ஹுஸ்னி முபாரக் ஒரு கிரிமினல் குற்றவாளி என்றும் அவரை தூக்கியெறிய திரண்டிருக்கும் எகிப்திய மக்களுக்கு தனது ஆதரவை தெரிவித்தும், பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஜோர்ஜ் கெல்லோவே
George Gallowayஅவர்கள் உணர்ச்சிபூர்வமான உரையொன்றை ஆற்றியிருக்கிறார்.
இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகளின் உறுதுணையோடு பலஸ்தீன் மக்கள் மீது தொடுக்கப்படுகின்ற கொலைகளுக்கும், பொருளாதாரத் தடைகளுக்கும் பக்கபலமாக நின்று செயல்பட்டவர்தான்இந்த ஹுஸ்னி முபாரக்.
இவரை ஒரு கிரிமினல் குற்றவாளி என்று வர்ணித்த ஜோர்ஜ் கெல்லோவே அவரை துடைத்தெறிவதற்கு எகிப்திய மக்களோடு சேர்ந்து அதன் இராணுவமும் முன்வரவேண்டும் என அவர்வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இஸ்ரேல்- பலஸ்தீன் விவகாரத்தில்இஸ்ரேலுக்கு பக்கபலமாகசெயற்பட்டு வருபவர்தான் இந்த முபாரக்.
காஸா, எகிப்து எல்லையான ரபா எல்லைக் கதவை மூடி இஸ்ரேல் காஸா மீது விதித்துள்ள பொருளாதார தடைக்கு ஆதரவாக தனது பூரண ஆதரவை வழங்கியவர்தான் ஹுஸ்னி முபாரக். இதன்மூலம் பலஸ்தீன் மக்களை மருத்துவம், உணவு மற்றும்அடிப்படை வசதிகளை எகிப்திலிருந்து பெற்றுக்கொள்ளாமல் காஸா மக்களை பட்டினிச் சாவிற்கு தள்ளியவர்.
பலஸ்தீன் விவகாரத்தில் மிகவும் தீவிரமாக ஈடுபாடு கொண்டு செயற்பட்டு வரும் ஜோர்ஜ் கெல்லோவே அரபு நாடுகளின் அமெரிக்க, இஸ்ரேல் நலன் சார்ந்த அரசியலை மிகவும் வன்மையாக கண்டிப்பவர். விமர்சிப்பவர். மனிதநேயம் மிக்கவர். பணம், பட்டம், பதவிகளுக்கு விலைபோகாதவர்.
இங்கு ஜோர்ஜ் கெல்லோவே பற்றி எழுத, அவரைப் பற்றி அறியத் தர, அவரின் உரையை பதிவிலிட இன்னொரு முக்கிய காரணம் எனக்கு இருக்கிறது.
அது என்னவென்றால்,
சமகாலத்தில் வர்த்தகமயமான எமது தஃவா தளத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கும், எமது புத்தி (?) ஜீவிகள் பலருக்கு ஜோர்ஜ் கெல்லோவே இடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன. இதைச் சுட்டிக்காட்டுவதற்கு சிறந்த தருணமாக இது எனக்குத் தோன்றியது.
இன்று அரபுகளின் பணத்திற்காக அரபு நாடுகளின் இஸ்லாத்திற்கு முரணான அரசியலை செயற்பாட்டைப் பாதுகாக்கின்ற “படித்தவர்கள்” நிறைய பேர் உருவாகியிருக்கின்றார்கள்.
அரபுகளின் அராஜகங்களை முழுமனதோடு ஆதரிக்கின்ற, அவர்களை விமர்சிப்பதை எப்போதும் விரும்பாத புகழ்பூத்த புத்திஜீவிகள் (?) பலர் பிறந்துக்கொண்டிருக்கின்றார்கள்.
அரபுகளிடம் கையேந்துவதை தொழிலாகக் கொண்ட இவர்கள் , ஏகாதிபத்திய நலன் சார்ந்தஅரபுகளின் தூதுவர்களாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். கைக்கூலிகளாக கடமையாற்றிக்கொண்டிருக்கின்றனர்.
இவர்களுக்கு அரபுகள் மீதான விமர்சனம் அடிக்கடி அஜீரணமாகின்றது.
இந்த அஜீரணத்தை இல்லாமலாக்க இவர்களிடம் இருக்கும் அரு மருந்து, மற்றவரின் கருத்துச் சுதந்திரத்திற்கு தடைகள் போடுவது. அரபுகள் மீதான விமர்சனம் கையேந்தும் போது குறுக்காக வந்து தடையேற்படுத்திவிடும் என்று தயங்கிப்போய் நிற்கிறார்கள்.
வயிற்றுப் பிழைப்புக்காக வரிந்துக் கட்டிக்கொண்டு இஸ்லாம் பேசும் இவர்கள், இன்று ஆரோக்கியமான திறந்த “கருத்துத் தளத்தை” தமது கழிப்பறைகளாக்க மாற்றும் வெட்கம் கெட்ட தந்திரத்தையும் கையாண்டு வருகின்றனர்.
அரபுகளின் ஏஜன்டுகளாக இருக்கும் இந்த புத்திஜீவிகள் பிற்போக்குவாதத்தில் பிழைப்பு நடாத்துபவர்களாக மாறிக்கொண்டிருக்கின்றார்கள்.
இன்று உலகம் நேசிக்கின்ற புரட்சி இவர்கள் அறியாமலேயே வெடித்துக் கொண்டிருக்கிறது.
அரபுகளின் பிற்போக்குவாத பணத்தினால் போஷிக்கப்படும் இவர்கள் புரட்சியின் கனவுகளோடு போர்த்திப் படுத்துக்கொண்டிருக்கும் போது, இவர்களின் கதவுகளைத் தட்டி குறட்டைகளைக் களைத்தவர்கள் யார் தெரியுமா?
அவர்கள் யாரிடமும் பணம் வாங்காத பொது மக்கள். காசுக்காக கொள்கைகளை விற்காத அந்த பொது மக்களின் பின்னால் போராட்டத்திற்கு அணிதிரள வேண்டிய நிர்ப்பந்தம் இவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
போராட்டம் இவர்களை நீண்ட துயிலிலிருந்து உசுப்பி எழுப்பி இருக்கிறது.
இன்றைய தூனீசியாவும், எகிப்தும் இதற்கு சிறந்த சான்றுகள்.
அரபுகளின் அரசியலை நேசிக்கின்ற, இவர்களின் கதையாடலில் இருக்கின்ற இஸ்லாமிய எழுச்சி போலி என்பது உலகிற்கே இன்று புலனாகியிருக்கிறது.
இவர்களின் கனவு எழுச்சிக்கு பணத்தை வாரி வழங்கி இவர்களைப் பாதுகாத்த அதே அரபு அரசியல். தூனீசியாவில் இஸ்லாமிய ஏழுச்சியை காலா காலமாய் நசுக்கிக்கொண்டிருந்த , நாட்டை விட்டு தப்பியோடிய துரோகியான தூனீசிய தலைவர் பின் அலியையும் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வருகிறது.
பின் அலியை பாதுகாத்த விஷயத்தில்
இந்த அரபு தேசம் எழுச்சிக்கும், வீழ்ச்சிக்கும் உதவி புரிகின்ற ஒரு நாசத்தை செய்து வருகின்றது என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறத.
இன்று அடக்குமுறை ஆட்சியாளன் பின் அலியினதும், அந்த அடக்கு முறைக்கு எதிராக போராடிய இந்த இஸ்லாமிய வாதிகளினதும் அனுசரணையாளர் யார் என்ற விபரம் திரை கிழிந்து தெரியவந்திருக்கின்றது.
இந்த அடிப்படையில்பார்க்கும்போது அரபுகளின் வாக்குகளை அல்லாஹ்வின் வாக்காக மதிக்கின்ற ,ஆதாயத்திற்காகஅரபுகளைப் பாதுகாக்கின்ற இந்த ஒருசில “ஷெய்க்கு”களை விட ஜோர்ஜ் கெல்லோவே எவ்வளவோ மேலானவர்.
அநீதிக்கு எதிராக போராடுவது, அதற்காக குரல் கொடுப்பது அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுத்தரும் சிறந்த செயலாகும். இதை எந்த லாபத்தையும் எதிர்ப்பார்க்காது ஜோர்ஜ் கெல்லோவே செய்தும் வருகிறார்.
இந்த “ஷெய்க்கு” களோ அல்லாஹ்வின் திருப்தியை விட தனக்கு ஊதியம் வழங்கும் எஜமானர்களின் திருப்தியை மட்டுமே நோக்காகக் கொண்டு அவர்களை திருப்தி படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றனர்.
குளிக்கப் போய் சேறு பூசிக்கொண்ட இந்த புத்தி(?) ஜீவிகளின் கதையை பார்க்கும் போது ..
நா. காமராசன் விலைமாதர்கள் பற்றிய ஒரு கவிதை எனக்கு ஞாபகம் வருகிறது.
“அவர்கள்
நிர்வாணத்தை விற்கிறார்கள்
ஆடை வாங்குவதற்காக..”
அரபுகளின் பணத்துக்காக இஸ்லாம் பேசுபவர்களுக்கும் இந்தக் கவிதைக்கும் நிறையவே தொடர்பிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
அமெரிக்க நலன் சார்ந்த அரபு அரசியலை நேசிப்பவர்களை, அந்த நிதியின் மூலம் இஸ்லாத்தையும் தனது வயிற்றையும் வளர்க்க முயல்பவர்களை
இப்படியும் நோக்கலாம்
அவர்கள்
ஆடைகளை விற்கிறார்கள்
நிர்வாணத்தை வாங்குவதற்காக.
.....?