எகிப்தின் அல் தாவுன் பத்திரிகையின் படப்பிடிப்பாளர் 36 வயதான அஹ்மத் முஹம்மத் மஹ்மூத் ஸ்னைப்பர் தாக்குதலுக்குள்ளாகி நான்கு தினங்களின் பின்னர் நேற்று மரணமானதாக அரச செய்திப் பத்திரிகையான அல் அஹ்ரம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
முபாரக்கின் கையாட்களுக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையில் ஏற்பட்ட மோதலை படம் பிடித்துக்கொண்டிருந்த போதே இவர் ஸ்னைப்பர் தாக்குதலுக்கு உள்ளானார். எகிப்தின் போராட்டத்தில் மரணமான முதல் ஊடகவிலாளர் இவராகும்.
எகிப்தின் போராட்டம் தொடர்பான செய்திகள் வெளியுலகிற்கு செல்லவிடாமல் தடுப்பதற்காக முபாரக் அரசு பலத்த கெடுபிடிகளை ஊடகங்கள் மீது திணித்து வருகிறது. சகல இணைய தள சமூக வலைப்பின்னல்களும் முடக்கப்பட்டிருக்கின்றன.
பிரேஸில், பிரான்ஸ், போலந்து, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாட்டின் ஊடகவியலாளர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
வியாழக்கிழமையன்று கத்திக்குத்துக்கு இலக்கான சுவீடன் நாட்டு தொலைக்காட்சி ஊடகவியலாளர் கெய்ரோ வைத்தியசாலையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை அல் ஜஸீரா தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது.
போலந்து தொலைக்காட்சி நிறுவனமான ரிவிபி தனது நிருபர்களை பாதுகாப்புக் கருதி மீள அழைத்துக்கொண்டது.