய்த போது அவரோடு மகிழ்சிகரமாக உரையாடும் ரிஸ்வி முப்தியும், தாஸீம் மௌலவியும்)

அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா தலைவர் எம்.ஐ.எம். ரிஸ்வி முஃப்தி தம்புள்ள பள்ளவாசல் விவகாரம் பற்றி 2012 மே 4ம் திகதி ரியாதில் பேசிய பேச்சு இலங்கை முஸ்லிம் சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பள்ளிவாசலை நிர்மூலம் செய்வதற்கு ஆதரவு திரட்டுவதற்காக, குண்டர் கும்பல் தலைவர் இனாமலுவே சுமங்கள தேரரினால் இவர் அனுப்பி வைக்கப்பட்டாரோ என ஒரு கணம் நானே என்னைக் கேட்டுக் கொண்டேன்.

ரியாதின் அரப்நியூஸ் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டு டெயிலி மிரர், சிலோன் டுடே ஆகிய இலங்கைத் தினசரிகளில் 2012 மே 7ம் திகதி மீள்பிரசுரிக்கப்பட்டிருந்த அவருடைய உரையில், முஸ்லிம் சமூகத்தின் மீது வன்முறையினால்  திணிக்கப்பட்ட தம்புள்ள விவகாரத்தை சகிப்புத் தன்மையுடனும் இணக்கப்பாட்டுடனும் தீர்த்துக்கொள்ள வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இக்கோரிககையை நியாயப்படுத்துமுகமாக, கண்டி லைன் பள்ளிவாசல், சமூக அபிவிருத்தித் திட்டத்திற்காக இடிக்கப்பட்டதென்றும், பம்பலப்பிட்டியிலுள்ள நிமால் ரோட் பள்ளிவாசல், அறுகாமையில் நிர்மாணிக்கப்பட்ட நெடுஞ்சாலைக்கு இடங்கொடுப்பதற்காக இடிக்கப்பட்டு, தூரத்தில் கட்டப்பட்டதென்றும் கூறியுள்ளார்.
இது, தவறான வழியில் இட்டுச் செல்வதாகும். லைன் பள்ளிவாசல் உட்பட கண்டியில் எந்தப் பள்ளிவாசலும், ஒருபோதும் இடிக்கப்படுவோ அல்லது இடம்மாற்றப்படவோ இல்லையென, கண்டியிலுள்ள முஸ்லிம்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

நிமால் ரோட் பள்ளிவாசல் விடயத்திலும்கூட, அது தூரத்தில் கட்டப்பட்டவில்லையென, காணிச்சொந்தக்காரர்கள் கூறினார்கள். மாறாக, பழைய  பள்ளிவாசல் இருந்த அதே இடத்திலேயே, சில யார் தூரம் தள்ளி  புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டதாக அவர்கள் கூறினார்கள். இரயில் பாதைக்கு சில யார் தூரத்தில் பழைய  பள்ளிவாசல் அமைந்திருந்ததாகவும், அஹதியா வகுப்புக்கள் நடாத்துவதற்காக, பழைய  பள்ளிவாசல் விஸ்தரிக்கப்பட்டதாகவும் அவர்கள் விபரித்தார்கள். மெரைன் ட்ரைவ் (கரையோரப்) பாதையின் நிர்மாணத்திற்கு வழி செய்து, சில யார்கள் பின் தள்ளி, தற்போதைய பள்ளிவாசல் கட்டப்பட்டது. வித்தியாசம் என்னவெனில், இது அமைதிவழியில் மேற்கொள்ளப்பட்டதேயன்றி,  கட்டறுந்த குண்டர் கும்பலின் தூண்டுதலினால் அல்ல என்பதாகும்.
சுமரச தீர்வொன்றுக்கான ஆலோசனையை முன்வைத்துள்ள ரிஸ்வி முஃப்தி,  'இணக்கப்பாடு'க்கான தேவை பற்றியம் பேசியுள்ளார். இது தம்புள்ளை பள்ளிவாசலை இடித்துத் தள்ளுவதையே குறிக்கின்றது. இதுதான் அவருடைய கருத்தாக இருந்தால், அது, காடைத்தனத்துக்கு பரிசளிப்பதாகவே அமையும். தம்புள்ளை பள்ளிவாசலை இடிப்பதற்கான கோரிக்கையானது, தம்புள்ளைவாழ் சிங்கள மக்களினாலோ அல்லது காவி காடைத்தனத்தையிட்டு வெட்கம் அடைந்துள்ள இந்நாட்டிலுள்ள பெரும்பான்மை சிங்கள சமூகத்தினாலோ விடுக்கப்பட்டதொன்றல்ல என்பதை குறித்துக்காட்ட அவர் தவறிவிட்டார்.

எதிர்கட்சித் தலைவர் மௌனம் காக்கும் அதே வேளை, இதற்கும் பௌத்தத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என, ஐ.தே.க. பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச பகிரங்கமாகக் கூறியுள்ளார். இதே நேரம், தம்புள்ள பள்ளவாசல் மீதான தாக்குதல், ஓர் ஈனச் செயல் என சிங்கள பத்திரிகையாளர்கள் கண்டித்துள்ளதோடு, ஒரு பத்திரிகையாளர், அக்குண்டர்கள் கூட்டத்தை 'தம்புள்ளையின் பைத்தியக்காரர்கள்' என்று கூட வர்ணித்துள்ளார்.

இந்தக் காடைத்தனமான செயல், ஏதோவகையில் அரசாங்கத்தில் செல்வாக்குமிக்க அந்தஸ்துகளைப் பெற்றுக்கொண்டுள்ள சொற்ப எண்ணிக்கையான தீவிர தேசியவாதிகளின் செயல் என சந்தேகிக்கப்படுகினறது. எல்.டீ.டீ.ஈ. இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டது முதற்கொண்டு, இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக பெறும்பான்மையினரைத் தூண்டி விடும் வகையில் இந்தத் தீவிர தேசியவாதிகள்  கடும் பிரச்சாரமொன்றைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
பத்து சிங்கள மொழி இணையத் தளங்களையும், ஒன்பது ஆங்கில மொழி இணையத் தளங்களையும் பிரயோகித்து இப்பிரச்சாரம் தொடக்கி வைக்கப்பட்டது. குராகல, தஃப்தர் ஜெய்லானியைப் பற்றிய விவரணப்படமொன்றையும் இவர்கள் தயாரித்து, சிங்களவர்களுக்கு சொந்தமான இந்தக் காணியை அபகரித்துக் கொண்டதாக முஸ்லிம்கள் மீது குற்றம் சுமத்துகின்றார்கள்.

சமூக நல்லிணக்கத்தின் மீது இது ஏற்படுத்தக் கூடிய ஆபத்தைக் கருதி, 2011 செப்டம்பரில், சண்டே டைம்ஸ் பத்திரிகையில் ஒரு கட்டுரையில் இதனைப் பற்றி நான் குறிப்பிட்டிருந்தேன். வழமை போலவே, முஸ்லிம் அரசியல் வாதிகளும், மார்க்க அறிஞர்களும் ஏனையோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அந்நிலையில், வெளியில் இருந்து கொண்டு செல்லப்பட்ட குண்டர்கள் கோஷ்டியொன்று, அனுராதபுரத்தில் முஸ்லிம் அடக்கஸ்தளமொன்றை நிர்மூலம் செய்தது. இங்கும் கூட  பௌத்த மத குருக்களே குண்டர்கள் கோஷ்டிக்கு தலைமை தாங்கினார்கள். இப்போது, தம்புள்ளை பள்ளிவாசலை இடித்துத்தள்ளுவதற்கான செயல் ஆரம்பிக்கின்றது. இங்கும் கூட குண்டர்களுக்குத் தலைமை தாங்கியவர் உள்ளூர் பௌத்த மத குருவானாலும், இப்பிரதேசத்துக்கு வெளியிலிருந்தே குண்டர்கள் கொண்டுவரப்பட்டனர்.

மூன்று தசாப்த கொடூர இனப் பேரழிவிலிருந்து இப்போதுதான் மீண்டிருக்கும் நாட்டை, இந்த நாசகார முஸ்லிம் விரோத பிரச்சாரம் சின்னாபின்னமாக்கிவிடும் என்பதை இந்தக் கட்டறுந்த சக்திகள் உணர்ந்து கொள்வதில்லை.

இந்தக் கருத்தை பின்புலமாகக் கொண்டே, ரிஸ்வி முஃப்தியின் இணக்கப்பாட்டுக்கான அழைப்பு நோக்கப்பட வேண்டும்.
முஸ்லிம் அரசியல் வாதிகளும், மார்க்க விற்பன்னர்களும் முன்னணிக்கு வருவதற்கு வெகுமுன்பே,   தம்புள்ள பள்ளிவாசலில் இடம்பெற்ற காடைத்தனத்திற்கு முழு முஸ்லிம் சமூகத்தினதும் உடனடி பிரதிக்கிரியை 'அமைதியானதாகவும் கண்ணியமானதாகவுமே'    அமைந்திருந்தது.
குண்டர் கும்பலின் தாக்குதலுக்குப் பின்னர், 24 மணித்தியாலங்களுக்குள் பள்ளிவாசல் உடைக்கப்பட வேண்டுமென்று பிரதமர் டீ.எம்.ஜயரத்னவின் காரியாலயம் கட்டளை பிறப்பித்ததைப் போன்றே, ரிஸ்வி முஃப்தி கோருவதைப் போன்று இவ்விடயத்தில், இணக்கப்பாடு என்பது, அராஜகத்துக்கு வெகுமதி அளிப்பது என்றே அர்த்தப்படும். இது மிகவும் ஆபத்தான முன்மாதிரியை ஏற்படுத்தி விடும்.

குண்டர்களுடன் அல்லாது, சமூகங்களுக்கிடையிலான எந்தப் பிணக்குகளும், நாட்டின் சட்டவரையறைகளுக்குள் பண்பாட்டுடன் தீர்க்கப்பட வேண்டும்.  முழு முஸ்லிம் சமூகமும், ஏகோபித்த குரலில் இதனையே வலியுறுத்தி நின்றது.

சிங்கள அரச அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்றினால் எடுக்கப்பட்ட முடிவின்படி இந்த அகோர பிரச்சினை ஆறு மாதத்துக்குள் தீர்த்து வைக்கப்பட வேண்டும். இந்த முடிவை மேற்கொள்வதில் எந்த முஸ்லிமும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. இந்த நிலைமையில், முஸ்லிம்களின் உரிமைகளை தாரைவார்க்கக் கூடிய தீர்வுகளை முன்வைப்பதை விடவும், முஃப்தி ரிஸ்வி, மக்கள் முன் உண்மைகளை முன்வைப்பதே பொறுத்தமானது.

முஃப்தி ரிஸ்வி, எல்லை மீறியுள்ளதாகவே தோன்றுகின்றது. வத்திக்கானின் பாப்பாண்டவரைப் போல் அல்லாது, அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமாவின் தலைவர் என்ற வகையில், மார்க்க அடிப்படைகளுக்கு ஏற்ப சமூகத்துக்கு வழிகாட்டுவதே அவரது வேலையாகும். ஆனால், இங்கு அவர் ஊழல்மிக்க, குற்றம் நிரம்பிய, வர்த்தகமயமாக்கப்பட்ட அரசியலுள் பிரவேசித்துள்ளார். இது ஆபத்தானது.

ஓர் அரசியல் ஸ்தாபனமாக அல்லாது, ஒரு மார்க்க ஸ்தாபனமாக ஜமிய்யத்துல் உலமாவின் பங்காற்றலை தெளிவாக வரையறுக்க வேண்டியதன் அவசியம் பற்றி மக்கள் ஏற்கனவே பேச ஆரம்பித்து விட்டனர்.
சமூகத்தின் சார்பாக தீர்மானம் எதனையும் எடுக்குமுன், ஜமிய்யத்துல் உலமா, சமூகத்துடன் கலந்தாலோசிக்க வேண்டுமென்ற கருத்து, முஸ்லிம்கள் மத்தியில் மேலோங்கி வருகின்றது.

ரிஸ்வி முஃப்தி, சமூகத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்புடையவராக இருக்கின்றார்.

Saturday, 28 April 2012

கொழும்பு ஆர்ப்பாட்டம் - முப்தியும் முரண்பாடும்?

இதுவரை உலமா சபை எந்த ஆர்ப்பாட்டத்திற்கும் தடையாக இருந்தது இல்லை யாராவது அப்படி ஆர்ப்பாட்டங்கள் செய்தால் அதற்கு தாம் அதரவு தெரிவிப்போம்!, இக்கூட்டத்தில் நீங்கள் எடுக்கக் கூடிய முடிவை சந்தோஷமாக ஆதரிப்போம்! அதற்காக பிரார்த்தி்ப்போம்!
 ஆதரவு -இது 24ம் திகதி அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபை தலைவர் றிஸ்வி முப்தி வழங்கிய ஆதரவு)


 பேச்சின் ஒலி வடிவம்


எதிர்ப்பு - இது 27ம் திகதி தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதலை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது ஒரு சூழ்ச்சி என்று அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபை யும் முஸ்லிம் கவுன்ஸிலும் இணைந்து விடுத்த முரண்பாடான முஸ்லிம்களைக் காட்டிக் கொடுக்கும் அறிவித்தல்




தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதலை எதிர்த்து 27.04.2012 அன்று கொழும்பில் ஜும்ஆ தொழுகையின் பின்னர் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த எதிர்ப்புப் பேரணி பௌத்த இனவாத சக்திகளினதும்,  பேரினவாதத்திற்கு துணைபோகின்ற அரசியல் மற்றும் இஸ்லாமிய அறிவு மேதைகளினதும் போலி பிரசார பித்தலாட்டங்களையும் முறியடித்து மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

40 வருடங்கள் பழமயான பள்ளிவாசலை பொலிஸ் பாதுகாப்புப் படை புடைசூழ தாக்கிய இனவாதிகள், இப்பள்ளிவாசல் சட்டவிரோக மிக அண்மையில் கட்டப்பட்ட ஒன்று என்று ஊடகங்களின் மூலம் கதைவிட ஆரம்பித்தனர்.  இலங்கையின் அனைத்து ஊடகங்களும் சம்பவம் இடம்பெற்ற 20ம் திகதி எவ்வித செய்திகளையும் வெளியிடவில்லை.

இந்த அநீதியைப் பற்றி பேசாத ஊடகங்கள் முஸ்லிம்கள் சட்டவிரோதமாக ஒரு கட்டடத்தைக் கட்டி வீணாக சிங்கள மக்களை ஆத்திரப்பட வைத்திருக்கின்றார்கள் என்ற தொனிப்பொருளில் கதையளக்கத் தொடங்கின. பள்ளிவாசலைத் தாக்கிய குற்றவாளிகளை மறைத்து, அநீதியிழைக்கப்பட்ட முஸ்லிம் தரப்பினரை குற்றவாளிகளாக காட்டிக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இதற்கு எதிராக அணிதிரண்டு ஆர்ப்பாட்டம் செய்து இந்த அநீதியை உலகிற்கு உரத்துக் கூற வேண்டும் கருத்து பரவலாக எழுந்தது.  24.04.2012 அன்று அதற்கான கலந்துரையடல் ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டது.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பாக கலந்துரையாடல் கொழும்பு, மாளிகாவத்தை வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் இடம்பெற்றது.

பல இயக்கங்களின் .பிரதிநிதிகளும், அரசியல்வாதிகளும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் றிஸ்வி முப்தியும் மற்றும் பல சமூக ஆர்வலர்களும் இதில் கலந்து கொண்டனர்.

இதில் உரையாற்றிய ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் றிஸ்வி முப்தி அவர்கள் தம்புள்ளை மஸ்ஜித் தாக்குதல் தொடர்பான விடயங்களை ஆரம்பம் முதல் விளக்கிக் கூறினார்.

 ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்வதற்காக கூட்டப்பட்டிருக்கின்ற ஆலோசனைக் கூட்டத்தில், இந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கைக்கு ஆதரித்து கருத்துத் தெரிவித்த அவர், ஆர்ப்பாட்டம் தொடர்பாக உலமா சபையின் கருத்தை தெளிவு படுத்தியதுடன்,  உலமா சபை ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளாது என்றும் கூறினார்.

இதுவரை உலமா சபை எந்த ஆர்ப்பாட்டத்திற்கும் தடையாக இருந்தது இல்லையென்றும் யாராவது அப்படி ஆர்ப்பாட்டங்கள் செய்தால் அதற்கு தாம் அதரவு தெரிவிப்பதாகவும், இக்கூட்டத்தில் நீங்கள் எடுக்கக் கூடிய முடிவை சந்தோஷமாக ஆதரிப்பதாகவும் அதற்காக பிரார்த்தி்ப்பதாகவும் கூறினார்.

அவர் பேசிய ஒலி நாடாவை இங்கு இணைத்திருக்கின்றேன்.
கூட்டத்தில் அவர் ஆற்றிய உரைக்கு அளித்த வாக்குறுதிக்கு நேர் எதிராக அவர் நடந்து கொண்டிருக்கின்றார்.

மிகவும் பயபக்தியோடும், சமூகம் சார்ந்த கவலையோடும் கதைப்பதாக காட்டிக்கொண்ட றிஸ்வி முப்தி, தான் கொடுத்த வாக்குறுதியைமூன்றே மூன்று நாளில் காற்றில் பறக்க விட்டார்.

திடீரென தான் வழங்கிய வாக்குதிகளை மறந்து போன றிஸ்வி முப்தி, சிங்கள மக்களிற்கு எதிராக இந்த நாட்டு முஸ்லிம்கள் ஏதோ பயங்கரவாத நடவடிக்கை ஒன்றில் ஈடுபடப்போகின்றார்கள் என்ற தோரணையில் உலமா சபையின் மெளலவி மார்களை வைத்து ஆர்ப்பாட்டத்திற்கு எதிரான மிக மோசமான பிரசாரங்களை முடுக்கி விட்டார்.

ஒரு பக்கம் அரசாங்கத்தில் அங்கத்துவம் பெற்றிருக்கின்ற ஜாதிக ஹெல உருமய என்ற பௌத்த தீவிரவாத கட்சியும், மறு புறம் ஜம்இய்யத்துல் உலமாவும் ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக சம அளவில் மோசமான பிரசாரத்தை மேற்கொண்டன.

தம்புள்ளையில் அல்லாஹ்வின் இல்லத்திற்கு ஏற்பட்ட இந்த அநீதிக்காக குரல் கொடுக்க முயற்சிப்பவர்களை காட்டுமிராண்டிகளாக சித்தரித்து காட்டிக்கொடுக்கின்ற வேலையை அரசாங்க வானொலியின் முஸ்லிம் சேவையைப் பாவித்து உலமா சபை மௌலவிமார்கள் கச்சிதமாக செய்தனர்.

மறுபுறம் அரச மற்றும் தனியார் சிங்கள ஊடகங்கள் அப்பாவி முஸ்லிம்களை குற்றவாளிகளாக காட்டிக்கொண்டிருந்தது.

எது எப்படியிருப்பினும் இனவாத சக்திகளோடு கைகோர்த்து இந்த அரச ஆதரவு இஸ்லாமிய(?) சக்திகள் செய்த போலிப் பிரசாரங்களையும், அச்சுறுத்தல்களையும் முறியடித்து ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

அசம்பாவிதங்கள் அற்ற ஒரு சிறந்த எதிர்ப்பு நடவடிக்கையாக அது அமைந்தது.

அது மட்டுமல்லாமல் இந்த அரச ஆதரவுசக்திகளின் வேண்டுகோளை நிராகரித்து விட்டு நாட்டின் பல பாகங்களிலிலும் முஸ்லிம்கள் ஹர்த்தாலை அனுஷ்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அல்லாஹ்வின் இல்லத்திற்கு ஏற்பட்ட அபகீர்த்திக்காக, அநீதிக்காக குரல் கொடுத்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்!

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் என்பது ஜனநாயகம் அங்கீகரித்துள்ள ஒரு வழிமுறையாகும். இனவாதிகளின் பயங்கரவாத செயற்பாட்டிற்கு முஸ்லிம்கள் ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

அல்லாஹ்வின் இல்லத்திற்காக குரல் கொடுப்பதை ஒரு சூழ்ச்சியாக சித்தரித்து பொதுப்பணம் பல லட்சம் ரூபாய்களை 27ம் திகதி வெளிவந்த அனைத்து பத்திரிகைகளிலும்அறிவித்தல் போட்டு விளம்பரத்திற்காக கொட்டித் தீர்த்தருக்கிறது உலமா சபை.

சிங்கள இனவாதிகள் பள்ளிவாசலை தாக்கியதை கண்டித்து இதுவரை எவ்வித அறிக்கையையும் வெளியிடாத உலமா சபை ஆர்ப்பாட்டம் செய்யும் முஸ்லிம்களை சூழ்ச்சிக்காரர்கள் என்று சொல்வதற்கு பல லட்சம் ரூபாய்களை நாசமாக்கியிருக்கிறது.

Friday, 20 April 2012

காணொளி - இனவாத பிக்குகளின் வெறியாட்டம்! இலங்கை தம்புள்ளை பள்ளிவாசல் தகர்ப்பு!




இலங்கையில் தம்புள்ளையிலுள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான பள்ளிவாசலை உடைக்கக் கோரி பௌத்த பிக்குகள் ஆரம்பித்த ஆா்ப்பாட்டம் கூர்மையடைந்து வரும் இலங்கையின் இனவாத அரசியலை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றது.

அரசாங்கம் புண்ணிய பூமியாய் பிரகடனப்படுத்தியிருக்கும் தம்புள்ளைப் போன்ற பிரதேசங்களில் மாற்று மதத்தினரின் எவ்வித வணக்கஸ்தலங்களோ அடையாளங்களோ இருக்கக் கூடாதென பௌத்த தீவிரவாதிகள் அண்மைக்காலமாக அச்சுறுத்தி வருகின்றனர்.

இந்த இனவாத செயற்பாடு இதுவரை அனுராதபுரத்திலுள்ள ஒரு தர்காவையும், தம்புள்ளையிலுள்ள ஒரு பள்ளிவாசலையும் பதம் பார்த்திருக்கிறது.

நாளை நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும் இந்த இனவாத நோய் பரவக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.

அரசாங்கமும் இனவாத சக்திகளின் இந்த மோசமான நிலைப்பாட்டை  ஆதரிக்கும் நிலையில் இருப்பது, இந்த நாட்டின் எதிர்காலத்தை மீண்டுமொரு முறை அதலபாதாளத்திற்கு தள்ளிவிடும் என்பதில் எவ்வித சந்ததேகமுமில்லை.

அரசியல் ரீதியாக இடம்பெறும் எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டங்களை தமது இராணுவ பொலிஸ் படைகளை வைத்து கடுமையாக சனநாயக உரிமைகளை மீறி கண்ணிர்ப்புகை,  குண்டாந்தடி பிரயோகம் போன்றவற்றால் அடக்கும் அரசாங்கம் இந்த தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தில் நேர்மாற்றமாக நடந்துக்கொண்டிருக்கின்றது. ஆர்ப்பாட்டக்காரர்களை தடுப்பதற்கு அரசாங்கத்தால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

தம்புள்ளையில் ஏனைய மத வணக்கத்தலங்களை இல்லாதொழித்து புண்ணிய பூமியாக மாற்ற திட்டமிடும் அரசும் இனவாத சக்திகளும் கங்கனம் கட்டிக்கொண்டு களமிறங்கியிருக்கும் இவ்வேளையில்  தம்புள்ளையில் இவர்கள் கூறுகின்ற புண்ணிய பூமியில் இருக்கின்ற உல்லாச பிரயாண விடுதிகளில் இடம்பெறும் அனாச்சாரங்களை இந்த பௌத்த தீவிரவாதிகள் அங்கீகரித்தே இருக்கின்றனா்.

சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் சக்திகளை பயங்கரவாதம் என வர்ணித்து அவர்களை அழித்து ஒழிக்கும் அரசாங்கம் இந்த பௌத்த பிக்குகள் சட்டத்தை தம் கையிலெடுத்து பள்ளிவாசலை உடைத்த போது அதற்கு அவகாசம் அளித்திருக்கிறது.

Dambulla, Mosque, Sri Lanka

Monday, 26 March 2012

ஏகாதிபத்தியத்தின் அடுத்த இலக்கு இரான்


லிபியா மீதான ஆக்கிரமிப்புப் போரை முடித்த கையோடு, இரானைக் குறிவைக்கத் தொடங்கிவிட்டன  அமெரிக்கா தலைமையிலான மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள். 
அமெரிக்கா, ஆப்கான் மற்றும் இராக்கின் மீது ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்த சமயத்திலேயே, “இரான், சிரியா, வட கொரியா ஆகிய மூன்று நாடுகளையும் ரவுடி அரசுகள்” எனப் பழித்துப் பேசி வந்தார், அந்நாட்டின் அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ். குறிப்பாக, இரானின் இசுலாமியக் குடியரசைக் கவிழ்த்துவிட்டு, அங்கு தனது அடிவருடிகளின் ஆட்சியைத் திணிக்க, அமெரிக்கா கடந்த பத்தாண்டுகளாக வெளிப்படையாகவே முயன்று வருகிறது.
இரானில் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தப் பொருளாதாரத் தடையுத்தரவுகள், எதிர்த்தரப்பினரைத் தூண்டிவிடுதல், இரகசியக் குழுக்களைக் கட்டி அந்நாட்டினுள் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துதல் எனப் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா, இப்பொழுது அந்நாட்டின் மீது ஓர் அதிரடித் தாக்குதலை நடத்தும் நோக்கத்தோடு, பாரசீக வளைகுடாவில் தனது துருப்புகளைக் குவித்து வருகிறது. இராக்கிலிருந்து தனது கடைசித் துருப்புகளையும் விலக்கிக் கொண்டுவிட்டதாக அறிவித்துள்ள ஒபாமா, அத்துருப்புகளை இரானை அச்சுறுத்தும் நோக்கத்தோடு குவைத்தில் இறக்கிவிட்டுள்ளார். இரானில் இராணுவத் தலையீடு செய்வதை நியாயப்படுத்துவதற்காக, அந்நாடு அணு ஆயுதங்களை இரகசியமாகத் தயாரித்து வருவதாகவும் அது தொடர்பாகப் புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளன, மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள்.
இரான் இரகசியமாக அணுகுண்டைத் தயாரித்து வருகிறது என்ற தமது புளித்துப்போன குற்றச்சாட்டை நிரூபிக்கவும், இரானை ஓர் பயங்கரவாத நாடென முத்திரை குத்தவும் முயலும் அமெரிக்க ஏகாதிபத்திய கூட்டணி, அதற்காக மிகவும் கேவலமான, கீழ்த்தரமான வேலைகளையும் செய்து வருகிறது. அமெரிக்காவின் இந்த அடாவடித்தனங்களுக்கும் அயோக்கியத்தனங்களுக்கும் வழமை போல சர்வதேச அணுசக்தி முகமையும், ஐ.நா. மன்றமும் அடியாளாகச் செயல்பட்டு வருகின்றன.
சர்வதேச அணுசக்தி முகமை, “இரான் 2003-ஆம் ஆண்டுக்கு முன்பாக அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பாக நடத்தி வந்த பரிசோதனைகளை இன்னமும் கைவிடாது தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பதாக’’க் குறிப்பிட்டு கடந்த நவம்பர் மாதம் அறிக்கையொன்றை வெளியிட்டதோடு, அதற்காக இரானைக் கண்டித்துத் தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றியது. மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட ஆக்கப் பணிகளுக்காகத்தான் அணுசக்தி பரிசோதனையில் ஈடுபட்டு வருவதாக இரான் கூறுவதை ஏற்றுக் கொள்ளாத சர்வதேச அணுசக்தி முகமை, இரான் அணு ஆயுதங்களை இரகசியமாகத் தயாரிக்க முயன்று வருகிறது என்ற தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக எந்தவொரு புதிய சான்றையும் தனது அறிக்கையிலோ தீர்மானத்திலோ சுட்டிக் காட்டவில்லை. மாறாக, இது பற்றிய ஆதாரங்கள் பின்னர் தரப்படும் என்று பொத்தாம் பொதுவாகத்தான் குறிப்பிட்டுள்ளது.
உண்மையில் சர்வதேச அணுசக்தி முகமையின் இந்தப் புளுகுணி அறிக்கையும் கூட, அதனின் சொந்தசரக்கு கிடையாது. இரானின் அணுசக்திப் பரிசோதனைகள் குறித்து மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளின் உளவு நிறுவனங்கள் அளித்த விவரங்கள் அடங்கிய ஒரு கணினிக் கோப்பை அடிப்படையாகக் கொண்டுதான் சர்வதேச அணுசக்தி முகமை தனது அறிக்கையைத் தயாரித்துள்ள உண்மையும் இப்பொழுது அம்பலத்திற்கு வந்துவிட்டது. சர்வதேச அணுசக்தி முகமையின் முன்னாள் இயக்குநரும், அமெரிக்காவின் அணுஆயுதத் துறையோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவருமான ராபர்ட் கெல்லி, இந்த மோசடியை ஸெய்மோர் ஹெர்ஷ் என்ற பத்திரிக்கையாளரிடம் அம்பலப்படுத்தி பேட்டியளித்திருக்கிறார். இதுவொருபுறமிருக்க, சர்வதேச அணுசக்தி முகமை ‘தயாரித்த’ அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படும் முன்பே, அது ‘கடத்தி’ச் செல்லப்பட்டு, மேற்குலகப் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் “பிரேகிங் நியூஸாக” வெளியிடப்பட்டது.
இப்படி அறிக்கையைத் தயாரித்ததிலும், அது வெளியானதிலும் நடந்த பல உள்ளடி வேலைகளும் சதிகளும் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்த போதிலும், அமெரிக்க ஆளும் கும்பலும், மேற்குலக ஊடகங்களும் அது பற்றியெல்லாம் கூச்சப்படவில்லை. குறிப்பாக, இந்த ஆண்டின் இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவிருப்பதால், அமெரிக்காவில் இரானுக்கு எதிரான போர்வெறிக் கூச்சல் நாலாந்திர பாணியில் காதுகூசும் அளவிற்கு நடந்து வருகிறது.
‘‘இரானுடன் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபடும் எந்தவொரு நாடும் அமெரிக்க டாலரைச் செலாவணியாகப் பயன்படுத்தக்கூடாது; யூரோவைச் செலாவணியாகப் பயன்படுத்தினால், பொருளாதாரத் தடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள பொருட்களை இரானில் இருந்து இறக்குமதி செய்வதற்குப் யூரோவைப் பயன்படுத்தவில்லை என்று இறக்குமதி செய்யும் நாடுகளின் மத்திய வங்கிகள் சான்றளிக்க வேண்டும்” என மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள் இரானின் எண்ணெய் ஏற்றுமதி வர்த்தகத்தைச் சீர்குலைக்கும் வண்ணம் பல பொருளாதாரத் தடையுத்தரவுகளை ஏற்கெனவே போட்டுள்ளன. தற்பொழுது, அமெரிக்க அதிபர் ஒபாமா சர்வதேச அணுசக்தி முகமையின் அறிக்கையைக் காட்டி, “இரானின் மத்திய வங்கியுடன் தொடர்பு வைத்திருக்கும் எந்தவொரு நாடும் அமெரிக்காவின் வங்கிகள், நிதி நிறுவனங்களோடு வணிகத் தொடர்புகளை வைத்துக் கொள்ள முடியாது” என்ற புதிய பொருளாதாரத் தடையுத்தரவை விதித்திருக்கிறார்.
அமெரிக்காவின் இப்புதிய பொருளாதார தடையுத்தரவு, தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்றதாகும். இரானிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வரும் நாடுகள் அனைத்தும் இரானின் மத்திய வங்கியோடு தொடர்பு வைத்துக்கொள்வது தவிர்க்க முடியாதது. இந்த நாடுகளை மிரட்டிப் பணிய வைப்பதன் மூலம், இரானின் உயிர்நாடியான எண்ணெய் ஏற்றுமதி வர்த்தகத்தை முற்றிலுமாக முடக்கிவிட நரித்தனமாக முயலுகிறது, அமெரிக்கா.
இந்தியா, சீனா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய ஆசிய நாடுகளும்; இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் உள்ளிட்ட சில ஐரோப்பிய யூனியன் நாடுகளும்தான் இரானுடன் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நாடுகளுள் முக்கியமானவை. ஐரோப்பிய யூனியன் எதிர்வரும் ஜூலை 1 முதல் இரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை முற்றிலுமாகத் தடை செய்யப் போவதாக அறிவித்து, அமெரிக்காவின் மனதைக் குளிரவைத்துவிட்டது. ஜப்பானும் தென் கொரியாவும் அமெரிக்காவின் விருப்பப்படி தங்களின் கச்சா எண்ணெய் இறக்குமதியை இரானிலிருந்து சவூதி அரேபியாவிற்கு மாற்றிக்கொள்ள முடிவு செய்துவிட்டன.
அமெரிக்கா தனது புதிய பொருளாதார தடையுத்தரவை அமல்படுத்துவதற்கு ஆறு மாத கால அவகாசம் அளித்திருக்கிறது. இந்தியா, இந்தச் சலுகையைப் பயன்படுத்திக்கொண்டு, இரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயைக் குறைக்கப் போ்வதில்லை என வீறாப்பாக அறிவித்திருக்கிறது. சீனாவோ அமெரிக்காவின் பொருளாதார தடையுத்தரவை வாயளவில் கண்டித்தாலும், மறுபுறம் இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு, தான் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கு அதிகக் கட்டணச் சலுகை தர வேண்டும் எனப் பேரம் நடத்திக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் இரான் மீது திணித்துள்ள இப்பொருளாதார தடையுத்தரவு, அந்நாட்டின் மீது ஓர் ஆக்கிரமிப்புப் போரைக் கட்டவிழ்த்துவிடுவதற்கு ஒப்பானது. அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் தொடங்கி வைத்துள்ள இம்மறைமுகமான போரை எதிர்கொள்வது என்ற அடிப்படையில், தனது நாட்டின் கடற்பரப்புக்குட்பட்ட ஹொர்முஸ் கால்வாயில் கச்சா எண்ணெய் போக்குவரத்தைத் தடைசெய்வதன் மூலம் அமெரிக்காவிற்குப் பதிலடி கொடுப்போம் என இரான் அறிவித்திருக்கிறது.
அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் இரான் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையுத்தரவுகளைத் தலையாட்டி ஏற்றுக் கொள்ளும் உலக நாடுகளுக்கு, இரானின் இந்தத் தடையை எதிர்ப்பதற்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது. மேலும், தன்னைவிட மிகப் பெரும் இராணுவ வலிமையும், அணு ஆயுத பலமும் மிக்க அமெரிக்காவின் அச்சுறுத்தலை இப்படிபட்ட அதிரடி நடவடிக்கைகளின் மூலம்தான் இரான் போன்ற ஏழை நாடுகள் எதிர்கொள்ள முடியும்.
மேற்காசிய நாடுகளில் இருந்து கடல் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெயில் நான்கில் மூன்று பங்கு எண்ணெய் ஹொர்முஸ் கால்வாய் வழியாகத்தான் செல்கிறது. ஹொர்முஸ் கால்வாயில் கச்சா எண்ணெய்ப் போக்குவரத்துக்கு ஏற்படும் சிறு இடையூறுகூட, உலக நாடுகள் எங்கும் பாரதூரமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள்கூட அலறத் தொடங்கியுள்ளனர். இரான் மீது திணிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையுத்தரவுகளை விலக்கிக் கொள்வது மட்டும்தான் இப்பிரச்சினைக்கு ஒரே, எளிமையான தீர்வு. ஆனால், அமெரிக்காவோ, இரானை ஆத்திரமூட்டும் நோக்கத்தோடு, பாரசீக வளைகுடாப் பகுதியில் தனது அணு ஆயுதம் தாங்கிய போர்க் கப்பலையும் துருப்புகளையும் கொண்டுவந்து இறக்கி, இந்த நெருக்கடியைத் தீவிரப்படுத்தி வருகிறது.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இரானின் எதிர்த்தரப்பைத் தூண்டிவிட்டு, இரானின் இசுலாமியக் குடியரசுக்கு எதிராக ஒரு வண்ணப் புரட்சியை நடத்த முயன்று தோற்றுப் போன அமெரிக்க ஏகாதிபத்தியம், தற்பொழுது இரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த போரையும், பயங்கரவாதத் தாக்குதல்களையும்தான் நம்பியிருக்கிறது. அமெரிக்கா பாரசீக வளைகுடாவில் தனது துருப்புகளை இறக்கிய அதேவேளையில், இரானைச் சேர்ந்த இளம் அணு விஞ்ஞானியான முஸ்தபா அகமதி ரோஷன் தனது காரில் பயணம் செய்துகொண்டிருந்தபொழுது, அவரது காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து இறந்துபோனார். 20 சதவீத அளவிற்கு யுரேனியத்தைச் செறிவூட்டும் முயற்சியில் தான் வெற்றி அடைந்துவிட்டதாக இரான் அறிவித்த இரண்டாவது நாளே இப்படுகொலை நடந்துள்ளது.
இரானைச் சேர்ந்த அணுவிஞ்ஞானிகள் இப்படிக் கொல்லப்படுவது இது முதன்முறையல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளில் ரோஷன் உள்ளிட்டு ஆறு அணுவிஞ்ஞானிகள் பயங்கரவாதத் தாக்குதல்கள் மூலம் கொல்லப்பட்டுள்ளனர். பொருளாதார தடையுத்தரவுகள் மூலம் முடக்கவியலாத இரானின் அணுசக்தி பரிசோதனைகளை, அந்நாட்டின் அணு விஞ்ஞானிகளைக் கொல்வதன் மூலம் சாதிக்கப் பார்க்கிறது, அமெரிக்கா.
இப்படுகொலைகள் ஒருபுறமிருக்க, இரானின் அணுசக்தி பரிசோதனைக் கூடங்கள், இராணுவ ஏவுகணைத் தளங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்காவின் ஆளில்லா விமானமொன்றை இரான் இராணுவம் சுட்டு வீழ்த்தியது. அந்த விமானம் தவறுதலாக இரானின் வான்பரப்புக்குள் சென்றுவிட்டதாகக் கூறி, உண்மையை மூடிமறைக்க முயன்று தோற்றுப் போனது அமெரிக்கா. இரானின் மீது நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னே இசுரேலின் உளவு நிறுவனமான மொசாத் இருப்பதை லீ ஃபிகாரோ என்ற பிரெஞ்சு நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது.
இப்படி இரான் மீது கடந்த சில ஆண்டுகளாகவே பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வரும் அமெரிக்க இசுரேல் கூட்டணியைத்தான், பயங்கரவாத நாடுகளாக அறிவித்துத் தண்டிக்க வேண்டும். ஆனால், அமெரிக்கவோ சர்வதேச அரங்கில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு, அமெரிக்காவிற்கான சவூதி அரேபியத் தூதரைக் கொல்ல இரான் முயன்றதாகவும், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கும் இரானுக்கும் தொடர்பிருப்பதாகவும் கட்டுக்கதைகளைப் பரப்பி, இரானைப் பயங்கரவாத நாடென முத்திரை குத்திவிடக் கீழ்த்தரமாக முயன்று வருகிறது
அணு ஆயுதங்களைத் தயாரிக்க வேண்டும் என்றால், யுரேனியத்தை 90 சதவீத அளவிற்கு செறிவூட்டும் தொழில்நுட்பத் திறனைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், இரானோ மருத்துவச் சிகிச்சைக்குப் பயன்படும் வகையில் யுரேனியத்தை 20 சதவீதம் அளவிற்கே செறிவூட்டும் திறனைப் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. பூனையை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்த்த கதையாக, ஏராளமான அணுஆயுதங்களைத் தயாரித்து வைத்திருக்கும் இசுரேலைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, இன்னும் அணு ஆயுத ஆற்றலைப் பெறாத இரானை அமெரிக்காவும் அதனின் கூட்டாளிகளும் தண்டிக்கத் துடிப்பது அநீதியானது. தம்மிடம் குவிந்து கிடக்கும் அணு ஆயுதங்களை அழிக்கவோ, கைவிடவோ விரும்பாத அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு ஆகிய ஏகாதிபத்திய நாடுகளும், அவற்றின் அடிவருடிகளான இசுரேலும், இந்தியாவும், “இரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முயலக் கூடாது என உபதேசிப்பதும், அதற்காக அதனைத் தண்டிக்க முயலுவதும்” கேலிக்கூத்தானது மட்டுமல்ல, அடிப்படையிலேயே நியாயமற்றது.
இராக் மீது ஆக்கிரமிப்புப் போரைத் தொடுக்கும் முன்பாக, அந்நாட்டைப் பலவீனப்படுத்தும் சதித் திட்டத்தோடு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதைப் போலவே, இரான் மீதும் அடுக்கடுக்காகப் பல பொருளாதாரத் தடையுத்தரவுகளைத் திணித்துவருகிறது, அமெரிக்கா. சதாம் உசேன் பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களைத் தயாரித்துக் குவித்து வைத்திருப்பதாகப் பொய்ப் பிரச்சாரம் நடத்தப்பட்டதைப் போலவே, இரான் இன்னும் ஓராண்டிற்குள் அணு ஆயுதங்களைத் தயாரித்துவிடும் திறனைப் பெற்றுவிடும் என்ற பிரச்சாரம் நடத்தப்படுகிறது. இப்பீதியூட்டும் புளுகுணிப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்தி, இரானைத் தனிமைப்படுத்தித் தாக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே, இரானின் அணுசக்தி பரிசோதனை முயற்சிகள் தொடர்பாக நடைபெற்று வந்த சர்வதேச பேச்சுவார்த்தையைச் சீர்குலைத்தது, அமெரிக்கா. இவையனைத்தும் 1970களில் தான் இழந்த சொர்க்கத்தை எப்படியாவது மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற வெறியோடு சாத்தானின் பேரரசு அலைவதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.
நன்றி: வினவு

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...