மேற்கத்திய முதலாளித்துவ ஊடகங்களுக்கு இப்போது புதிதாய் ஒரு அவல் கிடைத்துள்ளது. கடந்த சில நாட்களாக வாய் வலிக்க அந்த அவலை மென்று குதப்பி வருகிறார்கள். அவர்களின் இளைய பங்காளிகளான இந்திய முதலாளித்துவ ஊடகங்களும் ‘உலகச் செய்திகளில்’ தமது மேற்கத்திய சகபாடிகள் குதப்பித் துப்பிய அதே அவலை மீண்டும் ஒரு முறை மென்று, இந்திய வண்ணத்தில் கடைபரப்புகிறார்கள். ஒசாமா கொல்லப்பட்ட பின் தற்காலிகமாக ஏற்பட்டிருந்த ‘உலக’ செய்திப் பிரிவின் பஞ்சத்தை இப்படியாக இந்த ‘அவல்’ நிரப்பியுள்ளது.
சரி சரி விஷயத்திற்கு வருகிறோம். அந்த ‘அவலின்’ பெயர் டொமினிக் ஸ்ட்ரௌஸ் கா(ஹ்)ன். பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் சார்பாக அடுத்த அதிபர் தேர்தலில் இப்போதைய அதிபர் சார்கோஸியை எதிர்த்துப் போட்டியிடப் போகிறவர் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுபவர் தான் ஸ்ட்ரௌஸ் கான். ஒரு விஷயம். ‘சோசலிஸ்ட்’ கட்சி என்ற பெயரைப் பார்த்தவுடன் ‘சோசலிஸ்டு – கம்யூனிஸ்ட்டு – மார்க்ஸ் – ஏங்கெல்ஸ்’ என்றெல்லாம் உங்கள் கற்பனைக் குதிரையைப் பறக்க விடாமல் ஒரு ஓரமாகக் கட்டிப் போட்டு வையுங்கள். ஏனெனில், இதற்கும் அதற்கும் மயிரளவிற்கும் கூட சம்பந்தம் கிடையாது.