காலித் சயீத்!
எகிப்தின் கரையோர நகரமான அலக்சாந்திரியாவைச் சேர்ந்த 28 வயது இளைஞன்.
கடந்த வருடம் 2010 ஆகஸ்ட் மாதம் முபாரக்கின் இரும்புக் கரங்களாய் செயற்பட்டு வந்த எகிப்திய காவல் துறை பொலீசார் இவனை ஒரு 'இன்டர் நெட் கபே' இலிருந்து கைது செய்தனர்.
அவனை கதறக் கதற பலர் முன்னிலையில் பயங்கரமாக தாக்கினர். அவனது தலையை வேகமாக சுவரில் மோத வைத்தனர். அடித்து உதைத்தனர்.
அடித்து துன்புறுத்தப்பட்டு குற்றுயிராய்க் கிடந்தஅவனை பாதையில்நெடுக இழுத்துச் சென்று, வாகனத்தில் தூக்கிப் போட்டுக்கொண்டு பறந்து சென்றனர்.
இது எகிப்தில் அன்றாடம் நடக்கும் நிகழ்வாக இருந்ததனால் யாரும் இதனை அலட்டிக் கொள்ள வில்லை. காரணம், கைதும், கொலையும் சாதாரண சம்பவங்களாக எகிப்தின் நிலையை மாற்றி இருந்தது.
காலித் சயீத் என்ற இளைஞன் இப்படி மிருகத்தனமாக, கொடுரமாக தாக்கப்படுவதற்கு கொலை செய்யப்படவதற்கு என்ன குற்றம் இழைத்திருப்பான்?
பொலிசாரின் தாக்குதலுக்குள்ளாகி மரணித்த காலிதின் படம்
இரண்டு பொலிஸ் அதிகாரிகளின் போதை பொருள் பாவனை தொடர்பான ஒரு வீடியோவை அவன் அவனது புளக்கில் பதிவிட்டிருந்தான். அதனை உலகறியச் செய்திருந்தான்.
அவன் செய்த குற்றம் அதுதான்.
இணையத்தின் ஊடாக அநீதிக்கு எதிராக செயற்பட்ட அந்தக் குற்றம் தான் அவனுக்கு சித்திர வதையையும், மரணத்தையும் பரிசாக வழங்கியது.
கடந்த காலங்களில் பொலிசாரின் கெடுபிடிகளில், சித்திர வதைகளில் மரணிக்கும் எகிப்தியர்களின் மரணங்கள் புதைகுழியோடு புதைந்து போகும் ஒரு கதையாகவே இருந்து வந்திருக்கிறது.