லிபியா மீதான ஆக்கிரமிப்புப் போரை முடித்த கையோடு, இரானைக் குறிவைக்கத் தொடங்கிவிட்டன அமெரிக்கா தலைமையிலான மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள்.
அமெரிக்கா, ஆப்கான் மற்றும் இராக்கின் மீது ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்த சமயத்திலேயே, “இரான், சிரியா, வட கொரியா ஆகிய மூன்று நாடுகளையும் ரவுடி அரசுகள்” எனப் பழித்துப் பேசி வந்தார், அந்நாட்டின் அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ். குறிப்பாக, இரானின் இசுலாமியக் குடியரசைக் கவிழ்த்துவிட்டு, அங்கு தனது அடிவருடிகளின் ஆட்சியைத் திணிக்க, அமெரிக்கா கடந்த பத்தாண்டுகளாக வெளிப்படையாகவே முயன்று வருகிறது.
இரானில் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தப் பொருளாதாரத் தடையுத்தரவுகள், எதிர்த்தரப்பினரைத் தூண்டிவிடுதல், இரகசியக் குழுக்களைக் கட்டி அந்நாட்டினுள் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துதல் எனப் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா, இப்பொழுது அந்நாட்டின் மீது ஓர் அதிரடித் தாக்குதலை நடத்தும் நோக்கத்தோடு, பாரசீக வளைகுடாவில் தனது துருப்புகளைக் குவித்து வருகிறது. இராக்கிலிருந்து தனது கடைசித் துருப்புகளையும் விலக்கிக் கொண்டுவிட்டதாக அறிவித்துள்ள ஒபாமா, அத்துருப்புகளை இரானை அச்சுறுத்தும் நோக்கத்தோடு குவைத்தில் இறக்கிவிட்டுள்ளார். இரானில் இராணுவத் தலையீடு செய்வதை நியாயப்படுத்துவதற்காக, அந்நாடு அணு ஆயுதங்களை இரகசியமாகத் தயாரித்து வருவதாகவும் அது தொடர்பாகப் புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளன, மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள்.
இரான் இரகசியமாக அணுகுண்டைத் தயாரித்து வருகிறது என்ற தமது புளித்துப்போன குற்றச்சாட்டை நிரூபிக்கவும், இரானை ஓர் பயங்கரவாத நாடென முத்திரை குத்தவும் முயலும் அமெரிக்க ஏகாதிபத்திய கூட்டணி, அதற்காக மிகவும் கேவலமான, கீழ்த்தரமான வேலைகளையும் செய்து வருகிறது. அமெரிக்காவின் இந்த அடாவடித்தனங்களுக்கும் அயோக்கியத்தனங்களுக்கும் வழமை போல சர்வதேச அணுசக்தி முகமையும், ஐ.நா. மன்றமும் அடியாளாகச் செயல்பட்டு வருகின்றன.
சர்வதேச அணுசக்தி முகமை, “இரான் 2003-ஆம் ஆண்டுக்கு முன்பாக அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பாக நடத்தி வந்த பரிசோதனைகளை இன்னமும் கைவிடாது தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பதாக’’க் குறிப்பிட்டு கடந்த நவம்பர் மாதம் அறிக்கையொன்றை வெளியிட்டதோடு, அதற்காக இரானைக் கண்டித்துத் தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றியது. மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட ஆக்கப் பணிகளுக்காகத்தான் அணுசக்தி பரிசோதனையில் ஈடுபட்டு வருவதாக இரான் கூறுவதை ஏற்றுக் கொள்ளாத சர்வதேச அணுசக்தி முகமை, இரான் அணு ஆயுதங்களை இரகசியமாகத் தயாரிக்க முயன்று வருகிறது என்ற தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக எந்தவொரு புதிய சான்றையும் தனது அறிக்கையிலோ தீர்மானத்திலோ சுட்டிக் காட்டவில்லை. மாறாக, இது பற்றிய ஆதாரங்கள் பின்னர் தரப்படும் என்று பொத்தாம் பொதுவாகத்தான் குறிப்பிட்டுள்ளது.
உண்மையில் சர்வதேச அணுசக்தி முகமையின் இந்தப் புளுகுணி அறிக்கையும் கூட, அதனின் சொந்தசரக்கு கிடையாது. இரானின் அணுசக்திப் பரிசோதனைகள் குறித்து மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளின் உளவு நிறுவனங்கள் அளித்த விவரங்கள் அடங்கிய ஒரு கணினிக் கோப்பை அடிப்படையாகக் கொண்டுதான் சர்வதேச அணுசக்தி முகமை தனது அறிக்கையைத் தயாரித்துள்ள உண்மையும் இப்பொழுது அம்பலத்திற்கு வந்துவிட்டது. சர்வதேச அணுசக்தி முகமையின் முன்னாள் இயக்குநரும், அமெரிக்காவின் அணுஆயுதத் துறையோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவருமான ராபர்ட் கெல்லி, இந்த மோசடியை ஸெய்மோர் ஹெர்ஷ் என்ற பத்திரிக்கையாளரிடம் அம்பலப்படுத்தி பேட்டியளித்திருக்கிறார். இதுவொருபுறமிருக்க, சர்வதேச அணுசக்தி முகமை ‘தயாரித்த’ அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படும் முன்பே, அது ‘கடத்தி’ச் செல்லப்பட்டு, மேற்குலகப் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் “பிரேகிங் நியூஸாக” வெளியிடப்பட்டது.
இப்படி அறிக்கையைத் தயாரித்ததிலும், அது வெளியானதிலும் நடந்த பல உள்ளடி வேலைகளும் சதிகளும் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்த போதிலும், அமெரிக்க ஆளும் கும்பலும், மேற்குலக ஊடகங்களும் அது பற்றியெல்லாம் கூச்சப்படவில்லை. குறிப்பாக, இந்த ஆண்டின் இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவிருப்பதால், அமெரிக்காவில் இரானுக்கு எதிரான போர்வெறிக் கூச்சல் நாலாந்திர பாணியில் காதுகூசும் அளவிற்கு நடந்து வருகிறது.
‘‘இரானுடன் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபடும் எந்தவொரு நாடும் அமெரிக்க டாலரைச் செலாவணியாகப் பயன்படுத்தக்கூடாது; யூரோவைச் செலாவணியாகப் பயன்படுத்தினால், பொருளாதாரத் தடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள பொருட்களை இரானில் இருந்து இறக்குமதி செய்வதற்குப் யூரோவைப் பயன்படுத்தவில்லை என்று இறக்குமதி செய்யும் நாடுகளின் மத்திய வங்கிகள் சான்றளிக்க வேண்டும்” என மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள் இரானின் எண்ணெய் ஏற்றுமதி வர்த்தகத்தைச் சீர்குலைக்கும் வண்ணம் பல பொருளாதாரத் தடையுத்தரவுகளை ஏற்கெனவே போட்டுள்ளன. தற்பொழுது, அமெரிக்க அதிபர் ஒபாமா சர்வதேச அணுசக்தி முகமையின் அறிக்கையைக் காட்டி, “இரானின் மத்திய வங்கியுடன் தொடர்பு வைத்திருக்கும் எந்தவொரு நாடும் அமெரிக்காவின் வங்கிகள், நிதி நிறுவனங்களோடு வணிகத் தொடர்புகளை வைத்துக் கொள்ள முடியாது” என்ற புதிய பொருளாதாரத் தடையுத்தரவை விதித்திருக்கிறார்.
அமெரிக்காவின் இப்புதிய பொருளாதார தடையுத்தரவு, தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்றதாகும். இரானிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வரும் நாடுகள் அனைத்தும் இரானின் மத்திய வங்கியோடு தொடர்பு வைத்துக்கொள்வது தவிர்க்க முடியாதது. இந்த நாடுகளை மிரட்டிப் பணிய வைப்பதன் மூலம், இரானின் உயிர்நாடியான எண்ணெய் ஏற்றுமதி வர்த்தகத்தை முற்றிலுமாக முடக்கிவிட நரித்தனமாக முயலுகிறது, அமெரிக்கா.
இந்தியா, சீனா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய ஆசிய நாடுகளும்; இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் உள்ளிட்ட சில ஐரோப்பிய யூனியன் நாடுகளும்தான் இரானுடன் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நாடுகளுள் முக்கியமானவை. ஐரோப்பிய யூனியன் எதிர்வரும் ஜூலை 1 முதல் இரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை முற்றிலுமாகத் தடை செய்யப் போவதாக அறிவித்து, அமெரிக்காவின் மனதைக் குளிரவைத்துவிட்டது. ஜப்பானும் தென் கொரியாவும் அமெரிக்காவின் விருப்பப்படி தங்களின் கச்சா எண்ணெய் இறக்குமதியை இரானிலிருந்து சவூதி அரேபியாவிற்கு மாற்றிக்கொள்ள முடிவு செய்துவிட்டன.
அமெரிக்கா தனது புதிய பொருளாதார தடையுத்தரவை அமல்படுத்துவதற்கு ஆறு மாத கால அவகாசம் அளித்திருக்கிறது. இந்தியா, இந்தச் சலுகையைப் பயன்படுத்திக்கொண்டு, இரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயைக் குறைக்கப் போ்வதில்லை என வீறாப்பாக அறிவித்திருக்கிறது. சீனாவோ அமெரிக்காவின் பொருளாதார தடையுத்தரவை வாயளவில் கண்டித்தாலும், மறுபுறம் இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு, தான் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கு அதிகக் கட்டணச் சலுகை தர வேண்டும் எனப் பேரம் நடத்திக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் இரான் மீது திணித்துள்ள இப்பொருளாதார தடையுத்தரவு, அந்நாட்டின் மீது ஓர் ஆக்கிரமிப்புப் போரைக் கட்டவிழ்த்துவிடுவதற்கு ஒப்பானது. அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் தொடங்கி வைத்துள்ள இம்மறைமுகமான போரை எதிர்கொள்வது என்ற அடிப்படையில், தனது நாட்டின் கடற்பரப்புக்குட்பட்ட ஹொர்முஸ் கால்வாயில் கச்சா எண்ணெய் போக்குவரத்தைத் தடைசெய்வதன் மூலம் அமெரிக்காவிற்குப் பதிலடி கொடுப்போம் என இரான் அறிவித்திருக்கிறது.
அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் இரான் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையுத்தரவுகளைத் தலையாட்டி ஏற்றுக் கொள்ளும் உலக நாடுகளுக்கு, இரானின் இந்தத் தடையை எதிர்ப்பதற்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது. மேலும், தன்னைவிட மிகப் பெரும் இராணுவ வலிமையும், அணு ஆயுத பலமும் மிக்க அமெரிக்காவின் அச்சுறுத்தலை இப்படிபட்ட அதிரடி நடவடிக்கைகளின் மூலம்தான் இரான் போன்ற ஏழை நாடுகள் எதிர்கொள்ள முடியும்.
மேற்காசிய நாடுகளில் இருந்து கடல் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெயில் நான்கில் மூன்று பங்கு எண்ணெய் ஹொர்முஸ் கால்வாய் வழியாகத்தான் செல்கிறது. ஹொர்முஸ் கால்வாயில் கச்சா எண்ணெய்ப் போக்குவரத்துக்கு ஏற்படும் சிறு இடையூறுகூட, உலக நாடுகள் எங்கும் பாரதூரமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள்கூட அலறத் தொடங்கியுள்ளனர். இரான் மீது திணிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையுத்தரவுகளை விலக்கிக் கொள்வது மட்டும்தான் இப்பிரச்சினைக்கு ஒரே, எளிமையான தீர்வு. ஆனால், அமெரிக்காவோ, இரானை ஆத்திரமூட்டும் நோக்கத்தோடு, பாரசீக வளைகுடாப் பகுதியில் தனது அணு ஆயுதம் தாங்கிய போர்க் கப்பலையும் துருப்புகளையும் கொண்டுவந்து இறக்கி, இந்த நெருக்கடியைத் தீவிரப்படுத்தி வருகிறது.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இரானின் எதிர்த்தரப்பைத் தூண்டிவிட்டு, இரானின் இசுலாமியக் குடியரசுக்கு எதிராக ஒரு வண்ணப் புரட்சியை நடத்த முயன்று தோற்றுப் போன அமெரிக்க ஏகாதிபத்தியம், தற்பொழுது இரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த போரையும், பயங்கரவாதத் தாக்குதல்களையும்தான் நம்பியிருக்கிறது. அமெரிக்கா பாரசீக வளைகுடாவில் தனது துருப்புகளை இறக்கிய அதேவேளையில், இரானைச் சேர்ந்த இளம் அணு விஞ்ஞானியான முஸ்தபா அகமதி ரோஷன் தனது காரில் பயணம் செய்துகொண்டிருந்தபொழுது, அவரது காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து இறந்துபோனார். 20 சதவீத அளவிற்கு யுரேனியத்தைச் செறிவூட்டும் முயற்சியில் தான் வெற்றி அடைந்துவிட்டதாக இரான் அறிவித்த இரண்டாவது நாளே இப்படுகொலை நடந்துள்ளது.
இரானைச் சேர்ந்த அணுவிஞ்ஞானிகள் இப்படிக் கொல்லப்படுவது இது முதன்முறையல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளில் ரோஷன் உள்ளிட்டு ஆறு அணுவிஞ்ஞானிகள் பயங்கரவாதத் தாக்குதல்கள் மூலம் கொல்லப்பட்டுள்ளனர். பொருளாதார தடையுத்தரவுகள் மூலம் முடக்கவியலாத இரானின் அணுசக்தி பரிசோதனைகளை, அந்நாட்டின் அணு விஞ்ஞானிகளைக் கொல்வதன் மூலம் சாதிக்கப் பார்க்கிறது, அமெரிக்கா.
இப்படுகொலைகள் ஒருபுறமிருக்க, இரானின் அணுசக்தி பரிசோதனைக் கூடங்கள், இராணுவ ஏவுகணைத் தளங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்காவின் ஆளில்லா விமானமொன்றை இரான் இராணுவம் சுட்டு வீழ்த்தியது. அந்த விமானம் தவறுதலாக இரானின் வான்பரப்புக்குள் சென்றுவிட்டதாகக் கூறி, உண்மையை மூடிமறைக்க முயன்று தோற்றுப் போனது அமெரிக்கா. இரானின் மீது நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னே இசுரேலின் உளவு நிறுவனமான மொசாத் இருப்பதை லீ ஃபிகாரோ என்ற பிரெஞ்சு நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது.
இப்படி இரான் மீது கடந்த சில ஆண்டுகளாகவே பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வரும் அமெரிக்க இசுரேல் கூட்டணியைத்தான், பயங்கரவாத நாடுகளாக அறிவித்துத் தண்டிக்க வேண்டும். ஆனால், அமெரிக்கவோ சர்வதேச அரங்கில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு, அமெரிக்காவிற்கான சவூதி அரேபியத் தூதரைக் கொல்ல இரான் முயன்றதாகவும், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கும் இரானுக்கும் தொடர்பிருப்பதாகவும் கட்டுக்கதைகளைப் பரப்பி, இரானைப் பயங்கரவாத நாடென முத்திரை குத்திவிடக் கீழ்த்தரமாக முயன்று வருகிறது
அணு ஆயுதங்களைத் தயாரிக்க வேண்டும் என்றால், யுரேனியத்தை 90 சதவீத அளவிற்கு செறிவூட்டும் தொழில்நுட்பத் திறனைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், இரானோ மருத்துவச் சிகிச்சைக்குப் பயன்படும் வகையில் யுரேனியத்தை 20 சதவீதம் அளவிற்கே செறிவூட்டும் திறனைப் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. பூனையை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்த்த கதையாக, ஏராளமான அணுஆயுதங்களைத் தயாரித்து வைத்திருக்கும் இசுரேலைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, இன்னும் அணு ஆயுத ஆற்றலைப் பெறாத இரானை அமெரிக்காவும் அதனின் கூட்டாளிகளும் தண்டிக்கத் துடிப்பது அநீதியானது. தம்மிடம் குவிந்து கிடக்கும் அணு ஆயுதங்களை அழிக்கவோ, கைவிடவோ விரும்பாத அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு ஆகிய ஏகாதிபத்திய நாடுகளும், அவற்றின் அடிவருடிகளான இசுரேலும், இந்தியாவும், “இரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முயலக் கூடாது என உபதேசிப்பதும், அதற்காக அதனைத் தண்டிக்க முயலுவதும்” கேலிக்கூத்தானது மட்டுமல்ல, அடிப்படையிலேயே நியாயமற்றது.
இராக் மீது ஆக்கிரமிப்புப் போரைத் தொடுக்கும் முன்பாக, அந்நாட்டைப் பலவீனப்படுத்தும் சதித் திட்டத்தோடு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதைப் போலவே, இரான் மீதும் அடுக்கடுக்காகப் பல பொருளாதாரத் தடையுத்தரவுகளைத் திணித்துவருகிறது, அமெரிக்கா. சதாம் உசேன் பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களைத் தயாரித்துக் குவித்து வைத்திருப்பதாகப் பொய்ப் பிரச்சாரம் நடத்தப்பட்டதைப் போலவே, இரான் இன்னும் ஓராண்டிற்குள் அணு ஆயுதங்களைத் தயாரித்துவிடும் திறனைப் பெற்றுவிடும் என்ற பிரச்சாரம் நடத்தப்படுகிறது. இப்பீதியூட்டும் புளுகுணிப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்தி, இரானைத் தனிமைப்படுத்தித் தாக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே, இரானின் அணுசக்தி பரிசோதனை முயற்சிகள் தொடர்பாக நடைபெற்று வந்த சர்வதேச பேச்சுவார்த்தையைச் சீர்குலைத்தது, அமெரிக்கா. இவையனைத்தும் 1970களில் தான் இழந்த சொர்க்கத்தை எப்படியாவது மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற வெறியோடு சாத்தானின் பேரரசு அலைவதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.
நன்றி: வினவு